Friday, October 20, 2017

கண்........

"கண்களால் கைது செய்" ன்னு பாரதி ராஜா ஒரு படம் எடுத்தார். நான் பார்த்தேன் (அநேகமாக, நாங்கள் இருவர் மட்டும் தியேட்டரில்)... பாரதி ராஜா படம் மிஸ் பண்ணலாமோ?
படம் சுமார். பரவா இல்லை. ஆனால், கதைக்கும், கண்ணுக்கும் சம்பந்தமே இல்லை. 

சினிமாவில் "பெண் படுத்தும் பாட்டை விட, கண் படுத்தும் பாடு ரசிக்கும்படி யாகத்தான் இருக்கு...

தூக்குத் தூக்கியில், லலிதா ஒரு 'கெட்ட மனைவி' சிவாஜிக்கு. ("கொலையும் செய்வாள் பத்தினி" என்பதை நிரூபிக்க). சிவாஜி அவள் வீட்டுக்கு வந்ததும், லலிதா, "அத்தான் , என் கண்களைப் பாருங்கள்" என்பாள். அதற்கு சிவாஜியின் உடனடி வசனம்.. "ஏன், நன்றாகத்தானே இருக்கிறது?" ( லலிதா ஏதோ சிவாஜியை மிஸ் பண்ணி, தூங்காமல் சிவந்திருக்கிறது கண்கள் என்று காட்ட ஆசைப்படுகிறாள்.) இந்த டயலாக் , எனக்கு இன்னி வரைக்கும் சிரிப்பை வரவழைக்கும். 

இதே சிவாஜி, தனக்கு பிடித்த பெண் என்றால், "எந்தன் கண்ணுக்குள்ளே உன்னை பாரு, அது காவியம் ஆயிரம் கூறும்" என்று பாடுவார். 

ஒரு பெண்ணுக்கு கண் அழகாக இருந்தால், அந்த பெண்ணே அழகுதான். சரவணன் மீனாக்ஷி சீரியல் பார்க்காதவார்கள் கூட, அந்த மீனாட்ச்யின் கண்களுக்காக ஒரு முறை பாருங்கள். என்ன அழகான கண்கள்! அதில் மையிடுகிற அழகே அழகு... வர்ணிக்க "நான் கவிஞனும் இல்லை" - நல்ல ரசிகை  

இந்த கண்கள் தான் எவ்வளவு சேதிகள் சொல்கின்றன? அதனால் தான் வள்ளுவரும் "கண்ணொடு கண் நோக்கொக்கின் வாய்ச்சொல்லால்  என்ன பயனும் இல" என்று எழுதினார்.
வள்ளுவர் ஒரு கில்லாடி... "யான் நோக்கும் காலை நிலம் நோக்கும்" என்று வெட்கத்தை ஒரு அடியில் சொன்னார்.

பத்மினியின் கண் அழகு. "மறைந்திருந்த பார்க்கும்" பாட்டில், நவரசமும் காட்டும் கண்கள்... அப்பப்பாப்பா .... "ஓஹோ எத்தனை அழகு 20 வயதினிலே.. ரிம் ஜிம் எத்தனை அழகு அவளின் கண்களிலே" ...கண்ணொடு சேர்ந்து புருவமும் அழகாக அமைந்து விட்டால்.... அழகோ அழகு...அது எப்படி புருவத்தை மட்டும் , தனித்தனியாக நெளித்தாள்.

சரோஜா தேவியின் கண்களும் அழகு தான்.. அதில் கொஞ்சம் கொஞ்சலும் தெரியும்... "கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ... " என்ற பாட்டு (சோகம்) .. பார்த்து, கேட்டிருக்கிறீர்களா..? அதில் சரோஜா தேவி பெயர் சுமதி. அதனாலேயே அந்த பெயர் எனக்கு பிடிக்கும். (வசந்தா வை மாற்றலாமா என்று கூட யோசித்தேன் என்றால் பாருங்களேன்)

நம் இலக்கியத்திலும் கண்ணுக்கு முக்கியத்துவம் உண்டு...
"காதளவோடு ஓடிய கண்கள்" , "மான் விழியாள்" , "செவ்வரி ஓடிய கண்கள்.." இப்படி எத்தனையோ..

ஆனால் , ஒன்று கவனியுங்கள்... ஆண்களின் கண்களைப் பற்றி யாருமே பேசியதில்லை... ஆண்களை வர்ணித்ததும் இல்லை. exceptஒன்று இரண்டு..."தேக்கு மரம் உடலை தந்தது.. சின்ன யானை நடை தந்தது.." ; ஆண் மயில் தொகை போலே  யானையின்தந்தம்போலே, சிங்கத்தின் பிடரி போலே, சேவலின் கொண்டை போலே..." என்று சபாஷ் மீனா வில் சரோஜா தேவி ....

இது வேண்டாம்...நம் கண்களுக்கு வருவோம்...

கிருஷ்ணரின் அழகு கூட அவர் கண்களில்... கண்ணன் !! 

ஜேம்ஸ் வசந்தனின் முதல் பாடல்..."கண்களிரண்டால், உந்தன் கண்களிரண்டால், என்னை கட்டி இழுத்தாய்......" அதில் அந்த பெண் பார்க்கும் ஓரக்கண் பார்வையும், அதற்கேற்ற புன்னகையும் கொள்ளை அழகு... அதுவும் அந்த கோவில் சீன்... தன அண்ணனை பார்த்ததும், டக்கென்று கை கூப்ப, அங்கே சாமி ஊர்வலம் வர... என்ன கற்பனை !!

