பூக்களும், மரங்களும்
பூவரசம்பூ மரம் ( Portia tree)
நான் மெட்ராசில பூவரசம் பூ பாத்ததே இல்ல. எங்கஊரிலநெறைய இருக்கும்... மஞ்சள்பூ... அதன்ஐந்துஇதழ்கள்பாவாடைவிரித்தாற்போல்.
மேலே மெல்லிய காம்பு; பூவின் அடிப்பாகம் பச்சையாய், கவிழ்த்து வைத்த அரைஉருண்டையாய். அந்தஅரைஉருண்டையின்முகம், தட்டையாய், நான்கு பாகங்களை பிரித்தாற்போல், மாணிக்கச் சிவப்பாய்.
அதை சுற்றி, ஐந்து மஞ்சள் இதழ்கள்.. பெரிசாக மலராது.. கொஞ்சம்
கூம்பியே இருக்கும்.
மரம் கொள்ளாமல் பூக்கும்.
இரண்டு பூக்களை எடுத்துக்கொள்வோம். ஒன்றை, காம்பு கிள்ளி, இதழ்களை உள்ளே விரல்கள் விட்டு, கொஞ்சமாக விரித்து
விட்டால், பம்மென்று பாவாடை விரித்தாற்போல் இருக்கும்.
மற்றொரு பூவை எடுத்து, எடுத்து, இதழ்களை எடுத்து
விட்டு, காம்பையும் கிள்ளி, கலர் முகம்
தெரியராப்போல வெச்சு, ஒரு மெல்லிய துடைப்பக் குச்சிய குத்தி, குச்சியோட இன்னொரு பக்கத்த, பாவாடை பூவழியாசசொருகி, அதன் நுனியை
வெளிக்கொணர்ந்து பிடித்துக் கொண்டால் பொம்மை மாதிரி இருக்கும் !
பூவின் நடுவில் இருக்கும் மகரந்தம், மெல்லியதாக, நீளமாக இருக்கும். இரண்டு பூக்களின் மகரந்த காம்பை, இரண்டு பக்கமும் கை போல சொருகலாம்
பனை மரம் : (palm tree)
எங்க ஊர்ல, எதுத்தாப்புல, மேட்டுல (ஒரு
காலத்துல கோட்டை சுவர் !) பனை மரம் வரிசையா இருக்கும். அது தனிப்பட்ட யாருக்கும்
சொந்தம் இல்லை. அதனால், ஆட்கள் வந்து, பனம் கிழங்கு
வெட்டிப் போட (அவர்கள் கள் இறக்குவார்கள்... அது ஒரு தனி கலை) , எங்களுக்கு பிரெஷ் ஆகபனம் நுங்கு கிடைக்கும்.. வெட்டிப் போட்ட பனை ஓலை களையே, ஒரு கலை நயத் தோடு மடக்கி, நீள கப் மாதிரி பண்ணி அதில் நுங்கு.. பதநீரும் அதிலே எல்லாரும் வாங்கிக்
குடிப்பா.. நான் குடிச்சதில்லை !
"பனை மரமே, பனை மரமே , ஏன் வளர்ந்தாய் பனை மரமே"
"நான் வளர்ந்த காரணத்தை, நாட்டாரே சொல்லிடுவேன்"
"படுக்க நல்ல பாய் ஆவேன், மழைக்கு நல்ல குடை ஆவேன்
விசிற நல்ல விசிறி ஆவேன், ......
என்று கற்றுக்கொண்ட ஒண்ணாம் கிளாஸ் பாட்டுகூட மறக்கவில்லை.
இப்படித்தான் பொருட்களின் உபயோகங்களை பற்றி பாட்டாய் படித்தோம் !!
அதே மேட்டுல நெறைய ஈச்ச மரம்... கொத்துக் கொத்தாக ஈச்சம் பழம். துபாய், மஸ்கட் மாதிரி பெரிசா, அவ்வளவு ருசியான பழமா இருக்காது. ஆனாலும் அந்த ஈச்சங்கொத்தை யாராவது குரங்கு
பசங்க மரத்துல ஏறி , பழுத்த கொத்தா பறிச்சுப் போட்டா, "மந்தி" (பெண் குரங்கு ) மாதிரி, திம்போம்.
