Wednesday, June 12, 2019

திண்டுக்கல்லில் ஒரு கல்யாணம்........

திண்டுக்கல்லில் ஒரு கல்யாணம்... இதுல என்ன விசேஷம் ? அப்படின்னு யோசிக்கிறீங்களா? இருக்கே !!!
சனிக்கிழமை காலம்பர விரதம் ; மத்தியானம் 3 மணிக்கு நிச்சய தார்த்தம்... நாலு மணி நேர மேக் அப் க்கு அப்புறம் (அந்த தலை முடியை அழுத்து, வழித்து வாரி, எல்லா முடியையும் வலது பக்கமாக விட்டு, அங்கங்கே ஏதோ பள பள ன்னு சொருகி ..... எல்லா போட்டோவிலும் வலது முகம் முழுமையாக மறைய, இதை எதிர் பார்க்காத பெண் வீட்டாரே, அசடு வழிய சிரிக்க, இதுக்கு ரெண்டு வேளைக்கு 30, 000 Rs. சார்ஜாம் ! கொடுமையடா சாமி... ஏன் இயற்கையான அழகோடு இருக்கக் கூடாது !! ௦இது போகட்டும். மாட்டருக்கு வருவோம்.
டிக்கட் கிடைக்காமல், தட்காலில் வாங்கி, (senior citizen 50% concession gone) ... திண்டுக்கலில் விடியற் காலை 3 மணிக்கு இறக்கி விட்டுட்டான் ! அதுக்கு நான் இரண்டு மணிக்கே கதவு கிட்ட ரெடி.
ஆல் கணவன்மார்களே, நான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று வாதிக்கும் ஆண்களே, (அதை நம்பும் என்னைப்போல் பெண்கள் இருக்கும் வரை இவர்கள் திருந்த மாட்டார்கள் !!), மனைவி சொல்வதை அப்படியே கேளுங்கள்... நாலையும் யோசித்துதான் சொல்வாள் என்று நம்புங்கள்.
பிள்ளை வீட்டாரே பாண்டியனில், 4 . 30 க்கு தான் வருவார்கள். பிளாட்பார்மில் அவாளுக்காக வெயிட் பண்ணனும் னு பிளான். ஆனால், பாண்டியன் எக்ஸ்ப்ரெஸ் லேட் ... நான் சொன்னேன், "நேரே ஆடோ பிடித்து சத்திரத்துக்கு போகலாம் . கொஞ்சம் தூங்கலாம்." என்று  சொன்னால்... உடனே.. தடா.. மாப்பிள்ளை வீட்டாரை அழைக்க, மேல தாளத்தோடு, மாலை மரியாதையோடு பெண் வீட்டார் வருவா... தானும் ஜம்பமா அவர்கள் காரில், வேனில் போகலாம் என்று உள்ளூர ஆசை போல இவருக்கு.
கொசு கடி தாங்க முடியவில்லை.. இதுல இவர், "மெட்ராஸ் கொசு பெரிசா, திண்டுக்கல் கொசு பெரிசா..? எந்த கொசுவுக்கு கடிக்கும் பவர் அதிகம்? " என்று பட்டி மன்றம் நடத்துகிறார். வேற கட்சியே இல்லாததால், தானே, for & against பேசிக்கொண்டிருந்தார். ஐந்து மணி வரை எவ்வளவு ரயில் வந்து  போகிறது.. !! பாண்டியர்கள் நல்லவர்கள்... எல்லாருக்கும் வழி விட்டு, நிதானமாக வந்தார்கள்.
ஐந்து மணிக்கு மேல் தாக்குப் பிடிக்காமல் (கொசுவா, என் நச்சரிப்பயா ? தெரியவில்லை) ஆடோ வைத்துக் கொண்டு சத்திரம் போனோம். பெண் வீட்டாரும், இந்த லேட் சமாசாரம் கேள்விப்பட்டு சாவதானமாக இருந்தார்கள்.
இதெல்லாம் விட முக்கியம்... ஆட்டோவிலிருந்து இறங்கியதும், எனக்கு முதலில் கண்ணில் பட்டது, எதிர்த்தாற்போல் இருந்த இரண்டு தியேட்டர் ! ... அதில் ஒன்று "துப்பாக்கி". என் பயணத்துக்கும் நல்ல பலன் இருந்தது.
