Sunday, December 20, 2020

சரணாகதி...

 நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது....


ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence 

இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா..

நடுவில் வந்த இடைஞ்சல்களை சமாளிக்க முடியுமா...

சீதையை பார்த்து, ராவணனை பார்த்து, இலங்கையை கொஞ்சம் தீக்கு இரையாக்கி.. 

ராமர் கண்டிப்பாக வந்து காப்பாற்றுவார் என்று நம்பிக்கை கொடுத்து...

(சீதைக்கு தெரியாதா? இல்லை நம்பிக்கை இல்லையா) இது ஒரு சாதாரண மனிதர்கள் படும் அவஸ்தையும், anxiety  யும்.


ஹனுமான் திரும்பி வந்து... ஆவலுடன் காத்திருந்த ராமனிடம்..."கண்டேன் சீதையை " என்று கண்டேனை  முதலில் வைத்து... எப்படி முக்கியமான செய்திகளை, முக்கிய தருணத்தில் சொல்ல வேண்டும் என்ற பாடத்தை நமக்கு சொல்லித் தரவில்லையா... (நாம் அப்படி செய்கிறோமா.. போனில் ஒரு செய்தி சொல்ல அரை மணி நேரம் !!!  )

படிக்கும்போது சிலிர்த்துத் தான் போகிறது..

அப்போது, "எப்படி, எந்த தைரியத்தில் ஹனுமான், கடலை தாண்ட நினைத்தார்?.. " என்று ஆரம்பித்து கேள்விகள் கேக்கலாம்.. ஏனென்றால் நம்மளால் முடியாத காரியம். 

அதற்காகத்தான், அனுமனை "தடங்கலை   சக்திக்காக"  சக்திக்காக வேண்டுகிறோம். 


ஒரு குழந்தை, தன் தாயை எப்படி நம்புகிறது ? தாயின்  கையை பிடித்துக் கொண்டு விட்டால், தாய் போகுமிடமெல்லாம் போய், ஒரு இடத்தில் உட்கார வைத்தால் நம்பிக்கையாக உட்கார்ந்து, வேறு யாருடனும் போகாமல், காத்திருந்து, தாயை பார்த்ததும், கையை பற்றி கூட வரவில்லையா? எவ்வளவு செக்யூரிட்டி அம்மாவிடம்? 

அதே குழந்தை... வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக விலகி, தானே சிந்திக்கும் போது, அவநம்பிக்கை கொள்கிறது... சமூகம் கற்றுக் கொடுக்கும் பாடம்... ஸ்திதப் ப்ரக்ன்யா இல்லை... 


அதனால் தான் , மார்க் குறைந்ததால், வீட்டுக்கு போகாமல், மூன்று நாள், தூரத்து உறவுக்காரர் வீட்டில் தங்கி... எவ்வளவு சங்கடம் அந்த அம்மாவுக்கு.. இனி அந்த பெண்ணை எப்படி கையாள்வது என்று புரியாமல்..... இதெல்லாம் மனதில் கள்ளம் புகுவதால் வருகிறது... (மனதில் நடக்கும் குருக்ஷேத்திர சண்டையில், அர்ஜுனனாக , குழப்பமாக இருப்பதால் வருகிறது..)


நான் ஏற்கெனெவே எழுதி  இருக்கிறேன்.. எப்படி என் பேத்தி மூன்று வயதில் வில் அம்பு எடுத்துக் கொண்டு , தனுஷ் கோடி போய் , அம்பு விட்டு, ராவணை அடித்து விட்டதாக நம்பி, ராமருக்கு ஆறுதல் சொன்னாள்  என்று... அந்த innocence  எப்போது மாறுகிறது ?     

நாமெல்லாரும் கடவுளின் குழந்தைகளாகவே இருப்போம். 


சந்தேகங்கள் வந்தால் சுந்தர காண்டம் படித்து பலன் உண்டா?


ஆண்டாள் சொல்லும் "நீராடல்" என்ன ? குளத்தில் வெறும் குளியலா ? இல்லை... பகவானிடம் அதீத பக்தி கொண்டு, அவன் அருளில் முங்கி முங்கி குளிப்பது.. அவனை பற்றிய எண்ணங்களில் மூழ்கி மூழ்கி அனுபவித்து, மனதை சுத்தப் படுத்துவது... அவள் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. இஷ்டப் பட்டவர்கள் வரலாம் என்று எழுப்புகிறாள். மாலையை சூடிக் கொடுக்கிறாள்... அதுதான் பக்தி...


கண்ணப்பன் லாஜிக்   யோசிக்க வில்லை, ஆத்மார்த்தமாக , வாயில் தண்ணீர் கொண்டு வந்து லிங்கத்திற்கு அபிஷேகம் பண்ணி, செருப்பால் கூட்டி சுத்தம் பண்ணி, ஒரு கண்ணை கொடுத்து, மறு கண்ணை எடுக்கும் முன், ஒரு காலால் இறைவனின் கண் இருக்க வேண்டிய இடத்தில் அடையாளம் வைத்துக் கொண்டு... 

இதுதான் சரணாகதி... 


இந்த சரணாகதி ஒரு முறைதான் பண்ண முடியும்.. ஒரு முறை சரணாகதி என்று பாதங்களில் விழுந்து விட்டால், மறுபடியும் எழுந்து, எழுந்து விழ முடியுமா... பிறகு பகவான் வேறு, நான் வேறு என்ற எண்ணம் எப்படி வரும் ? அது தானே கடவுள் நம்மை ஆக்ரமிக்கும் தருணம் ? 

அதனால் தானே கண்ணப்பனுக்கு சிவா லோகப் ப்ராப்தி ? 


"சிக்கென ப் பிடித்தேன் ... எங்கு எழுந்தருளுவது இனியே " என்று தேவாரமாக மலர்ந்தது !!

மானசரோவரிலும், கண்டகி ஆற்றிலும் (108 ) குழாய்களின் அடியில் குளிக்கும்போது, இறைவனை நம்பித் தான் இறங்குகிறோம்.. இல்லாவிட்டால் அந்த குளிர் தாங்குமா...??


Friday, November 13, 2020

நினைத்துப் பார்க்கிறேன்....

 நினைத்துப் பார்க்கிறேன்.... பிறந்த வீட்டில், தீபாவளி திருநாட்கள்...ஒரு வார பட்சண களேபரம் ..கடைசி நேர புது ட்ரெஸ் கொண்டாட்டம்.....முதல் நாள் இரவு, வெங்காய சாம்பார், உருளை கறி , சேமியா பாயசம், அப்பளம் பொரித்து, சாப்பாடு... .வெகு தாராளமாக 5, 10 ரூபாய்க்கு பட்டாசு, மத்தாப்பு.. விறகடுப்பில் கொதிக்கும் வென்னீர் ... 7 குழந்தைகளில் கடைசி குழந்தையான என்னிலிருந்து துவங்கி, எண்ணெய் குளியல் அமர்க்களம்... அப்பா கையிலிருந்து புது துணி பெற்று, உடுத்தி...ரேடியோவில் தீபாவளி வாழ்த்தும், நாதஸ்வரமும் விடியற்காலை 4 மணிக்கு கேட்டு.... பகல் விருந்து....... ஹும்ம்ம்ம்

நினைத்துப் பார்க்கிறேன்... கல்யாணத்துக்குப் பிறகு, கூட்டுக் குடும்பத்தில்...அதே பக்ஷண களேபரங்கள்... புது புடவை... இரண்டு நாத்தனார்கள், இரண்டு மச்சினர்களுக்கிடையில், மாமியார், மாமனாருடன்... முதல் நாள் இரவு, வெங்காய சாம்பார், உருளை கறி , சேமியா பாயசம், அப்பளம் பொரித்து, சாப்பாடு... .பாய்லரில் வென்னீர் கொதிக்க, கடைசி மச்சினரில் ஆரம்பித்து.... வரிசையாக எண்ணெய் குளியல்... மாமனாரிடம் புது துணி பெற்று... உடுத்தி... பகல் விருந்து சமைத்து.... ஹும்ம்ம்ம்
நினைத்துப் பார்க்கிறேன்... 3 குழந்தைகளுக்கு அம்மாவாக... தீபாவளி ஷாப்பிங் பண்ணி , குழந்தைகளுக்கு திருப்தியாக, பட்ஜெட்டை கொஞ்சம் மீறி... துணி மணி வாங்கி, தைத்து... அடுப்பில் எண்ணெய் வைத்தால்தான் தீபாவளி வாசனை வரும் என்று, குழந்தைகளுக்குப் பிடித்த பக்ஷணங்கள் பண்ணி .... பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்து... முதல் நாள் இரவு, வெங்காய சாம்பார், உருளை கறி , சேமியா பாயசம், அப்பளம் பொரித்து, சாப்பாடு... .கெய்சரில் வென்னீர் போட்டு.... SK இடம் புதுக் துணி பெற்று... மதியம் பாயசத்துடன் சமைத்து... ஹும்ம்ம்ம்....