ஆல மரம்.. (banyan tree)
அங்கங்கே பெரிசு பெரிசா இருக்கும். அந்த விழுதுகள் மேலே இருந்து கீழ் வரை
தொங்கி, தரையில் பதிந்து, விழுதுகளே தடிமனான
மரம் மாதிரி இருக்க பரந்து விரிந்து
இருக்கும்.
அந்த விழுதுல, ரெண்டை முடிச்சுப் போட்டோ, அல்லது, ஒற்றை விழுதை பிடிச் சிண்டோ ஊஞ்சல் ஆடுவது மஜா.
அது மட்டுமா...
ஆல மரம், அத்தி மரம், மாமரம், அரச மரம் இதிலெல்லாம் , கிளி, குருவி, மைனா, குயில், மரங் கொத்தி, அக்கூ பட்சி இதெல்லாம் நெறைய இருக்கும்.
மெட்ராஸ்ல இதெல்லாம் நெறைய அழிஞ்சுடுத்து...
சமீபத்துல, ஒரு தனி வீடு , பின்னாலேதோட்டத்தில் பெரிய மரங்களுடன், flat கட்டுவதற்காக இடிக்கப்பட, அவைகளில் வசித்த
பறவைகள், அந்த இடிக்கும் சத்தத்தில் பயந்து , பட படத்து திரிந்ததாகவும், வேறு இடத்துக்கு
(எங்கே அந்த மாதிரி மரம் கிடைக்கும்?) புலம் பெயர்ந்த
தாகவும், என் நாத்தனார் விவரிக்க, கற்பனை செய்து பாக்கும் போதே, மனசு கஷ்டப்
பட்டது.
அரச மரம்... (peepal tree)
அநேகமாக இப்போ கோவில்களில் மட்டும் தான். குழந்தைகளை, கோவிலுக்கு அழைத்துச் சென்றால் காண்பிக்கலாம்.
ஆல மரம் பாக்க, அடையார் theosophical
society போகணும். அந்த ஆல
மரமும் விழுந்து விட, சுமாராக நிறுத்தி வைக்கப் பட்டிருக்கு.
புளிய மரம்... (tamarind tree)
கிராமப் புறங்களிலே, ரோட் ஓரத்திலே நெறைய புளிய மரம். உலுக்கினால்
பிஞ்சாகவும், செங்காயாகவும் , சிலது பழமாகவும்
கிடைக்கும்... கீழேயே உதிர்ந்தும் கிடக்கும்.. அப்படியே சாப்பிடலாம்...
பாக்கு மரம் (beetal nut tree)
எங்க சேத்தூர் வீட்டிலே , கொல்லைப் பக்கம்
நெறைய பாக்கு மரம். கொட்டை பாக்கு பழுத்த
நிலைக்கு வந்ததும், ஆள் காரன் வந்து பறித்துப் போடுவான். அதை பக்குவப்
படுத்தி, தோல் உரித்து, கொட்டை பாக்காக எடுத்து சேமிப்பா. அதை பாக்கு வெட்டியால் உடைத்து, வெற்றிலை போட்டுக்கொள்ள கொஞ்சம் வைத்து விட்டு, பாக்கி, கடைகளுக்கு விற்கப்படும்
இலவம் பஞ்சு மரம் (cotton tree)
அதே கொல்லையில இலவம் பஞ்சு மரம் இருக்கும். நெறைய காய்க்கும். அது பக்குவ
மானதும், வெடிக்கும். அந்த நிலையில் பறித்து வைப்பார்கள்.
நாங்க அதை உடைத்து, பஞ்சை எடுத்து, அதற்குள் இருக்கும்
கருப்பு கொட்டையை நீக்கி.. விளையாடுவோம்.. அத்தை கிட்ட திட்டும் வாங்குவோம், காயை வீணாக்குவதற் காக.
அந்த பஞ்சு காய்கள் , தஞ்சாவூருக்கு எங்காத்துக்கு வரும். கொட்டை நீக்கி, பஞ்சை பிரித்து, பிய்த்து, அம்மா தலைகாணிகளில்
ரொப்பியது, நன்றாக நினைவிருக்கிறது...
