Monday, October 9, 2017

சினிமா பாத்து அழறது........

சினிமா பாத்து அழறது ரொம்ப சாதாரணம்- முக்கியமா பெண்களுக்கு ... (முக்கியமா என்ன... அழறதே பெண்கள் தான். இதுல நான் கொஞ்சம் ஓவர்தான்.
என் பிரச்சினை எல்லாம் முக்கால் வாசி, ஹீரோவும், ஹீரோயினும் கல்யாணம் பண்ணிக்காம போறதுதான் !
"எதிர்பாராதது" துல சிவாஜியும், பத்மினியும் ஏன் கல்யாணம் பண்ணிக்காம படத்த முடிச்சாங்க? ("அற்பச்செயலுக்கு, இப்படியும் மன அவஸ்தை பட விடுவாயோ..." ன்னு ரெண்டு சங்கதி போட்டு, இப்ப பாடினாலும், மனம் கனத்து, கண்ணில் தண்ணீர் வரும்; சாதம் இறங்காது)
"கல்யாணப் பரிசுல", சரோஜா தேவி, ஜெமினியை கல்யாணம் பண்ணாதது... இன்னி வரைக்கும் எனக்கு தாங்கல்ல. ("சென்ட்ரல் ஸ்டேஷனில்.. சரோஜா தேவி சோகமாக நடக்க, "காதலிலே தோல்வியுற்றாள்  கன்னியொருத்தி...கலங்குகிறாள் அவனை நெஞ்சில் இருத்தி...." ன்னு இப்பவும் பாடிப் பாடி அழறேன் !)
இதே போல், தேவதாஸ், பார்வதி ("எல்லாம் மாயை தானா, பேதை எண்ணம் யாவும் வீணா..ஏழை எந்தன் வாழ்வில் இனி இன்பம் காண்பேனா")
நர்கீஸ், ராஜ்கபூர் (அவன்) ; "ஆந்தி" யில் சஞ்சீவ், சுசித்ரா சென் பிரிவு..... இப்படி எத்தனையோ சொல்லிண்டே போகலாம்...
இதுல இன்னொரோ பிரச்சனை; சினிமா பார்த்தப்புறம், ஒரு வாரம் பிழிய பிழிய அழுவது.. எங்க வீட்டுல இதெல்லாம் எப்படி தாங்கினாளோ தெரியல்ல.
என் சிஸ்டர்ஸ் க்கெல்லாம் கல்யாணம் ஆகலைன்னோ, ஆனப்புறம் பிரின்னு போயிட்டாளே ன்னோ இன்னி வரைக்கும் அழுததில்லை. !!
10 வயசில பாத்த ஒரு படத்தில நடந்த (நடக்காத), கல்யாணம் , 70 வயசுலயும் என் மனதை பிசைவது தான்... சாரி... கொஞ்சம் ஓவர்...
இது மட்டுமா... நடுவில் பிரிவு..
"அன்பே..நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பதும் எங்கே " ன்னு சிவாஜி ஒரு இடத்திலையும், கதாநாயகி வேறு இடத்திலையும்.. மாறி மாறி பாடினது; "இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய், நீ எங்கே போகிறாய் " என்று ஜெமினியும், வைஜயந்தியும் "பார்த்திபன் கனவில்" ... ஜெமினி கப்பலில், வைஜயந்தி கரையில் "
சொன்னா நம்ப மாட்டேங்க... SK எங்களை பிரிந்து பூனாவில் வேலைப் பார்த்த 3 மாதங்கள் கூட என்னை பாதிக்கலை !!
(இருங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... கண்ணுல தண்ணி கொட்டறது; எழுத்து தெரியல்ல; தொடச்சிண்டு எழுதறேன்)
"கல்யாண ஊர்வலம் வரும்...உல்லாசமே தரும்.. " ; "என் காதல் இன்பம் இது தானா; சிறை காவல் நிலை தானா..."; "கண்ணும் கண்ணும் பேசியது உன்னாலன்றோ, இன்பக் காதலிசை பாடியது நீயேயன்றோ.. (சரோஜா தேவியின் சோக முகம், இன்னிக்கும் ஞாபகம் வந்து torture பண்றது.) ... இதெயெல்லாம், கொஞ்சம் கூட பாவம் குறையாமல், பாடி, மன உளைச்சலுக்கு ஆளாவது, கொஞ்சம் அதிகம் தான்.
ஆனால், இதெல்லாம் பரவா இல்லை, சோகப்பாட்டு பாடினாலும் முடிவு சுபம்!
இதை எல்லாம் தூக்கி சாப்பிடராப்பல ஒரு சம்பவம்..
நானும் ஏன் சினேகிதி கீதா வும் விஜய், ரம்பா, தேவயானி நடித்த (படம் பேரு மறந்து போச்சே!) படத்துக்கு போனோம். விஜய்க்கும், தேவயானிக்கும் நடக்க இருந்த கல்யாணம் , க்ளைமாக்சில, விஜய்க்கும், ரம்பாவுக்கும் நடக்க.. கீதா அழுதா பாருங்கோ.. எதுக்கு ? விஜய் ஏன் தேவயானியை கல்யாணம் பண்ணிக்கலை ன்னுதான். இதுதான் லிமிட்... சினிமாவில் ஒன்றி போவதற்கு...
கல்யாணப் பரிசுல, தங்கவேலு எழுத்தாளர்ன்னு நெனச்சுண்டு சில லேடீஸ் வருவாங்க; "ஏன் சார், ........ கதையில, கதாநாயகி முடிவுல செத்துப் போறா?"
அதற்கு தங்கவேலு "அவ விதி, போயிட்டா..." ன்னு சொல்லும் வசனம் கிளாசிக். !!
அந்த மாதிரி எனக்கு எடுத்துக்க தெரியல்லியே.
ஆனா, இப்போ பாக்கிற படத்தில் எல்லாம் இந்த மாதிரி கொடுமைகளுக்கு சான்சே இல்ல. "டப்பான் குத்துவோட " கதாநாயகி ரோல் முடிஞ்சு போச் !!!!

No comments:

Post a Comment