Saturday, September 24, 2016

VK & DOGS ....

 நாயும், நானும்.

எனக்கு சின்ன வயசுலேர்ந்து நாய்ன்னா ரொம்ப பயம். இந்த அதீத பயம் எப்போ, ஏன், எப்படி ஆரம்பிச்சுதுன்னு ஞாபகம் இல்ல. ஆனா, நெனவு தெரிஞ்ச நாள் லேர்ந்து பயம் தான்.
யார் வீட்டுக்காவது போய் , அவா வீட்டில நாய் இருந்தா, என்ன ஆனாலும் அந்த வீட்டுக்குள் நுழையவே மாட்டேன். நாயை சும்மா கட்டிப் போட்டால் மட்டும் போறாது; அது கண் காணாமலும் இருக்க வேண்டும்.
இந்த நாய் வளக்கறவா எல்லாம் சொல்ற லாஜிக், எனக்கு இன்னி வரைக்கும் புரிஞ்சதில்ல.
"பயப்படாதேங்கோ, அவ ஒண்ணுமே பண்ண மாட்டா; ரொம்ப நல்லவ"
"அச்சோ, அவன் கொழந்த மாதிரி, சும்மா கிட்ட வந்து மோந்து பாத்துட்டு, அந்தண்ட போய் சமத்தா ஒக்காந்துடுவான் "
"கடிக்கிற நாய் கொலைக்காது. நீங்க கேள்விப்பட்டது இல்லையா ?" ன்னு நமக்கு பழ மொழி டெஸ்ட் வேற.
இவ்வளவு பேசுவாளே தவிர, நாயை அந்த ரூமை விட்டு அனுப்ப மாட்டா; ரொம்ப சொன்னா, என்னை அனுப்பிச்சுடுவா !
அப்புறம் நாய் மேல் ஒரு கண்ணும், பாதி மனசும் வெச்சிண்டு, நான் ஒக்காந்திருப்பேன்;
எனக்கு ஹார்ட் பீட் எகிறி, "டக் டக் " சத்தம் (ஹார்ட் அடிக்கறது) stethescopeஇல்லாமலே வெளில கேக்கறது , அவாளுக்கு தெரியாது.
இதுல ஒண்ணு  கவனிச்சேளா? "அவள், அவன்" ன்னு அவா எல்லாம் பேசறது நாயை பத்தி... அவ்வளவு பாசமாம்.
"உங்க குழந்தையை எங்க காணோம்?" ன்னு கேட்டா, "அது விளையாடப் போயிருக்கு; ஸ்கூலுக்கு போயிருக்கு; இப்போ வந்துடும்; அதுக்கு பிடிக்குமேன்னு Maggiதான் குடுக்கப் போறேன் " ம்பா... (maggiபாசத்தினால அல்ல, வேலை  கொறச்சல் !!)
"உங்க husband எங்க" ன்னா, அதுக்கும் "அது ஆபீஸ் லர்ந்து வர ஆறு மணியாகும் " ன்னு....
ஆக, அங்கே மனுஷா எல்லாம் பொதுவா "அது" ; நாய் மட்டும் "அவள், அவன்"...
என் பையனிடம் ரெண்டு நாய் இருக்கு... skype ல பேசலாம்னு போட்டா, மொதல்ல இந்த நாய்கள் மூஞ்சிதான் தெரியும்.
"நாயை பத்தி விசாரிக்கலைன்னா  அவனுக்கு கோபம் வந்துடும்.
"நாய் எப்படிடா இருக்கு? " ன்னு கேட்டா, "அம்மா, அவளுக்கு நல்ல பேர் இருக்கு, நாய்ன்னு எல்லாம் சொல்லாதே " ம்பான்.
நாயை நாய்ன்னு சொல்லாம எப்படி சொல்றது ?
"நாயா, தாயா" ன்னு கேட்டா, பட்டுன்னு "dogsன்னுட்டான் ... (கவனிக்க.. dogsன்னு சொல்லலாம்; நாய் ன்னு சொல்லக் கூடாது !!)
  நிற்க...
என் நாய் அனுபவங்களை பத்தி பாப்போம்...
அனுபவம் 1  
அண்ணா நகர்ல குடி இருந்தேன். ஒருநாள், குமுதத்தில் இருந்து
(நமக்கு கஷ்ட காலம் எப்படி எல்லாம், எங்கே இருந்தெல்லாம் வரது பாருங்கோ !)

