Friday, August 21, 2020

பிள்ளையார்........

 SK க்கு பிள்ளையார் இஷ்ட தெய்வம்... இன்றும் எங்கள் சுவாமி ரூமில் பெரிய பிள்ளையார் படம் மட்டும் தான்.

எங்கள் கல்யாண நிச்சயதார்த்தம் கூட பிள்ளையார் சதுர்த்தி அன்று தான் நடந்தது... அப்படி பிளான் பண்ணவில்லை. அதுவாக அமைந்தது. அந்த வருடம் செப்டம்பர் 7 ம் தேதி அன்று.

பூனாவில், எனக்கு கடைசி பையன் பிறந்து, ஆஸ்பத்திரியில் இருந்தபோது, என் கூட தங்க வீட்டிலிருந்து யாரும் இல்லாததால், ரூமில் தனியாகத்தான் இருந்தேன். தினமும் இரவு ஒரு மூஞ்சூர் தொட்டிலை சுற்றி ஓடி மறையும். எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கும். அப்போது வேண்டிக் கொண்டோம் - குழந்தைக்கு கணேஷ் என்று பெயர் வைப்பதாக. அப்படியே வைத்தோம் .

இன்னொரு சம்பவம். சென்னையில், அண்ணா நகரில் , தனி வீட்டில் குடி இருந்தோம். மூன்று குழந்தைகளும் சிறியவர்கள். இவர் ஆபீஸ் வேலையாக வெளிநாடு போனார் - ஒரு மாதத்திற்கு. சொன்னால் நம்புவதற்கு கஷ்டம். தினமும், இரவு, ஒரு மூஞ்சூர் ஹாலில் நாங்கள் படுத்திருக்கும் இடத்தில் ஒரு சுற்று சுற்றிவிட்டு, சுவாமி ரூமில் மறைந்து விடும். ஒரு மாதமும் தவறாமல் நடந்தது.

இப்படி அநேக விஷயங்கள் சொல்லலாம். எங்கள் குடும்பத்தை காப்பாற்றி, ஒவ்வொரு விஷயத்திலும் எங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க உதவுவது பிள்ளையார் தான்.... லஸ் பிள்ளையார் என் கடைசி பையன் கணேஷுக்கு ரொம்ப ஹெல்ப்.

எங்கள் வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை.

Thursday, August 20, 2020

ஆகஸ்ட் 22 - மறக்க முடியாத நாள்...

 

ஆகஸ்ட் 22 - மறக்க முடியாத நாள்... நான் டீச்சராக பிறவி எடுத்த நாள்.

 

படிக்கும்போது டாக்டர் கனவுகளுடன் படித்தேன். டீச்சராவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. பிடிக்காது என்று நினைத்திருந்தேன் .  எக்ஸாம் முடிந்து, ரிசல்ட்டும் வந்ததும், அப்பா சொல்படி  A.G. 's office, Telephones , Government College க்கு எல்லாம் அப்ளை  செய்துவிட்டு, அலஹாபாதில் , அண்ணா வீட்டிற்கு போயிருந்தேன். அப்பாவிடமிருந்து தந்தி... "உடனே கிளம்பி வா... Q.M.C. யில் வேலை என்று. அண்ணா railways ல் இருந்ததால், உடனே டிக்கெட் வாங்கி, கல்கத்தாவில் , ஹௌரா எக்ஸ்பிரஸில் ஏற்றி விட்டார் .

 

மெட்றாஸ் வந்து சேர்ந்ததும், 22ம் தேதி காலேஜில் வேலைக்கு சேர்ந்தேன். பிறகு, மற்ற இடங்களிலும் வேலை கிடைத்தாலும், அம்மா, அப்பாக்கு, காலேஜ் தான் பிடித்தது. அப்பாக்கு டீச்சிங் பிடித்தது... அம்மாவுக்கு அது பெண்கள் காலேஜ் என்பது பிடித்தது !!!

 

நான் படித்த காலேஜிலேயே, நான் படித்த lecturers உடன் வேலை பார்க்க பயங்கர கூச்சம். எனக்கு ஒரு வருடம் ஜுனியர் ஆக இருந்த பெண்களெல்லாம் ரொம்ப friends . லன்ச் சாப்பிட அவர்களுடன் மரத்தடிக்கு போய் விடுவேன். !! சில நாட்களுக்கப்புறம், staff ரூம் பழகி விட்டது. வேலையை ரொம்ப என்ஜாய் பண்ணித்தான் செய்தேன். 1963 - 1973.

