Monday, September 10, 2018

திருவாதிரை களி...

திருவாதிரை களி..
அரிசியை களைந்து, நிழல் உலர்த்தலாக உலர்த்தி, அதனுடன் 1 பிடி பயத்தம் பருப்பு சேர்த்து ,கடாயில் போட்டு, பொரிய வறுத்துக் கொள்ள வேண்டும்.
இதை மெஷினில் குடுத்து சன்னமான ரவையாக உடைத்துக் கொள்ள வேண்டும்.
அடி கெட்டியான பாத்திரத்தில், (குக்கரில் ,அல்லது வெண்கல பானையில்) ஒரு பங்கு ரவைக்கு 2 1/2 பங்கு என்ற விகிதத்தில் (நல்ல அரிசியாக இருந்தால் மூன்று பங்கு தாங்கும்) தண்ணீர் வைத்து, ஒரு பங்குக்கு 2 1/2 பங்கு விகிதத்தில் வெல்லத்தை உடைத்து போட வேண்டும்.(நான் 3 பங்கு வைப்பேன்.. இப்போதெல்லாம் வெல்லத்தில் தித்திப்பு குறைச்சலாக இருக்கிறது)
நீர் கொதித்து வரும்போது, ஒரு மூடி தேங்காய் துருவலையும் சேர்த்து, தள தள வென்று கொதிக்கும்போது, அடுப்பை சின்னதாக வைத்து, அரிசி நொய்யை சீராக கொட்டிக்கொண்டே கிளற வேண்டும்.
அப்பப்ப அடி பிடிக்காமல் கிளறிக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும்.
களி வெந்ததும் அதி ஏலக்காய் பொடி, வருத்த முந்திரி பருப்பு, நெய் சேர்த்து கிளற வேண்டும்.
அப்படியே மூடி வைத்தால், கொஞ்ச நேரத்தில் களி பொல பொல வென்று உதிர்ந்து கொள்ளும்.
(இரண்டு டம்ளர் அரிசி உடைத்தது, 3 டம்ளர் தண்ணீர், 3 டம்ளர் வெல்லம், ஒரு மூடி தேங்காய் போட்டால், 4 பேருக்கு களி தாராளமாய் இருக்கும்)
வெண்கல பானையில் செய்யும் போது, மேலே தட்டை போட்டு மூடி, அந்த தட்டின் மேல் கொஞ்சம் தண்ணீர் விட்டால், உள்ளே தண்ணீர் சோர்ந்து, களி நன்றாக வேகும்
7 கறி கூட்டு பண்ணி, களியுடன் சேர்த்து சாப்பிட்டால், ஆஹா - என்ன ருசி.

Thursday, August 30, 2018

உப்பு சீடை....


