Friday, October 13, 2017

திரும்பிப் பார்க்கிறேன்.....

திரும்பிப் பார்க்கிறேன்.....
நேற்று - ஓடி,விளையாடி,ஸ்கிப்பிங் அலுக்காமல் குதித்த வசந்தா... இன்று, ஒரு படியில் , பிடிப்பில்லாமல், ஒரு கால் தூக்கி வைக்க சிரமப்படுகிறேன் - ஆனாலும் மனம் இதை ஏற்றுக்கொண்டு, இதையும் ஒரு தவிர்க்க முடியாத அனுபவமாக நினைக்கும் வசந்தா !
நேற்று - நாற்பது நிமிடங்களில் ஐந்து கிலோ மீட்டர் வேகம் - நடைப் போட்டியில் யாரும் என்னை முந்த விடாத வசந்தா...இன்று.."ஆஹா மெல்ல நட ம், மெல்ல நட - மேனி என்னாகும்" என்று, அடி அடியாய் யோசித்து வைக்கிறேன் .... இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது... எதையும் இழக்கவில்லை... வயது மாற்றி இருக்கிறது...
நேற்று - குழந்தைகள் இல்லாமல், வீட்டில் நிறைய உறவுகள் இல்லாமல் இருக்க முடியாத வசந்தா - இன்று "தனிமையிலும் இனிமையாக" பொழுதை கழிக்கிறேன்.
நேற்று.- எந்த புக் கிடைத்தாலும், தமிழ் அல்லது இங்லீஷ் - வரி விடாமல் படித்த வசந்தா... இன்று..ஒரு புக்கிலும் மனம் ஆழ்ந்து போகாமல், நுனிப்புல் மேய்கிறேன்... கவலை இல்லை... முடிந்தால் படிப்பு... இல்லை என்றால் படுத்து அமைதி... வருத்தமில்லை... நிறைய படித்தாகி விட்டது... இன்னும் நிறைய படிக்கணும் என்ற தவிப்பு போய் BLANK ஆக இருக்கிறேன்.. கவலை இல்லை... மனம் அமைதியாக இருக்கிறது.. அது போதும்...
நேற்று - எதெற்கெடுத்தாலும் வக்கீல் மாதிரி லாஜிக் கோடு வாதாடி, என் கருத்தை நிலை நிறுத்த நினைத்த வசந்தா .... இன்று அதற்கெல்லாம் அர்த்தமே இல்லை என்று உணர்ந்து..கேட்பதை ஆதிகமாகவும் , பேசுவதை அநேகமாக குறைத்துக் கொண்டும் , மெளனமாக இருக்கக் கற்றுக்கொண்டேன்... நிம்மதியாக இருக்கிறது..
நேற்று - ஓடி ஆடி சமைத்து வீட்டை சுத்தம் பண்ணி, தன்னையே படுத்திக் கொண்ட வசந்தா... இன்று எது முடிந்தாலும் சுகமே எண்டு இருக்கிறேன்... பெரிய relief .
நேற்று...கடிகார முள்ளுடன் போட்டி போட்டு ஓடிய வசந்தா ... இன்று மணிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று இருக்க நினைக்கிறேன்.. சில சமயம் முடியாததை... கொஞ்சம் சரி பண்ண வேண்டும்...மற்றபடி முடிக்காத வேலைக்காக மன அழுத்தம் கிடையாது.
நேற்று.. எதையும் கடித்து, ருசித்து சாப்பிட்ட வசந்தா ... இன்று.. முடிந்த வரை குடிக்கிறேன் (கஞ்சியைத்தான்) ... இதுவும் ரொம்ப பிடித்திருக்கிறது.
நேற்று .... திருமண மான குழந்தைகளுடன் இருக்க முடியாது என்று வீம்பாக இருந்த வசந்தா , இன்று, கொஞ்ச நாட்களாவது இருக்கப் பழகிக்கொண்டேன்.. எதிர் காலம் குழந்தைகள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்.
நேற்று... நடனம் பாட்டு என்று சிறப்பாக செய்பவர்களை பார்த்து, "எனக்கு இந்த கலை இல்லையே" என்று வருந்திய வசந்தா... இன்று "அவைகளை ரசிக்கும் கலையை ஆண்டவன் குடுத்திருக்கிறானே என்று சந்தோஷப் படுகிறேன்...
நேற்று ...".எல்லோரும் என்னை ஏமாற்றி விட்டார்கள் " என்று மனம் புழுங்கிய வசந்தா, இன்று," யாரும் ஏமாற்றவில்லை... என் எதிர் பார்ப்புகள் அப்படி என்னை நினைக்க வைத்திருக்கிறது " என்ற புரிதலோடு, மனதில் பகை இல்லாமல்....
நேற்று... அப்பா, அம்மா, உடன் பிறப்புகள் இல்லாமல் வாழ முடியாது என்று தீர்மானமாக நினைத்த வசந்தா , இன்று, "உற்றாரும் சதமல்ல , ஊராரும் சஷமல்ல ", SK மட்டுமே துணை என்று நினைத்து, ஒரு நாள் "அந்தத் தனிமையும் வரும்... எனக்கோ, அவருக்கோ" என்று புரிந்து, அதை பற்றி கவலை படாமல் ... வரும்போது எதிர் கொள்ள கடவுள் தெம்பை தருவார் என்று, இருவருமே நினைக்கும் நிலையில் இருக்கிறோம் என்பது தான் நிஜம்.
அன்றன்று , அப்பொழுதில் பிடித்ததை செய்துக் கொண்டு, நாளை, இல்லை இலை - அடுத்த நொடியில் என்ன நடக்கும் என்று தெரியாத BLISS இல் ... அனுபவிக்கிறேன்..
"இது எதுவுமே "over night change " இல்லை.... காலம் சொல்லிக்கொடுத்து, பக்குவப் படுத்தியது. மனது லேசாக இருக்கிறது... artificial , forced activity & living இல்லாத , மனம் BLANK ஆக இருக்கும் இந்த காலம் , பிடித்துத்தான் இருக்கிறது....
இப்படியே, உடல் நிலை நன்றாக இருக்க என்று கடவுளை வேண்டுவதில்லை... கடவுளின் சித்தம் தெரிய வில்லை. அதுவும் நல்லதுதான்... கடவுள் எதை குடுத்தாலும் , அந்தந்த நிலையில், அவன் நாமம் சொல்லி - காலம் வரும் வரை, அதை நினைக்காமல் வாழ்வேன்... "
2014 மலர்வதை பார்ப்பேனா "? தெரியாது.
இன்று என் ஆசிகளும் , அன்பும் - உங்களுக்கு..... என் energy ஐ உங்கள் எல்லோருக்கும் மாற்றி - , நீங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும்.
"குறை ஒன்றும் இல்லை ... நாராயணா"

No comments:

Post a Comment