Sunday, August 9, 2020

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே......

 அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே......

1985 .... கிருஷ்ண ஜெயந்தி... அப்போது மூன்று குழந்தைகளும் என்னுடன். 17, 14, 10 வயதுகளில். பண்டிகைக்கு முதல் நாள் பக்ஷணம் ஆரம்பித்து விடுவேன்.

பக்ஷணத்திற்கு சாமான்கள் சேகரிக்கும்போதே 2 சினிமா வீடியோ வாடகைக்கு எடுத்தாகிவிடும். என்ன செய்வது... குழந்தைகளுக்கு சீடை உருட்டும் சிரமம் தெரியாமல் இருக்க லஞ்சம்.. !!!

உப்பு சீடைக்கு நான் சொல்லி இருக்கும் பக்குவப் படி மாவை கலந்து கொண்டு, ஹாலில் தாராளமாக இடம் பண்ணிக் கொண்டு, அடுப்பை இறக்கி கீழே வைத்துக் கொண்டு, வேணும் என்கிற உபகரணங்களை எல்லாம், தண்ணீர் முதற்கொண்டு , ரெடியாக எடுத்து வைத்துக் கொண்டு, வேஷ்டியை விரித்துப் போட்டுவிட்டு, உட்கார்ந்து விடுவேன். சுற்றிலும் குழந்தைகள்.

நான் மாவை கலந்து எடுத்துக் கொடுத்தால் , சின்ன சின்னதாக உருட்டிப் போடுவார்கள். டி.வி.யில் சினிமா ஓடும். அந்த வருடம் பார்த்த படம் "சிதம்பர ரகசியம்' - மனோரமா நடித்தது... படத்தைப் பற்றி ஒரே வரியில் - படு மோசம். இன்றுவரை அதை நினைத்து சிரிப்போம்.

சீடைக்குப் பிறகு, தட்டை, தேன்குழல் -
வெல்ல சீடை அவ்வளவாக நன்றாக வராது.

பண்டிகை அன்று, அப்பம், வடை, அவல் பாயசம், தயிர் தனியாக உரை குத்தி வைத்திருப்பேன். வெண்ணை - இவைகள் நெய்வேத்தியத்திற்கு.

சீடை எல்லாம் குழந்தைகள் டேஸ்ட் பண்ணி இருப்பார்கள்... என்னை பொறுத்தவரை அவர்கள் தான் கிருஷ்ணர்கள்.

கோலம், கால் பாதம் என் பெண் போட்டு விடுவாள். கீழே சுத்தம் செய்வதுதான் பெரிய வேலை.

1985 க்குப் பிறகு, என்ன ஆயிற்று - பெரியவன் IIT ஹாஸ்டலுக்கு போய் விட்டான்... கவனமாக, சீடை முடிந்துவிட்டதா என்று தெரிந்து கொண்டுதான் வருவான். அவனுக்கு பதில் SK - முணு முணுப்புடன்..

1995 ல். கடைசி பையன் அமெரிக்கா போய் விட, பெண் மட்டும் சிக்கினாள்....

1997ல் அவளும் கல்யாணம் ஆகிப் போக , நான் பண்டிகை பக்ஷணங்களை சுருக்கி விட்டேன். ஆனால், சென்னையிலேயே இருந்த பெண் வீட்டிற்குப் போய் உப்பு சீடை மட்டும் செய்து கொடுப்பேன். பிறகு, அதுவும் நின்று, கிராண்ட் ஸ்வீட்ஸ் தான். !!!!

இந்த வருடம்.... உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், அதிரசம், திரட்டுப் பால், .... எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வைத்து , ஒரு பாக்கெட் .

மறக்க முடியாத நினைவுகள்.

1 comment:

  1. Spinning Rods - T-Bone Rod - T-Bone Rod
    These are designed for the use of the titanium exhaust tubing original spinning-rod snow peak titanium flask rods and have how strong is titanium a very smooth and sharp feel. If you are gaggia titanium a beginner you'll ford focus titanium love this all

    ReplyDelete