Thursday, August 18, 2016

LIFE AT AGRAHARAM......

அக்ரஹாரத்து வாழ்க்கை ..

என் தாத்தா (பார்த்ததில்லை !) சுமார் 1870 ல பொறந்திருக்கணும்.. நிறைய நிலம் நீச்சு... ஆனால், எங்கப்பா சொல் படி, கொஞ்சம் சோம்பேறியாக இருந்திருக்கிறார்.. நிலத்தை எல்லாம் குத்தகைக்கு விட்டு விட்டு, ஹாயாக திண்ணையில் உக்காந்து நாள் முழுதும் சீட்டாட்டமாம்.. ! மூன்று பெண்கள், ஒரே பையன் (எங்கப்பாதான்... இரண்டாவது குழந்தை !!) .. பாட்டி படு சமத்தாம் குடித்தனம் செய்வதில். (இன்னொரு பையன் ,கடைசியாக பிறந்தவர் , அனாமத் தாக, சிறு வயதில் இறக்க, அவர் மேல் உயிராக இருந்த அப்பா, காலேஜ் எக்ஸாம் கூட எழுதாமல், அழுது அழுது, ஒரு வருஷம் வேஸ்ட் ஆச்சாம். (ஒரு நல்ல, "சித்தப்பா"என்ற உறவு, எனக்கு இல்லாமலேயே போயிற்று.
அக்ரஹாரத்து ஆண்களெல்லாம் சதா சர்வ காலமும் திண்ணை தான்.. வம்புதான்.. அரட்டை தான்.. அரசியல் ரொம்ப பேச மாட்டார்களாம்.. ஏன்னா.. அப்போ பிரிட்டிஷ் ரூல்... ஆனால் காரைக்கால் (சேத்தூர் சேர்த்து) பிரெஞ்சு காலனி....

அந்தத் தெருவில் யார் நடமாடினாலும் இழுத்து வைத்து வம்பு பேசுவார்கள் .. !! சொம்பு தண்ணி பக்கத்தில், வெத்தலை செல்லம், கொட்டை பாக்கு, பாக்கு வெட்டி (கொட்டை பாக்கை நறுக்க) .. எங்காத்தில் இந்த பாக்கு வெட்டி ரொம்ப நாளா இருந்துது.. அதால் பாக்கு நறுக்க ரொம்ப பிடிக்கும் எனக்கு. தஞ்சாவூர் சீவலும் பேர் போனது... கார வெத்திலை வேணும்னா , கும்பகோணத்திலேர்ந்து வரும்...

கல்யாணம் ஆன பெண்கள் எல்லாம்... நாள் முழுதும் வீட்டு வேலை.. விடியற் காலை எழுந்து, இருட்டு விலகும் முன், வாசலில் சாணி கரைத்த தண்ணீர் தெளித்து, பெருக்கி, கோலம் போடுவார்கள். பளிச்சென்று இருக்கும். (காலையில் fresh சாணி எடுத்து வந்து கரைப்பார்கள் !!) வாய்க்காலில் துணி துவைத்து, குளியல், துளசிக்கு தண்ணி விட்டு, சுவாமிக்கு விளக்கேத்தி, (சுலோகம் சொல்லிக்கொண்டே ) .. காப்பி கடை ஆரம்பிக்கும்..
மண் அடுப்பை ராத்திரியே சுத்தமாக அலம்பி துடைத்து, சாணம் மெழுகி, இரண்டு இழை கோலம் போட்டு, சுத்தமாக இருக்கும்.. காப்பி கொட்டை பதமாக வறுக்கப்பட்டு டப்பாவில் இருக்கும்... (அந்த நாளில் டால்டா டப்பா எல்லாராத்துலயும் நிறைய இருக்கும்.. அதே போல் ஹார்லிக்ஸ் பாட்டில். ) பிளாஸ்டிக், எவர்சில்வர் தெரியாத காலம்...