வேப்ப மரம் (neem tree)
இதை neem tree என்று பட்டணத்தில் வசிக்கும்குழந்தைகள்காண்பித்தாலும்,
அதிலிருந்து முத்திய பழங்களை எடுத்து, கையால் பிதுக்கி, விளையாட்டு நேரத்தில் மற்றவர் மேல் தடவி, கத்த விட்டு விளையாடுவதையும்,
காலையில் நிறைய ஆண்கள், பசுமையான, மெல்லிய வேப்பங் குச்சியை உடைத்து, நுனியை தட்டி, அகல மாக்கி, பல்லால் கடித்து, பல் தேயப்பதையும்,
வீட்டில் அம்மை போட்டினால், வேப்ப தழைகளை
வெட்டி, பாயில் பரப்பி, சுற்றிலும் போட்டு, அடையாளமாக வாசலில் நிலையில் சொருகி வைப் பதையும்,
அரிசி முதலிய வருடாந்திரசாமான்கள் , கம்பளி
துணிகளுக்கிடையில், பூச்சி வராமல் இருக்க , வேப்பிலை போட்டு
வைப்பதையும்
வேப்பங் கொழுந்தை , துளசியோடு சேர்த்து அரைத்து , சாறெடுத்து, குழந்தைகள் வயிற்றில் பூச்சியை தடுக்க, மருந்தாக போட்டுவதையும்,
இனி வரும் (ஏன் , இப்போதிருக்கும்) சந்ததிகள் பார்க்க மாட்டார்கள்.
பங்குனி, சித்திரை மாதம்,வேப்பம்பூ பூக்கும் மாதம்.
மரத்தடியை பெருக்கி சுத்தம் பண்ணி வைத்தால், நெறைய உதுந்து
கிடக்கும்
அதை திரட்டி, வாரி, முறத்தில் போட்டு
சுத்தம் பண்ணி, நன்கு காய வைத்து, புடைத்து, மண் நீக்கி, வைத்துக்கொண்டால் வருஷம் பூரா வரும்.
அங்காயப் பொடிக்கு, ரசத்துக்கு உபயோகிச்சால், வயத்துக்கு நல்லது.
இன்னும் எவ்வளவோ மரங்களுடனும், செடிக்
கொடிகளுடனும் வாழ்ந்திருக்கிறோம்; இயற்கையை ரசித்திருக்கிறோம்.
எவ்வளவு பூக்களை புஸ்தகத்தில் வைத்து பாடம் பண்ணி இருப்போம்?
எவ்வளவு இலைகளை ஸ்கூலுக்கு கிளாஸ்க்கு கொண்டு போயிருப்போம்?
எவ்வளவு மயில் ஒற்றை இறகை புக்கில் வைத்து, குட்டி போடும்
என்று நம்பிக்கையோடு காத்திருப்போம்?
எவ்வளவு பட்டாம் பூச்சிகளை துரத்தி பிடித்திருப்போம்?
இப்போது நகர பள்ளி மாணவர்களுக்கு, எல்லாவற்றையும்
படங்களாகவும், இன்டெர் நெட்டிலும் காண்பிப்பதற்கு பதில், ஊர் பக்கங்களுக்கும், தோட்டங்களுக்கும் கொண்டு போய் காண்பிக்கலாம்.
இப்போ குழந்தைகளை கேட்டால், அவர்களுக்கு இன்று
கிடைக்கும் வசதிகளுடனும், High Tech Gamesஉடனும், தனிமையிலும், enjoyபண்ணுவதாகத் தான்
சொல்கிறார்கள்.
ஆனால், இயற்கையோடும், சூரிய சந்திர
ஒளியிலும், நண்பர்களுடனும், பெரியவர்களுடனும், குழந்தைகளுடனும் கழித்த நாட்கள் , அனுபவித்த !!
சந்தோஷம் அதிகம் தான்.. இனிமையானவை தான்...
இந்த நாள் குழந்தைகளுக்கு, city யில் வாழ்பவர்களுக்கு கிடைக்காதது தான்
No comments:
Post a Comment