Sunday, October 15, 2017

ஐந்து நாள் கல்யாணம் - கிராமத்தில் !!

ஐந்து நாள் கல்யாணம் - கிராமத்தில் !!
அந்த நாளெல்லாம், அநேகமாக பெண் பார்க்கும் அன்றே பாக்கு வெற்றிலை மாற்றி விடுவார்கள்...
பையன் வேறு ஊரிலிருந்து வரவேண்டுமென்றால், வண்டி கட்டிக்கொண்டு வர நேரமாகும்.. அதனால் இந்த வழக்கம்.
ஒரு வீட்டில் பெண் பார்க்கும் படலமென்றால்... அந்த அக்ராஹாரமே அங்கு திரண்டிருக்கும்... அநேகமாக அக்ரஹாரத்தில் பாதி பேர் உறவாகவும் இருப்பார்கள்.
மாப்பிள்ளை வீட்டு மனிதர்கள் உள்ளே நுழைய, வீட்டு பெண்டுகள் எல்லாம் உள்ளே ஓடி மறைந்து விடுவார்கள்.
பெண் பார்த்த அன்றே லௌகீகம் பேசப்படும்; முஹூர்த்த தேதி நிச்சயமாகும்.
அதற்கு பிறகு வரும் நாட்களெல்லாம்... கும்பல்தான்; கூச்சல்தான்; கும்மாளந்தான்; வேலை தான் !!
உறவுகள் கூடும்... வேலைகள் பிரிக்கப்படும்... (Modern Management படிப்பு இல்லாமலே எல்லாம் டைம் படி ஒழுங்காக நடக்கும்)
அத்தை, மாமி, சித்தி, பெரியம்மா, பாட்டி, அத்தங்கா, அம்மங்கா....
சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, அத்தான், அம்மாஞ்சி...
ஒன்று விட்ட உறவுகள் வேறே !
தினமும் 30 / 40 பேருக்கு சமையல் நடக்கும்... வேலை செய்பவர்களுக்கும் சேர்த்து....
என் அம்மா, அப்பா கல்யாணமும் ... முதல் வெள்ளி  பெண் பார்த்து, மறு வெள்ளி (ஜூலை 7 ) [1922 ] கல்யாணம்.
பத்து திக்கில் பத்து வேலை நடக்கும்... parallel ஆக !
1 . ஆசாரி வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு - நகைகள் செய்யப்படும்.. திருமங்கல்யத்துக்கு புது பொன் உருக்கி, நல்ல நேரம் பார்த்து செய்வார்கள்..
அதை மேற் பார்வையிட ஒருவர் நியமனம் !
2 . மளிகை சாமான்கள் மூட்டை மூட்டையாய் வந்து இறங்கும்... முதலில் அப்பளம், வடகம், பக்ஷணம் பண்ண..
விறகு மூட்டை வந்து இறங்கும்... உக்கிராண உள் நிறைந்து, பூட்டப்படும்.
3 . பெண்டுகள், பலகைகளை மடியில் சாய்த்து வைத்து, முழு உளுந்தை உருட்டுவார்கள்...உளுந்து கீழே விழுந்து, கற்கள் மேலே நிற்கும்.
முழுத் துவரை துவரை உடைத்து, துவரம்பருப்பு,
செக்கில் ஆட்டிய எண்ணெய்..... இதெல்லாமும் தயாராக வேண்டும்.
4 . மித்தத்திர்க்கு ஒரு பக்கம்... உரல், உலக்கை சத்தம்... அப்பளத்து மாவு, வறட்டு அரிசி மாவு , களைந்து உலர்த்தின மாவு, சாம்பார் பொடி, இட்லி மிளகாய் பொடி எல்லாம். ஒரு பக்கம் இயந்திரம் சுத்திக்கொண்டே இருக்கும்... கடலை பருப்பு, உப்புமாவுக்கு அரிசி இத்யாதிகள் அரைத்து / உடைத்து சலிக்கப்படும்...
5 . அப்பளம் மாவு இடித்து, ஒருவர் பிசைய, ஒருவர் சீராக உருட்டி போட, கொஞ்சம் சிறியவர்கள் சில்லு இட்டு போட, பெரியவர்கள் இட... இரண்டு பேர் மொட்டை மாடியில் காய வைக்க... முதல் இரண்டு நாட்கள் இந்த கல்யாணம்... பொரிக்க அப்பளம். சீர் கொடுக்க.
6 . பக்ஷண கல்யாணம் ஆரம்பிக்கும்... வெண்ணை வாங்கி - சேர் சேறாக, வீசை வீசையாக காய்ச்சப்படும்.
