Friday, June 5, 2020

தமிழ் சினிமா ஒரு அலசல்........


தமிழ் சினிமா    ஒரு அலசல்.......

தமிழில் முதல் படம் 'காளிதாஸ்' - 1931 - T. P. Rajalakshmi P. G. Venkatesan
தமிழ் சினிமா ஆரம்பித்த புதிதில், அதில் பாட்டு சேர்க்க வேண்டும் என்று யாருக்கு முதலில் ஐடியா தோன்றியது என்று தெரிய வில்லை.
அநேகமாக புராணக் கதைகள் தான். 40 பாட்டுக்களாவது இருக்கும் படத்தில்.
கதாநாயகி, கதாநாயகன் தான் பாடுவார்கள் ! (இன்னிவரைக்கும் அப்படித்தான்)
படங்கள் பாட்டுக்காகவே ஓடும். எல்லாம் கர்நாடக ராகங்கள். கச்சேரி மாதிரி, நிறைய சங்கதிகள், ஆலாபனை, ஸ்வரம் எல்லாம் சேர்த்து.
P.U.Chinnappa, M.K.T., S.G.Kittappa
இவர்கள் குரல் ரொம்ப பிரபலம்.G.N.B., M.S.S., N.C.V. கூட பாடி நடித்திருக்கிறார்கள்.
K.B.S.
இன் "ஒளவையாரை" மறக்க முடியுமா?
எல்லோரும் செந்தமிழில், மெதுவாக பேசுவார்கள். "நாதா" , "பிரபோ" , "ப்ரியசகி" இதெல்லாம் கணவன் மனைவி அழைத்துக்கொள்ளும் வார்த்தைகள்.
பெண் என்பவள் அடங்கித்தான் இருப்பாள்.
பிறகு சமூக கதைகள் எழுத ஆரம்பித்தார்கள். "பாவம் செய்பவன் அதன் பலனை அனுபவித்தே ஆகணும்" என்பது தான் கதைகளின் கருவாக இருக்கும்.
அப்போதெல்லாம் டப்பிங் தெரியாது. வசனம், பாட்டு எல்லாம் அப்படியே நேரிடையாக படமாக்கப் படும்.
ஒரு லக்ஷம் செலவழித்து படமெடுத்தால் ரொம்ப காஸ்ட்லி production .
அப்போ சினிமா ஸ்டூடியோ தேவையான ஒன்று என்பதால், பணமிருப்பவர்கள் சொந்த ஸ்டூடியோ கட்டினார்கள்.அப்படி கட்டியவை தான், Gemini, A.V.M, Bharani, Selem Modern Theaters Vijaya / Vahini etc.
வடபழனியில் ஸ்டூடியோ அதிகம் என்பதால், கோடம்பாக்கம் ஏரியா , சினிமா நடிகர்கள் குடியிருக்கும் பகுதியாக ஆயிற்று.
நின்றால், உட்கார்ந்தால் பாடல். மந்திரி குமாரியில் "உலவும் தென்றல் காற்றினிலே" என்று ஓடத்தில் பாடிவிட்டு, உடனே, மலை ஏறும்போது "வாராய், நீ வாராய்..." என்ற இரண்டு பாடல்கள்.
பாடல்களின் நடுவில் வசனம் வருவதும் சகஜம்.
"
கண்ணே கண்ணே என்று என் முகத்தை ஏன்... " .."இல்லை, கண்ணே சரிதானா என்று கேட்டேன்"
"அதிகாரமாக கேட்கக்கூடாது. குழந்தை கேக்குமே, 'அம்மா, லட்டு தா, மிட்டாய் தா ' என்று, அப்படி. எங்கே பாடு"
"சுவாமி... கண்ணே"
இப்படி !

