Friday, June 5, 2020

குலோத்துங்க சோழன் திருமணம்.......



குலோத்துங்கனுக்குத் தந்தையில்லாததால் அவனுக்குத் திருமணம் செய்துவைக்கும் பொறுப்பை அவனது குரு ஒட்டக்கூத்தர் ஏற்றார். பாண்டிய மன்னனின் மகள் மிகவும் பொருத்தமானவள் என்றறிந்து பெண் கேட்கச் சென்றார் ஒட்டக்கூத்தர். பாண்டிய மன்னன் ஒட்டக்கூத்தரின் வேண்டுகோளைக் கேட்டதும், "எங்கள் பாண்டிய நாட்டில் பெண்ணெடுக்க உங்கள் சோழ மன்னனுக்கு என்ன தகுதியிருக்கிறதென்றும், சோழநாடு பாண்டிய நாட்டை விட எவ்வாறு சிறந்ததது என்றும் கூறுங்கள் என வினவ,

ஆருக்கு வேம்பு நிகராகுமோ அம்மானே
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே
வீரர்க்குள் வீரனொரரு மீனவனோ அம்மானே
வெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே
ஊருக்குறந்தை நிகர் கொற்கையோ அம்மானே
ஒக்குமோ சோணாட்டைப் பாண்டி நாடம்மானே

என்ற பாடலைப் புனைந்து கூறினார். இதன் பொருள், "சோழ மன்னர்கள் தரிக்கும் ஆலம்பூ மாலைக்குப் பாண்டடிய மன்னர்கள் தரிக்கும் வேப்பம்பூ மாலை ஈடாகுமா?, சோழர்களின் குலம் சூரிய குலம், பாண்டியர்கள் குலம் சந்திரகுலம், சூரியனுக்குச் சந்திரன் ஈடாகுமா? வீரர்களுள் சிறந்தவன் புலிக்கொடி தரித்த சோழனேயல்லாது மீன்கொடியைத் தரித்த பாண்டியனா? சோழநாட்டின் தலைநகரான அலைகடல் ஆர்ப்பரிக்கும் உறந்தை நகருக்குப் பாண்டியர்களின் தலைநகரான கொற்கை நகர் ஈடாகுமா? சோழ நாட்டுக்குப் பாண்டிய நாடு ஈடாகுமா?" என்பதாகும்.

இதனை செவிமடுத்த பாண்டிய மன்னனின் அவைக்களப் புலவர் புகழேந்தி அவர் கூற்றுக்கெதிராக,

ஒருமுனிவன் நேரியிலோ உரைதெளித்த தம்மானே
ஒப்பரிய திருவிளையாட் டுறந்ததையிலோ அம்மானே
திருநெடுமா லவதாரஞ் சிறுபுலியோ அம்மானே
சிவன்முடியி லேறுவதுஞ் செங்கதிரோ அம்மானே
கரையெதிரல் காவிரியோ வையையோ அம்மானே
கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ அம்மானே
பரவைபபரந் ததுஞ்சோழன் பதந்தனையோ அம்மானே
பாண்டியனார் பராக்கிரமம் பகர்வரிதே அம்மானே

என்ற பாடலைக் கூறினார். இதன் பொருளாவது, "அகத்திய முனிவன் தமிழைப் படைத்தது பாண்டிய நாட்டிலுள்ள பொதிகை மலையிலா? அல்லது சோழ நாட்டிலுள்ள நேரி மலையிலா? சிவபெருமானுடைய திருவிளையாடல்கள் உறந்தையிலா நடந்தன? மஹாவிஷ்ணு மீனாகத்தான் அவடதாரம் எடுத்தாரேயன்றிப் புலியாகவா அவதரம் எடுத்தார்? சிவபெருமானின் ஜடாமுடியில் அணியப்படுவது சந்திரனேயன்றிச் சுரியனா? புலவர்கள் இயற்றிய நூல்களின் பெருமையை சங்கப்பலகை நீரை எதிர்த்துக் கரைசேந்து உலகுக்கு உணர்த்திய உன்னத நிகழ்ச்சி வையை ஆற்றில்தான் நடந்தததேயன்றிக் காவிரி ஆற்றிலா? பேய் பிடித்தவர்களைக் காப்பாற்ற, பேயை விரட்டப் பயன்படுவது வேப்பமரத்தின் இலைதானேயன்றி ஆலிலையா? ஒரு முறை கடல் (பரவை) பாண்டிய மன்னரைப் பணிந்ததாம், அது சோழ மன்னரைப் பணியவில்லையே. பாண்டிய மன்னர்கலின் பராக்கிரமம் சொல்லற்கரிது" என்பதாகும்.



No comments:

Post a Comment