இன்னும்.... சின்ன வயதில் அம்மா கிளறிய லேகியத்தை சாப்பிட பிடிவாதம் பிடித்து, மாமியாரிடம், பவ்யமாக வாங்கி, (பிடிக்காமல்தான்) சாப்பிட்டு, பிறகு, அம்பிகாவிலும், டப் பா செட்டி கடையிலும் வாங்கிய ரெடி மேட் மருந்தை வாங்கி, குழந்தைகளை படுத்தி சாப்பிட வைத்து....
ஒரு தாம்பாளத்தில் புதுத் துணிகளையும் , ஒரு தட்டில் பக்ஷணங்களையும் பரத்தி வைத்து, எண்ணெய் வைக்கும் முன் துளி சுவீட் சாப்பிட்டு, ஒரு வெற்றிலையை போட்டு மென்று, அதே சம்பிரதாயத்தை பெண்ணிடம் செய்ய, அவள் கண்ணில் நீர் தளும்ப அந்த வெற்றிலையை மென்று, துப்பி....
பட்டாசுகளை பங்கு போட்டு, அவரவர் கூரிலிருந்து மத்தாப்பு எடுத்து கொளுத்தி, பட்டாசு வெடித்து, சாயங்காலத்திற்குள் போர் அடித்து, எல்லா மிச்சம் மீதிகளையும் சேர்த்து வைத்து கொளுத்தி....
எல்லாமே அமர்க்களம் தான்....
நினைத்துப் பார்க்கிறேன்... பெண்ணிற்கு தலை தீபாவளி முடிந்த பிறகு, 1968 லிருந்து, "நீயும் நானுமடி , எதிரும் புதிருமடி" என்று, அப்போதும் முதல் நாள் வெங்காய சாம்பாருடன் சமைத்து... ஆனால் முதல் நாள் மதியமே அதை சமைத்து.. (இரவு அவ்வளவு ஹெவியாக சாப்பிட முடியாதென்று... (வயதான கோளாறு )... பட்டாசெல்லாம் வாங்காமல் ... நாங்களே அவரவர் தலையில் சாஸ்திரத்துக்கு எண்ணெய் வைத்துக் கொண்டு... பகலில் ரொம்ப சிம்பிளாக சமைத்து... தீபாவளியை முடித்து...
இப்போது.... ?? அந்த நினைவுகளே நெஞ்சில் நிறைந்த பொக்கிஷங்களாக... இங்கு senior citizen home ல் , புதிதாக சேர்த்துக் கொண்ட நட்புகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி... தீபாவளி ஷாப்பிங் எல்லாம் பழங் கனவாக நேற்று இரவுக்கு தோசை, சாம்பார், சட்னி சாப்பிட்டு......உள்ளே ஏற்கனேவே இருக்கும் புதுப் புடவையை எடுத்து வைத்திருக்கிறேன்... இங்கு common ஆக , ஆர்டர் எடுத்து, செய்து கொடுத்த பக்ஷணங்களில், சாஸ்திரத்துக்கு கொஞ்சம் மிக்சரும், மைசூர் பாகும் வாங்கி, அதுவும் செலவாகாமல்...
இப்போது மணி மூன்று... அவசரமில்லை... 5.30 மணிக்குள் சாஸ்திர எண்ணெய் குளியல் முடித்து... புதுப் புடவை உடுத்தி... டைனிங் ஹாலில் மற்றவரை மீட் பண்ணி... தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி... டிபன் சாப்பிட்டு... மதியம் வடை, பாயசம் மட்டும் எக்ஸ்ட்ராவாக கிடைக்க, லன்ச் சாப்பிட்டு இப்படியாக இந்த தீபாவளி கழியும்...
பிழைத்துக் கிடந்தால் இனி வரும் தீபாவளிக்காவது... கொரோனா பயமில்லாமல், இந்த அளவிலாவது கொண்டாட கிடைத்தால் சந்தோஷம் ...
குறையொன்றும் இல்லை கண்ணா.....
எல்லா நட்புகளுக்கும் என் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்... சந்தோஷமாக கொண்டாடுங்கள்... குழந்தைகளுடன் கொண்டாடுபவர்கள், ஒவ்வொரு வினாடியையும் அனுபவித்து ரசியுங்கள்...

Friday, August 21, 2020

பிள்ளையார்........

 SK க்கு பிள்ளையார் இஷ்ட தெய்வம்... இன்றும் எங்கள் சுவாமி ரூமில் பெரிய பிள்ளையார் படம் மட்டும் தான்.

எங்கள் கல்யாண நிச்சயதார்த்தம் கூட பிள்ளையார் சதுர்த்தி அன்று தான் நடந்தது... அப்படி பிளான் பண்ணவில்லை. அதுவாக அமைந்தது. அந்த வருடம் செப்டம்பர் 7 ம் தேதி அன்று.

பூனாவில், எனக்கு கடைசி பையன் பிறந்து, ஆஸ்பத்திரியில் இருந்தபோது, என் கூட தங்க வீட்டிலிருந்து யாரும் இல்லாததால், ரூமில் தனியாகத்தான் இருந்தேன். தினமும் இரவு ஒரு மூஞ்சூர் தொட்டிலை சுற்றி ஓடி மறையும். எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கும். அப்போது வேண்டிக் கொண்டோம் - குழந்தைக்கு கணேஷ் என்று பெயர் வைப்பதாக. அப்படியே வைத்தோம் .

இன்னொரு சம்பவம். சென்னையில், அண்ணா நகரில் , தனி வீட்டில் குடி இருந்தோம். மூன்று குழந்தைகளும் சிறியவர்கள். இவர் ஆபீஸ் வேலையாக வெளிநாடு போனார் - ஒரு மாதத்திற்கு. சொன்னால் நம்புவதற்கு கஷ்டம். தினமும், இரவு, ஒரு மூஞ்சூர் ஹாலில் நாங்கள் படுத்திருக்கும் இடத்தில் ஒரு சுற்று சுற்றிவிட்டு, சுவாமி ரூமில் மறைந்து விடும். ஒரு மாதமும் தவறாமல் நடந்தது.

இப்படி அநேக விஷயங்கள் சொல்லலாம். எங்கள் குடும்பத்தை காப்பாற்றி, ஒவ்வொரு விஷயத்திலும் எங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க உதவுவது பிள்ளையார் தான்.... லஸ் பிள்ளையார் என் கடைசி பையன் கணேஷுக்கு ரொம்ப ஹெல்ப்.

எங்கள் வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை.

Thursday, August 20, 2020

ஆகஸ்ட் 22 - மறக்க முடியாத நாள்...

 

ஆகஸ்ட் 22 - மறக்க முடியாத நாள்... நான் டீச்சராக பிறவி எடுத்த நாள்.

 

படிக்கும்போது டாக்டர் கனவுகளுடன் படித்தேன். டீச்சராவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. பிடிக்காது என்று நினைத்திருந்தேன் .  எக்ஸாம் முடிந்து, ரிசல்ட்டும் வந்ததும், அப்பா சொல்படி  A.G. 's office, Telephones , Government College க்கு எல்லாம் அப்ளை  செய்துவிட்டு, அலஹாபாதில் , அண்ணா வீட்டிற்கு போயிருந்தேன். அப்பாவிடமிருந்து தந்தி... "உடனே கிளம்பி வா... Q.M.C. யில் வேலை என்று. அண்ணா railways ல் இருந்ததால், உடனே டிக்கெட் வாங்கி, கல்கத்தாவில் , ஹௌரா எக்ஸ்பிரஸில் ஏற்றி விட்டார் .

 

மெட்றாஸ் வந்து சேர்ந்ததும், 22ம் தேதி காலேஜில் வேலைக்கு சேர்ந்தேன். பிறகு, மற்ற இடங்களிலும் வேலை கிடைத்தாலும், அம்மா, அப்பாக்கு, காலேஜ் தான் பிடித்தது. அப்பாக்கு டீச்சிங் பிடித்தது... அம்மாவுக்கு அது பெண்கள் காலேஜ் என்பது பிடித்தது !!!

 

நான் படித்த காலேஜிலேயே, நான் படித்த lecturers உடன் வேலை பார்க்க பயங்கர கூச்சம். எனக்கு ஒரு வருடம் ஜுனியர் ஆக இருந்த பெண்களெல்லாம் ரொம்ப friends . லன்ச் சாப்பிட அவர்களுடன் மரத்தடிக்கு போய் விடுவேன். !! சில நாட்களுக்கப்புறம், staff ரூம் பழகி விட்டது. வேலையை ரொம்ப என்ஜாய் பண்ணித்தான் செய்தேன். 1963 - 1973.

 

1974 ல் SK பூனாவிற்கு வேலைக்குப் போக , நானும் குழந்தைகளுடன், காலேஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு , பூனா போய் , 1980ல் திரும்பி மெட்றாஸ் வந்து, மூன்று குழந்தைகளும் முழு நேரம் ஸ்கூலுக்குப் போக , தபால் வழி மேலும் படித்து, ஸ்கூலில் டீச்சராக சேர்ந்தேன் - 1985, ஜூலை 8. 

மறுபடியும் நான் கற்பனை கூட செய்யாத வேலை. ஏனென்றால், "நான் ஸ்கூல் டீச்சிங் எல்லாம் போக மாட்டேன்" என்று சொல்லிக் கொண்டிருப்பேன். ஆனால் அதையும் மிகவும் விரும்பி செய்தேன்.

 

அங்கேயே பிரின்சிபால் ஆக வேலை பார்த்து, ஓய்வு பெற்று, 2001 லிருந்து, 2015 வரை கோச்சிங் சென்டர் .

 

ஆக 1963 லிருந்து, 2015 வரை (நடுவில் ஒரு 11 வருட பிரேக்குடன் ) டீச்சர்.

 

இப்போதும், டீச்சர்களை பார்க்கும்போது, டி.வி. யில் கிளாஸ் ரூம், டீச்சிங் என்று காண்பிக்கும் போது மறுபடியும் அதே உத்தியோகம் பார்க்க ஆசையாக இருக்கிறது.

 

 

 

Wednesday, August 12, 2020

VK and Garden........

 எனக்கும் கொஞ்சம் தோட்ட ஆசை உண்டுதான். தஞ்சையில் இருந்தபோது, அந்த டிபார்ட்மென்ட் அம்மாது. நானும் சிறுமி. எனக்கே என்னை தெரியவில்லை. !!!

சென்னை வந்து அதற்கு ஸ்கோப் இல்லை.
கல்யாணம் பண்ணி , நுங்கம்பாக்கம் தனி வீட்டிற்கு வந்தால், அங்கு பின்னால் பெரிய காலி இடம். ஆனால் அப்போதும் எனக்கு தோட்ட ஆசை எழவில்லை. வீட்டில் நல்ல பெயர் வாங்கவும் (!!!), காலேஜுக்கு வேலைக்குப் போகவும் தான் நேரம் சரியாக இருந்தது...

