Wednesday, August 12, 2020

VK and Garden........

 எனக்கும் கொஞ்சம் தோட்ட ஆசை உண்டுதான். தஞ்சையில் இருந்தபோது, அந்த டிபார்ட்மென்ட் அம்மாது. நானும் சிறுமி. எனக்கே என்னை தெரியவில்லை. !!!

சென்னை வந்து அதற்கு ஸ்கோப் இல்லை.
கல்யாணம் பண்ணி , நுங்கம்பாக்கம் தனி வீட்டிற்கு வந்தால், அங்கு பின்னால் பெரிய காலி இடம். ஆனால் அப்போதும் எனக்கு தோட்ட ஆசை எழவில்லை. வீட்டில் நல்ல பெயர் வாங்கவும் (!!!), காலேஜுக்கு வேலைக்குப் போகவும் தான் நேரம் சரியாக இருந்தது...

பூனா வந்து, முதலில் ஒரு இரண்டாவது மாடி குடி இருப்பில் இருந்து, பிறகு ஒரு பெரிய தனி வீட்டின் கீழ் பகுதியில் இருக்கும் வாய்ப்பு கிடைத்ததும், அங்கு வீட்டின் முன்னாடி நிறைய இடம் இருந்ததும் என் மனதில் நீறு பூத்த நெருப்பாக இருந்த தோட்ட ஆசை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது...

நானே கொத்தி, மண் போட்டு, சமன் படுத்தி , விதைகள் வாங்கிப் போட ஆரம்பித்தேன். எனக்கு அவ்வளவாக அதில் பரிச்சயம் இல்லை. இருந்தாலும் விடுவேனா?

ரொம்ப ஆர்வமாக, தக்காளி, கத்திரிக்காய் , வெண்டை எல்லாம் போட்டேன். அதெல்லாம் முளை விட்டு வளர வளர ஒரே சந்தோஷம்.... ஆனால், அய்யகோ.... எல்லாம் மினியேச்சர் காய்கள்... அதுவும் ஒன்றிரண்டு. அதற்கு செலவழித்ததற்கு, கிலோ நாலணாவுக்கு விற்ற வெண்டை, கத்திரிக்காய் எல்லாம் கடையில் வாங்கி இருக்கலாம்.

இப்போது, சோளம் .... அழகாக காய்த்தது. எல்லாம் ஒரு விறல் நீளம்... ஆசையே போய் விட்டது. மணி பிளான்ட் மட்டும் தொட்டியில் மிக நன்றாக வந்தது.
அப்புறம் cactus ல் இறங்கி விட்டேன். தொட்டிகளில் வித விதமான cactus . சுற்றி மலைய் ப் பாங்கான இடமாதலால் , நிறைய cactus கிடைக்கும்.. ஒத்த இன்டெரெஸ்ட் உள்ள சின்ன பச ங்களுடன் டீல் போட்டு, வித விதமான cactus exchange பண்ணி, வளர்த்தேன்.

ஆச்சு. அந்த தோட்டத்திடம் பிரியா விடை பெற்று, எல்லா தொட்டிகளையும் கொடுத்துவிட்டு, சென்னை வந்தோம்.

சென்னையில் அண்ணா நகரில் தனி வீடு. சுற்றி செடி போட இடம். விடுவேனா ... இங்கேயும் எல்லாம் மினியேச்சர் காய்கள் தான். அது என்ன ராசி ? கொய்யா , சீதா பழம் மரங்கள் இருந்தன.. அவைகளில் கூட பழங்கள் சிறியதுதான். கொய்யா நல்ல ருசி என்பது ஆறுதல்.

சைடில் மணி பிளான்ட் வைத்து, அது காடு போல் வளர்ந்து, அதில் குட்டி பாம்பு குடி இருப்பது தெரிய, வெட்டிப் போட்டோம்.

இப்போது, வீட்டின் பின் பக்கம் வாழை. எங்கப்பா, நான் பிறந்த வீட்டில் நிறைய வாழை மரம் வைத்திருந்ததை பற்றி, ஒரு போஸ்டில் எழுதி இருந்தேன். அந்த ஆசை என் உள் மனதில் இருந்தது போல.

நர்சரி யிலிருந்து வாழைக் கன்று வாங்கி நட்டேன். ஐயா .... அது பெரிய மரமாக வளர்ந்து, ஒரு குலை தள்ளியது. ரொம்ப கற்பனை செய்யாதீர்கள். அந்த தார் பழுத்ததும், நானும் என் பெரிய பையனும் ஒரு தார் பழங்களையும் சாப்பிட்டோம் என்று சொன்னால் அதன் சைஸை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பல வருடங்கள் ஓடி, பலப் பல அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து விட்டு, ஒரு வீட்டில், இரண்டாவது மாடியில் அதிஷ்ட வசமாக கொஞசம் திறந்த வெளி இருக்க, நிறைய தொட்டி... எல்லாம் அழகுக்குத்தான் . ஆனால் ரொம்ப ரசித்து செடி வளர்த்து, வீட்டிற்குள்ளும் வைத்து, அழகு பார்த்து , அவைகளை அப்பப்போ, வெய்யிலில் தூக்கி வைத்து, இடுப்பில் வலி வந்து .... அவஸ்தை. ஒரு மணி பிளான்ட் , ரொம்ப நன்றாக, அடர்த்தியாக வர, அழகு பார்த்து மகிழ்ந்தேன். ஆனால், அதன் உள்ளே... எண்ணிலடங்கா எலிக் குஞ்சுகள். அருவருப்புடன் வெட்டிப் போட்டோம்.

கடைசியாக மைலாப்பூரில் கீழ் வீடு. எனக்கு பயங்கர சந்தோஷம் . ஆனால், அந்த இடத்தில் மழை நீர் சேகரிப்புக்காக ஏற்பாடு. அதனால் வெறும் புல் தான் போட்டோம். லான் என்பது அதன் பெயர் அவ்வளவுதான். சகிக்கவில்லை.

வீட்டின் சைடில் நீளமாக இடம் இருக்க, மறுபடியும் வாழை. இப்போது தோட்டக் காரன் அட்வைஸ் . பூவன், மொந்தன் என்று 2,3 வித வாழைக் கன்று வாங்கி நட்டேன். கர்ணன் படத்தில் கிருஷ்ணர் , குந்தி இடம் "ஆனாலும் உனக்கு ஆசை அதிகம் அத்தை " என்று சொல்வது போல் நானும் ஆசையாக நட்டேன்... கன்றை நட்டேன்... அவ்வளவுதான்.. ஒரு வருடத்தில் வாழைக் குலை என்பது கற்பனையில் தான். அய்யகோ... வாழைக் கன்று , கன்றாகவே இருந்தது... ஒன்றிரண்டு இன்ச் வளர்ந்திருக்குமோ என்னவோ... தோட்டக் காரன், "நான்தான் அப்போதே சொன்னேனே" என்று குத்திக் காண்பித்தான்.

முன்னால் இருந்த கொஞ்சம் இடத்தில் சாயந்திரம் கொஞ்சம் வெய்யில் வரும். அங்கு தொட்டிகளில் பல வித செம்பருத்தி வைத்து, அவைகள் கொஞ்சம் பூத்தன என்பது ஆறுதல். இங்கேயும் மணி பிளான்ட் நன்றாக வந்தது. அது என்ன ராசியோ.

இனி அந்த தோட்டக் கவலையும் இல்லை... ஆசையும் இல்லை..


No comments:

Post a Comment