சுதந்திரத்துக்கு முன், சில தேச பக்தி படங்கள் வந்தன. சில தடைகளும் செய்யப்பட்டன.
1945 க்கு மேல், ரஞ்சன், எம்.கே.ராதா, சஹஸ்ரநாமம் இவர்கள் அதிகம் பேசப்பட்டவர்கள். நாகையா, சஹஸ்ரநாமம் இவர்கள், அப்பா, அண்ணா ரோலுக்கு மாறி, கொஞ்சம் நிலைத்து இருந்தார்கள்.
அப்போ மேக் அப் ரொம்ப கிடையாது. பெண்கள், ரவிக்கை , குட்டை கையோடு, பஃப் வைத்திருக்கும். புடவை கட்டும், கண்டாங்கி சேலை, காட்டன் புடவை, நீள தலைப்பு, இழுத்து சொருகப்பட்டு...
ஆண்கள், வேஷ்டி - ரஞ்சன் போன்றவர்கள் pants போடுவார்கள் - நெற்றியில் விபூதி, குங்குமம் - ஜாதி அடையாளங்களுடன்...
ரஞ்சனும், வசுந்தரா தேவியும் (வைஜயந்திமாலாவுடைய அம்மா) நடித்த மங்கம்மா சபதம் (1943) - மறக்க முடியுமா- அதுவும் அந்த சபதத்தை - "நான் உன்னையே கல்யாணம் பண்ணிண்டு......" என்று போகும் சபதம். நான் கொஞ்சம் புரிந்த வயதில் பார்த்தேன்.
அந்த தமிழ் படங்களை இப்போ பார்த்தால், இந்தக் கால தமிழ் தெரிந்த குழந்தைகளுக்குக் கூட புரியாது ! (ஏன்னா, அது நல்ல தமிழ் !)
கதாநாயகிகளுக்கு நீள தலை முடி கண்டிப்பாக உண்டு (சவுரியாகத்தான் இருக்கும் - கண்ணாம்பா தவிர). நீளமாக பின்னி, ஒரு பக்கமாக, பின்னலை முன்னாள் போட்டுக்கொண்டால் கதா நாயகி ரொம்ப fashion . அதே சோகமான, கோபமான சீனில், சட்டென்று எப்படி பின்னல் அவிழும் என்று தெரியாது.. ஆனால் தலை முடி முதுகு நிறைய பறந்து, விரிந்து கிடக்கும்.
கதைப்படி கல்யாணம் ஆன, குழந்தை இருக்கிற பெண்கள் - பிச்சோடா, அதை சுற்றி மல்லிகைப் பூ !

1950 க்கு மேல் கொஞ்சம் புரட்சிகரமான படங்கள் வர ஆரம்பித்தன. என்ன புரட்சி. பெண் கொஞ்சம் தைர்ய சாலியாக காண்பிக்கப் பட்டாள்.
"
குதிரை ஏறி சவாரி செய்வாள்; ஆற்றிலே விழுந்து நீச்சலடிப்பாள் வைஜயந்திமாலா" என்று, பெண் நீச்சலை, விளம்பரமாகவே செய்தது ஏ. வி. எம். தன் "பெண்" படத்துக்காக.
ரஞ்சனைப் போல் கத்தி சண்டை போட இன்னொருவர் பிறக்கவேண்டும். அவ்வளவு லாவகம், ஸ்டைல். அந்த costume மே அவ்வளவு நன்னா இருக்கும்.
அவருக்குப் பிறகு எம்.ஜி .ஆர் ஐ சொல்லலாம்.
ஒருவரே இரட்டை வேடம் போட்டது, முதலில், P.U.Chinnappa நடித்த "உத்தம புத்திரன்".படத்துக்காக (1940) .
உத்தம புத்திரன் படம் பிறகு சிவாஜி கணேசனை வைத்து எடுக்கப்பட்டது
நான் பார்த்த முதல் இரட்டையர் படம் "அபூர்வ சகோதரர்கள்" எம்.கே. ராதாஇரட்டைவேஷத்தில். அப்போ காமெரா technique எல்லாம் ரொம்ப கிடையாது. எப்படி எடுத்திருப்பார்கள் என்று ஒரே ஆச்சரியமாக இருக்கும். லென்சை அரை பாகம் மூடி, ஒரு ராதாவை எடுத்து விட்டு, மற்றொரு பக்கம் நிக்க வைத்து எடுப்பார்கள் என்று எங்கண்ணா சொன்னதை நம்புகிறேன் !
அந்த படம் போடு போடென்று போட்டது.
நடனம் என்றால், classical தான். குமாரி கமலா, வைஜயந்தி, லலிதா, பத்மினி, ராகினி, சாய்-சுப்புலட்சுமி இப்படி. அவர்களுக்கு நடிப்பு கிடையாது.வெறும் டான்ஸ் மட்டுமே. அப்புறமாக கமலா, லலிதா&சிஸ்டர்ஸ் , வைஜயந்தி நடிக்கவும் ஆரம்பித்தார்கள்.
நடனம் தெரியாத நடிகைகள், வெறும் கையை பாட்டின் வரிகளுக்கேற்ப அசைப்பார்கள். கண்ணை சுயட்டுவார்கள் அந்த வகையில், டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி பரவா இல்லை.
"செந்தாமரை மலரினை நீ கண்டதுண்டோடி.சிறிதேனும் என் முகத்திற்கு அது பொருத்தம் உண்டோடி" என்றால், கையில் தாமரை முத்திரை, முகம் என்றால், தன முகத்தை சுற்றி ஒரு வட்டம், கண்டதுண்டோ என்றால், இரு விரல்களால் கண்களுக்கிட்ட அபிநயம் - நாம கூட ஈசியா ஆடலாம்.
பானுமதி சொந்த குரலில் பாடினார். அந்த குரல் ஒரு தனித்தன்மை. ஈசியா கண்டு பிடிக்கலாம்.

