Monday, October 9, 2017

என் அக்கா..

என் அக்கா..
அம்மாவிற்கு முதல் குழந்தை இறந்து போக, இரண்டாவதாக பிறந்த பெண்; பிறவியிலேயே, காது கேளாமல், வாய் பேசாமல் பிறந்தவள்.
நான் கடைசி குழந்தையாக பிறக்கும்போது, அம்மாவுக்கு 32 வயது; அக்காக்கு 15.
எங்களிருவருக்கும் இடையில் இன்னும் 2 பையன்களும், 3 பெண்களும்.
எனக்கு தெரிந்து, பெரியவர்கள் சொல்லக் கேட்டு, நான் பிறந்ததிலிருந்து சமையலறை மட்டுமே தன் சாம்ராஜ்யமாக கொண்டவள். தன் உடன் பிறந்தவர்களுக்கு சேவை செய்வதே அவள் வாழ்வின் ஒரே லட்சியம்; பொழுது போக்கு.
சமைத்து, பரிமாறி, எங்களை அன்போடும், அதட்டலோடும் சாப்பிட வைத்து, எண்ணெய் குளியல் செய்வித்து.... டிபனுக்கு பஜ்ஜியும், போண்டாவுமாக, 9 பேருக்கு செய்து கொடுத்து, மாற்றுத் துணிகள் கூட அதிகம் இல்லாமல், அந்த ஏழ்மையை ஏற்றுக்கொண்டு, தன் வாழ்வில் கல்யாணம், கார்த்திகை என்று ஒன்றையும் காணாமல்......
தன் 4 சகோதரிகளுக்கும், ஆளுக்கு இரண்டு குழந்தை பேற்றுக்கு செய்து, ஓடை உழைத்து....
எப்போது அம்மாவை பார்க்க போனாலும், அம்மாவுக்கப்புறம் அண்ணா வீட்டில் இருந்த அவளை பார்க்கப் போனாலும், ஒரு பிடி சாப்பிடாமல் அனுப்ப மாட்டாள்... டிபன் அல்லது, ஒரு வாய் சாதம் பிசைந்து, கண்டிப்பாக சாப்பிட வைத்து, காபி குடுத்து, முகம் சுழிக்காமல்...
தன்னலமில்லாத சேவை 86 வயது வரைக்கும்...
கீழே விழுந்ததே காரணமாக படுக்கையில் 7 மாதம் முன்பு வீழ்ந்து, நடமாட்டமில்லாமல், அப்போதும், நாங்கள் பார்க்கப் போனால், சாப்பிட்டாயா? ஏன் நல்ல நகை போட்டுக் கொண்டு வரவில்லை; ஏன் இன்னும் வேலை பார்க்கிறாய் என்று எண்ணெய் உரிமையோடு கடிந்து.....
எழுதிக் கொண்டே போகலாம்.
கடைசி வரைக்கும், அவளுக்கு செய்து புண்ணியம் தேடிக்கொண்டவன் எங்கள் சின்ன அண்ணா, மன்னி.
vital organs எதுவும் fail ஆகாமல், அமைதியாக மார்ச் 6ம் தேதி தன் இறுதி மூச்சை விட்டு, எங்களை எல்லாம் மீளா துயரில் ஆழ்த்தியவள்...
அவள் கண்கள் தானமாகக் கொடுக்கப் பட்டு, இறந்தும் தன் ஈகையால் வாழ்கிறாள்.
எங்கள் துக்கம் இன்னும் ஆறவில்லை... எங்களுக்கெல்லாம் அம்மாவாக இருந்தவளின் இழப்பை எங்கள் 6 பேராலும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறோம்.
கண்டிப்பாக அவளுக்கு மறு பிறவி கிடையாது. அப்படி இருந்தால்,அவள் நல்ல குடும்பத்தில் பிறந்து நன்றாக வாழ வேண்டும்.

1 comment:

  1. நல்ல ஆத்மா! கண்டிப்பாக நற்கதி கிடைச்சிருக்கும். கடைசி வரை பார்த்துக்கொண்ட உங்கள் சகோதரரின் பாசமும், கவனிப்பும், மன்னியின் விட்டுக்கொடுக்கா அன்பும் பாராட்டுக்குரியது.

    ReplyDelete