Friday, June 5, 2020

வேர்களைத் தேடி.....2


என் அப்பாவின் ஊர் , சேத்தூர் ; காரைக்கால் அருகே (பேரளத்துக்கும் , காரைக்காலுக்கு நடுவே) ஒரு கிராமம்
நான் அதற்கு அருகிலிருக்கும் திருநள்ளாறுக்கு போகும்போது , பலமுறை, சேத்தூர் அக்ரஹாரத்துக்கு போயிருக்கிறேன்.
அந்த ஊரையும், அப்பா பிறந்த முருகஸ்தலமான, கந்தன்குடியையும் பார்க்க , நான் , என் மூன்று சிஸ்டர்ஸ் இரண்டு வருடங்கள் முன் கிளம்பினோம் . திடீரென்று பிளான் பண்ணி, இவரும் சேர்ந்து கொள்ள, காரில், விடியற்காலை 5 மணிக்கு புறப்பட்டோம். மாயவரம் போய் , அங்கிருந்து சேத்தூர் போவதாக பிளான்.
. எங்கே ஊருக்கு கிளம்பினாலும், அது கோவிலுக்கானாலும், திருப்பதியை ஆனாலும், முதல் பிளான், காலை டிபன் எங்கே , 11 மணிக்கு ஒரு டீ எங்கே, மத்திய லன்ச் எங்கே, மாலை காபி எங்கே, வழியில் பொழுது போகாமல் கொறிக்க என்ன என்பது தான் பெரிய பிளான். !!!!
அதன்படி பாண்டி போகும் வழியில் ஒரு ஹோட்டலில் காலை டிபன். நன்றாகவே வெட்டினோம் .
வழியில் வைத்தீஸ்வரன் கோவில் கோபுரம் தெரிய, அங்கு ஒரு சின்ன ஹால்ட். அவசரமாக, வைத்தீஸ்வரனுக்கு, தையல்நாயகிக்கும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு, மாயவரம் போய் சேர்ந்தோம். அங்கு முதலில் தேடிப்போனது காளியாக்குடி மெஸ். பசிக்கு, அருமையான சாப்பாடு. நாங்கள் பாய்ந்து பாய்ந்து , அந்த கோஸ் கறியும், கீரை மசியலும் சாப்பிட்டதை பார்த்து அந்த பரிமாறுபவன் என்ன நினைத்தானோ ! ஆனால் எங்களுக்கு அதெல்லாம் கவலை இல்லை.
பிறகு, புக் செய்திருந்த ஹோட்டலில் சாமான் போட்டுவிட்டு, உடனே கிளம்பினோம்.
ஒரு டாக்சி டிரைவர் அனாவசியமாக எங்களை குழப்பி, மூர்த்தியம்பாள்புரம் (மன்னார்குடிக்கு அருகில்) சுலபமாக போய் வந்துவிடலாம் என்று சொல்ல, நாங்களும் ரூட் மாத்தி, மூர்த்தியம்பாள்புரம் நோக்கி போக, அது நெவெர் எண்டிங் பிரயாணமாக தெரிய, பாதியில் அபௌட் டர்ன்.
இந்த குழப்பதினால் சேத்தூர் போய் சேர கொஞ்சம் நேரமாகிவிட்டது.
அங்கு அக்ரஹாரத்திற்கு போய், என் அப்பாவின் வீட்டை கண்டுபிடித்தோம்.
அப்பாவின் சேத்தூர் வீட்டில், என் அத்தை ஒருவர் குடி இருந்தார். அவரையும் தஞ்சாவூருக்கு கூட்டி வந்ததும், அப்பா அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். மாந்தோப்ப குத்தகைக்கு விட்டா... குத்தகைகாரன் சரியா பணம் தரல்லேன்னு, 1955 ல இருக்கும்னு நெனைக்கிறேன்... அந்த மாந்தோப்பவித்துட்டா... 800 ரூபாய்க்கு... அம்மா அதை அப்படியே பவுன் காசா மாத்திவெச்சுட்டா... பவுன் 40 ரூ ன்னு 20 பவுன் வந்துது.
வீடு மட்டும் வாடகைக்கு... 1980 கள்ல வாடகை 5 ரூ. அதுவும் ஒழுங்கா வராது...வீட்ட 5000 ரூ க்கு வித்துட்டா... எங்க கிட்ட சொல்லி இருந்தா நாங்க யாராவது அதஇன்னும் மேல குடுத்து வாங்கி இருப்போம்...
பெரிய அண்ணாக்கு ஒரே கோபம்...என்னாட்டமா எங்க எல்லாருக்கும் இந்த பழசெல்லாம்பசுமையான நினைவுகள்...
அண்ணா கேஸ் போடப்போறேன் ன்னு பய முறுத்தி, வாங்கினவா பயந்து போய் .. அப்புறம்நாங்க எல்லாரும்கையெழுத்து போட்டுக் குடுத்துட்டோம்...
நாங்கள் அந்த வீட்டை கண்டுபிடித்து போனால், எங்கள் அப்பாவிடம் வீட்டை வாங்கியவர், அதை மறுபடியும் யாருக்கோ விற்றுவிட்டார். அதனால் அங்கு இருப்பவர்களுக்கு, எங்கள் அப்பா, அண்ணா பற்றி எல்லாம் எதுவும் தெரியவில்லை. ஆனாலும் நாங்கள் போனதும், எங்களை அன்பாக வரவேற்று உள்ளே விட்டா. நாங்களும் ஆசை தீர, (எங்க அக்காவெல்லாம் சுமார் 75 வருடங்களுக்கு அப்புறம் சேத்தூர் பார்த்தார்கள். ) வீட்டு திண்ணை, மித்தம் , சமையல் ரூம், கொள்ளை பக்கம், அங்கு இன்னும் இருந்த பாக்கு, தென்னை மரங்கள், வேலி , கிணறு, வாய்க்கால் எல்லாம் பார்த்து பரவசம் ஆனோம். நாங்கள் உட்கார்ந்து, அத்தை தோசை வார்த்து போட சாப்பிட்ட இடம், சிவன் கோவில், எல்லாம் பார்த்து , பழைய கதைகளை பேசி சந்தோஷப பட்டோம். சிவன் கோவிலெல்லாம் பாழடைந்து இருக்கிறது. மனசுக்கு கஷ்டமாக இருந்தது. அந்த தெருவில் கொஞ்சம் காலாற நடந்து, மேலாத்து குஞ்சலா என்ற அக்காவின் சிநேகிதி, ராஜகோபால் மாமா பற்றி எல்லாம் நினைவு கூர்ந்து, அக்கிரஹாரம் எல்லையில் இருக்கும் ஒரு அம்மன் கோவில் பார்த்து விட்டு, மனமே வராமல் அந்த ஊரை விட்டு வந்தோம்.
மறுபடியும் மாயவரம் வந்து, இரவு தங்கி, மறுநாள் விடியற்காலை கிளம்பி சென்னை வந்து சேர்ந்தோம். மறக்க முடியாத ட்ரிப்.
என் பெரிய அக்காவுக்கு இன்னமும் குறை... இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம் என்று... மறுபடியும் பிளான் பண்ணி, நாலு பெரும் சேர்ந்து போவோமா ? அந்த கடவுளுக்குத்தான் தெரியும். போகமுடிந்தால் சந்தோஷப் படுவோம்.




No comments:

Post a Comment