அப்போதே பாட்டு டப்பிங் ஆரம்பித்து விட்டது.

1952 சிவாஜி கணேசனின் என்ட்ரி சினிமா போக்கையே 360 டிக்ரீ புரட்டிப்போட்டது.
நீள வசனங்கள், முகத்தில் ஏராளமான உணர்க்க்சிகளின் வெளிப்பாடு, (சிவாஜியின் முகத் தசை கூட நடிக்கும்) பாட்டிற்கு வாயசைக்கும் தன்மை ..
அப்போது இருந்த மூவர் சிவாஜி, ஜெமினி, எம்.ஜி.ஆர். இவர்களுக்கு நாயகிகளாக பத்மினி, சாவித்திரி, பானுமதி, சரோஜா தேவி, எஸ்.வரலக்ஷ்மி, ஜி.வரலக்ஷ்மி, மாதுரி தேவி, பி.எஸ்.சரோஜா,
வில்லன்களாக, பி.எஸ்.வீரப்பா, நம்பியார், டி.கே.ராமச்சந்திரன், ஆர். எஸ்.மனோகர்....
காமெடிக்கு தங்கவேலு, டி.எஸ்.துரைராஜ், சந்திர பாபு, Kaka Radhakrishnan, எம்.ஜி.சக்ரபாணி, சாய்ராம், டி.எஸ்.பாலய்யா...
குணச் சித்திரத்துக்கு எஸ்.வி.சுப்பையா, நாகையா, S.V.Ranga Rao ;
தெலுங்கு ஹீரோக்களான என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ்.
என்.டி.ராம ராவ் - கிருஷ்ணர், ராமர் வேஷத்திற் கென்றே முக்கியமாக இருந்தவர்.
சிறந்த வில்லிகளாக இருந்தவர்கள், டி.ஆர்.ராஜ குமாரி, எம்.என்.ராஜம்,சில படங்களில் ராஜ சுலோச்சனா....
பராசக்தியில் சிவாஜியின் ஜோடியாக வந்த பண்டரிபாய், திரும்பிப் பாரில் அவர் அக்காவாக..
சாவித்திரி, பெண்ணின் பெருமை படத்தில் சிவாஜிக்கு அண்ணியாக, பாச மலரில் தங்கையாக...
சித்தியில் பத்மினி எம்.ஆர்.ராதாவுக்கு இரண்டாம் தாரமாக, மங்கையர் திலகத்தில், சிவாஜியின் அண்ணியாக...
இப்படி பலதரப்பட்ட ரோல்களை, செய்தார்கள். மார்கெட் போய் விடும் என்ற கவலை இல்லை. அவர்களுக்கு நடிப்புதான் முக்கியம்.
சிவாஜி, எத்தனை நீளமான வசனமாக இருந்தாலும், ஒரு தரம் படிக்கக்கேட்டு, அப்படியே நடிப்பின் போது பேசிவிடுவாராம். சிவாஜி நடிகர் திலகம் என்றால் சாவித்திரி நடிகையர் திலகம்.
ஆனால், இவர்கள் யாருமே அகில இந்திய அளவில், நேஷனல் அவார்ட் வாங்கியதில்லை !
சிவாஜியின் படங்களில் என்னை மிகவும் பாதித்து அழ வைத்த படங்கள் - "எதிர்பாராதது"; "பாச மலர்" ; "கப்பலோட்டிய தமிழன்"; "கர்ணன்" .....
இன்னமும் நினைத்தாலே மனதை கனக்கச் செய்வது நாகேஸ்வர ராவ் , சாவித்ரி நடித்த "தேவதாஸ்" ; ஜெமினி , சரோஜா தேவியின் "கல்யாண பரிசு"

