Saturday, September 10, 2016

TRAIN TRAVEL .....

ரயில் பயணம்...

 அப்போ எல்லாம் ஊருக்கு போவது என்பது ரொம்ப அபூர்வம்... அதுவும் குடும்பத்தோட-
ஆபீஸ் டூர் என்பதும் கிடையாது...

குடும்பத்தோடு என்றால் வெளியூரில் நடக்கும் கல்யாணத்துக்கு  அல்லது கல்யாணம் முடிந்து குல தெய்வக்கொவிலுக்கு

முக்கால் வாசி ரயில்..பாசென்ஜெர் தான்... ஒவ்வொரு சின்ன சின்ன ஊரிலும் நின்று நின்று போகும்.
அதனாலேயே..அந்த ஊரில் சாப்பிட விஷேமானது என்ன என்று தெரியும்.
திண்டுக்கல் மலைப்பழம்பேரளம் வடை  என்று
(போன வரம் திருநள்ளாறு போற வழியில் பேரளம் வடை கேட்டால்... எல்லாரும் திரு திரு.. !!)

மற்றப்படி வாங்கி சாப்பிடுவது அபூர்வம்.
பயணத்துக்கான முதல் ஏற்பாடு... சாப்பாடு...!
சத்து மாவு பொடித்து கலக்க வேண்டும்.
(பெரியவர்களுக்கு, மடிக்காரகளுக்கு, முக்கியமான உணவு)
மிளகாய் பொடி இடிக்க வேண்டும்.
இட்லிக்கு அரைக்க வேண்டும்
கிளம்பும் அன்று , ரொம்ப விடிகாலையில் எழுந்து...
இட்லி வார்த்துகிண்ணத்தில் மிளகாய் போடி+ நல்லெண்ணெய்+ கொஞ்சம் தண்ணி கலந்து, இட்லியை பிரட்டி, ஒரு தூக்கில் அடுக்கப்படும்.
முறுக்குதேங் குழல் என்று பக்ஷணம் பண்ணப்படும்..
முதல் நாளே புளிக்காச்ச்சல் காச்சி, காலையில் புது சாதம் வடித்து, புளியஞ்சாதம் கலந்து, வடாம் வறுத்து... அது ஒரு தூக்கில் ரெடி.
கூஜாவில் தண்ணீர் ரெடி.

துணி மணி பாக்கிங் எல்லாம் ரொம்ப குறச்சல் !

பயணம் என்னவோ ரொம்ப தூரம் இருக்காது... ஆனால் நேரம் ஒரு நாள்... காலை டு மாலை.
ரயிலடிக்கு போக மாட்டு வண்டி. பெண்களும், குழந்தைகளும் வண்டியில் ஏற, ஆண்கள் நடை.. பின்னாடியே.
பத்து, பதினைத்து பேர் தேறுவார்கள் இந்த பயணத்துக்கு !
இதில் குழந்தைகள்.. தங்கள் சந்தோஷத்தை கும்மாளம் போட்டுக் காட்டுவார்கள்.
பெண்கள் அடக்கம் (!) காரணமாக மனதின் குஷியை வெளிக்காட்டாமல் ஒரு excitement ஓடு.
ஆண்கள், எதோ தாங்கள் அடிக்கடி போகிறவர்கள் மாதிரியும், இதில் என்ன ரொம்ப த்ரில் என்கிற மாதிரியும், எல்லோரையும் பத்திரமாக கொண்டு வந்து சேர்க்க வேண்டுமே என்று கவலைப்பட்டுக்கொண்டு... பேசிக்கொண்டு....

ரயிலடியில் காத்து.. ரயில் வந்ததும் சாமான்களை ஏற்றி... குழந்தைகள் ஜன்னலோர இடம் பிடித்து... கொஞ்ச நேரத்தில் கண்ணில் கரி விழ கண்ணை கசக்கி ...
சுமார் பத்து மணியானதும்... சாப்பாட்டுக்கடை..
பெண்கள் தையல் இலையை எல்லோர் கையிலும் கொடுத்து, புளியஞ்சாதம், தயிர் சாதம் வடாம், ஊறுகாய் பரிமாற, ரசித்து, ருசித்து சாப்பிட்டு, கீழே இறைத்து, கூஜாவிலிருந்து தண்ணீர் சரித்து குடித்து...
கற்றல்களும், அமர்க்களமும் ....
" ராஜு, சாதத்தை சிந்தாமல் சாப்பிடு; கிட்டு, கொஞ்சம் தயிர் சாதம் போட்டுக்கோ; பாப்பா, அவனோட என்ன சண்டை எப்போ பாத்தாலும்; சவட்டிப்புடுவேன்; (அப்போ எல்லாம் வீட்டுக்கு ஒரு பாப்பா !!) ; தண்ணியை தூக்கி சாப்டேண்டா-கடங்காரா !; வைத்தி, எட்டி பாக்காதே; கையை  வெளில நீட்டாதே.. சாம்பு... அம்மாளத்துக்குத்தான்
சித்த நாழி  ஜன்னலோரம் குடேண்டா; பாட்டி சத்து மாவு எடுத்துக்கறேளா ?
" இத்யாதி இத்யாதி பேச்சுக்களுடன் சாப்பாட்டு கடை முடியும்.
இந்த ஒரு நாள் பயணத்தில் ரயில் மாற வேண்டி இருந்தால்... ஒரு சின்ன ஸ்டேஷனில் இறங்கி.. மரத்தடி பார்த்து உக்காந்து... இட்லி கடை பரப்பப்படும்.. அப்புறம் flask இல் இருந்து காபி. இங்கே "ஓடாதே; கூச்சல் போடாதே; தண்டவாளத்துக்கு கிட்டக்க போகாதே" என்று ஓயாது வசவு.
இதில் மடிசாரில் புது மாட்டுப்பெண் இருந்தால் , பயந்து, ஒதுங்கி, அரவணைக்கப்பட்டு, சாப்பிட உபசாரம் செய்யப்பட்டு, பாத்திரம் அலம்பும் வேலை வாங்கப்பட்டு... !!

இதே குஷி ஊரிலிருந்து திரும்பும்போது... குறைவாகத்தான் இருக்கும்.

இதை எல்லாம் நாவலில் படித்து அனுபவிக்க வேணும்னா ...
தா. ந. குமாரசாமியின் "அன்பின் எல்லை" படியுங்கள்...



No comments:

Post a Comment