உப்பு சீடை செய்யும் முறை. (வசந்தா ஸ்பெஷல்)... மறு பதிவு.
அரிசியை களைந்து, நிழல் உலர்த்தலாக உலர்த்தி, மெஷின் இல் அரைத்து வாங்கி, சலித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
(இப்போதெல்லாம் processed maavu என்று கிடைக்கிறது)
அரிசி மாவு 8 டம்ளர்
மைதா மாவு 6 டம்ளர்
உப்பு, பெருங்காயம், ஊற வைத்த இரு பிடி கடலை பருப்பு, துருவிய தேங்காய் (ஒரு மூடி மித்தல் காய்)
வெண்ணை - 200 gm
(தேவையானால் எள். இது எண்ணையில் தங்கும் அதனால் விட்டு விடலாம். )
[வருத்த உளுந்து மாவெல்லாம் போடாதீங்க]
இப்போ செய் முறை - கவனமா படிங்க.
எல்லா சாமானையும் போட்டு (ஒரு பெரிய அடுக்கு, தேக்குசா, உருளி, அருக்கஞ்சட்டி... இதெல்லாம் இல்லேன்னா... ஹிண்டலியம் குக்கர்), நன்றாக கலக்க வேண்டும். (தண்ணீர் கண்டிப்பாக விடக்கூடாது. )
வேஷ்டியை விரித்து போட்டு வைத்து விட்டு, பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு உட்காரவும்.. (ஒரு கால நீட்டிக்கொள்ளலாம்)
நன்கு கலந்த மாவில், நடுவில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து, (மாவில் மைதா, வெண்ணை கொஞ்ச பிசுக்கு கொடுக்கும்) , அந்த மாவை மட்டும் இடது கையில் வைத்துக்கொண்டு, சிறிய பிள்ளையார் (வெறுமே கூம்பு மாதிரி) பிடித்து, வைக்க வேண்டும்.
மீதி மாவை, வலது கட்டை விரல், ஆட்காட்டி விரலால் ரொம்ப கொஞ்சமாக கிள்ளி , சட்டென்று ஒரு உருட்டு உருட்டி வேஷ்டியில் போட வேண்டும்...
கை மாவு தீர்ந்து விட்டால், மறுபடியும் அதே போல், நடுவில் தண்ணி... பிசிறல்.. இடது கையில் வைத்துக்கொண்டு உருட்டல் ...
கணிசமாக உருட்டியதும் ... அடுப்பில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், தட்டில் சீடைகளை எடுத்து, எண்ணையில் மெல்ல போட வேண்டும்.
அடுப்பை கொஞ்சம் சிறியதாக வைத்து, பிரவுன் நிறம் வந்ததும், ஜல்லி கரண்டியால் வரித்து எடுத்து டப்பாவில் போட வேண்டும்.
சூடு ஆறும் வரை டப்பாவை மூடக்கூடாது...
தைரிய மாக செய்யுங்கள் ஒன்றும் தப்பாக போகாது. உப்பு போட மறக்க வேண்டாம். தூள் பெருங்காயம் அல்லது தண்ணீரில் ஊறவைத்த கட்டி பெருங்காய தண்ணீர்.
ரொம்ப சின்னதாக உருட்ட வேண்டும்... பழகி விடும்... சோம்பல் படக்கூடாது... எல்லாரும் "எப்படி இவ்வளவு கரகரப்பு ? " ன்னு கேப்பா...
அது தொழில் ரகசியம்... அதாவது.... இந்த மைதாவும், கொஞ்சம் அதிகப்படி வெண்ணையும், மொத்தமாக பிசையாததும் !!

