Wednesday, July 22, 2020

அம்மாவும் தோட்டமும்.....

அம்மாவும் தோட்டமும்.....
தஞ்சாவூரில் , நான் பிறந்த வீட்டில், கொல்லை பக்கம் தோட்டம் போட இடம் உண்டு. அதில் அம்மா நிறைய வாழை மரம் வளர்த்திருந்தாள் . எவ்வளவு வாழை தார்..! நான் சுமார் 6 வயது வரைதான் அந்த வீட்டில் இருந்தேன். ஆனாலும், வாழைப் பழத்தை பழுக்க வைத்து, அம்மா குடுத்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. திடீரென்று வீட்டுக்காரன் அந்த வீட்டை காலி பண்ண சொல்ல, அப்பாக்கு ரொம்ப கோபம் வந்து, காலி பண்ணும் முன் அந்த மரங்களை எல்லாம் வெட்டிப் போட்டார். !!
அதற்குப் பிறகு, கீழலங்கத்தில் ஒரு தனி வீடு. வீட்டின் சைடில் தோட்டம் போட ஒரு பெரிய இடம். அதில் அம்மா, சில கறிகாய்கள் - வெண்டை, கத்திரிக்காய், பூசணி, பரங்கி, அவரை, புடலை பந்தல்கள் எல்லாம் போட்டிருந்தாள்..அம்மாக்கு தோட்ட இன்டெரெஸ்ட் அதிகம் இருந்தது. புடலை பிஞ்சு வந்ததும், அதன் நுனியில் கல் கட்டி வைப்பாள் - நீண்டு வளர.
பூச் செடிகள் நிறைய. முக்கியமாக கனகாம்பரம், டிசம்பர் பூக்கள் - கலர் கலராக. நிறைய பூக்கும். தினமும் பூக்களை பறித்து, தொடுப்பது அவ்வளவு சுவாரசியம். பூ மிஞ்சிப்போய் அக்கம் பக்கம் முதலில் இலவசமாக, போகப் போக விலைக்கு.... ஓரணாவுக்கு அவ்வளவு பூ கொடுப்பாள்.
அந்த தோட்டத்தின் நடுவில் சென்ட் ரோஜா என்று ஒரு செடி. அடர்த்தியாக இருக்கும். வெள்ளை பூக்கள் கொத்து கொத்தாக பூக்கும். ரொம்ப வாசனை. ஆனால் தலையில் வைத்துக் கொள்ள முடியாது.
அந்த வாசனைக்கு பாம்பு வந்தது.
ஒரு நாள் , நடுக் கூடத்திலிருந்து, சமையல் ரூமிற்கு போகும் இடத்தில் , கதவு நிலைக்கு மேல் ஒரு பெரி ........ ய பாம்பு , ஹாயாக படுத்துக்க கொண்டிருக்க, அதை முதலில் பார்த்தது என் பெரிய அக்கா. அக்கம் பக்கம் எல்லோரும் வந்து, அந்த பாம்பை கிளப்பி, அடித்துக் கொன்றார்கள். ஆனால் எனக்கு பாம்பை பார்த்தாலே ரொம்ப பயம்... யாருக்குத்தான் இருக்காது. பின்னால் தள்ளி நின்று கொண்டிருந்த எனக்கு, அந்த கும்பலில், பாம்பு சரியாக தெரிய வில்லை. எங்கள் வீட்டு பாம்பை நானே சரியாக பார்க்கமுடியவில்லை.
இப்போது போல், அப்போது செல் போன் இருந்திருந்தால் போட்டோவாவது எடுத்திருக்கலாம் !!!
அன்றைக்கே அந்த சென்ட் ரோஸ் செடியை அம்மா வேருடன் வெட்டிப் போட்டாள் .
ஹும்ம்ம் ... அதல்லாம் இனிமையான நினைவுகள்.

No comments:

Post a Comment