மாமியாரின் உருட்டும் விழிகள், மருமகளின் பயந்த கண்கள், கணவனை பார்த்து சிரிக்கும் (கோபப் படும்) கண்கள்... (அப்படி கோபப்படும்போது.. நம் வாய் தானே இறுக்கி மூடிக்கொள்ளும்.. reflex  reaction )... குழந்தையை கொஞ்சும் கண்கள்... வில்லியின் சுருங்கிய கண்கள், தீர்க்கமாக உற்றுப் பார்த்து, நம்மை உண்மை பேச வைக்கும் கண்கள்... மனதில் கள்ள மில்லாவிட்டால் நேருக்கு நேர் பார்க்கும் கண்கள்.... எவ்வளவு குணங்களை இந்த கண்கள் காமிக்கின்றன?

கம்பர் - விசுவாமித்திரர் ராமரை அழைக்கும்போது... "கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தான்..." கண்ணே இல்லை என்றால் தெரிந்திருக்காது. முதலில் கண் இல்லாமல், பிறகு கண் பெற்றால் பாக்கியம்.. அதை அனுபவித்த பின் மீண்டும் இழந்தால்...என்ன ஒரு உவமை..

பாராதியாரும் கண் ரசிகர் தான்... அதனால் தான் கண்ணனை பெண்ணாக உருவகம் செய்து, கண்ணம்மா என்று பெயர் சூட்டினார். பாரதியார் இல்லை என்றால். சினிமாவுக்கு பெரிய நஷ்டம் !! 

"இந்த காற்று வெளியிடை கண்ணம்மா.. கண்ணம்மா..." (கட்ட பொம்மன்) ... ஜெமினி... அந்த இரண்டாவது கண்ணம்மா வில் ஒரு அழுத்த கொடுக்கும் போது.. சிலிர்த்துப் போகும். 

"கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள் ,தன்னாலே மயங்கும் காலமே" 

ஆசையை தெரிவிக்கக் கூட நாம் "கண்ணே" என்று சொல்கிறோம் .. 
"துன்பம் நேர்கையில்" பாட்டில் ...."ஆடிக்காட்ட மாட்டாயா கண்ணே, கண்ணே ..." " கண்ணே ...கண்ணே.. என்று ஏன் முகத்தை ஏன்..?" - இது லலிதா.."இல்லே, கண்ணே சரிதானா என்று கேட்டேன்.." என்று அசடு வழியும் பாலையா.

இப்படி கண்ணின் முக்கியத்தை உணர்ந்து, அந்த நாளிலேயே, "ராஜி என் கண்மணி" படம் எடுத்து, "கண் தானம் புரியாயோ" என்ற மெசேஜ் சொன்னார்கள் !!

"உன்னை கண் தேடுதே" , "கண் போல் வளர்த்த தந்தை, அவர் கண் பெற எங்கும் என் சிந்தை" (கணவனே கண் கண்ட தெய்வம்); "உன் கண் உன்னை ஏமாற்றினால் ஏன் மேல் கோபம் உண்டாவதேன் ..."

பார பட்சத்தை காட்டக்கூட "ஒரு கண்ணில் வெண்ணை, ஒரு கண்ணில் சுண்ணாம்பு" 

தில்லானா மோகனாம்பாள் ஞாபகம் இருக்கும்... அந்த ரயில் சீன்  (கிளாசிக்) ....கண்ணில்தூசுஎன்றசாக்கில்ஊதுவது....

"மீன் விழியாள்"... கதாநாயகிகள், முக்கியமாக சரோஜா தேவி, கண்ணுக்குள் மையிட்டு, வெளியே கொஞ்சம் இழுத்து (குருவி இழுத்து என்று சொல்லுவோம்) ... அது கண்ணை நீளமாக காட்ட. 

"கண்" என்ற வார்த்தை இடம் பெற்ற படங்களோ, இலக்கியங்களோ (இளங்கோவடிகளின், கண்ணகி, மாதவி பற்றிய வர்ணனைகளும், (சிலப்பதிகாரம்), அருளும், சாந்தமும் பொங்கும் மணிமேகலையின் கண்களும்... படிக்க படிக்க புது புது அர்த்தங்கள்...

இன்னும் எத்தனையோ சொல்லலாம்... ஆனால் உங்கள் கண்களுக்கு தான் கஷ்டம் !! 

"உந்தன் நீள் விழிகளை காணும் நதியில் மீன்களும் துள்ளி ஆடுதே"....... மிக அழகான கற்பனை.

Physics இல் கூட கண் பற்றிய பாடம் விளக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். 

இப்படியாக, பார்க்க, ரசிக்க, கோபம், தாபம் ......

தாபம் என்றதும் ஞாபகம் வருகிறது.. சில்க் ஸ்மிதாவின் கண்கள்... அதில் ஒரு மயக்கும் "lust " தெரியும்... அதை வெரி யாரும் அவ்வளவு துல்லியமாக காண்பிக்க முடியாது. 

இப்படியாக, பார்க்க, ரசிக்க, கோபம், தாபம், சோகம், வெறுப்பு, காழ்ப்பு, சிரிப்பு (பல விதமான, பலப் பல அர்த்தமுள்ள புன்னகைகள்) அன்பு, பாசம் எல்லாவற்றையும் காட்டும் கண்கள் ... "எண் சாண் உடலுக்கும், கண்களே பிரதானம்"


No comments:

Post a Comment