ஒரு நிருபர் வந்து "All India Radio " என்கிற பேரை "ஆகாஷ்வாணி" ன்னு மாத்தினது கரெக்டா" - என் அபிப்ராயம் கேட்டா. நானும் ஏதோ, நான் சொல்ற பதிலில் தான் இந்த பெயர் மாற்றமே நடக்கப் போறதுங்கற மாதிரி நெனச்சு, என் கருத்தை, வள வள என்று சொன்னேன். (குகுதத்தில், அது ஒரு நாலு லைன் தான் வந்ததுங்கறது வேற விஷயம் !!)
அதோட நிறுத்தி இருக்கலாமோன்னோ..
அவர்  "இங்க உங்க friendயாராவது இருந்தா சொல்லுங்கோ. அவாளையும் பேட்டி (!!) எடுக்கறேன்" ன்னு சொன்னார். நாலு வீடு தள்ளி இருந்த ஒரு மங்கை, தெருவில் பாத்து பேசித்தான் பழக்கம். "அவா போட்டோவும் , பேரும் என் மூலமா புக்ல வரப்போறதுன்னு" ரொம்ப ஆசையா அவா ஆத்துக்கு கூட்டிண்டு போய், ஸ்டைல் ஆ கேட்டை திறந்து , உள் படி வரைக்கும் போனேன். அவ்வளவு தான் தெரியும்.. ஒரு குட்டி பொமரேனியன் நாய் குலைத்துக் கொண்டே ஓடி வர, ("எடுத்தது கண்டனர் , இற்றது கேட்டனர்" ன்னு கம்பன் சொன்னா மாதிரி)அங்கே பிடித்த ஓட்டம், கேட்டை தாண்டி வந்துதான் நின்றது... அந்த அவசரத்திலும் கேட்டை மூட மறக்க வில்லை.. கேட்டில் இடித்து, காலில் ரத்தக் காயம் வேறு.. இதுலே தமாஷ் என்னன்னா , அந்த நிருபர், என்ன நடக்கிறதுன்னு தெரியாம, என் பின்னாலேயே ஓடி வந்தது தான் !!
அப்புறம் அவள் பேட்டி வந்து தான்னு கேக்கறேளா ? யாருக்குத் தெரியும் !! (என்னுது வந்துது !!)    
ஒலிம்பிக்ஸ்ல மட்டும் என்னை ஓட விட்டு, பின்னால் ஒரு நாயை அவுத்து விட்டா, நான் கோல்ட் மெடல் வாங்குவது நிச்சயம்.
அனுபவம் 2 

மௌபரீஸ் ரோட் ல ஒரு தனி வீட்டில குடி இருந்தோம். அப்போ எல்லாம் பாட்டில் பால். காலம்பர 5 மணிக்கு டெப்போ க்கு வந்துடும்..
அந்தத் தெருவில் நேரே போய் , வலது பக்கம் திரும்பினா டெப்போ .
எனக்கு எல்லாத்திலையும் அவசரம். 5 மணிக்கெல்லாம், இருட்டுல பால் வாங்க பொறப்பட்டுட்டேன்..
ஒரு பங்களாவில ரெண்டு அல்சேஷன் நாய்கள்... தப்பு தப்பு DOGS . வேலைக்கார பையன் அவைகளை "வாக்கிங்" கூட்டிண்டு போகணும் போல. சங்கிலியை பிடிக்க மாட்டானோ ? DOGSரெண்டையும் அவுத்து விட்டுட்டு, சாவகாசமா வரான்.. அதுக்குள்ளே அந்த ரெண்டு அல்சேஷனும் பாஞ்சு வந்து, பாவம் போல நடந்திண்டிருந்த என் மேல பாஞ்சு, கீழேயே தள்ளிடுத்துகள் ! நான் பயந்து அலற, அந்த பையன் மெள்ளமா வந்து, அவைகளை விலக்கி, என்ன கண்டுக்காம, போனான்.. அப்புறம் நானே எழுந்து, வாய் வழியா வெளில வந்துட்ட ஹார்ட்ட உள்ளே தள்ளிட்டு, போய் பால் வாங்கிண்டு வந்து சேந்து, படுத் துண்டுட்டேன்.. நாய்மேல விட, "ஏதோ வசந்தா குரல் மாதிரி கேக்கறதேன்னு நெனச்சிண்டே தூங்கிப் போயிட்டேன்" ன்னு சொன்ன இவர் மேல கோபம் அதிகம்.