Wednesday, August 22, 2018

மெட்றாஸ் டே ஞாபகங்கள் ---நானும் மெட்ராசும் :-

மெட்றாஸ் டே ஞாபகங்கள் ---நானும் மெட்ராசும் :-
நான் மெட்ராஸ் வந்தது 1959 .
முதல் வீடு புரசைவாக்கத்தில. 15 ரூ. வாடகை. அது சின்ன போர்ஷன் ன்னு ஒரு தனி வீட்டுக்கு மாறினோம். புரசைவாக்கம் High ரோடுக்கு பக்கத்தில. 30 ரூ.
அப்போ எல்லாம் நான் flat ஏ பாத்தது இல்ல.
புரசை High ரோடுல, ஏதோ சின்ன சின்ன கடைகள் இருக்கும். ராக்சி தியேட்டர் இருக்கும். வெள்ளாள தெரு ரொம்ப பாபுலர். ஒரு பெரிய கடை கூட இருக்காது. இப்போ மாதிரி கூட்டமும் இருக்காது.
13 ம் நம்பர் பஸ்ஏறி, 2 அணா குடுத்து பிரெசிடென்சி வரை போவேன். அங்கேர்ந்து 1 அணா குடுத்தா, 21 B ஏறி QMC . அனேகமா நடந்து, ஒரு அணா மிச்சம். பீச் ரோட், இவ்வளவு பந்தாவா இருக்காது. ரொம்ப சிம்பிள். பீச் ரோடில University, Senate Hall, Presidency, QMC, IG Office .. இவ்வளவுதான் பெரிய கட்டடங்கள். இவ்வளவு பஸ், கார் கிடையாது. South Beach Road, North Beach Road தான் பேர். சமாதிகள் கிடையாது. Harbor to Santhome ... பீச்.
Edward Elliots Road இல் Woodlands, Sri.Vasan's house, Dr.Radha Krishnan's House, SimsonKrishnamurthi'sHouse ..இப்படி பெரிய பெரிய வீடுகள். அந்த ரோட் பீச் ரோட் ஜெமினியிலிருந்து , பீச் ரோட் வரை... அந்த ரோடின் கடைசியில் பத்மினியின் வீடு !
பெரிய ஜெமினி ஸ்டுடியோ.
மவுண்ட் ரோட் ன்னு பேரு (இப்போ அண்ணா சாலை) ... St.Thomas Mount வரை போவதால்.
இப்போ இருக்கும் T.T.K. Road - "Mowbray's ரோடு" ... Business Centre கிடையாது. எல்லாம் தனித்தனி வீடுகள். ரெண்டு பக்கமும் அடர்ந்த மரங்கள்.
South பக்கம் மைலாபூரோடு சரி. மந்தவெளி இருந்தது. ஆனா கொஞ்சம் தனி வீடுகள். R.A.Puramகிடையாது.
அடையாறுக்கு அப்புறம் Beasant Nagar எல்லாம் கிடையாது. திருவான்மியூர் கிராமம் மாதிரி இருக்கும்.
வடக்கில், ஹார்பருக்கு அப்புறம், ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு , ராயபுறம் ஒரு சின்ன ஊர்.
Broadway, Paris Corner, Esplanade, Armenian Street, Pavazhakkaaratheru (Coral Merchant Street), Evening Bazaar... இதெல்லாம் famous . அந்த பக்கம் தான் பூக்கடை, கொத்தவால் சாவடி, பழக்கடை.
சென்ட்ரல் பக்கத்தில , மூர் மார்கெட் shopping போனா, superb ஆ இருக்கும். அங்க கிடைக்காத பழைய சாமான்களே இருக்காது. புக்ஸ் க்காக நான் அடிக்கடி போவேன். சின்ன சின்ன கடைகள். ரொம்ப பாபுலர். எரிஞ்சுபோச்சு. ரொம்பவருத்தமானவிஷயம்.
அங்கே இருந்து பூந்த மல்லி ஹை ரோட். (இப்போ பெரியார் சாலை ன்னு நெனைக்கிறேன்). அப்போதான் கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் கட்டினார்கள். தசப்ரகாஷ் ரொம்ப விசேஷம்.
பெரிய ஹோட்டல் ன்னா , தாசப்ரகாஷ், வூட்லண்ட்ஸ், எவரெஸ்ட் (எக்மோர் ஸ்டேஷன் எதிரில்)
இப்போதிருக்கும் அண்ணா நகர், அப்போ பொட்டால் காடு. அந்த பக்கம் மெட்ராஸ், Kilpaukகோடு முடிய, ஷெனாய் நகர் ஒரு எக்ஸ்டென்ஷன் . அதோடு முடிந்தது.
1969 இல் ஒரு பெரிய Industrial Exhibition நடந்தது. அது முடிந்ததும், அந்த ஏரியாவை பிளாட் போட்டு, ஒரு கிரௌண்ட் 5000 ரூ. ன்னு வித்தா. ஊரை விட்டு ரொம்ப தள்ளின்னு நாங்க வாங்கல்லே!!
ஜெமினி சர்க்கஸ் , ரெண்டு வருஷத்துக்கு ஒரு தரம் வரும் - மூர் மார்கட் பக்கத்தில. இப்போ அது நேரு ஸ்டேடியம் ஆயிடுத்து.
சைக்கிள் ரிக்ஷா, கை ரிக்ஷா உண்டு. MGR தான் கை ரிக்ஷாவை ban பண்ணினார். பாவமா இருக்கும். ஓரணா, ரெண்டனா வுக்கு எல்லாரும் பேரம் பண்ணுவா.
சைக்கிள் ரிக்ஷா , எங்கே போனாலும் நாலணா தான் ஆகும்.
1970 ல நாங்க ஸ்கூட்டர் ,அப்புறம் கார் வாங்கரச்சே, பெட்ரோல் 1.30 Rs. Diesel 0.80 Rs. Kerosine 0.50 per litre.
சுமார் 2400 சதுர அடி , தனி வீட்டுக்கு, 1300 ரூ. குடுத்தோம். (1980 ல) . 1350 Sq.Ft. Flat - 3.75 lacs !!in 1984 in R.A.Puram !!
Gas - 15 Rs. Milk 1/2 litre bottle - 0.60 Re. ; Auto - minimum - 0.80 ; Taxi - minimum 1.60. மீட்டர் போட்டு, ஒழுங்கா காசு வாங்கிப்பான்.
தண்டையார் பேட்டயிலிருந்து , கோஷா ஆஸ்பத்திரிக்கு 5 ரூ. ல வந்துடலாம்.
தி. நகர். பக்கா residential ஏரியா. உஸ்மான் ரோடில் இவ்வளவு கடைகள் எல்லாம் கிடையாது. ஈசியா நடக்கலாம். நல்லி, குமரன், உம்மிடியார் .. இவ்வளவுதான்.
சிலைகளே கிடையாது. அப்புறம் தான் முக்குக்கு முக்கு சிலை.