காபி சாப்பிட்டு, மாப்பிள்ளை வீட்டார் 8 மணிக்கு வர, வரவேற்பெல்லாம் முடிந்து, ஹோட்டலில் எங்களுக்காக போட்டிருந்த ரூமில் போய் குளித்து, ட்ரெஸ் பண்ணி 9 மணிக்கு வந்தோம். விரதம் ஆரம்பித்தது... என்ன sequence இது ... முதல் நாள் காலை விரதம்... நிச்சய தார்த்தத்துக்கு முன்னாடி ? இதில் சொல்லப்படும் மந்திரங்கள் கல்யாணம் நிச்சயம் ஆனப்புறம் தானே என்று - ஏதோ நாங்கள் இருவரும் பாண்டித்தியம் பெற்றவர்கள் மாதிரி பேசி விட்டு, (செம டிபனுக்கு அப்புறம் தான்) .... விரதம் முடிந்து வெளியில் வந்து ... எதுக்கு ? "துப்பாக்கி துப்பாக்கி.".
திண்டுக்கல்லிலிருந்து பழனி ரொம்ப கிட்டக்க, போலாம்னு மேட்ராசிலேயே சொல்லி தொலைச்சுட்டேன்...
இப்போ மனசுக்குள் போராட்டம்... "வேல் முருகனா... துப்பாக்கி விஜயா? "வேலா , துப்பாக்கியா,", "வேல், துப்பாக்கி" ... என்று குழம்பி, ஒரு ஆடோ காரனை கேட்டேன்.. பழனி போய் வர எவ்வளவு நேரம் என்று.
அவன் கூட்டி கழித்து, போக வர, தரிசனம் என்று ஐந்து மணி நேரம் ஆகும்; டாக்சி எடுத்தால் நாலரை மணி... உள்ளூர் காரனா, நல்ல டிரைவர் இருந்தா நாலு மணி நேரம் என்று வித விதமாக சொல்லி, குழப்பி, (நல்ல வேளை பறப்பதை பற்றி சொல்லல்ல), அதுக்கு முத்தாய்ப்பா  "கூட்டம் இல்லன்னா இது... கூட்டமா இருந்தா மேலே டைம் ஆகும்; ஆனா சனிக்கிழமை கூட்டம் குறச்சல்; ஆனா, 12 to 4 கோவில் மூடி இருக்கும்; நாளை ஞாயிறு போனால், சஷ்டி; கூட்டம் நெறியும்; ... இதை விட ஒரு ஆடோ காரனால பேச முடியுமா?
குழப்பம் தீர்ந்தது... துப்பாக்கி வென்றது... !!
மாப்பிள்ளை முழுக்க முழுக்க ஐயர் (அது என்ன 'முழுக்க' --- ஹிஹிஹி - அம்மா, அப்பா ரெண்டு பேரும்)
பெண் - "மலயாளம் பாதி, அய்யங்கார் பாதி சேர்ந்து செய்த அழகுப் பெண்" .....
ஆனாக்க ஒண்ணு சொல்லணும்... ஒருத்தருக்கும் சம்ப்ரதாயம் ன்னு பெரிசா ஒண்ணும் தெரியல்ல; முழுசும் விட்டுக் கொடுக்க மனசில்ல;
ஆனா , எல்லாரும் ரொம்ப நல்லவா !! அவா அவா பட்டுப்புடவைகளிலும், நகைகளிலும் போட்டி போட்டதில், இந்த confusion அடிபட்டு போனதென்னவோ நிஜம் தான்.
மாப்பிள்ளை பக்கம்... பட்டை விபூதி போட்ட சாஸ்த்ரிகள்... 6 பேர்...
பெண் சைடில்... பட்டை நாமம் போட்ட சாஸ்த்ரிகள் ... 2 பேர்.
பெண்ணின் அப்பா, தன் திருப்திக்கு (இந்த இரண்டு அம்மா மாமிகள் நடுவில் அவர் கொஞ்சம் பாவம் தான்)
அவரால முடிஞ்சது... வாசலில் பூக்கோலம், இரண்டு படிகளில் (முகவை அளவு படி) தென்னங் குருத்து; அவர் சைட் லேடீஸ் எல்லாம் கேரளா புடவை... (நல்ல வேலை - அவா எல்லாம் முண்டு கட்டிப்பேன் ன்னு படுத்தலை !!) ... அழகாகத்தான் இருந்தது...
அய்யர் மாமியும், அய்யங்கார் மாமியும், அவா அவா மடிசார் கட்டு... ஜாலியாகத்தான் இருந்தது பார்க்க...
சனிக்கிழமை காலம்பரவே விரதம் முடிச்சுட்டா... (அது ஏனோ புரியவில்லை... அதைப் பத்தி எனக்கு கவலையும் இல்லை... டிபன் ஜோரா இருந்தது.)
சாப்பாடு - மெனு... கேரளா சைட்... ("எரியற வீட்டில பிடிங்கினது லாபம் " என்று, எங்களுக்கு ஜோர் ஜோரா சாப்பாடு.)
மூணு மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு... நிச்சய தார்த்தம்.. அந்த மேடையே கோவில் (பிள்ளையார் இருந்தாரே). மாப்பிள்ளை உட்கார, சாஸ்த்ரிகள் ஏதோ மந்திரம் சொல்ல, மச்சினன் ட்ரெஸ் குடுக்க, மேடைக்கு ஒரு பக்கம் இருந்த bridegroom ரூமுக்கு போய் , சூட் போட்டுண்டு வர, மச்சினர் மாலையும், மோதிரமும் போட , பையன்  எழுந்து.. நாலு நடை நடந்து, அதே மேடைக்கு வர, ஜான வாசம் முடிந்தது... பெண் வந்து, (கொள்ளை அழகு) உட்கார்ந்து, புடவை குடுத்து, உடனே அதை மாற்றி, வந்ததும், பத்திரிகை படித்து, தட்டை மாத்தினதும்... முடிந்தது நிச்சயதார்த்தம்... எல்லாம் ஒரு மணி நேரத்தில்..
நாலு மணிக்கு பெண், பிள்ளை ரிலீஸ் செய்யப் பட, 7.30 மணிக்கு (சீக்கிரமா, மூன்றரை மணி நேரத்தில் பெண் ரெடி ஆகி விட்டாள் ... அந்த அலங்கார விசேஷம் நேத்திக்கே சொல்லிட்டேன்.. அதாங்க, மூஞ்சியை மறைத்து, மூவாயிரம் ரூபாய் வாங்கி... ஞாபகம் இருக்கா ?)
இங்கே நித்யஸ்ரீ யின் அக்கா பெண் சரண்யா பாட்டுக் கச்சேரி... நன்றாகவே பாடினாள்... அதை விட பெஸ்ட் - நாதஸ்வரம் தான் - நம்பர் வாங்கி வைத்திருக்கிறேன்.. யாருக்காவது வேணும்னா சொல்லுங்கோ.. ரொம்ப நன்னா வாசிச்சார்.. எனக்காகவே ரெண்டு மூணு உருப்படி... நிஜம்மாவே ரொம்ப ஜோர் - இதை பொறுக்காத சாஸ்த்ரிகள், அப்ப அப்ப "வாத்தியம் ஸ்டாப் " ன்னு குரல்... அவர் சொல்லும் மந்திரத்தை நாங்கள் கேக்கணுமாமாம் !!)
அன்னிக்கி ராத்திரி, அய்யங்கார் சாப்பாடு... "சபாஷ் - சரியான போட்டி.."
உண்ட களைப்பு போக, தூங்கி எழுந்து, காசி யாத்திரைக்கு தயாராய் வந்தாச்சு... 10 படிகள் இறங்கி, காசிக்கு போய்விட்டு, திரும்பி, அங்கேயே மாலை மாற்றி ... வழக்கப்படி "வழிந்து ஓடி" , பெண்ணின் ஐந்து விரல்களை பையன் சேர்த்து பிடிக்க,
(யோசிச்சு பாருங்கோ, அந்த கணம் எனக்கெல்லாம் உடம்பு சிலிர்த்து, ஹை வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்து, வெட்கத்தில் (!!) தலை குனிந்து...ஹும்ம்ம்... இதெல்லாம் அமெரிக்காவில், இரண்டு வருஷம் பழகி, இப்ப கை பிடிச்சா, மின்சாரம் லோ வோல்டேஜ் ஆகத்தான் இருக்கும்.. அதிலே "காந்தம் " இரும்பை கவரும் பவர் இருக்குமா? )
(ஒரு வேளை இப்படி எல்லாம் யோசிச்சு, நம்ம குறையை தீத்துக்கரோமோ ? )
ஒரு வழியாக ஊஞ்சலில் உக்கார, "அது இருக்கும் ஒரு நூறு... எண்ணிக்கை தெரியாத குற்றம் (கட்ட பொம்மன் வசனம்) " ... அவ்வளவு பேர், பாலும் பழமும், பச்சப்பிடி..உறவெல்லாம் கோச்சுக்க கூடா தோ ன்னோ ... நேத்திக்கு கல்யாணம் ஆனவா கூட, நம்மள கூப்பிடுவாளா, கோச்சுக்கலாமா ? ன்னு யோசிக்க, நமக்கு ஏன் வம்பு ன்னு... சகட்டு மேனிக்கு எல்லாரும் சுத்திட்டா... (அதான் விரதத்தை முதல் நாளே முடிச்சிட்டா போல இருக்கு )...
அப்புறம் என்ன, ஒரே குழப்பத்துடன், பெண் மாமா மடியில் உக்கார (இங்கே அவா அவா ஹேஷ்யம்... "பெண்ணின் அப்பா மாப்பிள்ளை கால் அலம்ப மறுத்துட்டார் போல இருக்கு" ன்னு.. சம்பந்தி சண்டைக்கு அடி கோலினா...) ஒண்ணும் இல்லை.. மாலை மாத்தரச்சே, மாமாவை கூப்பிட்டாளோன்னோ ... அவர் ஆல் important ஆகிட்டதா நெனச்சுண்டுட்டார்..
அப்புறம் அவரை எழுப்பி, பெண்ணின் அப்பாவை உக்கார வைத்து, முடிந்த வரை சுருக்கமாக மந்திரம் சொல்லி, புடவை கொடுத்து... சஸ்பென்ஸ் .... அய்யர் மடிசார் கட்டில்.. பெண் வர..
மாங்கல்ய தாரணம் ஆச்சு... சந்தோஷமோ... சந்தோஷம் .. எல்லாருக்கும் தான்..
வழக்கப் படி அசட்டு டயலாக்.. "என்னடா , மாட்டிண்டயா etc etc ... பின்னால ஓடி ஓடி லவ் பண்ணினதில குறச்சல் இல்ல.. இதென்ன டயலாக்... அலுக்காம சொல்றா ?)

அத விடுங்கோ... சப்த பதி  ஆனொண்ண  ... ரெண்டு பேரையும் எழுப்பி, ஒரு பக்கம் உக்காத்தி , தேங்கா உருட்ட ஆரம்பிச்சுட்டா !! நலங்காம் --- அய்யங்கார் ஸ்டைலாம்.. !!!


முஹூர்த்த சாப்பாடு... அய்யர் ஸ்டைல்.. கன ஜோர்...ஆனா.. ஜான வாச போளி , ஆம வடை, முஹூர்த்த லட்டு, அரிசி, பருப்பு பாயசம்... மிஸ்ஸிங்...மிஸ்ஸிங்...
நலங்கு நடக்கற அந்த 11 மணிக்கு, இவரை போய் "டிக்கெட் புக் பண்ணிட்டு வந்திடுங்கோ" ன்னு சொன்னா, கேட்டாதானே... இதை பற்றி, முதல் பார்ட்டில் படிச்சுக்கோங்க.. ரிபீட் வேண்டாம்.
"இந்த படத்துக்கு, இந்த நேரத்தில் யார் வருவா; தியேட்டர் ஈ ஓட்டறது" ன்னு கமென்ட் வேற..
12 ஆனது... "டிக்கெட் புக் பண்ணிட்டு வரேன் " ன்னு போயிட்டு , அங்க நின்ன க்யூ வ பார்த்து பயந்து...டிக்கட் காலி ன்னு தெரிய வர, என் மூஞ்சி வந்து பயம் காட்ட, டிக்கெட் இல்லாம வரவும் பயந்து.. மேனேஜர் ரூமுக்கு போய், என்ன சொன்னாரோ, எது சொன்னாரோ... அவர் ரெண்டு டிக்கெட், லாஸ்ட் ரோ, 'A ' ரோ ல கார்னர் சீட் குடுத்து வழி அனுப்பி வைக்க, வந்தார். நான் என் friends சோடு அரட்டை.... அவா எல்லாம் "நேத்தி புடவை, இன்னி புடவை " எல்லாம் நன்னா இருக்கு ன்னு புகழ, புளகாங்கிதம் ஆகி, சந்தொஷப்படரதுக்குள்ள, ஒரு அசத்து, "ஏன் மேடம் இவ்வளவு வெயிட் போட்டுட்டேங்க" ன்னு, என்ன காத்து போன பலூன் ஆக்கிட்டா... "அவள் எங்கிருந்தாலும் வாழ்க..."
ரசிச்சு, ருசிச்சு சாப்பிட்டு, ஒரு மணி நேரம் தூக்கம் போட்டு, (அப்புறம் சினிமாவில் தூக்கம் வந்தா?), பையன் அம்மா, என் க்ளோஸ் சினேகிதி...ரூமுக்கு போனா, அவளும், அவள் ஆத்துக்காரரும் பேந்த பேந்த முழிச்சுண்டு, ஒருத்தரும் ஹெல்ப் இல்லாம "எப்படிடா pack பண்றது என்று முழி பிதுங்க, அப்ப பார்த்து, பெண்ணின் அப்பா வந்து, "மூணு மணிக்கு உங்க நலங்குக்கு ஏற்பாடு பண்ணிடறேன் " ன்னு பவ்யமா சொல்ல... பையனின் அம்மாக்கு   எரிச்சல்.. "நலங்கும்  வேண்டாம், ஒண்ணும் வேண்டாம், எங்களுக்கு வேலை  நிறைய இருக்கு" ன்னு சொல்ல அவர் பயந்து போயிட்டார். "ஒண்ணும் கஷ்டமில்லை; முறைப்படி என்ன வேணும்னு சொல்லுங்கோ " ன்னு சொல்ல, மறுபடியும் இவள், "ஐயோ, வேண்டாமே, விட்டுடுங்களேன்" ன்னு சொல்ல, அவர் சுத்தி முத்தி யாராவது பாத்துட்டாளா ன்னு நோட்டம் விட்டுட்டு, ஓரம் போயிட்டார்.
அப்போதான் வசந்தா என்ட்ரி... "ரமா, யாமிருக்க பயமேன்.." ன்னு சொல்லி, மட மட ன்னு, பக்ஷணம் கவர் போட்டு (ரெண்டு தினுசு... ஒண்ணு நிறைய, ஒண்ணு கொஞ்சம் ; எனக்கு என்ன வரப்போறது ன்னு சஸ்பென்ஸ் ) ஒரு ஓரமா வெச்சு... அட்டை பேட்டிகள்ள சாமான்களை , பக்ஷணங்களை, எல்லாத்தையும் 6 பெட்டியில் அடுக்கி, விளையாடல் சாமான்களை அவாத்து பேரை வந்து எடுத்துண்டு போகச்சொல்லி, (வசந்தா கைய வெச்சா , ராங்கா போனதில்ல) ன்னு நானே பாடிண்டு.. இரண்டு மணி நேரத்தில் எல்லாம் கயிறு போட்டு கட்டி, வெளியில் கொண்டு வெச்சு, ரூமை கிளீன் பண்ணி, "நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கோ; நான் சினிமாக்கு போயிட்டு வரேன் " ன்னு சொல்லிட்டு... (இதுக்குதாங்க friends வேணும்.; எல்லாரும்ஞாபகம் வெச்சுக்கோங்கோ; உங்க பொண்ணு, பையன் கல்யாணத்துக்கு சாமிக்கு வெச்சப்புறம், ரெண்டாவது பத்திரிகை எனக்கு" )
பெண் ஆத்துல காபி கேட்டு, பால் வராததால் அவசரமாக எங்கிருந்தோ பால் வாங்கி வந்து பத்து கப் கொண்டு வந்தா; (எப்பூடி பந்தாஸ் ?) அதை லபக்கிட்டு...
வெளில வந்தா, இவர் "உன்னை சாமி கண்ணா குத்தப் போறார் " ன்னார் ... பழனிக்கு போகாததுக்கு; எனக்கே கொஞ்சம் பயம்மா போயிடுத்து; ஒரு டாக்ஸி காரனை கேட்க, அவனும் ஆட்டோ காரன் மாதிரி "அதௌ கீர்த்தனாரம்பித்திலே " ன்னு ஆரம்பிக்க, பொறுமை இழந்து, சினிமா கொட்டகைக்கு போயிட்டேன். அங்க பாத்தா, தில்லானா மோகனாம்பாள் பாலையா & க்ரூப் மாதிரி ஒரு பத்து பேர், கல்யாண கும்பலில் இருந்து... அப்ப, முருகன் கண்ண குத்தினா எவ்வளவு பேருக்கு குத்தணும் ... முடியுமா? ன்னு மனச சமாதானம் பண்ணிண்டு...
அப்புறம் என்ன.. சினிமா தான்.. ஜாலிதான்... விஜய் என்ட்ரி குடுக்கும்போது, வாயில் இரண்டு விரல் வைத்து விசில் அடித்து (சத்தம் தான் வரல்லே) , அப்பப்போ க பலம்மா தட்டி... என்ஜாயோ என்ஜாய். எங்க ரெண்டு பேரை தவிர பாக்கி பேர், படம் பிடிக்கல்லை ன்னு சொல்லி, என்னோட எதிரி ஆயிட்டா... அவாளுக்கு சினிமா பாக்க தெரியல்ல.. லாஜிக் இல்லையாம்; ஒரு ஹீரோ, பத்து பேரை சமாளிக்கரானாம் ... இதெல்லாம் தமிழ் சினிமாவில் கஷ்டமா என்ன ?
ஏழு மணி ஆக, வத்தக் குழம்பு, கத்திரிக்காய் கரி, கூட்டு ன்னு சிம்பிள் சமையல்... அமிர்தம்... சாப்பிட்டு, எல்லாருமே ஸ்டேஷனுக்கு கிளம்பினோம்.
இதில என்ன வேடிக்கைன்னா, சத்திரத்தில பெண் வீட்டுக்காரா மருந்துக்கு கூட இல்ல... ஏதோ நாலு பேர் சாப்பாடு பரிமாற !!!
ஸ்டேஷனுக்கு வந்து (மாப்பிள்ளையை அவாத்தில விட்டுட்டு தான்... இப்ப அதுதான் பேஷன் ) ... முதல் ரயிலில் வந்த நாங்க ரெண்டு பேரும், கடைசி ரயிலில் திரும்பினோம்...
இந்த கல்யாண செலவு... சீர் தவிர.. ஒரு 25 லக்ஷம் ஆயிருக்கலாம்... தேவையா ன்னு தோணித்து ...
இதுல என்ன sequence கல்யாணத்தில... !!! முதல்ல விரதம்; அப்புறம் மேடை மேலேயே ஜான வாசம்; உடனே நிச்சய தார்த்தம்; ரிசப்ஷன்; முஹூர்த்தம், உடனே நலங்கு... நல்ல வேளை நலங்கை மொதல்ல வைக்கல்லே !! ஏதோ... எல்லாமே (எல்லாமே.....) reverse ல போகாம இருந்தா சரி.
பெண், மாப்பிள்ளைக்கு என்ன கவலை... அவர்கள் பாட்டுக்கும் பேசிக் கொண்டிருந்தார்கள்.. தாலி கட்டும்போது கூட... !!!
மக்களே, திருந்துங்கப்பா... இப்படி ரெண்டுன் கெட்டானாய் , ஒண்ணும் புரியாம, நான் ஏதாவது சொன்னா கூட கேட்டுண்டு (வயசு...வயசு... அனுபவம்..அனுபவம்...) ; பணத்தை வாரி இறைத்து, சொந்த பந்தத்தை நேரில் பாக்கும்போது சிரிச்சு, பின்னால் திட்டி.... தேவையா... யோசியுங்கள்.

No comments:

Post a Comment