கண்ணாடி வளையல்கள் பார்க்கும்போது எனக்கு பழைய ஞாபகங்கள்.
நானும், என் 4 சிஸ்டர்ஸும் , வளையல் பைத்தியங்கள் . எல்லா பண்டிகைகளுக்கு - ஆவணி அவிட்டத்துக் கூட கை நிறைய கண்ணாடி வளையல்கள் போட்டுக் கொள்வோம். மேட்ச் எல்லாம் தெரியாது... கலர் கலராக போட வேண்டும். அவ்வளவுதான்.
இவ்வளவு ஏன்; ஆத்தில் திவசம்னா கூட, கை நிறைய வளையல் போட்டுக்கொண்ட பேக்குகள் .
தீபாவளிக்கு முதல் நாள் அய்யங்கடை தெரு ட்ரிப் கண்டிப்பாக உண்டு; என்ன - புது வளையல் வாங்கத்தான். பாவம் அம்மா- வளையலுக்கு மட்டும் காசு கண்டிப்பாக கொடுத்துவிடுவாள்... ஆளுக்கு 4 அணா .
வாசலில், வளையல்காரர் சத்தம் கேட்டுவிட்டால், அம்மாவுக்கு காபராத்தான். ஆனால், சந்தோஷமாக எல்லோருக்கும் வளையல் வாங்கித் தருவாள். ஸ்கூல் போகும்போது, கழட்டி விட வேண்டும்.
அதுவும், மருதாணி இட்டுக் கொண்ட மறுநாள், உள்ளங்கை, விரல்கள் சிவப்புக்கும், வளையலுக்கும் அவ்வளவு அழகு - நாங்களே ரசித்துக் கொண்டு மகிழ்வோம்.
இப்போது நினைத்தால் சிரிப்பாக வருகிறது.
சாதாரணமாக , வளைகாப்பு function க்கு போனால் , சாஸ்திரத்துக்கு எல்லோருக்கும் நாலு வளையல்கள் தருவார்கள். என் அத்யந்த சினேகிதி பெண்ணிற்கு வளைகாப்பு... "நமக்கு இல்லாத உரிமையா ?" என்று, கூச்ச நாச்சமில்லாமல் நிறைய எடுத்துக் கொண்டேன்.
இப்பவும் என்னிடம் நிறைய உண்டு. ஆனால் கொஞ்சம் கலர் புடவைக்கு பொருந்துகிறாற்போல் போட்டுக் கொள்வேன் . மயிலையை காலி பண்ணி, இங்கு வரும்போது, என் பெண் எடுத்துக் கொண்டது போக மற்றதெல்லாம் distribution .
No comments:
Post a Comment