7 . 9 , 11 சுத்து சீர் முறுக்குகள் (பெண் ஆத்துப்பேருக்கு குடுக்க 5 சுத்து ) தேங்காய் எண்ணையில் தயாராகும்.
8 . மைசூர் பாகு, பூந்தி லட்டு (அதற்கு குஞ்சா லாடு என்று பெயர். ஏனோ ஒருவரும் அப்படி சொல்வதில்லை இப்போது) ஒரு பக்கம் தயாராகும்- நெய் மணத்துடன்
9 . இவை தவிர, ஓமப்புடி, கடலை மாவு தேன் குழல் எல்லாம்...
10 . சீர் அநேகமாக 101 - உப்பு பக்ஷணத்திலும், 51 ஸ்வீட் இலும் டின்னில் வைத்து மூடப்படும்.
இதற்காக புதிதாக மூடி போட்ட பித்தளை அடுக்குகள், பீப்பாய்கள் வாங்கப்படும். பிஸ்கட் டின்னும் வைப்பார்கள்.
ஸ்வீட் எல்லாம் எறும்பு வராமல் பாதுகாக்க வேண்டும் !
11 . சமையற்காரர் ஒரு நாள் வந்து, மெனு சொல்லி, சாமான்கள் லிஸ்ட் போட.. அந்த சாமான்கள் தனியாக வாங்கி வைக்கப்படும். அந்த ரூமுக்கு ஒரு தனி காவல் - சாவி அந்த மனிதர் கையில்... அவருக்கு demand அதிகம் !! (அவ்வளவு பவர் !!)
12 . சமையல் அடுப்பு, களி மண் கொண்டு வந்து, நல்ல நேரம் பார்த்து, வீட்டு பெண்களே செய்வார்கள்.. கொடி அடுப்பு...
சமையற் காரர் இரண்டு நாட்கள் முன் வந்து அவர் ஒரு பெரிய கொடி அடுப்பு கட்டுவார்...
13 . பருப்பு தேங்காய்கள்... எல்லா வேளைக்கும், விதம் விதமாக பண்ணுவார். பேப்பர் சுத்தி ஒரு கங்காளத்தில் தனியாக அடுக்குவார்.
ஸ்பெஷல் பால் வாங்கி, திரட்டுப்பால் காய்ச்சுவார்.
பல வித ஊறுகாய்கள் போடுவார்.
நடுவில்.... சாப்பாட்டுக்கடை... குழந்தைகள் கவனிப்பு... பெண்களுக்கு தலை வாரல்... எல்லாம் நடக்கும்...
இதில் பெரிய, கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..
எல்லா மாமிகளும் நிறைய வம்பு பேசுவார்கள்; "A " ஜோக்குகள் அடித்து சிரிப்பார்கள்... தாவணி பெண்கள் குறுக்கும் நெடுக்கும் போய் தங்களுக்குள் பேசி சிரிப்பார்கள்... கல்யாணப்பெண்.. (10 வயதில் என்ன தெரியும்) அந்த 10 நாட்களில் நன்றாக கவனிக்கப்படுவாள்... தினம் ஒரு அலங்காரம்...
எல்லோரும் ஒத்துமையாக இருப்பார்கள்... பழைய சண்டையெல்லாம் மறந்து விடும்... அங்கே ஈகோ கிடையாது.. சலிப்பு கிடையாது...
ஒவ்வொரு வேலையும் ஆரம்பிக்கும் முன் (ஆசாரி, பக்ஷணம், சமையல்காரர் etc ) ... தேங்காய் உடைத்து சிறு பூஜை நடக்கும் !!
14 . பந்தல் போட ஆட்கள் வருவார்கள் ... அந்த தெரு முழுக்க அடைத்து பந்தல் போடப்படும்... கீத்து பந்தல்... ஷாமியானா இல்லை !
புழக்கடையில் சமையலுக்கு பந்தல்.
15 . கிணற்றடியில் பாத்திரம் தேக்க நாலு பேராவது...
16 . புடவை வேஷ்டி - பட்ஜெட் போடப்பட்டு... வீட்டு ஆண்களும், முக்கியமான (கோபித்துக்கொள்ள என்று சில உறவுகள் உண்டு !) பெண்களும் டவுனுக்கு வண்டி கட்டி போய்... எல்லா துணிமணியும் வாங்குவார்கள்... அந்த நாளிலும் போட்ட பட்ஜெட் இல் அடங்கியதாக சரித்திரமே இல்லை !!
17 . ஒரு பக்கம்.... சாமி காரியங்கள் நடக்கும்... சுமங்கலி பிரார்த்தனை, சமாராதனை..
.
அந்த 10 நாட்களும் அக்ராஹாரத்தில் எந்த வீட்டிலும் சமையல் இருக்காது... !!

1 comment: