Wednesday, June 12, 2019

51 வருஷங்கள் பின்னோக்கினால்....

51 வருஷங்கள் பின்னோக்கினால்....
ஆகஸ்ட் 25 - வெள்ளிக்கிழமை -வரலக்ஷ்மி நோம்பு - மாலை - 4 மணி
நீள ஒற்றைப் பின்னல் - தலை நிறைய மல்லிகைப்பூ (இரண்டு பக்கமும் தெரிகிற மாதிரி - இப்போது போல் நீளமாக வைத்து , முன் பக்கம் விட்டுக்கொள்ளும் ஃ பாஷன் தெரியாத நாட்கள்) ஒரு சிம்பிள், ராமர் கலர் பட்டுப்புடவை (அக்காவினுடயது) , கழுத்தில் ஒரு செயின் (மற்றொரு அக்காவினுடயது) , போட்டுக்கொண்டு, ஒல்லியாக, உயரமாக, அமைதியாக, உட்கார்ந்து,
எதிரே SK யும், அவர் அப்பாவும் நாற்காலியில் (அதில் ஒன்று கீழாத்திலிருந்து கொண்டு வந்தது !!), அம்மா, தம்பிகள், தங்கைகள் பாயில்...
எதிரே நான் - வீணையுடன் - ஆபோகி ராகத்தில் "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா...தில்லை.." என்று வாசிக்க, அப்பா, "பாடிக்கொண்டே வாசி " (அப்போதுதான் என் குரல் வளம் தெரியுமாம் !! அப்பாவின் நம்பிக்கை) , பாடிக்கொண்டே வாசித்து....
"அவளுக்கு புல்புல்தாரா கூட வாசிக்கத் தெரியும்" என்று அப்பா கொக்கி போட ...
புல்புல் தாராவை எடுத்து "கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா ..." என்ற பாட்டை (ப்ளீஸ் நம்புங்க... எதேச்சையாக அமைந்ததுதான் !!!) வாசிக்க...
பஜ்ஜி, சொஜ்ஜி யுடன் பெண் பார்க்கும் படலம் முடிய...
அங்கேயே, அப்போதே (போய் லெட்டர் போடுகிறோம் என்று சொல்லாமல் ) "எங்களுக்கு பெண்ணை ரொம்ப பிடித்திருக்கு" என்று சொல்லி விட்டு செல்ல,
எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்ட அப்பா ஆனந்த கண்ணீர் விட, அம்மா, தெருக்கோடி அம்மன் கோவிலுக்கு ஓட (அந்த அம்மன் அங்கு இருப்பதே எங்கம்மாவின் வேண்டுதல்களுக்கு செவி சாய்க்கத்தான் என்று அம்மாவுக்கு அசாத்திய நம்பிக்கை... சன்னதியில் நின்று பேசுவாள் )
வீட்டிலேயே சந்தோஷ அலைகள் அடிக்க...
நான் --- டிபனை டேஸ்ட் பண்ணிக்கொண்டு, "என்னை யாரும் கேட்கவில்லையே - மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதா என்று? " என்ற அனாவசியமான, complicated சிந்தனை எல்லாம் இல்லாமல், (அப்பா, அம்மாவின் சந்தோஷம், என் சந்தோஷம்) ...
அதற்கப்புறம் விவரமா அந்த நிகழ்ச்சிகளை பற்றி விமரிசனமும், அபிப்பிராயங்களும் நடக்க... நான் மெளனமாக கேட்டுக்கொண்டு...
இப்படியாக என் கல்யாணம் முடிவு செய்யப்பட்டது !!!
(16 ம் தேதி, அவர் அம்மா அப்பா மட்டும் பார்த்து (ஆவணி அவிட்டம் அன்று) , சம்மதம் சொன்னதும் தான் இவர் வந்தார் - "ஒரே பெண்தான் பார்ப்பேன்" என்ற கண்டிஷன் இவருடையது)

No comments:

Post a Comment