பூனா வந்து, முதலில் ஒரு இரண்டாவது மாடி குடி இருப்பில் இருந்து, பிறகு ஒரு பெரிய தனி வீட்டின் கீழ் பகுதியில் இருக்கும் வாய்ப்பு கிடைத்ததும், அங்கு வீட்டின் முன்னாடி நிறைய இடம் இருந்ததும் என் மனதில் நீறு பூத்த நெருப்பாக இருந்த தோட்ட ஆசை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது...

நானே கொத்தி, மண் போட்டு, சமன் படுத்தி , விதைகள் வாங்கிப் போட ஆரம்பித்தேன். எனக்கு அவ்வளவாக அதில் பரிச்சயம் இல்லை. இருந்தாலும் விடுவேனா?

ரொம்ப ஆர்வமாக, தக்காளி, கத்திரிக்காய் , வெண்டை எல்லாம் போட்டேன். அதெல்லாம் முளை விட்டு வளர வளர ஒரே சந்தோஷம்.... ஆனால், அய்யகோ.... எல்லாம் மினியேச்சர் காய்கள்... அதுவும் ஒன்றிரண்டு. அதற்கு செலவழித்ததற்கு, கிலோ நாலணாவுக்கு விற்ற வெண்டை, கத்திரிக்காய் எல்லாம் கடையில் வாங்கி இருக்கலாம்.

இப்போது, சோளம் .... அழகாக காய்த்தது. எல்லாம் ஒரு விறல் நீளம்... ஆசையே போய் விட்டது. மணி பிளான்ட் மட்டும் தொட்டியில் மிக நன்றாக வந்தது.
அப்புறம் cactus ல் இறங்கி விட்டேன். தொட்டிகளில் வித விதமான cactus . சுற்றி மலைய் ப் பாங்கான இடமாதலால் , நிறைய cactus கிடைக்கும்.. ஒத்த இன்டெரெஸ்ட் உள்ள சின்ன பச ங்களுடன் டீல் போட்டு, வித விதமான cactus exchange பண்ணி, வளர்த்தேன்.

ஆச்சு. அந்த தோட்டத்திடம் பிரியா விடை பெற்று, எல்லா தொட்டிகளையும் கொடுத்துவிட்டு, சென்னை வந்தோம்.

சென்னையில் அண்ணா நகரில் தனி வீடு. சுற்றி செடி போட இடம். விடுவேனா ... இங்கேயும் எல்லாம் மினியேச்சர் காய்கள் தான். அது என்ன ராசி ? கொய்யா , சீதா பழம் மரங்கள் இருந்தன.. அவைகளில் கூட பழங்கள் சிறியதுதான். கொய்யா நல்ல ருசி என்பது ஆறுதல்.

சைடில் மணி பிளான்ட் வைத்து, அது காடு போல் வளர்ந்து, அதில் குட்டி பாம்பு குடி இருப்பது தெரிய, வெட்டிப் போட்டோம்.

இப்போது, வீட்டின் பின் பக்கம் வாழை. எங்கப்பா, நான் பிறந்த வீட்டில் நிறைய வாழை மரம் வைத்திருந்ததை பற்றி, ஒரு போஸ்டில் எழுதி இருந்தேன். அந்த ஆசை என் உள் மனதில் இருந்தது போல.

நர்சரி யிலிருந்து வாழைக் கன்று வாங்கி நட்டேன். ஐயா .... அது பெரிய மரமாக வளர்ந்து, ஒரு குலை தள்ளியது. ரொம்ப கற்பனை செய்யாதீர்கள். அந்த தார் பழுத்ததும், நானும் என் பெரிய பையனும் ஒரு தார் பழங்களையும் சாப்பிட்டோம் என்று சொன்னால் அதன் சைஸை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பல வருடங்கள் ஓடி, பலப் பல அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து விட்டு, ஒரு வீட்டில், இரண்டாவது மாடியில் அதிஷ்ட வசமாக கொஞசம் திறந்த வெளி இருக்க, நிறைய தொட்டி... எல்லாம் அழகுக்குத்தான் . ஆனால் ரொம்ப ரசித்து செடி வளர்த்து, வீட்டிற்குள்ளும் வைத்து, அழகு பார்த்து , அவைகளை அப்பப்போ, வெய்யிலில் தூக்கி வைத்து, இடுப்பில் வலி வந்து .... அவஸ்தை. ஒரு மணி பிளான்ட் , ரொம்ப நன்றாக, அடர்த்தியாக வர, அழகு பார்த்து மகிழ்ந்தேன். ஆனால், அதன் உள்ளே... எண்ணிலடங்கா எலிக் குஞ்சுகள். அருவருப்புடன் வெட்டிப் போட்டோம்.

கடைசியாக மைலாப்பூரில் கீழ் வீடு. எனக்கு பயங்கர சந்தோஷம் . ஆனால், அந்த இடத்தில் மழை நீர் சேகரிப்புக்காக ஏற்பாடு. அதனால் வெறும் புல் தான் போட்டோம். லான் என்பது அதன் பெயர் அவ்வளவுதான். சகிக்கவில்லை.

வீட்டின் சைடில் நீளமாக இடம் இருக்க, மறுபடியும் வாழை. இப்போது தோட்டக் காரன் அட்வைஸ் . பூவன், மொந்தன் என்று 2,3 வித வாழைக் கன்று வாங்கி நட்டேன். கர்ணன் படத்தில் கிருஷ்ணர் , குந்தி இடம் "ஆனாலும் உனக்கு ஆசை அதிகம் அத்தை " என்று சொல்வது போல் நானும் ஆசையாக நட்டேன்... கன்றை நட்டேன்... அவ்வளவுதான்.. ஒரு வருடத்தில் வாழைக் குலை என்பது கற்பனையில் தான். அய்யகோ... வாழைக் கன்று , கன்றாகவே இருந்தது... ஒன்றிரண்டு இன்ச் வளர்ந்திருக்குமோ என்னவோ... தோட்டக் காரன், "நான்தான் அப்போதே சொன்னேனே" என்று குத்திக் காண்பித்தான்.

முன்னால் இருந்த கொஞ்சம் இடத்தில் சாயந்திரம் கொஞ்சம் வெய்யில் வரும். அங்கு தொட்டிகளில் பல வித செம்பருத்தி வைத்து, அவைகள் கொஞ்சம் பூத்தன என்பது ஆறுதல். இங்கேயும் மணி பிளான்ட் நன்றாக வந்தது. அது என்ன ராசியோ.

இனி அந்த தோட்டக் கவலையும் இல்லை... ஆசையும் இல்லை..


Sunday, August 9, 2020

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே......

 அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே......

1985 .... கிருஷ்ண ஜெயந்தி... அப்போது மூன்று குழந்தைகளும் என்னுடன். 17, 14, 10 வயதுகளில். பண்டிகைக்கு முதல் நாள் பக்ஷணம் ஆரம்பித்து விடுவேன்.

பக்ஷணத்திற்கு சாமான்கள் சேகரிக்கும்போதே 2 சினிமா வீடியோ வாடகைக்கு எடுத்தாகிவிடும். என்ன செய்வது... குழந்தைகளுக்கு சீடை உருட்டும் சிரமம் தெரியாமல் இருக்க லஞ்சம்.. !!!

உப்பு சீடைக்கு நான் சொல்லி இருக்கும் பக்குவப் படி மாவை கலந்து கொண்டு, ஹாலில் தாராளமாக இடம் பண்ணிக் கொண்டு, அடுப்பை இறக்கி கீழே வைத்துக் கொண்டு, வேணும் என்கிற உபகரணங்களை எல்லாம், தண்ணீர் முதற்கொண்டு , ரெடியாக எடுத்து வைத்துக் கொண்டு, வேஷ்டியை விரித்துப் போட்டுவிட்டு, உட்கார்ந்து விடுவேன். சுற்றிலும் குழந்தைகள்.

நான் மாவை கலந்து எடுத்துக் கொடுத்தால் , சின்ன சின்னதாக உருட்டிப் போடுவார்கள். டி.வி.யில் சினிமா ஓடும். அந்த வருடம் பார்த்த படம் "சிதம்பர ரகசியம்' - மனோரமா நடித்தது... படத்தைப் பற்றி ஒரே வரியில் - படு மோசம். இன்றுவரை அதை நினைத்து சிரிப்போம்.

சீடைக்குப் பிறகு, தட்டை, தேன்குழல் -
வெல்ல சீடை அவ்வளவாக நன்றாக வராது.

பண்டிகை அன்று, அப்பம், வடை, அவல் பாயசம், தயிர் தனியாக உரை குத்தி வைத்திருப்பேன். வெண்ணை - இவைகள் நெய்வேத்தியத்திற்கு.

சீடை எல்லாம் குழந்தைகள் டேஸ்ட் பண்ணி இருப்பார்கள்... என்னை பொறுத்தவரை அவர்கள் தான் கிருஷ்ணர்கள்.

கோலம், கால் பாதம் என் பெண் போட்டு விடுவாள். கீழே சுத்தம் செய்வதுதான் பெரிய வேலை.

1985 க்குப் பிறகு, என்ன ஆயிற்று - பெரியவன் IIT ஹாஸ்டலுக்கு போய் விட்டான்... கவனமாக, சீடை முடிந்துவிட்டதா என்று தெரிந்து கொண்டுதான் வருவான். அவனுக்கு பதில் SK - முணு முணுப்புடன்..

1995 ல். கடைசி பையன் அமெரிக்கா போய் விட, பெண் மட்டும் சிக்கினாள்....

1997ல் அவளும் கல்யாணம் ஆகிப் போக , நான் பண்டிகை பக்ஷணங்களை சுருக்கி விட்டேன். ஆனால், சென்னையிலேயே இருந்த பெண் வீட்டிற்குப் போய் உப்பு சீடை மட்டும் செய்து கொடுப்பேன். பிறகு, அதுவும் நின்று, கிராண்ட் ஸ்வீட்ஸ் தான். !!!!

இந்த வருடம்.... உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், அதிரசம், திரட்டுப் பால், .... எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வைத்து , ஒரு பாக்கெட் .

மறக்க முடியாத நினைவுகள்.

Monday, August 3, 2020

ஆப்பம் சுட்ட கதை....