 

1974 ல் SK பூனாவிற்கு வேலைக்குப் போக , நானும் குழந்தைகளுடன், காலேஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு , பூனா போய் , 1980ல் திரும்பி மெட்றாஸ் வந்து, மூன்று குழந்தைகளும் முழு நேரம் ஸ்கூலுக்குப் போக , தபால் வழி மேலும் படித்து, ஸ்கூலில் டீச்சராக சேர்ந்தேன் - 1985, ஜூலை 8. 

மறுபடியும் நான் கற்பனை கூட செய்யாத வேலை. ஏனென்றால், "நான் ஸ்கூல் டீச்சிங் எல்லாம் போக மாட்டேன்" என்று சொல்லிக் கொண்டிருப்பேன். ஆனால் அதையும் மிகவும் விரும்பி செய்தேன்.

 

அங்கேயே பிரின்சிபால் ஆக வேலை பார்த்து, ஓய்வு பெற்று, 2001 லிருந்து, 2015 வரை கோச்சிங் சென்டர் .

 

ஆக 1963 லிருந்து, 2015 வரை (நடுவில் ஒரு 11 வருட பிரேக்குடன் ) டீச்சர்.

 

இப்போதும், டீச்சர்களை பார்க்கும்போது, டி.வி. யில் கிளாஸ் ரூம், டீச்சிங் என்று காண்பிக்கும் போது மறுபடியும் அதே உத்தியோகம் பார்க்க ஆசையாக இருக்கிறது.

 

 

 

Wednesday, August 12, 2020

VK and Garden........

 எனக்கும் கொஞ்சம் தோட்ட ஆசை உண்டுதான். தஞ்சையில் இருந்தபோது, அந்த டிபார்ட்மென்ட் அம்மாது. நானும் சிறுமி. எனக்கே என்னை தெரியவில்லை. !!!

சென்னை வந்து அதற்கு ஸ்கோப் இல்லை.
கல்யாணம் பண்ணி , நுங்கம்பாக்கம் தனி வீட்டிற்கு வந்தால், அங்கு பின்னால் பெரிய காலி இடம். ஆனால் அப்போதும் எனக்கு தோட்ட ஆசை எழவில்லை. வீட்டில் நல்ல பெயர் வாங்கவும் (!!!), காலேஜுக்கு வேலைக்குப் போகவும் தான் நேரம் சரியாக இருந்தது...

பூனா வந்து, முதலில் ஒரு இரண்டாவது மாடி குடி இருப்பில் இருந்து, பிறகு ஒரு பெரிய தனி வீட்டின் கீழ் பகுதியில் இருக்கும் வாய்ப்பு கிடைத்ததும், அங்கு வீட்டின் முன்னாடி நிறைய இடம் இருந்ததும் என் மனதில் நீறு பூத்த நெருப்பாக இருந்த தோட்ட ஆசை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது...

நானே கொத்தி, மண் போட்டு, சமன் படுத்தி , விதைகள் வாங்கிப் போட ஆரம்பித்தேன். எனக்கு அவ்வளவாக அதில் பரிச்சயம் இல்லை. இருந்தாலும் விடுவேனா?

ரொம்ப ஆர்வமாக, தக்காளி, கத்திரிக்காய் , வெண்டை எல்லாம் போட்டேன். அதெல்லாம் முளை விட்டு வளர வளர ஒரே சந்தோஷம்.... ஆனால், அய்யகோ.... எல்லாம் மினியேச்சர் காய்கள்... அதுவும் ஒன்றிரண்டு. அதற்கு செலவழித்ததற்கு, கிலோ நாலணாவுக்கு விற்ற வெண்டை, கத்திரிக்காய் எல்லாம் கடையில் வாங்கி இருக்கலாம்.