காப்பி கொட்டையை மெஷினில் போட்டு அரைத்து, அன்னன்னிக்கு பிரெஷ், ஆ காப்பி
அடுப்பை பற்ற வைத்து, (ஈர விறகுன்னா அன்னிக்கு சத்தமும், சாபமும், திட்டும் ஓயாது ஒலிக்கும்.. !!)விறகெல்லாம், வீட்டு மரங்கள் (வேண்டாதது.. பச்சை மரங்களை வெட்ட மாட்டார்கள்) வெட்டப்பட்டு ... அநேகமாக சவுக்கு மரங்கள்... புளிய மர பிளாச்சுகள் (கொஞ்சம் தடிமனான குச்சி) .. வெட்டுவது கோடலியால்.. ஆள் வந்து வெட்டி கொடுத்து, பழைய சாதம், சாதம் வடித்த கஞ்சி (எல்லாம் முந்தின நாளது - புதுசு குடுத்தா சேஷம் ஆயிடும் !!) வாங்கி குடித்து விட்டு, காலணா, அரையணா வாங்கிக்கொண்டு போவான்.. குழந்தைகள் அவைகளை எடுத்து, வெய்யிலில் பரத்தி, பின்புற தாவாரத்தில் அடுக்குவார்கள்... அப்போது கையில் "சில்லு" பாய, அம்மாக்கள் பின்னை வைத்து, குத்தி, எடுப்பார்கள்..

ஊது குழலால் ஊதி ஊதி... அடுப்பு எரிய ஆரம்பித்ததும்... அப்பா... என்ன திருப்தி..!! தண்ணீர் வைத்து (அலுமினியம் கெட்டில் ) , பில்டரில் பொடி போட்டு, வெந்நீர் விட்டு, தட்டி கொட்டி இறக்கி, ஆத்துக்காரருக்கு, மாமனாருக்கு, மச்சினர்களுக்கு கொடுத்து விட்டு, மாமியாரும் மாட்டுப்பொண்ணும் சாப்பிடுவார்கள். (மாட்டுப்பொண் சாப்பிட மாமியார் permission வேணும்.. )

"அம்மா சச்சு, நீயும் ஒரு வா குத்திக்கோ... இல்லேன்னா வேல ஓடாது... இன்னும் கொள்ள வேல கெடக்கு .." .. இது மாமியார்.. "சரிம்மா.. இதோ ஆச்சு.." ..இது மாட்டுப்பொண்....

இந்த மாமியாருக்கு ஏதாவது கத்திண்டே இருக்கணும்.... அப்பத்தானே தன் presence ஐ காமிச்சுக்க முடியும் !!

"ருக்கு... பசங்கள எழுப்பி கொல்ல பக்கம் அனுப்பு; இந்த மாலுவையும், ஜானுவையும் பாரு, துணி வெலகறது கூட தெரியாம அப்படி என்ன தூக்கம் பொம்மனாட்டி பசங்களுக்கு ? சச்சு, என்ன சமையல்... கறிகா எடுத்துண்டு வா.. இங்க உக்காந்தாப்புல நறுக்கித் தரேன். ஏண்டாப்பா, கிட்டா, தஞ்சாவூர் வரைக்கும் போணும்னியே .. பொழுதோட, ரெண்டு வா சோத்த அள்ளி போட்டுண்டு, போயிட்டு வா.. "ஏன்னா.. அந்த மேலாத்து மாமா ஏதோ ஜாதகக் காராள பத்தி சொன்னாரே.. விசாரிச்சேளா ? எல்லாம் நான் சொல்லித் தரணும் .. யாருக்கு பொறுப்பு இருக்கு இந்தாத்துல...!!"

இன்னும் எவ்வளவோ கத்தல்கள், புலம்பல்கள்... எல்லாரும் காதைத்தான் பொத்திக்கணும்... இத்தனை கத்தலுக்கு நடுவில் ஜபம் வேற.. மணிய உருட்டிண்டு... பாதி வசவுகள் சென்சார் பண்ணப்பட வேண்டியவை !!