வசந்தா ஆப்பம் சுட்ட (கை சுட்டுண்ட) கதை....

ஆப்பம் பண்ண நீங்க எல்லாரும் என்ன போடுவீங்களோ தெரியாது. நான் expert இல்லை. எங்கம்மா எப்போவாவது செய்வதை பார்த்து, நானும் பின்னாளில் செய்தது.

அரிசி, கொஞ்சம் வெந்தயம், ஒரு கரண்டி கோதுமை - இவைகளை ஊறவைத்து, அரைத்து, தேங்காய் சேர்த்து நன்றாக சாஃட் டாக அரைத்து, உப்பு போட்டு வைத்து, மறுநாள் வார்ப்பேன் . இலுப்பச் சட்டியிலேயோ, தோசை கல்லிலேயோ ஊற்றி , மூடி வைத்து, ஒரு பக்கம் மட்டும் வேக வைத்து ....

இதுவல்ல விஷயம்....

ஒரு நாள் என் பெரிய அக்காவிடம் ஆப்பம் பற்றி பேசும் போது, அவள் சொன்னாள் , "ஆப்பச் சட்டி என்று விற்கிறது, மூடியுடன்; அதை வாங்கி, ஆப்ப மாவை நீர்க்க கரைத்து, ஆப்பச் சட்டியின் நடுவில் ஒரு கரண்டி விட்டு, இரண்டு பக்கமும் அதன் காதை பிடித்துக் கொண்டு, ஒரு சுழட்டு சுழற்றினால் ஆப்பம் பறந்து, விரிந்து, ஓரம் மெல்லிதாகவும், நடுவில் சாஃப் டாகவும் வரும் " என்று விளக்கிச் சொன்னாள் .

உடனே கடைக்குப் போய் ஆப்பச் சட்டி வாங்கி வந்தாச்சு. ஆப்பத்துக்கும் அரச்சாச்சு.

ராத்திரியெல்லாம் தூக்கமில்லாமல், ஆப்பம் பற்றியே நினைவு...

காலை டிஃபனுக்கு ஆப்பம் என்று பெருமையாக announcement விட்டு, சாமியை வேண்டிக் கொண்டு , அக்கா சொற்படி, கை யெல்லாம் நடுங்க , ஒரு கரண்டி மாவை சூடான ஆப்பச் சட்டியில் , நடுவில், விட்டு, அவசரமாக, இரண்டு பக்கமும் பிடித்து, ஸ்டைலாக சுற்றினால், கரண்டி கீழே விழ, தோசைத் திருப்பி தெறித்து விழ, என் கையில் இரண்டு, மூன்று இடத்தில் சூடு பட, மாவு அழகாக நடுவில் ..... பறக்கவுமில்லை- விரியவும் இல்லை.

சரி... முதலாவதுதான் சரியாக வரவில்லை... எதற்கும் பயிற்சி வேண்டும் என்று, அந்த மாவை சுரண்டி எறிந்துவிட்டு, மறுபடியும் சுற்றினால், வேறு இடங்களில் கையில் சூடு.

இது நமக்காகாது என்று, தோசைக் கல்லை போட்டு, என் பிரகாரம்  பண்ணி, மூடி, வேக வைத்து, ஒப்பேற்றினேன் .

அக்காவுக்கு போன் செய்து விட்டு, இன்னொரு அக்காவிடம் என் அனுபவத்தை சொல்லி, அவளும் அவள் அனுபவத்தை ஷேர் பண்ண , ஒரே சிரிப்பு... பல நாள் சிரித்ததுமன்றி , இன்றளவும் சிரித்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த ஆப்பச்  சட்டி முதலில் பரணுக்குப் போயிற்று; பிறகு யாருக்கோ...

இங்கு, நல்ல ஆப்பமும், ஸ்ட்யூவும், தேங்காய் பாலும் தருகிறார்கள். நன்றாக ருசித்து சாப்பிடுகிறேன். அதெல்லாம் கரெக்ட்டாக பண்ணி விடுவேன்.



Friday, July 31, 2020

சஞ்சுவுக்கு ஒரு பகிரங்க கடிதம்.......

(சஞ்சுவுக்கு ஒரு பகிரங்க கடிதம். )

சஞ்சு,
என் அருமை பேத்தியே...
உனக்கு தமிழ் படிக்கத் தெரியாது. ஆனாலும் நான் தமிழில்தான் எழுதுவேன். அப்போதுதான் ஆத்மார்த்தமாக இருக்கும்.
உன் 21ம் பிறந்தநாளை நீ கொண்டாடும் நேரம், உன்னை பற்றிய ஞாபகங்கள் மனதில் எத்தனை, எத்தனை.
நீ பிறக்கும்போது நான் ஸ்கூலில் வேலையில் இருந்தேன். உன் அம்மா என்னுடன் வந்து இருந்து, வேலைக்கும் போய் வந்தாள் . ஜூலை 30 அன்று கூட உன் அம்மா வேலையிலிருந்து சாயங்காலம் 7 மணிக்கு வந்தாள் . ஒரு வாரமாகவே, உன் வரவை எதிர்பார்த்து, ஒரு கூடையும், பையும் தயாராக... அதற்கு நானும் உன் அம்மாவும் எவ்வளவு ஷாப்பிங்.!! உனக்கு உடனே தேவை என்று தோன்றியதெல்லாம் வாங்கி சேர்த்தோம்.
ஜூலை 31 காலை 3 மணிக்கு, உன் அம்மா புவனாவுக்கு உடலில் வித்தியாசம் தெரிய, உன் தாத்தா, குற்றாலத்திற்கு பிக்னிக் போயிருக்க, உன் அப்பாவுக்கு போன் செய்து, வரவழைத்து, புவனாவை இசபெல் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தேன்...அந்த நேரம் எவ்வளவு anxiety . டாக்டர் காலை வந்து சேர்ந்து , சில நிமிடங்களிலேயே நீ பிறந்தாய். பெண் குழந்தை என்று நர்ஸ் கொண்டு காண்பித்தபோது, நான் அடைந்த சந்தோஷம் , இங்கு எழுதுவதற்கு அப்பாற்பட்டது.
அன்று சனிக்கிழமை. ஸ்கூலுக்கு லீவ் சொல்லிவிட்டேன். ஆனால் இப்போது நினைத்தாலும் நான் வருத்தப் படும் விஷயம் ஒன்று உண்டு. ஞாயிறு அன்று தாத்தா குற்றாலத்திலிருந்து வந்ததும்தான் விஷயம் அவருக்கு தெரியும் !! அப்போதெல்லாம் ஏது செல் போன். 3ம் நாள் திங்கள் கிழமை காலை புவனாவுக்கு டிஸ்சார்ஜ். நான் காலை சீக்கிரம் எழுந்து, சமையல், டிபன் செய்து, உன் அம்மாவுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, ஸ்கூல் போய் விட்டேன். ஏன் ஒரு மாதம் லீவ் எடுத்து வீட்டில் இருந்து உங்கள் இருவரையும் கவனிக்கவில்லை ? நான் செய்தது தப்புதான். மன்னித்து விடு....
ஞாபகங்கள் மிக அதிகம். நீண்ட கடிதம்... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு தொடர்கிறேன்.

சஞ்சு.......
தினமும் காலை உங்கள் இருவருக்கும் தேவையானதை எல்லாம் செய்து வைத்துவிட்டு, வென்னீர் பிளாஸ்க்கில் போட்டு வைத்து, ஹார்லிக்ஸ் , அதை கரைக்க டம்ளர், உனக்கு தேவையான துணிகள் எல்லாம் அம்மா படுக்கைக்கு அருகில் வைத்து விட்டு, நான் ஸ்கூலுக்கு போய் விடுவேன். உங்கம்மாவுக்கு கூப்பிட்ட குரலுக்கு உதவ ஒரு சின்ன பெண்ணை அமர்த்தியிருந்தேன்.
சரியாக 12 மணிக்கு அம்மா கெய்சர் போட்டு வைப்பாள். நான் ஸ்கூலிலிருந்து ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு வீட்டிற்கு வருவேன். ஆட்டோ வாசலில் வெயிட்டிங் . நான் மேலே வந்து, உன்னை காலில் போட்டு குளிப்பாட்டி விட்டு, உங்கம்மா கையில் கொடுத்து விட்டு, அதே ஆட்டோவில் மறுபடியும் ஸ்கூல். மாலை 4 மணிக்கு வந்ததும் புவனாவுக்கு காபி கொடுத்துவிட்டு, உன்னை எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவேன். யார் கையிலும் தரமாட்டேன்.... உங்கம்மா கையில் கூட.
உன்னை மடியில் போட்டுக் கொண்டு , எனக்கு தெரிந்த பாட்டெல்லாம் பாடி, இங்கிலிஷ் ரைம்ஸ் எல்லாம் பாடி, ஒரு இரண்டு மணி நேரமாவது உன்னை கொஞ்சி விட்டுத் தான் எழுந்திருப்பேன்.
பதினோராம் நாள் உனக்கு குளிப்பாட்டி, புது ட்ரெஸ் போட்டு, புண்ணியாஜனம் செய்து, மாலை தொட்டில் போட்டு... என் ஸ்கூலிலிருந்து டீச்சரெல்லாம் வந்தார்கள். உங்கம்மா பஞ்சாங்கம் பார்த்து, முதல் எழுத்து "ச" வாக இருக்க வேண்டும் என்று பெயர் தேடி, நானும் என் பங்குக்கு "சஞ்சனா", "சரித்ரா" , "பவித்ரா" என்றெல்லாம் சொல்லி, சஞ்சனா ஓரளவுக்கு பிடிக்க, செக் அப்புக்கு ஹாஸ்பிடல் போனால், அங்கே வந்திருந்த குழந்தைகளில், இன்னும் இரண்டு சஞ்சனா !!! அதனால் நீ சஞ்சுக்தா வானாய்.
சஞ்சு... இன்னும் நீ மூன்று மாதம் கூட தாண்ட வில்லை. இன்னும் நிறைய உன்னுடன் பேசவேண்டும்.