Monday, May 21, 2018

ஈய சொம்பும் நானும்....


எங்கம்மா வீட்டில் குமுட்டி அடுப்பில் ஈய சொம்பில் ரசம் கொதித்து பார்த்திருக்கிறேன். சமைத்த அனுபவம் கிடையாது.
கல்யாணத்துக்குப் பிறகு, எனக்கும் அந்த ஆசை வந்தது. அம்மாவை தொந்தரவு பண்ணி ஒரு ஈய சொம்பு வாங்கினேன். 
ஈய சொம்பில் புளி கரைத்து, கட்டி பெருங்காய துண்டு போட்டு, மஞ்சள் தூள், ரஸப் பொடி, தக்காளி, கறிவேப்பிலை போட்டு, பக்கத்திலேயே நின்று, அதையே பார்த்துக்கொண்டிருந்து , கொஞ்சம் கொதித்ததும், வெந்த பருப்பை மசித்துப் போட்டு, வேணுங்கிற அளவு விளாவி, மிளகு, ஜீரகப் பொடி போட்டு, கொத்தமல்லி தழை போட்டு ..... ஒரு கொதி வந்ததும் அணைத்து, அப்பாடா என்று இறக்கி வைத்து....
எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.....
ஒரு நாள் எலுமிச்சை ரசம் வைக்க ஆரம்பித்தேன். எலுமிச்சை ரசத்துக்கு, முதலில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு துண்டு நசுக்கிய இஞ்சி தாளித்து பிறகு தண்ணீர் விட வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொண்டேன்.
அதே போல் ஈய சொம்பை அடுப்பில் வைத்து, நெய் விட்டு, கடுகு போடுவதற்குள் சொம்பு உருகி சப்பையாக போய் விட்டது. ரொம்ப வருத்தமாக போய் விட்டது. அம்மாவிடம் திட்டு வாங்கி கொண்டு, அந்த வருத்தம் போனதும், மறுபடியும் ஒரு சொம்பு. இந்த தடவை ரொம்ப careful. ஆனால் அந்தோ... மறுபடியும் ஒரு தவறு. ரசம் கொதித்ததும், சூட்டோடு, இடுக்கியால் இறக்கினேன். அப்படியே இடுக்கி அமுக்கின இடம் நசுங்கி விட்டது.
கொஞ்ச நாள் விட்டுப் பிடிப்போம் என்று ..... ரொம்ப நாள் கழித்து மறுபடியும் ஈய சொம்பு ஆசை. கொஞ்சம் flame பெரிசாக வைக்க, சொம்பின் மேலே ஒரு ஓட்டை.
அதோடு ஈய சொம்பு ஆசையை விட்டேன்.
ஆனால் இப்போது தேறிவிட்டேன். ரசம் வைக்கும்போது, enough தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்து, அந்தண்டை, இந்தண்டை நகராமல் low flame இல் வைத்து, ரசம் ஒரு கொதி வந்ததும், அடுப்பை அணைத்து, துணியால் இறங்குகிறேன். இருந்தாலும் சொம்பை பத்திரமாக இறக்கும் வரை டென்ஷன் தான்.
lesson learnt... to be learnt.....
Never move too far away from the kitchen when the rasam is being made. For if you do, you may neither find the rasam nor the sombu.

