Friday, October 27, 2017

Pinnal........

ஒரு 12 வயது பெண்ணுக்கு தலை வாரி பின்னி விட்டேன். - உடனே எனக்கு என் அம்மா ஞாபகம்.
ஸ்கூல் போகும் நாளில் இரட்டை பின்னல்தான் என்றாலும், லீவு நாட்களில், ஒத்தை பின்னல் போட அம்மாதான் வாருவாள்.
அதுவும் எப்படி.. ? நின்னுடுண்டா..? ஊஹும் !
எண்ணெய் ஜாடி, சீப்பு, ரிப்பன், சமயத்தில் வாழை நார் எடுத்துண்டு, வெளிச்சம், காத்து இருக்கும் இடமா பாத்து, மேல் படியில் உட்கார, நான் கீழே. 
முதல் ஒரு கரண்டி முட்டை எண்ணெய் எடுத்து, இடது கையில் வெச்சுண்டு , ஒரு விரலால் தொட்டு, உச்சந்தலை, அப்புறம், குழைத்து தலை முழுதும், மயிர் கால்களில் படும்படி- இன்னொரு கரண்டி முட்டை எடுத்து, குழைத்து, கீழே முடியில்.
பிறகு சிடுக்கு எடுக்கும் படலம். கையால் கொஞ்சம் ஆத்தி விட்டு, சீப்பால் வலிக்காமல், வெட்டு வெட்டு என்று இழுக்காமல் (கொஞ்சம் வலித்தாலும் பொறுத்துக்கணும்) ..
அப்புறம் முன்னாலே வழிச்சு, தழச்சு, இழைய வாரி, வகிடு எடுத்து, மூணு கால் பிரிப்பாள்.
வலது பக்க காலை முதலில் போட்டு, பிறகு இடது.
அப்போ ஒரு இருக்கு இருக்குவா பாருங்கோ.. என் தலை, கழுத்து ரெண்டும் முன்னால் போய், பின்னால் வரும் .
"ஆ...!" என்றால் அதுக்கொரு குட்டு. "அப்புறம் தளர்ந்து போயிடும்" ன்னு ஒரு explanation .
இப்படி இரண்டு கால் போட்டவுடன் ஒரு "அழகு" வாரல் ஆரம்பிக்கும். அதாவது...
இடது பக்க காலை போட்டால், இடது கை கட்டை விரலால் பிடிச்சுண்டு, வலது கை சீப்பால் அந்தக் கால் மேல் "வழ வழ" ன்னு வாருவாள். பிறகு, வலது பக்க காலை போட்டு, அதை ஒரு வாரல்..
இப்படியே பொறுமையாக, அலுக்காமல், ஒவ்வொரு காலையும், "இழைய" வாரி, நுனி வரைக்கும் பின்னி, ரிப்பன் அல்லது நார் வைத்து நுனியை பின்னி, முடிச்சு போட்டு, பின்னலை ஒரு இழு இழுத்து, உள்ளங் கையால் மேலே இருந்து, கீழ் வரை தட்டி, கொஞ்சம் மடித்துக் கட்டி, "தாடையை" பிடித்து, வெடுக்கென்று திருப்பி, சீப்பால் "முன்னுச்சு" வாரி, முதுகில் ஒரு குத்து குத்தி, "எழுந்திறேன்" ன்னு ஒரு அதட்டல். - யாரோ ரொம்ப ஆசையா உக்காந்திண்டே இருக்காப்போல !
யாராவது தலையை குடுங்களேன். இழைய வாரி பின்னி விடுகிறேன் !!

No comments:

Post a Comment