இப்போது, சோளம் .... அழகாக காய்த்தது. எல்லாம் ஒரு விறல் நீளம்... ஆசையே போய் விட்டது. மணி பிளான்ட் மட்டும் தொட்டியில் மிக நன்றாக வந்தது.
அப்புறம் cactus ல் இறங்கி விட்டேன். தொட்டிகளில் வித விதமான cactus . சுற்றி மலைய் ப் பாங்கான இடமாதலால் , நிறைய cactus கிடைக்கும்.. ஒத்த இன்டெரெஸ்ட் உள்ள சின்ன பச ங்களுடன் டீல் போட்டு, வித விதமான cactus exchange பண்ணி, வளர்த்தேன்.

ஆச்சு. அந்த தோட்டத்திடம் பிரியா விடை பெற்று, எல்லா தொட்டிகளையும் கொடுத்துவிட்டு, சென்னை வந்தோம்.

சென்னையில் அண்ணா நகரில் தனி வீடு. சுற்றி செடி போட இடம். விடுவேனா ... இங்கேயும் எல்லாம் மினியேச்சர் காய்கள் தான். அது என்ன ராசி ? கொய்யா , சீதா பழம் மரங்கள் இருந்தன.. அவைகளில் கூட பழங்கள் சிறியதுதான். கொய்யா நல்ல ருசி என்பது ஆறுதல்.

சைடில் மணி பிளான்ட் வைத்து, அது காடு போல் வளர்ந்து, அதில் குட்டி பாம்பு குடி இருப்பது தெரிய, வெட்டிப் போட்டோம்.

இப்போது, வீட்டின் பின் பக்கம் வாழை. எங்கப்பா, நான் பிறந்த வீட்டில் நிறைய வாழை மரம் வைத்திருந்ததை பற்றி, ஒரு போஸ்டில் எழுதி இருந்தேன். அந்த ஆசை என் உள் மனதில் இருந்தது போல.

நர்சரி யிலிருந்து வாழைக் கன்று வாங்கி நட்டேன். ஐயா .... அது பெரிய மரமாக வளர்ந்து, ஒரு குலை தள்ளியது. ரொம்ப கற்பனை செய்யாதீர்கள். அந்த தார் பழுத்ததும், நானும் என் பெரிய பையனும் ஒரு தார் பழங்களையும் சாப்பிட்டோம் என்று சொன்னால் அதன் சைஸை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பல வருடங்கள் ஓடி, பலப் பல அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து விட்டு, ஒரு வீட்டில், இரண்டாவது மாடியில் அதிஷ்ட வசமாக கொஞசம் திறந்த வெளி இருக்க, நிறைய தொட்டி... எல்லாம் அழகுக்குத்தான் . ஆனால் ரொம்ப ரசித்து செடி வளர்த்து, வீட்டிற்குள்ளும் வைத்து, அழகு பார்த்து , அவைகளை அப்பப்போ, வெய்யிலில் தூக்கி வைத்து, இடுப்பில் வலி வந்து .... அவஸ்தை. ஒரு மணி பிளான்ட் , ரொம்ப நன்றாக, அடர்த்தியாக வர, அழகு பார்த்து மகிழ்ந்தேன். ஆனால், அதன் உள்ளே... எண்ணிலடங்கா எலிக் குஞ்சுகள். அருவருப்புடன் வெட்டிப் போட்டோம்.

கடைசியாக மைலாப்பூரில் கீழ் வீடு. எனக்கு பயங்கர சந்தோஷம் . ஆனால், அந்த இடத்தில் மழை நீர் சேகரிப்புக்காக ஏற்பாடு. அதனால் வெறும் புல் தான் போட்டோம். லான் என்பது அதன் பெயர் அவ்வளவுதான். சகிக்கவில்லை.

வீட்டின் சைடில் நீளமாக இடம் இருக்க, மறுபடியும் வாழை. இப்போது தோட்டக் காரன் அட்வைஸ் . பூவன், மொந்தன் என்று 2,3 வித வாழைக் கன்று வாங்கி நட்டேன். கர்ணன் படத்தில் கிருஷ்ணர் , குந்தி இடம் "ஆனாலும் உனக்கு ஆசை அதிகம் அத்தை " என்று சொல்வது போல் நானும் ஆசையாக நட்டேன்... கன்றை நட்டேன்... அவ்வளவுதான்.. ஒரு வருடத்தில் வாழைக் குலை என்பது கற்பனையில் தான். அய்யகோ... வாழைக் கன்று , கன்றாகவே இருந்தது... ஒன்றிரண்டு இன்ச் வளர்ந்திருக்குமோ என்னவோ... தோட்டக் காரன், "நான்தான் அப்போதே சொன்னேனே" என்று குத்திக் காண்பித்தான்.