காமெடியில் கலக்கியவர்கள் முக்கியமாக , தங்கவேலு, நாகேஷ், மனோரமா ....
(சந்திரபாபு, தேங்காய் ஸ்ரீனிவாசன், சுருளிராஜன் .... இவர்களையும் சொல்லலாம். )
தங்கவேலு, எம்.சரோஜாவின் "கல்யாண பரிசு " ; தங்க வேலு , முத்துலட்சுமியின் "அறிவாளி" ; நாகேஷின் "காதலிக்க நேரமில்லை " இவைகளை மறக்க முடியுமா"


1960 களில், கே.ஆர்.விஜயா, மனோரமா, சோ, நாகேஷ், ஸ்ரீகாந்த், ஜெயலலிதா இவர்கள் பிரபலமனார்கள்
என்றைக்கும் தமிழ் ஹீரோயின் களுக்கு பஞ்சம் தான். அநேகம் பேர் தெலுங்கு - கொஞ்சம் கன்னடம், மலையாளம்.
நடனம் தெரிய வேண்டும், பாட்டு தெரிய வேண்டும் என்றெல்லாம் கண்டிஷன் கிடையாது. தமிழ் நன்றாக பேச வேண்டும். அது எல்லோருமே நன்றாக கற்றுக் கொண்டு பேசினார்கள்.
நடிக, நடிகைகள் ஜிம் போவது, உடலை பெருக்காமல் ஒல்லியாக வைத்திருப்பது அதெல்லாம் தெரியாது. ஆனாலும் அவர்களை பார்க்கப் பிடிக்கும். ஏனென்றால் - நடிப்பு, குடும்பப் பாங்கான வேஷங்கள்; குடும்பக் கதைகள்.
இந்த பீரியட் , கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பீரியட்கள். Black & white movies.
முதல் முழு நீள கலர் படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும். (நாடோடி மன்னனின் ஒரு பாகம் ) ..அப்போது கேவா கலர். பின்னர் டெக்னிக் கலராக மாறிற்று.
புரட்சிகரமாக, விதவை திருமணத்தைப் பற்றி பேசிய படம் "குல தெய்வம்" ,. பண்டரிபாயின் தங்கை மைனாவதி, கதாநாயகி. ராஜகோபால் "குலதெய்வம்" ராஜ கோபால் ஆனார்.
படங்கள் ப்ரொட்யூசர் பேரை வைத்து பிரபலப்படுத்தப் பட்டது.
Modern Theaters Sundaram, Padmini Pictures B.R.Bandhulu, A.V.M., National Talkies, Pakshi Raja Studios,.Gemini ..
இப்படி

மியூசிக் பத்தி சொல்லியே ஆகணும்.

முழு கர்னாடிக்  கிலிருந்து, கொஞ்சம் மாறியது.
கே.வி.மகாதேவன், ஜி. ராமநாதன்... இவர்கள் அதிகமாக கர்நாடக ராகங்களிலும், எம்.எஸ். விஸ்வநாதன் மெல்லிசையிலும்  மெட்டுப் போட்டார்கள்... அந்த இருபது வருடங்கள் பாடல்கள், மெட்டுக்காகவும், கண்ணதாசனின் வரிகளுக்காகவும்... மறக்கவே முடியாதவை. காலத்தால் அழியாதவை.