சஞ்சு -

சாயந்திரம் உங்கப்பா உன்னை பார்க்க வந்தால், நான் உன்னை தரமாட்டேன் - அதனால் உங்கம்மாவுடன் சண்டை கூட வந்திருக்கிறது...

இரவில், நடுவில் அடிக்கடி நீ முழித்துக் கொள்ள, புவனாவின் தூக்கம் கெட, நான் ராத்திரி உன்னை என் பக்கத்தில் போட்டுக் கொண்டு, நீ முழித்து அழும்போதெல்லாம் சமாளித்து பார்த்துக் கொள்வேன்.
நான் நீலாம்பரி ராகத்தில் தாலாட்டு பாட , அதன் வரிகளை அம்மா எழுதிக் கொண்டாள்  - உன்னை அவா வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போனப்புறம் பாடுவதற்கு....

அந்த வரிகள்...

"ஆராரோ... ஆரிரரோ....
ஆறடுச்சு நீ அழறே..
..
உன்னை அடிச்சாரை சொல்லி அழு...
ஆக்கினைகள் செய்து வைப்போம் ...
உன்னை தொட்டாரை சொல்லி அழு 
தோள் விலங்கு பூட்டி வைப்போம் ...

என் கண்ணே அழ வேண்டாம் 
என் கண்மணியை யாரடிச்சா...

உன்னை பாட்டி அடிச்சாளோ ..
பால் போட்டும் சங்காலே...
உன்னை அத்தை அடிச்சாளோ 
அரவணைக்கும் கையாலே...
உன்னை மாமன் அடிச்சானோ ..
மல்லிகைப்பூ செண்டாலே...
உன்னை சித்தி அடிச்சாளோ சின்ன சின்ன கையாலே....

சித்தடியே சித்தடியே 
இத்தனை நாள் இங்கிருந்தே...
ஜோதி மறஞ்சிருந்தேன் 
தோழன் வர காத்திருந்தேன் ..
நான் மாசி மறஞ்சிருந்தேன் ..
மாந்தோப்புக் குள்ளிருந்தேன்..
என் கண்ணே அழ வேண்டாம்..
கண்மணியை யாரடிச்சா 

ஆறிரண்டும் காவேரி ... 
அது நடுவே ஸ்ரீரங்கம்...
ஸ்ரீரங்கம் ஆடி... 
திருப்பாற் கடலாடி...
என் கண்ணே அழ வேண்டாம்..
கண்மணியை யாரடிச்சா 


இதை தவிர....
"பாப்பா பாப்பா கதை கேளு..." என்ற காக்கா , நரி கதை பாட்டு...
"அழாதே பாப்பா அழாதே...."
"சின்ன பாப்பா எந்தன் செல்ல பாப்பா...

இன்ன பிற பாட்டுக்கள்....

இப்போது நினைத்தாலும்.. அந்த ஹால்... அங்கு ஒரு ஊஞ்சல்... அந்த ஊஞ்சலை கழட்டி விட்டுத்தான் உனக்கு தொட்டில்... அதன் அருகில் உட்கார்ந்து உன்னை மடியில் வைத்து நான் பாட்டு... நினைத்தாலே இனிக்கும். 

இன்னும் சொல்கிறேன்...

சஞ்சு, 

உனக்கு மூன்று மாதம் ஆனதும் உன்னை அம்மாவுடன் கொண்டு விட்டது R.A.Puram, VII Street வீட்டில். அங்கு முதன் முதல் உனக்கு ஆப்பிள் வேகா வைத்து ஊட்டியது நன்றாக ஞாபகம் இருக்கிறது. இதை தவிர கேழ்வரகை அலசி, முளை கட்டி, காயவைத்து, அரைத்து கொடுத்தேன். அதில் அம்மா உனக்கு கஞ்சியோ, கூழோ செய்து ஊட்டினாள். நீ கொழு கொழு என்று வளர்ந்தாய் .  

பிறகு கோட்டூர் புறம் வீடு. அங்குதான் உன் ஆண்டு நிறைவு கொண்டாடப் பட்டது.

R.A.Puram , II Main Raod லிருந்து , கோட்டூர்புரம் கிட்டக்கத்தான். ஸ்கூலிலிருந்து வந்ததும் நடந்தே அந்த வீட்டிற்கு நான் வருவேன். சாயந்திரம் பூரா உன்னை வைத்துக் கொண்டிருந்து விட்டு, pram  ல்  வைத்து தள்ளி, வேடிக்கை காட்டி விட்டு, திரும்புவேன்.

உன் ஆகாரம் பற்றி சொல்லையே ஆகவேண்டும். 

என்னோட அப்பா, அம்மா எனக்கும் சரி, என் குழந்தைகளுக்கும் சரி பழைய நாளத்திய வழக்கப்படி  படி, உரை மருந்து, கோரோஜனை , விளக்கெண்ணெய் , அடிக்கடி கிரைப் வாட்டர் இதெல்லாம் கொடுத்ததே இல்லை. அதையே நானும் பின் பற்றி, உனக்கு இது ஒன்றும் நான் கொடுத்து படுத்தவில்லை. உங்கம்மாவுக்கும், பத்திய சாப்பாடு எல்லாம் கிடையாது. முதல் நாளிலிருந்து சாதாரண சாப்பாடுதான். - ஆனால் அதிகம் காரம், மசாலா இல்லாமல். 

உங்கம்மா குழந்தையாய் இருந்த போது, கொடுத்த டயட், மற்ற விவரங்கள் ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்தேன். அதையே பார்த்து, உனக்கும் டயட் கொஞ்சம் கொஞ்சமாக , புதிது புதிதாக, கொடுத்தோம். உங்கம்மா சமர்த்தாக சொன்ன பேச்சு கேட்டாள் . நீயும் நன்றாக வளர்ந்தாய் .

உனக்கு தலை நின்று, 5 மாதம் ஆனதும், நன்றாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாய்.  கோட்டூர்புரம் வீட்டு வாசலில் பால் பூத் ஒன்று இருக்கும். உன்னை தூக்கிக் கொண்டு, அங்கே நின்று, அங்கு இருக்கும் மாடு ஒன்றை தினமும் காண்பிக்க வேண்டும். "அம்மோவ்" என்று கத்தி வேறு உன்னை entertain பண்ண வேண்டும். அதை தவிர, நாய், பூனை , காக்கா இவைகளை தினமும்  காண்பிக்க வேண்டும்.    

இந்த interest என்னவோ உனக்கு இன்னும் தொடர்கிறது.

இப்படியே நீ அழகாக , chubby யாக வளர்கையில் , உனக்கு உங்கம்மா பருப்பு சாதம் , தயிர் சாதம் ஊட்ட ஆரம்பித்தாள் . 

நீ அடிக்கடி காயத்ரி அபார்ட்மென்டுக்கு வருவாய். என்னுடன் பொழுதை கழிப்பாய் . வீட்டிற்கு போக உன்னை காரில் ஏற்றியதும், ஒரு பெரிய  அழுகை - கொஞ்சம் பேசவும் வந்து , பாட்டி சொல்ல வந்ததும்... காரிலிருந்து, கையை நீட்டி, "பாட்டி......" என்று சொல்லி அழுவாய் - என்னிடம் வர வேண்டும் என்று. உங்காத்துக்குப் போய் கூட உன் அழுகை தொடரும் என்று அம்மா சொல்வாள். சில நாட்கள், உன் அழுகை பொறுக்காமல், உன்னை கொண்டு வந்து விட்டிருக்கிறாள்...

இந்த அழுகை நீ வளர வளரவும் தொடர்ந்தது. உனக்கு சுமார் மூன்றரை வயது இருக்கும்போது, நானும் தாத்தாவும் காசிக்கு கிளம்பினோம். நீ அம்மாவுடன் ஸ்டேஷனுக்கு வந்தாய். ரயிலில் ஏறிக்  கொண்டு, "நானும் வருவேன்" என்று ஒரே அழுகை. என்னென்னவோ சொல்லிப் பார்த்தோம். "உனக்கு ட்ரெஸ் எடுத்துக் கொள்ள வில்லை" என்று சொன்னால், அம்மாவை "நீ போய் எடுத்துண்டு வா" என்கிறாய் . அதற்கு நேரமில்லை என்று சொன்னால் "ஊருக்குப் போய் புதுசு வாங்கி கொள்ளலாம் " என்கிறாய். அந்த ஸீன் இன்னும் என் கண் முன்னால் .
இதே போல் - உனக்கு சுமார் 8 வயதான பொது, நானும் தாத்தாவும் அண்டார்டிகா ட்ரிப் போக கிளம்பினோம். முதல் நாள் மாலை , நாங்கள் கிளம்பப் போகிறோம் என்று புரிந்ததும், நீ ஒரே அழுகை. "It is not fair" என்று சொல்லி நீ அழுதது என் நினைவில் பசுமையாக இருக்கிறது. 

மூன்றாம் முறை நீ இப்படி அழுதது.... நாங்கள் வேளாசேரியில் 7 வது மாடியில் (நீங்கள் 8 வது ) 3 வருடங்கள் குடி இருந்து விட்டு, ஆள்வார்பேட்டையில் வீடு பார்த்து ஷிஃப்ட் பண்ண, ஷிஃப்ட்டிங் க்கு முதல் நாள் மாலை ஓயாது அழுகை. அன்று இரவு என்னுடன் தங்கி, நீ அழ, நான் அழ... ஒரே ரகளை. அப்போது உனக்கு  9 வயது.  

மறுபடியும் நான் உனக்கு சாதம் ஊட்டிய கதைக்கு வருவோம்.....
அதாவது உன்னுடன் நாய், பூனை எல்லாம் சாப்பிட்டது. 