Wednesday, January 10, 2018

APPA......




அப்பா பிறந்தது 1899 . January 11. 'சேத்தூர்' கிராமம். காரைக்கால் கிட்ட. தஞ்சாவூர் ஜில்லா படிச்சது அங்கேயே ஏதோ ஸ்கூல் - 9 கிளாஸ் வரைக்கும்.
பிரிட்டிஷ் கால படிப்பு... இங்கிலீஷ் எல்லாம் ரொம்ப நன்னா இருந்திருக்கணும். அப்பாக்கு Maths தான் பிடித்தது.
மாயவரத்தில் அப்பாவோட மாமா .. காவிரிக் கரையில அக்ரஹாரத்தில பெரிய வீடு... என்ன அப்பா ஒரு தரம் அழைச்சிண்டு போயிருக்கா..
அப்பா, ஹை ஸ்கூல் படிச்சது மாமாவாத்துல தங்கி...
அப்போல்லாம் இது ரொம்ப சகஜம்... உறவுக்காராத்துல தங்கி படிக்கிறது...
சாப்பாட்டுக்கு காசு குடுக்கறது, அவா திட்டராளா, அடிக்கராளான்னு பாக்கறது, சாப்பாடு சரியா போடராளா ன்னு கவலைப் படறது... ஒண்ணும் கிடையாது...
அவாத்து வழக்கம் என்னவோ அதத்தான் தங்கி படிக்கிற குழந்தையும் follow பண்ணும்... எதிலும் வித்தியாசம் பாராட்ட மாட்டா..
அம்மா அப்பாவ விட்டு இருக்கானே ன்னு கொஞ்சறதும் இல்ல... நமக்கு பாரமா இருக்கானே ன்னு மனசால கூட நேனைக்கறதும் இல்ல.
அப்பா, குத்தமாகவோ, சோகமாகவோ அல்லது ஸ்பெஷல் ஆகவோ தன் மாயவரம் life பத்தி சொன்னது இல்ல. ஏன்னா.. எல்லாமே நார்மலா தான் உணர்ந்திருக்கா !!

காவிரியில் தினமும் மணிக்கணக்கில் நீச்ச்சலடித்தது பத்தி நெறைய சொல்லி இருக்கா.
S.S.L.C. பாஸ் பண்ணினதும்  Intermediate படிக்க, அப்பா மெட்ராஸ் போயிருக்கா.. பிரெசிடென்சி காலேஜ் ... 1916 ல , ஒரு குக்கிராமத்திலேர்ந்து, அப்பாக்கு எப்படி அந்த தைர்யம் வந்துது... அதுவும் படிக்காத அம்மா அப்பா ஆத்துலேர்ந்து !!
அப்போ அப்பாவோட பெரிய அக்காக்கு கல்யாணம் ஆயிடுத்து.அத்தை மெட்ராஸ் ல குடுத்தனம்....
அப்பா B . A . Mathsபடிச்சுட்டு , Law சேந்தா.. அது முடிக்க முடிக்க கல்யாணம்ஆயிடுத்து. அம்மாவ  சேத்தூர்ல  விட்டுட்டு, அப்பா govt ல சர்வேயர் ஆ வேலைக்குசேந்தா. அதிலேயே இருந்திருந்தா, நல்ல நெலமைக்கு வந்திருப்பா... நான் சொல்றதுபணத்தாலே. ஆனா அப்பாக்கு teaching தான் புடிச்சுதாம். அதானாலே, Saidapet  teachers காலேஜ் ல சேந்து B . T . பண்ணி இருக்கா.
தஞ்சாவூருல Girls' Christian School la Maths Teacher aa வேலை பண்ணஆரம்பிச்சா.. 1923 ல. 1959 ல... 36 வருஷ சர்வீசோடretireஆனா....
படித்து முடிக்கும் வரை ... நாலு முழம் வேஷ்டி, அரைக்கை சட்டை...
வேலைக்குப் போகும்போது, எட்டு முழம் வேஷ்டி, அரைக்கை சட்டை, மேலே அங்கவஸ்திரம்...