முன்னால் இருந்த கொஞ்சம் இடத்தில் சாயந்திரம் கொஞ்சம் வெய்யில் வரும். அங்கு தொட்டிகளில் பல வித செம்பருத்தி வைத்து, அவைகள் கொஞ்சம் பூத்தன என்பது ஆறுதல். இங்கேயும் மணி பிளான்ட் நன்றாக வந்தது. அது என்ன ராசியோ.

இனி அந்த தோட்டக் கவலையும் இல்லை... ஆசையும் இல்லை..


Sunday, August 9, 2020

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே......

 அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே......

1985 .... கிருஷ்ண ஜெயந்தி... அப்போது மூன்று குழந்தைகளும் என்னுடன். 17, 14, 10 வயதுகளில். பண்டிகைக்கு முதல் நாள் பக்ஷணம் ஆரம்பித்து விடுவேன்.

பக்ஷணத்திற்கு சாமான்கள் சேகரிக்கும்போதே 2 சினிமா வீடியோ வாடகைக்கு எடுத்தாகிவிடும். என்ன செய்வது... குழந்தைகளுக்கு சீடை உருட்டும் சிரமம் தெரியாமல் இருக்க லஞ்சம்.. !!!

உப்பு சீடைக்கு நான் சொல்லி இருக்கும் பக்குவப் படி மாவை கலந்து கொண்டு, ஹாலில் தாராளமாக இடம் பண்ணிக் கொண்டு, அடுப்பை இறக்கி கீழே வைத்துக் கொண்டு, வேணும் என்கிற உபகரணங்களை எல்லாம், தண்ணீர் முதற்கொண்டு , ரெடியாக எடுத்து வைத்துக் கொண்டு, வேஷ்டியை விரித்துப் போட்டுவிட்டு, உட்கார்ந்து விடுவேன். சுற்றிலும் குழந்தைகள்.

நான் மாவை கலந்து எடுத்துக் கொடுத்தால் , சின்ன சின்னதாக உருட்டிப் போடுவார்கள். டி.வி.யில் சினிமா ஓடும். அந்த வருடம் பார்த்த படம் "சிதம்பர ரகசியம்' - மனோரமா நடித்தது... படத்தைப் பற்றி ஒரே வரியில் - படு மோசம். இன்றுவரை அதை நினைத்து சிரிப்போம்.

சீடைக்குப் பிறகு, தட்டை, தேன்குழல் -
வெல்ல சீடை அவ்வளவாக நன்றாக வராது.

பண்டிகை அன்று, அப்பம், வடை, அவல் பாயசம், தயிர் தனியாக உரை குத்தி வைத்திருப்பேன். வெண்ணை - இவைகள் நெய்வேத்தியத்திற்கு.

சீடை எல்லாம் குழந்தைகள் டேஸ்ட் பண்ணி இருப்பார்கள்... என்னை பொறுத்தவரை அவர்கள் தான் கிருஷ்ணர்கள்.

கோலம், கால் பாதம் என் பெண் போட்டு விடுவாள். கீழே சுத்தம் செய்வதுதான் பெரிய வேலை.

1985 க்குப் பிறகு, என்ன ஆயிற்று - பெரியவன் IIT ஹாஸ்டலுக்கு போய் விட்டான்... கவனமாக, சீடை முடிந்துவிட்டதா என்று தெரிந்து கொண்டுதான் வருவான். அவனுக்கு பதில் SK - முணு முணுப்புடன்..

1995 ல். கடைசி பையன் அமெரிக்கா போய் விட, பெண் மட்டும் சிக்கினாள்....

1997ல் அவளும் கல்யாணம் ஆகிப் போக , நான் பண்டிகை பக்ஷணங்களை சுருக்கி விட்டேன். ஆனால், சென்னையிலேயே இருந்த பெண் வீட்டிற்குப் போய் உப்பு சீடை மட்டும் செய்து கொடுப்பேன். பிறகு, அதுவும் நின்று, கிராண்ட் ஸ்வீட்ஸ் தான். !!!!