அனுபவம் 3 

ராஜா அண்ணாமலை புறத்துல, ரெண்டாவது மாடி flat . மூணாவது மாடிக்கு, நாயும் குடித்தனுமுமா ஒருத்தர் வந்தார்.        
நான் எப்ப எல்லாம் பயந்துண்டு வாச கதவை தொறந்துண்டு வெளில வருவேனோ, அப்ப எல்லாம் அந்த நாய், நாலு நாலுபடியா தாண்டி என் மேல பாய வரும்..
இனிமேலும் தாங்க முடியாது..."பொறுத்ததுபோறும்.. பொங்கி ஏழு" ன்னு நான் கீழே போய் , எல்லா flatக்காராளுக்கும் கேக்கறாப்பல, கத்தினேன்.
(ஏன் அந்த நாய் owner flatக்கு போய் ஞாயம் கேக்க வேண்டியது தானே? ங் கரேளா. மாட்டேனே;அங்கே நாய் இருக்குமே)
"எனக்கு ஹார்ட் ரொம்ப வீக்; எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தா அந்த நாய் தான் பொறுப்பு" ன்னு கத்தினேன்.
அவர் இந்த வம்பே வேண்டாம்னு, வீட்டை காலி பண்ணிண்டு போயிட்டார்...
இந்த மாதிரி ஏன் எனக்கு மட்டும் நடக்கிறது ?
நாம பயந்தா , நாய் “சென்ஸ்” பண்ணிடுமாமே ? அப்போ அது பயமில்லாம பேசாம தானே இருக்கணும் ? ஆனா தூரத்துமாம்.
"நாய் ஓட ஓட விரட்டும்"
"நாய் நன்றி உள்ள பிராணி"
"நாய் காவலுக்கு கெட்டிக் காரன் "
"குலைக்கிற நாய் கடிக்காது"
ன்னு எல்லாம் வஜனங்கள் !!
அந்த நாய்க்கு தெரியல்லே...
"நாயை குளிப்பாட்டி நடு வீட்டிலே வெச்சாலும் அது, வாலை குழச் சிண்டு நடு ரோடுக்கு தான் போகும்"
"நாய் வாலை நிமித்த முடியாது"
ன்னு, பழ மொழிகள் ;
"சீ, நாயே" ன்னு வெசவு;
"நாய் மாதிரி வள்ளு வள்ளு ன்னு குறைக்காதே "
இப்படி இதே ஜனங்கள், தங்கள் இனத்தைப் பத்தி பேசறது, அவைகளுக்கு தெரியறது இல்ல.
இப்பவும் ரோடில் நாயைக் கண்டா , அடுத்த சைடுக்கு ரோடை க்ராஸ் பண்ணி போயிடுவேன், பஸ் வரத கூட பாக்காம.
அப்பவும் அந்த நாய் என்னை முறைக்கிற மாதிரி ஒரு தோற்றம் !
ஒரு வேளை நானே ஒரு நாயை வளத்தா இந்த பயம் போயிடுமோ ?


No comments:

Post a Comment