அப்பாவுக்கு நிறைய ஞானம். நிறைய படிப்பா. படித்ததை எங்களோடு ஷேர் பண்ணிப்பா.
கர்நாடக சங்கீதம் expert . ஆனால் முறையாக படித்தது இல்லை. கேள்வி ஞானம். ஹார்மோனியம் , கோட்டு வாத்யம் ரொம்ப நன்னா வாசிப்பா.

எலெக்ட்ரிக்கல் வேலை எல்லாம் தானே செய்வா. செருப்பு தைப்பது முதற்கொண்டு எல்லாம் தானே.
அப்பாவ பத்தி எல்லாம் சொல்லனும்னா, ஒரு தனி புக் எழுதணும்... அவ்வளவுஇருக்கு...
அந்த மாதிரி அப்பா கிடைக்கக் குடுத்து வெச்சிருக்கணும்.

அப்போ, அப்பாவோட அடுத்த தங்கைக்கு பாட்டி அவசர அவசரமா கல்யாணம் நிச்சயம் பண்ணிஇருக்கா. மாப்பிள்ளை ஏற்கனவே கல்யாணம் ஆனவர். பெரிய பணக்காரர். அத்தை ரொம்பசிகப்பாகவும் அழகாகவும் இருப்பா. 16 வயசு ஆயிடுத்துன்னு பாட்டிக்கு அவசரம்.அத்திம்பேர், இந்த ஊருக்கு தற்செயலா வந்து, அத்தைய பாத்துட்டு, கல்யாணம்பண்ணித்தரச்சொல்லி ஒத்த கால்ல நின்னாராம்... தெரிஞ்சே, ரெண்டாம் தாரமா, செலவில்லாமகல்யாணம் பண்ணலாம்னு  நெனச்சு ஒரே வாரத்துல கல்யாணம் பண்ணி அனுப்பிச்சுட்டாளாம் .அப்பாக்கு ஒரே கோபம்.
அதை விட கொடுமை... அத்தைய அவர் தனி வீட்டில் வைக்க, மூத்தாள், கடுப்பாகி சண்டைபோட .. அத்தைக்கும் சமத்து போறாது... தனக்குன்னுஒண்ணும் இல்லாம ஒரு வருஷத்துல ,அம்மாவத்துக்கு வந்துட்டா... அதுக்கப்புறம் ஒரு வருஷம் கூட அவர் உயிரோட இல்ல.வயத்து வலின்னு படுத்தவர், எவ்வளவு சொல்லி அனுப்பியும்போகாம அவர் இறந்து போனப்புறம்அத்தை போய், காரியத்தை முடிச்சுட்டு வந்துட்டாளாம்... அப்புறம் தான்பிரளயம்...
பாட்டி, ரொம்பப் பிடிவாதம்... அப்பாக்கு தெரியாம, அத்தைய, நார்மடி புடவை கட்டவெச்சு, கோலம் பண்ணிட்டா. அதுக்கு கோபப்பட்டுண்டு அப்பா கடைசி வரைக்கும் பாட்டிகிட்ட பேசவே இல்லையாம்.
கடைசி அத்தையையும்பாட்டி, பட்டுக் கோட்டையில், ஒரு மிராசுதாரருக்கு, ரெண்டாம்தாரமாக குடுத்துட்டா. ஆனா, அங்கே பிரச்சனை இல்லை. முதல் தாரம் உயிரோட இல்லை.
இதுக்கெல்லாம் காரணம் தாத்தாவின் பொறுப்பில்லாத்தனம்... பணம் அழித்தவிதம்...
விதவையான அத்தைக்கு, சொத்தெல்லாம் கிடைக்கல்ல... ஆனா, மூத்தாளோட முதல் பிள்ளை, அத்தைய விட வயசு அதிகம், அவர் ஒரு  ஞாய தர்மத்துக்குக் கட்டுப் பட்டு, வருஷத்துக்கு 10 கலம் நெல்லு, 800 ரூ. பணம் குடுத்தார். நாங்க எல்லாம் மெட்ராஸ் வந்தப்புறம் கூட அதுதொடர்ந்தது. விலை வாசி ஏற,அவரே, நெல்லை நிறுத்தி விட்டு, பணமும் சேர்த்துக்குடுத்தார். அவருக்கப்புறம் அவர் பிள்ளை வந்து குடுப்பார். அத்தை செத்துப் போன பொதுகூட அவர் வந்திருக்கார். எவ்வளவு நேர்மை !!!