கண்ணதாசன் - விவரிக்க வார்த்தைகளே இல்லை. லவ்  சாங்க்ஸ், தத்துவம்... எத்தனை எத்தனை... தமிழ் காவியங்களில் இருந்து கூட வார்த்தைகளை எடுத்து, பிரமாதமாக பிரயோகம் பண்ணினார்.  இதற்குமேல்சொல்லத்தெரியவில்லை.

பாடல் வரிகளும் மெட்டும், கதைக்கு ஒன்றி இருந்ததாலும் , டி.எம்.எஸ். ஸ்பஷ்டமாக பாடியாதாலும், மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டவை.

ஏ.எம்.ராஜா, ஜிக்கி, சுசீலா, ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி, "குழந்தைக் குரல்" ராஜேஸ்வரி, பி.பி.ஸ்ரீநிவாஸ், ....
பாட்டைக் கேட்டால், நடிகர் யாரன்று சொல்லலாம். குரலை அப்படி மாற்றி பாடுவார்கள்.
Limited Number of Actors, Play Back singers, seasoned directors... திரும்பத் திரும்ப அவர்கள் படங்களே... ஆனால் அலுக்க வில்லை.

 இளையராஜா வுக்கு இணை இல்லை. ரெஹ்மான் மெட்டுக்கள் சூப்பர் ரகம். ஆனால் பாடல் வரிகள் இப்போதெல்லாம் மனதில் பதிவதில்லை. வயதானதாலோ ?

ஸ்ரீதர் முதலில் கதைகள் எழுதிக் கொண்டிருந்தார்., எதிர் பாராதது ,நால்வர் - இதெல்லாம் அவர் எழுதிய கதைகள்.
ஸ்ரீதர் கதையிலிருந்து direction க்கு மாறியது "கல்யாணப் பரிசு" படத்தில். அவரின் நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை... எத்தனையோ... லிஸ்ட் பெரியது. ஒரு சீரியஸ், ஒரு காமெடி என்று மாற்றி மாற்றி எடுத்தார். (Camera-always – Wincent)
பிறகு வந்தவர் நம் பாலச்சந்தர். directionக்கு ஒரு புது trend உருவாக்கி, இன்றும் எல்லோராலும் "குரு" வாக மதிக்கப் படுபவர்.    பாரதிராஜாவும்.

அறுபதுகளில் மேக் அப் கொஞ்சம் ஓவர் தான்.

அப்பவும் அவுட்டோர்  அதிகமில்லை. ஸ்டூடியோ செட். தெருக்கள் கூட செட் தான். பார்த்தாலே தெரியும்.
மிஞ்சிப்போனால், பாட்டு எடுக்க சாத்தனூர் அணைக்கட்டு போவார்கள்.
தோட்டசெட்டில் எல்லாம் காகிதப் பூ. கலர் கலராக, கொடிகளில் தொங்கும். அதிக பட்ச டான்சாக, மரத்தை சுற்றி, கொடிகளை பற்றி ஓடுவார்கள்.

பாட்டு, வசனங்களில் இரட்டை அர்த்தம் இருக்காது. நிறைய விஷயங்களை suggestive ஆகவே சொல்வார்கள்.
புடவை தான் அநேகமாக. கதாநாயகிகள் வெறும் பொம்மைகளாக வந்து போகாமல், கதாநாயகனுக்கு ஈடு கொடுத்து நடித்தார்கள். என்ன, கொஞ்சம் பிழிய பிழிய அழுவார்கள்...

பணக்கஷ்டம், கல்யாணத்தில் பிரச்சினை, மாமியார் கொடுமை, கணவனின் சந்தேஹம், பணக்கார / ஏழை லவ், சந்தோஷமா ஒரு டூயட், பிரிவுக்கு அப்புறம் அதே பாடலை, வெவ்வேறு இடத்திலிருந்து....
சரோஜா தேவியின் கொஞ்சல் குரலும், "கண்ணும் கண்ணும் பேசியது உன்னாலன்றோ" பாட்டும், லவ் பர்ட்ஸ் , லவ் பர்ட்ஸ் சின் அபிநயமும் (அபிநய சரஸ்வதி ஆயிற்றே) ... மறக்க முடியாதவை.

