Friday, November 13, 2020

நினைத்துப் பார்க்கிறேன்....

 நினைத்துப் பார்க்கிறேன்.... பிறந்த வீட்டில், தீபாவளி திருநாட்கள்...ஒரு வார பட்சண களேபரம் ..கடைசி நேர புது ட்ரெஸ் கொண்டாட்டம்.....முதல் நாள் இரவு, வெங்காய சாம்பார், உருளை கறி , சேமியா பாயசம், அப்பளம் பொரித்து, சாப்பாடு... .வெகு தாராளமாக 5, 10 ரூபாய்க்கு பட்டாசு, மத்தாப்பு.. விறகடுப்பில் கொதிக்கும் வென்னீர் ... 7 குழந்தைகளில் கடைசி குழந்தையான என்னிலிருந்து துவங்கி, எண்ணெய் குளியல் அமர்க்களம்... அப்பா கையிலிருந்து புது துணி பெற்று, உடுத்தி...ரேடியோவில் தீபாவளி வாழ்த்தும், நாதஸ்வரமும் விடியற்காலை 4 மணிக்கு கேட்டு.... பகல் விருந்து....... ஹும்ம்ம்ம்

நினைத்துப் பார்க்கிறேன்... கல்யாணத்துக்குப் பிறகு, கூட்டுக் குடும்பத்தில்...அதே பக்ஷண களேபரங்கள்... புது புடவை... இரண்டு நாத்தனார்கள், இரண்டு மச்சினர்களுக்கிடையில், மாமியார், மாமனாருடன்... முதல் நாள் இரவு, வெங்காய சாம்பார், உருளை கறி , சேமியா பாயசம், அப்பளம் பொரித்து, சாப்பாடு... .பாய்லரில் வென்னீர் கொதிக்க, கடைசி மச்சினரில் ஆரம்பித்து.... வரிசையாக எண்ணெய் குளியல்... மாமனாரிடம் புது துணி பெற்று... உடுத்தி... பகல் விருந்து சமைத்து.... ஹும்ம்ம்ம்
நினைத்துப் பார்க்கிறேன்... 3 குழந்தைகளுக்கு அம்மாவாக... தீபாவளி ஷாப்பிங் பண்ணி , குழந்தைகளுக்கு திருப்தியாக, பட்ஜெட்டை கொஞ்சம் மீறி... துணி மணி வாங்கி, தைத்து... அடுப்பில் எண்ணெய் வைத்தால்தான் தீபாவளி வாசனை வரும் என்று, குழந்தைகளுக்குப் பிடித்த பக்ஷணங்கள் பண்ணி .... பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்து... முதல் நாள் இரவு, வெங்காய சாம்பார், உருளை கறி , சேமியா பாயசம், அப்பளம் பொரித்து, சாப்பாடு... .கெய்சரில் வென்னீர் போட்டு.... SK இடம் புதுக் துணி பெற்று... மதியம் பாயசத்துடன் சமைத்து... ஹும்ம்ம்ம்....

