ஒட்டக்கூத்தரின்மேல் அரசிக்கு ஏன் இத்தனை கோபம் என்று எண்ணிப் பார்த்த மன்னவன் புகழேந்தி சிறையிலிருப்பதை நினைவுகூர்ந்தான். தான் பெரிய தவறிழைத்துவிட்டோமென்று மனம் வருந்திய மன்னன் உடனடியாகப் புகழேந்திப் புலவரை சிறையிலிருந்து விடுவித்து, அவரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டு, அரசியின் பிணக்குத்தீர உதவும்படி வேண்டினான். அரசனின் வேண்டுகோளை ஏற்ற புகழேந்தி அரசியின் அந்தப்புரத்துக்கு வந்தார். புகழேந்தி வருவதை அறிந்த அரசி ஓடோடிச்சென்று கதவைத் திறந்து தம் மதிப்பிற்குரிய குருநாதரை வரவேற்று அமரச்செய்தாள்.
அரசியின் மனம் சமாதானமாகும் விதமாக ஆறுதல் கூறிய புகழேந்தி, "நூலிழையொன்றை இரண்டாய் வகிர்ந்ததுபோன்ற மெல்லிய இடையுடையவளும், பொற்குழைகள் இரண்டை ஏந்தியவளும், அழகிய கண்களுடையவளுமாகிய ஆரணங்கே, மழை பொழிவதுபோல் இரண்டு கைகளாலும் பாணங்களைத் தன் எதிரிகள் மேல் எரியும் ஆற்றல்பெற்ற குலோத்துங்கன் உன் அறை வாசலுக்கு வருகையில் அவன் செய்த ஒன்றிரண்டு பிழைகளைப் பொறுத்துக்கொள்வது உயர்குடியில் பிறந்த உனக்கு சிறப்பைத் தரும்" எனும் பொருள்பட,
"இழையொன்றிரண்டு வகிர்செய்த நுண்ணிடை யேந்தியபொற்
குழையொன்றிரண்டு விழியணங்கே கொண்ட கோபந்தணி
மழையொன்றிரண்டுகைப் பாணாபரண நின் வாசல் வந்தால்
பிழையொன்றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே"
எனும் பாடலைக் கூற, அரசியும் பிணக்குத் தீர்ந்தாள். ஒட்டக்கூத்தருக்காகப் போடப்பட்ட இரட்டைத் தாழ்ப்பாளும் திறந்தது.
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்
இந்த சொற்றொடருக்கு உண்மையான பொருள் பலருக்குத் தெரியாது. இதன் பின்னணியில் ஒரு ஸ்வாரஸ்யமான சம்பவம் உள்ளது.
பாண்டிய நாட்டின் இளவரசியாயிருந்து, பின் குலோத்துங்க சோழனின் மனைவியான சோழ நாட்டின் மஹாராணி, தன்னுடன் சீதனமாக பாண்டிய நாட்டிலுருந்து சோழ நாட்டிற்கு வந்திருந்த தனது ஆசானும், அருந்தமிழ்ப் புலவருமான புகழேந்தியை ஒட்டக்கூத்தர் எவ்விதக் காரணமுமின்றிச் சிறையிலடைத்த விவரம் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தாள். அரசன் இது பற்றி அறியாதிருந்தாலும், அறிந்தும் அமைதியாயிருந்தாலும் இரண்டுமே மன்னிக்க முடியாத மாபெரும் தவறுகள் எனக்கொண்ட அவள் குலோத்துங்கன் தன்னைக் காண அந்தப்புரத்திற்கு வருகையில் கதவைத் தாளிட்டுக்கொண்டு திறக்க மறுத்துவிட்டாள்.
அக்காலத்தில் அரசி கோபம் கொண்டால் அவளது பிணக்கு நீங்க வேண்டிப் புலவர்களைத் தூது அனுப்புவது மரபு. அதன்படியே குலோத்துங்கன் தன் ஆசானும் அவைக்களப் புலவருமான ஒட்டக்கூத்தரைத் தூதனுப்பினான். ஒட்டக்கூத்தர் அரசியின் அறை வாயிலில் வந்து நின்று,
"மென்மையான மலரிலுள்ள தேன்போன்ற இனிமையான பெண்ணே, கதவைத் திறக்கும்படி நான் உன்னை வேண்டத் தேவையில்லை, கதவைத் திறந்து விடு, இல்லாவிடில் ஏறுபோன்ற நடையுடைய வாள்வீரனாகிய குலோத்துங்கன் உன் வாசலுக்கு வந்தால் தாமரை இதழ்போன்ற உனது கைகள் தாமாகவே கதவைத் திறந்துவிடும்" எனும் பொருள்பட,
"நானேயினியுன்னை வேண்டுவதில்லை - நளினமலர்த்
தேனே கபாடந் திறந்திடு திறவாவிடிலோ
வானேறனைய வாள்விரவிகுலாதிபன் வாசல் வந்தால்
தானே திறக்குநின் கையிதழாகிய தாமரையே"
எனும் பாடலைக்கூறவே,
பாடலில் இருந்த ஆணவத் தொனியால் மேலும் கோபமுற்ற அரசி கதவின் இன்னொரு தாழ்ப்பாளையும் தாளிட்டுக்கொண்டாள்.
