வாழ்க்கை ஒரு விளையாட்டு.
ஒரு பக்கத்தில் நீங்கள். மறுபக்கத்தில் கண்ணுக்குப் புலப்படாத இறைவன்.
ஆட்டத்தின் விதிகள் பிரபஞ்ச விதிகள்.
ஆட்டத்தின் விதிகள் பிரபஞ்ச விதிகள்.
இந்த வினோத விளையாட்டே நீங்கள் ஜெயிக்கிறீர்களா இல்லையா என்பதை நிர்ணயிக்கத்தான். ஆனால் மறு பக்கத்தில் இருக்கும் இறைவனுக்கு இந்த விளையாட்டில் வெற்றி தோல்வி கிடையாது.
நீங்கள் காய்களை நகர்த்தும் விதத்தை வைத்தே இறைவனும் காய்களை நகர்த்துகிறான்.
இறைவன் உங்களை அவசரப்படுத்துவதில்லை. இப்படி ஆடு, அப்படி ஆடு என்று உங்களை நிர்ப்பந்திப்பதில்லை. எப்படிக் காய்களை நகர்த்துகிறீர்கள் என்பதில் உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு. நீங்கள் காய்களை நகர்த்தும் வரை இறைவன் பொறுமையாகவே காத்திருக்கிறான். ஒரு முறை நகர்த்திய பிறகு வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்வதற்கு இந்த ஆட்டத்தில் இடமில்லை.
அதேசமயம் நீங்கள் காய்களை நகர்த்திய பிறகு அதை வைத்து இறைவன் காயை நகர்த்தும் போது அதை விமரிசித்தால் இறைவன் பொருட்படுத்துவதில்லை. இறைவனைப் பொறுத்த வரை நீங்கள் காய்களை நகர்த்துவதில் தான் உங்கள் சாமர்த்தியத்தைக் காட்டுகிறீர்களே ஒழிய உங்கள் கருத்துகளுக்கு இந்த ஆட்டத்தில் இடமில்லை.
இறைவன் கண்டிப்பாக விதிகளை மீறுவதில்லை. தப்பாட்டம் ஆடுவதில்லை. நீங்களும் அப்படியே ஆட வேண்டும் என்ற அடிப்படை நாணயத்தை உங்களிடம் அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் கண்ணுக்குப் புலப்படாதவன் அசந்திருப்பான், கவனிக்க மாட்டான் என்று நீங்கள் அழுகுணி ஆட்டம் ஆடினால் நீங்கள் தோற்பது உறுதி. விதிகளுக்கு புறம்பாக ஆடத்துவங்கும் போதே உங்கள் தோல்வி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.
இந்த ஆட்டத்தின் சுவாரசியமான அம்சமே இந்த ஆட்டம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை நீங்கள் அறியாதது தான். ஆட்டம் திடீரென்று எந்த நேரமும் இறைவனால் முடித்து வைக்கப்படலாம். இறைவனாக முடிக்கிற வரை எப்படி ஆடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை வைத்து தான் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது.
ஆட்டத்தை உற்சாகமாகவும், நேர்மையாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடிக் கொண்டிருக்க முடிந்தால் ஆட்டத்தில் நீங்கள் வெற்றியடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். எந்திரமாகவோ, வஞ்சகமாகவோ, முட்டாள்தனமாகவோ ஆடி வந்தால் தோல்வியடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
மற்ற விளையாட்டுகளை விட இந்த விளையாட்டு இன்னொரு விதத்தில் நிறையவே வித்தியாசப்படுகிறது. மற்ற ஆட்டங்களில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று என்று உங்களை நிரூபிக்க பல சந்தர்ப்பங்கள் உள்ளன. இதில் அப்படி இன்னொரு சந்தர்ப்பம் உங்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இந்த வாழ்க்கை தான் உங்களுக்கு கிடைக்கும் ஒரே மிகப்பெரிய சந்தர்ப்பம். இது முடியும் போது எல்லாமே முடிந்து போகிறது.
இந்த அரிய சந்தர்ப்பத்தை எப்படி பயன்படுத்தி ஆடிக்கொண்டிருக்கிறீர்கள்?
No comments:
Post a Comment