ஒரு தில்லானா மோகனாம்பாளுக்கு ஈடாகுமா... அந்த ரயில் சீன் எப்படி.. சிவாஜியும், பத்மினியும் இடத்தை மாற்றி மாற்றி...
பாரதி ராஜாவும், ஒரு கிராமீய மணத்துடன் படங்களை கொண்டுவர, சினிமா நன்றாகவே இருந்தது...
அப்போ எல்லாம் டைரக்டர்களுக்காக  படங்கள், நடிகர்களுக்காக படங்கள், பாட்டுக்காக என்று, ஆக மொத்தம் எல்லா படங்களும் பார்க்கப்படும்.

பிறகு ஒரு செட்டாக வந்தவர்கள் - பாக்யராஜ், மணி ரத்னம், பார்த்திபன், ஷங்கர், கே.எஸ்.ரவி குமார்..இப்படி...

லைட்டிங் குறைவாக, இருட்டில், ஒத்தை வரி வசனம் இப்படி எடுக்க ஆரம்பித்தவர் - மணி ரத்னம்.
பழைய சினிமாக்களில், ஓடிப்போய் கல்யாணம் பண்ணுவது என்பது குறைவுதான். அதான் முடிவில் எல்லாம் சுபம் ஆயிற்றே ! அதனால் கதாநாயகிகள் பொறுமையாக இருப்பார்கள்.
"ஓடிப்போலாமா ? " என்ற வசனம் , மணிரத்னம், இதயத்தை திருடாதே படத்தில் வைத்தாலும் வைத்தார், காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் க்கு அதுவே தாரக மந்த்ரமாயிற்று.


கமல், ரஜினி அடுத்த சகாப்தம்... நிலைத்து நிற்பவர்கள்.

அதீதமான வில்லத் தனத்தையும் , ஆர்ப்பாட்டம் இல்லாமல் காட்ட முடியும் என்று மாற்றிக் காட்டியவர் சத்யராஜ் . நூறாவது நாளும், "தகடு, தகடு" வசனமும் மறக்க முடியாதவை . பிறகு கதாநாயகனாகி, இன்று வரை, ஹீரோ, அப்பா வேஷம் எதுவானாலும், காமெடி கலந்து பண்ணும்  நல்ல நடிகர்.

சேரன் ஆரம்பித்து வைத்த  trend - யதார்த்தம்.
இப்போது அநேகமாக அவுட் டூர் ஷூட்டிங்கும், யதார்த்தமான கிராமமும், பணக்கார வெளி நாடுகளும் படமெடுக்கும் தளங்கள் ஆனதால், ஸ்டூடியோ வுக்கு வேலையில்லாமல், ஜெமினி, வாகினி எல்லாம் மறைந்து விட்டன. எ.வி.எம். மட்டும் இருக்கிறது.

1990 லிருந்து, technique / Camera (P.C.Sriram to be specially mentioned) , out door location, high budget, very many young & new artists, slim  heroines, hero maintaining good physique , singers என்று, சினிமா வேகமாக பயணிக்கிறது.



சினிமா என்பது ஒரு "கடல்"
அதில் "அலைகள் ஓய்வதில்லை"
அந்த அலைகள் என் "நெஞ்சிருக்கும் வரை" மோதிக் கொண்டிருக்கும்.
எல்லாவற்றையும் "மறக்க முடியுமா ?"
இன்னும் நிறைய "சொல்லத்தான் நினைக்கிறேன்"
சினிமாவிற்கு நான் ஒரு "ரசிகை"
என் மனதில் இருக்கும் "நீங்காத நினைவுகள்"

ஒரு "புத்தகம்" போடலாம்.... இல்லை - பல புத்தகங்கள்   போடலாம்....
இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்...

No comments:

Post a Comment