இதுதான் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் எனப் பின்னர் பிரசித்தமாகி இன்னும் வழக்கில் இருக்கிறது.
புலவர் சிறைவாசம்
குலோத்துங்க சோழனுக்கும் பாண்டிய நாட்டு இளவரசிக்கும் திருமணம் முடிந்ததும் பல விதமான சீர்வரிசைகளுடன் புகழேந்திப் புலவரையும் சீதனமாக சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தான் பாண்டிய மன்னன். தன் பாட்டுக்கு எதிர்ப் பாட்டுரைத்த புகழேந்திப் புலவரை எவ்வித விசாரணையுமின்றி ஒட்டக்கூத்தர் சிறையிலடைத்துவிட்டார். அவர் மன்னனுக்கு குருவாக இருந்ததால் அவருக்கு நாட்டில் சகல அதிகாரங்களும் இருக்கவே, அவரது செயல் எதற்கும் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க அஞ்சினார்கள்.
புகழேந்திப் புலவர் சிறையிலிந்த பொழுது ஒரு நாள் அவர் சிறைக்கட்டடத்தின் மேல் மாடியில் நின்றுகொண்டு தெருவைப் பார்த்தவண்ணமிருக்கையில், குலோத்துங்க சோழன் ஒட்டக்கூத்தருடன் அத்தெருவழியே நகர்வலம் வந்துகொண்டிருந்தான். புகழேந்திப்புலவரைப் பார்த்ததும் மன்னன் பரவசமடைந்து ஒட்டக்கூத்தரை நோக்கி, "பார்த்தீரா, அவர்தான் புகழ்மிக்க புகழேந்திப் புலவர்" என்றுரைக்க ஒட்டக்கூத்தர், "வேங்கைப்புலி வரக்கண்டால் மான் நிற்காமல் ஓடிவிடும், வற்றி உலர்ந்த காட்டின் செடிகொடிகள் எரியும் தீயில் பொசுங்கிவிடும், சுறறா மீன் வரக்கண்டால் மற்ற சிறிய மீன்கள் அனைத்தும் அஞ்சி ஓடும், சூரியனைக் கண்டால் பனி மறைந்துவிடும்" எனும் பொருள்பட,
மானிற்குமோவந்த வாளரி வேங்கைமுன் வற்றிச்செத்த
கானிற்குமோவவ் வெரியுந் தழல்முன் கனைகடலின்
மீனிற்குமோவவ் வெங்கட் சுரவமுன் - வீசுபனி
தானிற்குமோவக் கதிரோனுதயத்தில் தார்மன்னனே
என்ற பாடலைக் கூறினார். இதைக்கேட்ட புகழேந்திப் புலவர் அரசனை நோக்கி, "மன்னா, இபபடலை நான் ஒட்டிப்பாடவா? வெட்டிப்பாடவா?" என்று கேட்டார். புலவர்களுக்குள் சண்டை வரரக்கூடாது என்ற எண்ணத்தில், "ஒட்டியே பாடுங்கள், வெட்டிப்பாட வேண்டாம்" என்று மன்னன் கூறவே, "இப்பாடலில் முதலில் வரும் மான், உலர்ந்தத செடிகொடிகள், சிறு மீன்கள், பனி ஆகியவை ஒட்டக்கூத்தனென்றும், பின்ன் வரும் வேங்கை, தீ, சுறா, சூரியன் முதலானதெல்லாம் தானென்றும் பொருள்பட,
மானவன்நானந்த வாளரி வேங்கையும் வற்றிச்செத்த
கானவன்நானவ் வெரியுந் தழலும் கனைகடலின்
மீனவன்நானவ் வெங்கட் சுறவமும் வீசுபனி
தானவவன்நானக் கதிரோ னுதயமுந் தார்மன்னனே.
எனும் பாடலைக்கூறினார்.
No comments:
Post a Comment