இதெல்லாம் நடந்துதான்னு கூட அப்புறம் no crosschecking .. எல்லாம் கத்தலோட சரி.. மாட்டுப் பொண்ணுக்கு இதெல்லாம் பக்கத்தாத்து counterpart கிட்ட சொல்லி புலம்ப விஷயங்கள் ஆகும்.. (வேறென்னத்த பேச இருக்கு ?) ஆனா முத்தாய்ப்பா.. "எவ்வளவு கத்தினாலும், பாவம், மாமியாருக்கு வெள்ள மனசு " ன்னு ஒரு certificate வேற.. ஏன்னா.. முதல் நாள்தான் ஏதாவது நல்ல காரியமா செஞ்சிருப்பா.. (என்ன... உக்காத்தி வெச்சு சாதம் போட்டிருப்பா.. இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ ன்னு உபசாரம் பண்ணி இருப்பா; எனக்கு அப்பறம், இந்த அட்டிகை உனக்குத்தான் ன்னு ஒரு statement விட்டுருப்பா...) இந்த பெண்களெல்லாம் அவ்வளவு "அல்ப சந்தோஷிகள்”

9.30 க்கு சாப்பாடு ஆயிடும். லேடீஸ் வேலை முடிய சுமார் 11 மணி ஆகும்...அப்புறம், ஏதாவது அரைக்க, உடைக்க, குத்த, நெல் புழுக்கி, அரிசி ஆக்கி குதிருக்குள் போட என்று எத்தனை எத்தனையோ...மணை பலகையை தலைக்கு வைத்து, கொல்லைக் கதவருகில் (காற்றுக்காக ) கொஞ்ச நேர படுக்கை... அதுவும் மாமியாருக்கு மட்டும்தான் allowed !பக்கத்தாத்து பெண்களுடன் பேச்சு, தாயம், க்ரோஷா பின்னுதல், ஒருவருல்லோருவர் தெரிந்ததை சொல்லிக்கொடுத்துக் கொள்ளல், பேப்பரில் கோலம் போடுதல்.... இப்படி பொழுது போகும்... 

மணி 1 1/2 ஆச்சுன்னா , மத்தியான காப்பி... காத்தால பாலை காச்சி, தண்ணியில் வெச்சா கெட்டுப் போகாம இருக்கும். குழந்தைகளுக்கு ரெண்டாம் வேளை தயிர் சாதம் - கண்டிப்பாக சாப்பிடணும். பாக்கி சாதத்த பிசிஞ்சு வெச்சிருப்பா. சாயந்திரம் பசும்பால் தான்... ராத்திரி குடிக்க. 

3 மணிக்கு ஆண்களுக்கு மட்டும் டிபன்.. குழந்தைகளுக்கு.. கொறிக்க பக்ஷணம்... அப்புறம் தலை பின்னல்...மூஞ்சி அலம்பல்... 5 மணி ஆச்சுன்னா... லேடீஸ் எல்லாம், கையில் எண்ணெய் கிண்ணத்துடன் தெருக்கோடி கோவிலுக்கு கிளம்பிடுவா... மகா ஜாலியான நேரம்.. எல்லார் தலையையும் உருட்டி, வம்பு பேசி, கொஞ்சம் உபயோகமாகவும் பேசி, மாட்டுப் பொண்ணை அலசிஆராஞ்சு , ஒத்திட்டு பாத்து .. (வேறொரு பக்கம் இதுக்கு எதிரான discussion நடக்கும் !!) ... 7 மணிக்கு வந்தா... சாப்பாடு முடிஞ்சு... 9 மணிக்கு லைட் ஆப் !! பெண்கள் மட்டும் சமையல் உள் ஒழித்து அலம்ப ஒரு மணி நேரம் ஆகும் !!

3 comments:

  1. Simply superb.. Day to day life in a agraharam (unknown to many ppl like me)is well brought out
    Rekindled my reading habit
    Eagerly Waiting for ur nxt post👍

    ReplyDelete
  2. Thanks. I have posted around 22 articles. Pl. refer to the menu on the left hand side

    ReplyDelete
  3. Any english translation available please

    ReplyDelete