Wednesday, June 12, 2019

அக்காவின் கல்யாணம் ....



அக்காவின் கல்யாண நாள். 1961, April 9th .
பழைய ஞாபகங்கள்.
வீட்டில் முதல் (பெண்) கல்யாணம். பெரியம்மா கிராமத்திலிருந்து வர, வீட்டில் பக்ஷண வாசம் வீச, அந்த முதல் அனுபவம் வெகு ஜோர்.
டவுனில் ஏதோ சிறிய சத்திரம். கல்யாண செலவு, (நகை, துணி, சாப்பாடு) 10000 ரூபாய் !!
மாப்பிள்ளை அழைப்பு. என் அக்கா, தன் அலங்காரத்தை விட்டாள். என் நீள, அடர்த்தியான முடியில், மேலே கொஞ்சம் எடுத்து, ஒரு பிரிமணையை (சின்ன ரிங்) வைத்து, அதில் முடியை சுற்றி (ராக்குடியாமாம்) அதச் சுத்தி, பூ சுத்தி, பின்னல் போட்டு, குஞ்சலம் வெச்சு, கட்டுப் பூவை வெச்சு அழகு பார்த்து... இருப்பதற்குள் ஒரு நல்ல பாவாடை கட்டி (17 வயதிருக்கும் எனக்கு) மாப்பிள்ளை அழைப்பில், கையில் ஒரு தட்டுடன், மகா பெருமையாக ஊர்வலம் வந்தேன்.. நடந்துதாங்க. அந்த ஒரு போட்டோ மட்டும் இருந்துது. அதையும் காணும். அதை விட ஒல்லியாக ஒரு பெண்ணை பார்க்க முடியாது உங்களால் !! இப்ப இருக்கிற 17 எல்லாம் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பா !!

அந்த கல்யாணம் ஸ்பெஷல்தான்... முதல் முதல் எங்க வீட்டில் நடந்ததால் . ஒரு பொறுப்பும் கிடையாது. ச்சே... ஒரு வேளை கூட ருசித்து சாப்பிட வில்லை. அப்ப எல்லாம் , கீழே இலை போட்டுத்தான் சாப்பாடு. டேபிள் எல்லாம் கிடையாது. மடி சமையல் உண்டு. அதுவே வாசனையாக இருக்கும். ஜோரான நாள். 58 வருஷம் ஆச்சு !! 

No comments:

Post a Comment