உனக்கு 9,10 மாதங்கள் இருக்கையில், பருப்பு சாதம் அல்லது  ரசம் சாதம், தயிர் சாதம் ஊட்ட வேண்டும். ஆர்.ஏ.புரத்தில்  இரண்டாவது மாடியில் வீடு. உன்ன இடுப்பில் தூக்கிக் கொண்டு, சாதத்தை ஒரு கையில் எடுத்துக் கொண்டு, இரண்டு மாடி இறங்கி கீழே போய் , முதலில் நாய் தேட வேண்டும். நாய்க்கு ஒரு வாய், உனக்கு ஒரு வாய்.  அப்படி ஊட்டினால்தான் சாப்பிடுவதை. அதை முடித்துவிட்டு, மறுபடியும் மாடி ஏறி, தயிர் சாதம் , கொஞ்சம் அதிகமாகவே, பூனைக்கும் சேர்த்து எடுத்துக் கொண்டு மறுபடியும் கீழே. பழக்கத்தில் பூனை வரும். அதற்கு ஒரு வாய், உனக்கு ஒரு வாய். பூனை வரவில்லை என்றால் தொலைந்தது. 

சாயந்திரம் ஆனால், தாத்தா உன்னை தூக்கிக் கொண்டு கேட் அருகில் நிற்பார். அந்த தெருவில் போகும் பலர் உன்னை பார்த்து கொஞ்சிவிட்டு போவார்கள். அதில் தாத்தாக்கு மஹா பெருமை. 

நீ  நடக்க ஆரம்பிக்குமுன் நன்றாக தவழுகிற ஸ்டேஜில், ஒரு நாள் கீழே, வாசலில், யாரோ சண்டை பிடிக்கும் சத்தம் கேட்டது. ஹாலில் எங்கேயோ இருந்த நீ, அவசர அவசரமாக தவழ்ந்து, வாசல் கதவை தாண்டி ஓடினாய், வேடிக்கை பார்க்க. இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும். 

2000 வருடம், மணிரத்தினத்தின் "அலை பாயுதே" சினிமா வந்தது. அதில் "காதல்  சடுகுடு குடு " என்று ஒரு பாட்டு. உனக்கு 1 1/2 வயது இருக்கும். உன்னை தூக்கிக் கொண்டு நான் டான்ஸ் ஆட வேண்டும் என்று படுத்துவாய் . அலுக்காமல் நானும் உன்னை தூக்கிக்கொண்டு ஆடுவேன். அப்போது அந்த பாட்டை பாடவேண்டும். நான் ஆட்டத்தை நிறுத்தி உன்னை இறங்கிவிட்டால், என்னை இழுத்து, உன் மழலையில் "காதல் சடுகுடு..." என்று சொல்வாய். . உடனே நான் தூக்கிக்கொண்டு ஆடுவேன். 

இப்படியே அழகாக வளர்ந்து, உனக்கு இரண்டரை வயதான போது , R.A.Puram, I Main Road ல்  Bambino ஸ்கூலில் சேர்த்தாள் உங்கம்மா. 


சஞ்சு....
நீ பிறந்த பிறகு, உங்கம்மாவுக்கு 3 மாதங்கள் maternity லீவ் கிடைத்தது... அதற்குப்பிறகு சில மாதங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வசதி. ஆனால் அது ரொம்ப நாள் நீடிக்க வில்லை. ஆபீஸுக்கு வர சொல்லிவிட்டார்கள். ஆபீஸ் அண்ணா நகரில். காலை வீட்டு வேலைகளை முடித்து, உனக்கு தேவையானதை செய்த்து உன்னை கொண்டு வந்து என்னிடம் விட்டு விட்டு போவாள். 2001 மே மாதத்துடன் நான் retire ஆகிவிட்டதால், எனக்கு உன்னை பார்த்துக் கொள்வது சுலபமாயிற்று. நாள் முழுதும் என்னோடிருப்பாய்.
தாத்தாவும் நானும், அடுத்த தெருவில் இருந்த ஸ்கூலில் உன்னை கொண்டு விடுவோம். ஸ்கூல் 2 மணி நேரம் தான். முடிந்ததும், நாங்கள் இருவரும் ஸ்கூலிலிருந்து உன்னை அழைத்துக் கொண்டு வருகையில், வழியில் சூர்யா கறிகாய் கடை இருந்தது. இப்போதும் இருக்கிறது. அங்கே ஒரு சின்ன இடத்தில் மணல் கொட்டி, ஊஞ்சல், ஸீஸா , சறுக்கு மரம் எல்லாம், குழந்தைகள் விளையாட போட்டிருக்கும். அங்கே கொஞ்ச நேரம் உன்னை விளையாட விட்டு, திரும்பும்போது உனக்கு கட்டாயம் அந்த கடையில ஜெல்லி கலர் கலராக, இரண்டாவது வாங்கித்தர வேண்டும்.

சின்ன வயதில் உனக்கு கதை கேட்க ரொம்ப பிடிக்கும். பக்கத்தில் படுத்துக்க கொண்டு, நிறைய கதைகள் சொல்வேன். குட்டி, குட்டி சாமி கதைகள், ராமாயணம் என்று நிறைய கதைகள். "பாட்டி, ஏன் எல்லா கதையையும் , 'ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தானாம்' என்றே ஆரம்பிக்கிறாய். ஒரே ஒரு ஊர்தான் இருக்குமா? " என்று கேட்பாய். வீட்டில் இருக்கும் magazine களிலிருந்து ஜோக்ஸ் சொல்ல வேண்டும். என்ன புரிந்ததோ !!! உனக்காக ஷக்தி விகடன் வாங்கி அதிலிருந்து கதைகள், "கல கல , கடைசி பக்கம்" எல்லாம் சொல்ல வேண்டும். நீயே பக்கங்களை புரட்டி, படக் கதை கேட்பாய். படம் இல்லாத கதைகள் உனக்கு பிடிக்காது.
ராமாயணம் கதை உன் மனதில் நன்கு பதிந்து விட்டது. சொன் னதையே தினமும் சொல்ல வேண்டும்.. கொஞ்சம் மாற்றினால், நீயே சரியாக எடுத்து குடுப்பாய் . !
கதை கேட்டு, கேட்டு, உனக்கு ராவணன் மேல் கோபம்.
நாங்கள் எல்லோரும் ராமேஸ்வரம் புறப்பட்டோம்... உனக்கு சுமார் மூன்று வயதிருக்கும்.
நீ முதலில், உன் விளையாட்டு வில் , அம்பு எடுத்து வைத்துக்கொண்டாய் .. ராவணனை அடிக்கவாம் !!
ஒரு பெல்ட் போட்டு, பின்னால் அம்பு சொருக ஒரு ஏற்பாடு பண்ணி, அதில் நாலு அம்புகளை சொருகி, ரயிலில் எடுத்து கீழே வைக்க மாட்டேன் என்று பிடிவாதம்...
ரயிலில் எல்லோரும் சிரிக்க, நீ "நான் ராவணனை அடிக்க போறேன்.. சிரிக்காதீங்கோ" என்று விளக்கம் வேறு.
ராமேஸ்வரம் போனதிலிருந்து, தனுஷ்கோடி போக வேண்டும் என்று ஒரே படுத்தல்..
தனுஷ்கோடி ஊர் வெள்ளத்தில் அழிந்து விட்டது தெரிந்திருக்கும் உங்களுக்கெல்லாம்.
தனுஷ் கோடி போனோம்...
"பாட்டி இலங்கை எந்த பக்கம் இருக்கு" ன்னு கேட்டாய் ..நானும் கடலை தாண்டி, அங்கே என்று கை காட்டினேன்...
உன் வில் அம்புகளை எடுத்து.. 3, 4 தரம்.விஷ்... விஷ்.என்று சத்தம் போட்டு, அடித்து திருப்தியாகி விட்டாய் ...
இதன் கிளைமாக்ஸ் ... ராமர் கோவிலுக்கு போனதும்..!
"ராமா, நான் ராவணனை வில்லால அடிச்சுட்டேன்; (கொல்லும் வார்த்தையை நான் சொல்லித்தரவில்லை ) அவன் பயந்துட்டான்; இனிமே சீதையை தூக்கிண்டு போக மாட்டான்" ன்னு ராமரோட பேச்சு வேறே