இன்னும்.... சின்ன வயதில் அம்மா கிளறிய லேகியத்தை சாப்பிட பிடிவாதம் பிடித்து, மாமியாரிடம், பவ்யமாக வாங்கி, (பிடிக்காமல்தான்) சாப்பிட்டு, பிறகு, அம்பிகாவிலும், டப் பா செட்டி கடையிலும் வாங்கிய ரெடி மேட் மருந்தை வாங்கி, குழந்தைகளை படுத்தி சாப்பிட வைத்து....
ஒரு தாம்பாளத்தில் புதுத் துணிகளையும் , ஒரு தட்டில் பக்ஷணங்களையும் பரத்தி வைத்து, எண்ணெய் வைக்கும் முன் துளி சுவீட் சாப்பிட்டு, ஒரு வெற்றிலையை போட்டு மென்று, அதே சம்பிரதாயத்தை பெண்ணிடம் செய்ய, அவள் கண்ணில் நீர் தளும்ப அந்த வெற்றிலையை மென்று, துப்பி....
பட்டாசுகளை பங்கு போட்டு, அவரவர் கூரிலிருந்து மத்தாப்பு எடுத்து கொளுத்தி, பட்டாசு வெடித்து, சாயங்காலத்திற்குள் போர் அடித்து, எல்லா மிச்சம் மீதிகளையும் சேர்த்து வைத்து கொளுத்தி....
எல்லாமே அமர்க்களம் தான்....
நினைத்துப் பார்க்கிறேன்... பெண்ணிற்கு தலை தீபாவளி முடிந்த பிறகு, 1968 லிருந்து, "நீயும் நானுமடி , எதிரும் புதிருமடி" என்று, அப்போதும் முதல் நாள் வெங்காய சாம்பாருடன் சமைத்து... ஆனால் முதல் நாள் மதியமே அதை சமைத்து.. (இரவு அவ்வளவு ஹெவியாக சாப்பிட முடியாதென்று... (வயதான கோளாறு )... பட்டாசெல்லாம் வாங்காமல் ... நாங்களே அவரவர் தலையில் சாஸ்திரத்துக்கு எண்ணெய் வைத்துக் கொண்டு... பகலில் ரொம்ப சிம்பிளாக சமைத்து... தீபாவளியை முடித்து...
இப்போது.... ?? அந்த நினைவுகளே நெஞ்சில் நிறைந்த பொக்கிஷங்களாக... இங்கு senior citizen home ல் , புதிதாக சேர்த்துக் கொண்ட நட்புகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி... தீபாவளி ஷாப்பிங் எல்லாம் பழங் கனவாக நேற்று இரவுக்கு தோசை, சாம்பார், சட்னி சாப்பிட்டு......உள்ளே ஏற்கனேவே இருக்கும் புதுப் புடவையை எடுத்து வைத்திருக்கிறேன்... இங்கு common ஆக , ஆர்டர் எடுத்து, செய்து கொடுத்த பக்ஷணங்களில், சாஸ்திரத்துக்கு கொஞ்சம் மிக்சரும், மைசூர் பாகும் வாங்கி, அதுவும் செலவாகாமல்...
இப்போது மணி மூன்று... அவசரமில்லை... 5.30 மணிக்குள் சாஸ்திர எண்ணெய் குளியல் முடித்து... புதுப் புடவை உடுத்தி... டைனிங் ஹாலில் மற்றவரை மீட் பண்ணி... தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி... டிபன் சாப்பிட்டு... மதியம் வடை, பாயசம் மட்டும் எக்ஸ்ட்ராவாக கிடைக்க, லன்ச் சாப்பிட்டு இப்படியாக இந்த தீபாவளி கழியும்...
பிழைத்துக் கிடந்தால் இனி வரும் தீபாவளிக்காவது... கொரோனா பயமில்லாமல், இந்த அளவிலாவது கொண்டாட கிடைத்தால் சந்தோஷம் ...
குறையொன்றும் இல்லை கண்ணா.....
எல்லா நட்புகளுக்கும் என் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்... சந்தோஷமாக கொண்டாடுங்கள்... குழந்தைகளுடன் கொண்டாடுபவர்கள், ஒவ்வொரு வினாடியையும் அனுபவித்து ரசியுங்கள்...

6 comments:

 1. Thank you for the wishes. Wishing you a very happy Deepavali.

  ReplyDelete
 2. நினைவுகள் என்றும் இனிமையானவை.  அந்தக் காலம் போல இந்தக்காலம் இல்லை.  உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.  உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. முதியோர் இல்லத்தில் வாசமா? நல்லபடி நாட்கள் கழிவதற்குப் பிரார்த்தனைகள். தீபாவளியை முடிந்தவரை எளிமையாகக் கொண்டாடி வருவதற்கும் பாராட்டுகள், பிரார்த்தனைகள். கொரோனா பயமின்றி இனி வரும் நாட்கள் அமையவும் பிரார்த்திப்போம். உங்களுக்கும் உங்கள் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. வாழ்க்கையின் யதார்த்தத்தை மிக அழகாய் உணர்த்தியிருக்கிறீர்கள்!
  உங்களுக்கும் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. தீபாவளி வாழ்த்துகள்.

  நன்றாக தீபாவளிகளை நினைவுகூர்ந்திருக்கிறீர்கள். நானும் 78ல் 2 ரூபாய்க்கு ரொம்ப தாராளமாக வாங்கித்தந்த வெடிகளை வைத்து, நண்பர்கள் வீட்டில் 100-300 ரூபாய்களுக்கு வெடிகள் வாங்கிக் கொண்டாடியதை கொஞ்சம் ஏமாற்றத்துடன் பார்த்திருந்த நாட்கள் நினைவுக்கு வந்தன.

  அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்

  ReplyDelete
 6. அழகான நினைவுள். நினைவுகள்தான் வாழ்க்கை என்று ஒரு காலம் வந்து விடுகிறது இல்லையா?

  ReplyDelete