பாட்டி, தாத்தாக்கு அப்புறமா , எங்க அத்தை தனியா அந்தவீட்டுல இருந்தா...
நான் லீவுக்கு போயிருக்கேன்...
எங்கக்காக்கு மேலாத்து குஞ்சலா ரொம்ப friend . அங்க எல்லாம திசைய வெச்சுமேலாம், கீழாம், அப்புறம், எதித்தாம், கோடி ஆம் ன்னு அடையாளங்கள்...

நாங்க போனா, அத்தை நன்னா சமைச்சு போடுவா... வெறகு அடுப்புல, கல்ல போட்டு, சின்னதா எரிய  விட்டு, பட்டு பட்டா தோச வாத்து போடுவா.. அத்தை வெச்சிருந்த அந்தசின்ன நல்லெண்ண ஜாடி கூட எனக்கு படம் மாதிரி நன்னா ஞாபகம் இருக்கு !! பாக்குமரத்துல அவ்வளவு பாக்கு காச்சிருக்கும். அத பறிச்சு, கொட்ட பாக்கு எடுப்பா..

ஒரு தடவ, அத்தை தனியா இருக்கறச்சே, வருஷப் பணம் வந்தத ஒரு திருடன்பாத்துட்டான்... ராத்திரி அத்தைகொல்லை கதவ திறந்து போகரச்சே... அத்தை வாயில துணிஅடச்சு, கைய கட்டிப் போட்டுட்டு, பணத்த எடுத்துண்டு போயிட்டான்.. அத்தைக்கு நெஞ்சுவலி வந்துடுத்து... செய்தி வந்து அப்பா போய், அத்தைய தஞ்சாவூருக்கே அழைச்சிண்டுவந்துட்டா...
அப்புறம் கடைசி வரைக்கும் அத்தை எங்க கூடத்தான்...

அப்பா வீட்டை வாடைகைக்கு விட்டுட்டு, மாந்தோப்ப குத்தகைக்கு விட்டா... குத்தகைகாரன் சரியா பணம் தரல்லேன்னு, 1955  ல இருக்கும்னு நெனைக்கிறேன்... அந்த மாந்தோப்பவித்துட்டா... 800 ரூபாய்க்கு... அம்மா அதை அப்படியே பவுன் காசா மாத்திவெச்சுட்டா... பவுன் 40 ரூ ன்னு 20 பவுன் வந்துது.

வீடு மட்டும் வாடகைக்கு... 1980 கள்ல  வாடகை 5 ரூ. அதுவும் ஒழுங்கா வராது...வீட்ட 5000 ரூ க்கு வித்துட்டா... எங்க கிட்ட சொல்லி இருந்தா நாங்க யாராவது அதஇன்னும் மேல குடுத்து வாங்கி இருப்போம்...
பெரிய அண்ணாக்கு ஒரே கோபம்...என்னாட்டமா எங்க எல்லாருக்கும் இந்த பழசெல்லாம்பசுமையான நினைவுகள்...
அண்ணா கேஸ் போடப்போறேன் ன்னு பய முறுத்தி, வாங்கினவா பயந்து போய் .. அப்புறம்நாங்க எல்லாரும்கையெழுத்து  போட்டுக் குடுத்துட்டோம்...
ஒரு 10 வருஷம் முன்னே நான் போனேன்.. அந்த மாமி, ரொம்ப ஆசையா, எனக்குபோன்விட்டா எல்லாம் குடுத்து, வெத்திலை பாக்குல 10 ரூ வெச்சுக் குடுத்தா...
இப்ப போன மாதம் போனப்ப, அந்த மாமி இல்ல... வீடு பெண், மாப்பிள்ளைக்கு... முன்பக்கம் மாத்தி கட்டிட்டா... கொல்லை பக்கம் மட்டும் அப்படியே இருக்கு... பாக்குமரமும் இருக்கு... !!