சஞ்சு,
ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்.
கோட்டூர்புரத்தில், ஒரு தாத்தா , ஒரு பூனை வளர்த்தார். நான் கோட்டூர் வரும்போதெல்லாம் உன்னை வாக் அழைச்சுண்டு போக்கரச்சே கண்டிப்பாக, முதலில் அந்த தாத்தா ஆத்துக்கு கூட்டிண்டு போகணும். அந்த பூனையை காமிக்கணும்.
கோட்டூர்புரத்தில் Kids Central என்ற ஸ்கூலுக்கு மாறினாய்.
உனக்கு சுமார் 3 வயதாகரச்சே , எப்படி கற்றுக் கொண்டாய் என்று தெரியவில்லை. ஆனால், தூரத்தில் ஒரு கார் வரும்போதே, அது என்ன மாடல் கார் என்று சொல்லி விடுவாய். amazing talent .
உங்கம்மாவுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கறச்சே, என்ன குழந்தை என்று தெரியாமல் இருக்கறச்சேயே, நீ, தம்பிப் பாப்பா என்று தீர்மானித்து, அதற்கு ரிஷி என்னும் பேரையும் வைத்துவிட்டாய். அம்மா ஹாஸ்பிடலில் உள்ளே இருக்கையில் , நர்ஸிடம் "ரிஷி பிறந்தாச்சா " என்று நீ கேட்க, அவர்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு,
ஒரு முறை கிருஷ்ண ஜயந்தி அன்று, உன் அம்மா பல தினுசு பக்ஷணங்கள் செய்தாள் . ஆனால் நீ "ஏன் கிருஷ்ணர் பாப்பாவுக்கு birth day கேக் வாங்கவில்லை" என்று கேட்டாய். உடனே ஒரு கேக் வாங்கி, டேபிளில் வைத்து, நீ கட் செய்ய , கிருஷ்ணருக்கு ஹாப்பி பர்த்டே கொண்டாடினோம்.
உனக்கு விளையாட்டு கீ போர்ட் வாங்கிக் கொடுத்தோம். அதை நான் பிடுங்கி, உனக்கு ரைம்ஸ் எல்லாம் வாசித்துக் காமிப்பேன். ஆனால், நீ பிடுங்கிக் கொள்வாய். என்னோட கீ போர்டை , நீ படுத்திய பாட்டில், நான் அதை விற்றே விட்டேன் !!!!
அப்புறமாக வேளச்சேரி. அங்கு நவதிஷா என்னும் ஸ்கூல்.
இப்படியே நீயும் வளர்ந்து . குதிரை ஏற்றம் எல்லாம் கற்றுக் கொண்டாய். ஒவ்வொரு கிளாசிலும் நன்றாக படித்தாய் ,
18 வயதில் கார் ஒட்டக், கற்று லைசென்ஸ் வாங்கி, இப்போ ஜோராக ஒட்டுகிறாய்.
17 வயதில் 12ம் கிளாஸ் முடித்ததும், US ல் கலிஃபோர்னியா வில் காலேஜ் சேர்ந்து, ஒரு வருடம் படித்து, அங்கு பிடிக்காமல் திரும்பி வந்து, டெல்லி அஷோகா யுனிவர்சிட்டி ல் சேர்ந்து படிக்கிறாய்.
இப்போது, எனக்கும் தாத்தாவுக்கும் போன், கம்பியூட்டர் இவைகளுக்கு technical அசிஸ்டண்ட் நீதான். அதில் எங்களுக்கு மகா பெருமை.
சஞ்சு, இன்னும் எவ்வளவோ ஞாபகங்கள். உன்னோடு செலவழித்த ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியானவை. உனக்கு நீ குழந்தையாய் இருக்கும்போது நடந்தவைகள் நினைவுகளிலிருந்து அழிந்திருக்கலாம் - ஆனால் உணர்வுகளிலிருந்து அழிந்திருக்காது.
என்றைக்கும் நான் உன் செல்ல பாட்டிதான்... நீ என் செல்ல பேத்திதான்.
நீ இன்னும் நிறைய படித்து, வேலைக்கெல்லாம் போய் எங்களை எல்லாம் பெருமை படுத்துவாய் .
இன்னும் உன் வாழ்க்கையில் அநேக நல்லதுகள்
நடக்க வேண்டும். அதற்கு என் மனம் நிறைந்த ஆசிகள்.
நன்றாக இரு; சந்தோஷமாக இரு; அப்பா, அம்மாவை பெருமை படுத்து.
இப்படிக்கு,
உன் பாசமுள்ள பாட்டி.





Friday, July 24, 2020

நானும் பூனாவும்.......

நானும் பூனாவும்.......
1974 - எங்காத்துக்காரருக்கு பூனாவில் டெல்கோவில் வேலை கிடைக்க , பிப்ரவரி மாதம் புறப்பட்டு பூனா போய் விட்டார். என் பெரிய பையன் பெரி.......ய கிளாஸ் .... UKG ... அவனுக்கு எக்ஸாம் முடிய வேண்டாமா ? அதோடு பூனாவில் வீடு கிடைக்க வேண்டும்..
ஏப்ரல் 14 அவர் வந்து, என்னையும் , குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போனார்... முதல் தடவையாக ரயிலில் முதல் வகுப்பு பயணம் !!! எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.
ரயிலை விட்டு இறங்கி, பூனா ஸ்டேஷனில் கால் வைக்கிறேன், அந்தோ, என் செருப்பு அறுந்தது...வெறும் காலுடன் நடந்து போனேன்... நமக்குத்தான் அது பழக்கமாச்சே ... 18 வயது வரை !!! இருந்தாலும் கொஞ்சம் ஷேமாக இருந்தது.
பூனாவில் முதலில் வீடு கிடைக்காததால் , ஒரு நல்ல காலேஜ் friend சுமார் 15 நாட்கள், எங்களை அவள் வீட்டில் தங்க வைத்து, ஆதரித்தாள் .
வீடு கிடைத்து, ஷிஃப்ட் பண்ணினோம். முதல் முறையாக தனிக் குடித்தனம் வேறு... (ஒரு வருடம் தான் ) . ஒரே excitement .
பூனாவில் எல்லோரும் ஸ்ட்ரிக்ட்டாக மாராத்தித்தான். ஹிந்தி சினிமாக்கள் பார்த்து, எனக்கு கொஞ்சம் ஓட்டை ஹிந்தி தெரியும். அவ்வளவுதான். வீட்டு வேலை செய்பவளிடம் கொஞ்ச நாள் ஜாடைதான்.
அதெல்லாம் போக , முதல் முறையாக கறிகாய் வாங்க கடைக்குப் போனேன். காயை கையால் காண்பித்து (பெயர் தெரியாத கொடுமை ) - விலை கேட்டு, புரிந்தாற்போல் "ஆதா கிலோ " என்று, (ஏனென்றால் அது ஒன்று தான் தெரியும். ஒன்றிரண்டு சுமார் 20 வரை ) , சில கறிகாய்கள் வாங்கி கொண்டு, மொத்தம் எவ்வளவு என்று கேட்டேன் - ஜாடையில்தான்... கடைக்காரன், "அடைரூப்யா " என்றான். அதாவது 2 1/2 ரூ. எனக்கு புரியாததால், அதை காட்டிக் கொள்ள இஷ்டமில்லாமல், "பாஞ்ச் " என்றேன்... சாமர்த்தியமாக bargain பண்ணுவதாக நினைத்துக் கொண்டு... பரவா இல்லை... கடைக்கு காரன் நல்லவன்தான்... என் கையில் இருந்த 5 ரூபாயை எடுத்துக் கொண்டு, பாக்கி 2 1/2 ரூ. திருப்பிக் கொடுத்தான் !!!
அப்போதெல்லாம் பூனாவில் காய்கறிகள் அவ்வளவு மலிவு. மொத்த மார்கெட் போனால் , 4 அணாவுக்கு ஒரு கிலோ கிடைக்கும். கறிகாய்க்கு என் மாத பட்ஜெட் 15 ரூபாய் தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ரூபாய்க்கு 8 வாழைப்பழம் ... பச்சை வாழை - பெரிது பெரிதாக. இன்னும் சாமான் விலையெல்லாம் சொன்னால் மயங்கி விடுவீர்கள்
குழந்தைகளை நல்ல ஸ்கூலில் சேர்த்தோம்.
இவருக்கு வியாழக் கிழமை வார விடுமுறை. குழந்தைகளுக்கு ஞாயிறு . ஜாலி , ஜாலி. வியாழக்கிழமை, ஷாப்பிங்தான் (என்ன- கறிகாய் , மளிகை ஷாப்பிங் ) , சினிமாதான். குழந்தைகள் வருவதற்குள் வீட்டிற்கு வந்து விடலாம்.
எவ்வளவு ஹிந்தி சினிமா? ஞாயிறுகளில் , எப்போதாவது காலை ஷோ தமிழ் வரும். friends ஸோடு , போய் வருவேன்.
அப்புறம் மராத்தி பேசியதென்ன... (வீட்டு வேலை செய்பவளுடன்தான் ) , கார் ஒட்டக் கற்று க் கொண்டு , rash driving என்று பேர் வாங்கியதென்ன.... நல்ல தமிழ் friends ...
6 வருடங்கள் பூனாவில் வாழ்ந்தது, திரும்பி சென்னை வரும் போது அழுது தள்ளியது... ஒரு புத்தகமே போடலாம் .

Thursday, July 23, 2020

பழைய நினைவுகள் !! தஞ்சாவூர் ...

பழைய நினைவுகள் !!
தஞ்சாவூர் ...
காலை 4 மணிக்கு ... 4 சகோதரிகள்... வாசலில் அப்பா போட்டுக்கொடுக்கும் ஒரு பல்பு விளக்கு 40 வாட்...
ஆளுக்கொரு கொட்டாங்கச்சி கோல மாவு ... ஒரே கோலம்... பெரிய கோலம்..
ஒற்றுமையாக இருக்கும்போது, கோலம் தவறில்லாமல், பெரியதாக, அழகாக, மகிழ்ச்சியாக உருவாகிறதே !!
அருகிலிருக்கும் கோவிலில் இருந்து திருப்பாவையும், திருவெம்பாவையும் ...
இப்படித்தானே 50 பாடல்களையும் கற்றோம் !!!
ஒரு சாரியில் வீடு... எதுத்த சாரியில்... கோட்டை சுவர்.. அதன் அப்பால் அகழி.. ராஜா காலத்தியது.. ... எதுத்த சாரியில் வீடு கிடையாது... கோலம் போட நிறைய இடம்...
கார் பஸ் என்று வாகன போக்குவரத்து கிடையாது... நடந்து செல்பவர்களும், கவனமாக, கோலத்தை மிதிக்காமல், நம் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து..
பெரிய கோலம் போட்டு, அதன் மேல் அங்கங்கே பரங்கி பூ வைத்து ..(ஒ, அந்த பரங்கிப்பூ வாடிக்கையாக கொடுக்கும் சிறிய பெண்ணின் முகம் கூட நினைவில் நிற்கிறது...!!)
கோலத்தை முடித்து... கொஞ்சம் தள்ளி நின்று, அதை முழுவதுமாக ரசித்து... 5 . 30 க்கு உள்ளே சென்று... அம்மா, அப்பாவை கூப்பிட்டு காமித்து.. அவர்களும் நம் மகிழ்ச்சியில் பங்கேற்று...
என்ன ஒரு சந்தோஷமான நிகழ்வுகள் ....
இன்னும் இரண்டு நாட்களில் மார்கழி பிறக்கிறது ...
சென்னை அடுக்கு மாடி குடியிருப்பில், பெரிய கோலமாவது, பரங்கி பூவாவது ...
பழைய நினைவுகளில் வாழ்கிறேன் !!!!

கண்ணாடி வளையல்கள்......

கண்ணாடி வளையல்கள் பார்க்கும்போது எனக்கு பழைய ஞாபகங்கள்.

நானும், என் 4 சிஸ்டர்ஸும் , வளையல் பைத்தியங்கள் . எல்லா பண்டிகைகளுக்கு - ஆவணி அவிட்டத்துக் கூட கை நிறைய கண்ணாடி வளையல்கள் போட்டுக் கொள்வோம். மேட்ச் எல்லாம் தெரியாது... கலர் கலராக போட வேண்டும். அவ்வளவுதான்.