இந்த வருடம்.... உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், அதிரசம், திரட்டுப் பால், .... எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வைத்து , ஒரு பாக்கெட் .

மறக்க முடியாத நினைவுகள்.

Monday, August 3, 2020

ஆப்பம் சுட்ட கதை....

வசந்தா ஆப்பம் சுட்ட (கை சுட்டுண்ட) கதை....

ஆப்பம் பண்ண நீங்க எல்லாரும் என்ன போடுவீங்களோ தெரியாது. நான் expert இல்லை. எங்கம்மா எப்போவாவது செய்வதை பார்த்து, நானும் பின்னாளில் செய்தது.

அரிசி, கொஞ்சம் வெந்தயம், ஒரு கரண்டி கோதுமை - இவைகளை ஊறவைத்து, அரைத்து, தேங்காய் சேர்த்து நன்றாக சாஃட் டாக அரைத்து, உப்பு போட்டு வைத்து, மறுநாள் வார்ப்பேன் . இலுப்பச் சட்டியிலேயோ, தோசை கல்லிலேயோ ஊற்றி , மூடி வைத்து, ஒரு பக்கம் மட்டும் வேக வைத்து ....

இதுவல்ல விஷயம்....

ஒரு நாள் என் பெரிய அக்காவிடம் ஆப்பம் பற்றி பேசும் போது, அவள் சொன்னாள் , "ஆப்பச் சட்டி என்று விற்கிறது, மூடியுடன்; அதை வாங்கி, ஆப்ப மாவை நீர்க்க கரைத்து, ஆப்பச் சட்டியின் நடுவில் ஒரு கரண்டி விட்டு, இரண்டு பக்கமும் அதன் காதை பிடித்துக் கொண்டு, ஒரு சுழட்டு சுழற்றினால் ஆப்பம் பறந்து, விரிந்து, ஓரம் மெல்லிதாகவும், நடுவில் சாஃப் டாகவும் வரும் " என்று விளக்கிச் சொன்னாள் .

உடனே கடைக்குப் போய் ஆப்பச் சட்டி வாங்கி வந்தாச்சு. ஆப்பத்துக்கும் அரச்சாச்சு.

ராத்திரியெல்லாம் தூக்கமில்லாமல், ஆப்பம் பற்றியே நினைவு...

காலை டிஃபனுக்கு ஆப்பம் என்று பெருமையாக announcement விட்டு, சாமியை வேண்டிக் கொண்டு , அக்கா சொற்படி, கை யெல்லாம் நடுங்க , ஒரு கரண்டி மாவை சூடான ஆப்பச் சட்டியில் , நடுவில், விட்டு, அவசரமாக, இரண்டு பக்கமும் பிடித்து, ஸ்டைலாக சுற்றினால், கரண்டி கீழே விழ, தோசைத் திருப்பி தெறித்து விழ, என் கையில் இரண்டு, மூன்று இடத்தில் சூடு பட, மாவு அழகாக நடுவில் ..... பறக்கவுமில்லை- விரியவும் இல்லை.

சரி... முதலாவதுதான் சரியாக வரவில்லை... எதற்கும் பயிற்சி வேண்டும் என்று, அந்த மாவை சுரண்டி எறிந்துவிட்டு, மறுபடியும் சுற்றினால், வேறு இடங்களில் கையில் சூடு.

இது நமக்காகாது என்று, தோசைக் கல்லை போட்டு, என் பிரகாரம்  பண்ணி, மூடி, வேக வைத்து, ஒப்பேற்றினேன் .

அக்காவுக்கு போன் செய்து விட்டு, இன்னொரு அக்காவிடம் என் அனுபவத்தை சொல்லி, அவளும் அவள் அனுபவத்தை ஷேர் பண்ண , ஒரே சிரிப்பு... பல நாள் சிரித்ததுமன்றி , இன்றளவும் சிரித்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த ஆப்பச்  சட்டி முதலில் பரணுக்குப் போயிற்று; பிறகு யாருக்கோ...

இங்கு, நல்ல ஆப்பமும், ஸ்ட்யூவும், தேங்காய் பாலும் தருகிறார்கள். நன்றாக ருசித்து சாப்பிடுகிறேன். அதெல்லாம் கரெக்ட்டாக பண்ணி விடுவேன்.