இவ்வளவு ஏன்; ஆத்தில் திவசம்னா கூட, கை நிறைய வளையல் போட்டுக்கொண்ட பேக்குகள் .

தீபாவளிக்கு முதல் நாள் அய்யங்கடை தெரு ட்ரிப் கண்டிப்பாக உண்டு; என்ன - புது வளையல் வாங்கத்தான். பாவம் அம்மா- வளையலுக்கு மட்டும் காசு கண்டிப்பாக கொடுத்துவிடுவாள்... ஆளுக்கு 4 அணா .

வாசலில், வளையல்காரர் சத்தம் கேட்டுவிட்டால், அம்மாவுக்கு காபராத்தான். ஆனால், சந்தோஷமாக எல்லோருக்கும் வளையல் வாங்கித் தருவாள். ஸ்கூல் போகும்போது, கழட்டி விட வேண்டும்.

அதுவும், மருதாணி இட்டுக் கொண்ட மறுநாள், உள்ளங்கை, விரல்கள் சிவப்புக்கும், வளையலுக்கும் அவ்வளவு அழகு - நாங்களே ரசித்துக் கொண்டு மகிழ்வோம்.

இப்போது நினைத்தால் சிரிப்பாக வருகிறது.

சாதாரணமாக , வளைகாப்பு function க்கு போனால் , சாஸ்திரத்துக்கு எல்லோருக்கும் நாலு வளையல்கள் தருவார்கள். என் அத்யந்த சினேகிதி பெண்ணிற்கு வளைகாப்பு... "நமக்கு இல்லாத உரிமையா ?" என்று, கூச்ச நாச்சமில்லாமல் நிறைய எடுத்துக் கொண்டேன்.

இப்பவும் என்னிடம் நிறைய உண்டு. ஆனால் கொஞ்சம் கலர் புடவைக்கு பொருந்துகிறாற்போல் போட்டுக் கொள்வேன் . மயிலையை காலி பண்ணி, இங்கு வரும்போது, என் பெண் எடுத்துக் கொண்டது போக மற்றதெல்லாம் distribution .


Wednesday, July 22, 2020

அம்மாவும் தோட்டமும்.....

அம்மாவும் தோட்டமும்.....
தஞ்சாவூரில் , நான் பிறந்த வீட்டில், கொல்லை பக்கம் தோட்டம் போட இடம் உண்டு. அதில் அம்மா நிறைய வாழை மரம் வளர்த்திருந்தாள் . எவ்வளவு வாழை தார்..! நான் சுமார் 6 வயது வரைதான் அந்த வீட்டில் இருந்தேன். ஆனாலும், வாழைப் பழத்தை பழுக்க வைத்து, அம்மா குடுத்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. திடீரென்று வீட்டுக்காரன் அந்த வீட்டை காலி பண்ண சொல்ல, அப்பாக்கு ரொம்ப கோபம் வந்து, காலி பண்ணும் முன் அந்த மரங்களை எல்லாம் வெட்டிப் போட்டார். !!
அதற்குப் பிறகு, கீழலங்கத்தில் ஒரு தனி வீடு. வீட்டின் சைடில் தோட்டம் போட ஒரு பெரிய இடம். அதில் அம்மா, சில கறிகாய்கள் - வெண்டை, கத்திரிக்காய், பூசணி, பரங்கி, அவரை, புடலை பந்தல்கள் எல்லாம் போட்டிருந்தாள்..அம்மாக்கு தோட்ட இன்டெரெஸ்ட் அதிகம் இருந்தது. புடலை பிஞ்சு வந்ததும், அதன் நுனியில் கல் கட்டி வைப்பாள் - நீண்டு வளர.
பூச் செடிகள் நிறைய. முக்கியமாக கனகாம்பரம், டிசம்பர் பூக்கள் - கலர் கலராக. நிறைய பூக்கும். தினமும் பூக்களை பறித்து, தொடுப்பது அவ்வளவு சுவாரசியம். பூ மிஞ்சிப்போய் அக்கம் பக்கம் முதலில் இலவசமாக, போகப் போக விலைக்கு.... ஓரணாவுக்கு அவ்வளவு பூ கொடுப்பாள்.
அந்த தோட்டத்தின் நடுவில் சென்ட் ரோஜா என்று ஒரு செடி. அடர்த்தியாக இருக்கும். வெள்ளை பூக்கள் கொத்து கொத்தாக பூக்கும். ரொம்ப வாசனை. ஆனால் தலையில் வைத்துக் கொள்ள முடியாது.
அந்த வாசனைக்கு பாம்பு வந்தது.
ஒரு நாள் , நடுக் கூடத்திலிருந்து, சமையல் ரூமிற்கு போகும் இடத்தில் , கதவு நிலைக்கு மேல் ஒரு பெரி ........ ய பாம்பு , ஹாயாக படுத்துக்க கொண்டிருக்க, அதை முதலில் பார்த்தது என் பெரிய அக்கா. அக்கம் பக்கம் எல்லோரும் வந்து, அந்த பாம்பை கிளப்பி, அடித்துக் கொன்றார்கள். ஆனால் எனக்கு பாம்பை பார்த்தாலே ரொம்ப பயம்... யாருக்குத்தான் இருக்காது. பின்னால் தள்ளி நின்று கொண்டிருந்த எனக்கு, அந்த கும்பலில், பாம்பு சரியாக தெரிய வில்லை. எங்கள் வீட்டு பாம்பை நானே சரியாக பார்க்கமுடியவில்லை.
இப்போது போல், அப்போது செல் போன் இருந்திருந்தால் போட்டோவாவது எடுத்திருக்கலாம் !!!
அன்றைக்கே அந்த சென்ட் ரோஸ் செடியை அம்மா வேருடன் வெட்டிப் போட்டாள் .
ஹும்ம்ம் ... அதல்லாம் இனிமையான நினைவுகள்.

Friday, July 17, 2020

அம்மாவின் சாந்து.....

அம்மாவின் சாந்து.....
நெற்றிக்கு இட்டுக் கொள்ள , கருப்பு சாந்து, அம்மாவே ஆத்தில் பண்ணுவாள் .
சாந்து பண்ண, அரிசி மாவு; அதற்கு ஒரு "ஷைன்" கொடுக்க ஜவ்வரிசி மாவு.
ஜவ்வரிசியை ஏந்திரத்தில் மாவாக்கி, அரிசி மாவுடன் கலப்பாள்.
அந்த மாவை வெறும் இரும்பு இலுப்பச் சட்டியில் போட்டு, கிளறிக்கொண்டே இருந்தால், மாவு கறுப்பாகிவிடும் .
நன்றாக கறுப்பானவுடன், அதில் தண்ணீர் சேர்த்து கிளறுவாள்.
பதமாக, சாஃப்டாக வந்துவிடும்
அதை சாந்து கொட்டாங்கச்சியில் எடுத்து வைத்தால் காய்ந்துவிடும் .
நெற்றிக்கு இட்டுக் கொள்ளும்போது, நடுவில் சொட்டு தண்ணீர் விட்டு , சுட்டு விரலால் குழைத்து , இட்டுக் கொள்ள வேண்டும். அதை வட்டமாகவோ, திலகமாகவோ இடுவது ஒரு கலை !!
குழந்தைகளுக்கு இடும்போது, அம்மா வாயில் நாக்கை துருத்தி ஒரு சத்தம் ... குழந்தை கவனத்தை ஈர்க்க. கேட்டிருக்கிறீர்களா அந்த சத்தத்தை ?

அம்மா கூட்டிய கண் மை ....

அம்மா கூட்டிய கண் மை ....

நாங்க எல்லாம் சிறுமிகளாக இருந்த போது , கடையில கண் மை வாங்கியதே இல்லை. ஆத்தில் அம்மாதான் கூட்டுவாள்.
மூன்று செங்கல் வைத்து, அடுப்பு பண்ணி, ஒரு பெரிய மண் அகலில் நிறைய விளக்கெண்ணெய் விடுவாள்.
வேஷ்டி துணி எடுத்து , தோய்த்து போட்டு, அதில் கெட்டியாக , பெரிய திரி சுற்றுவாள்.
அந்த திரியை அகலில் போட்டு, ஏற்றுவாள்.
மார்க்கெட்டிலிருந்து, புது மண் தட்டு வாங்கி வருவாள்.
அந்த தட்டின் அடி பாகத்தில் விளக்கெண்ணெய் ஒரு கோட் பூசி விட்டு, அதை செங்கல் மேல் விளக்கின் சுடர் படும்படி வைத்து , மொத்தத்தையும் ஒரு புது கூடையால் மூடி விடுவாள்.
காலையில் பார்த்தால் , அந்த மண் மண் தட்டின் அடியில் கருப்பாக தூள் படிந்திருக்கும். அதை, ஒரு புது குச்சியால் ஒரு பேப்பரில் தள்ளி மடித்து வைத்து விடுவாள்.
அதில் கொஞ்சம் போடி எடுத்து , விளக்கெண்ணெய் துளித் துளியாக விட்டு, மையாக குழைத்து மை கூட்டில் அடைத்து வைத்து விடுவாள். மை ரொம்ப கருமையாக இருக்கும்.
எங்களுக்கெல்லாம் கல்யாணத்தின் போது கூட வெள்ளியில் இந்த மைக் கூடு சீராக உண்டு.

படம் கிடைக்கவில்லை. 

காலத்தால் மாறிய என் விளையாட்டுக்கள் .......


சிறு வயதில்
பாண்டி, சடு குடு, கண்ணா மூச்சி, கல்லாமண்ணா.....

பிறகு
பல்லாங்குழி, பரம பதம், தாயம், சோழி, புளியங்கொட்டை, ஏழு கல் ... இத்யாதி

குழந்தைகளுடன்
carom , cards, monopoly, scrabble, chess etc.

இப்போது...
தனிமையில்
solitaire in Computer.....