Tuesday, September 6, 2016

FESTIVALS - 4. PONGAL.....

பொங்கல்

சங்கராந்தி என்பது, இந்தியா முழுவதும் கொண்டாடும் ஒரு பண்டிகை.
நம் எல்லா பண்டிகைகளும் சந்திரனை வைத்து, இன்ன நாளில் கொண்டாட வேண்டும் என்று இருக்கும். ஆனால், சங்கராந்தி மட்டு, சூரியனை அடிப்படையாக கொண்டது.

சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிப்பதால், மகர சங்கராந்தி.
தஞ்சாவூர் மாவட்டத்தில், அறுவடை மாதம் ஆனதால் பொங்கல் பண்ணி , சூரியனுக்கு நெய்வேத்யம்.
மார்கழி முடிந்து, தை ஆரம்பிக்கும்போது, காய் கறிகளும் நிறைய இருக்கும்.
இது சூரியனுக்கு நன்றி சொல்லும் பண்டிகை. அதோடு, உழவிற்கு பயன் படும் மாட்டுக்கும் பூஜை.
அதனால் தான் தமிழ் நாட்டில், இதை "உழவர் திருநாள்" என்று பெயர் வைத்தார்கள்.

இந்த பண்டிகை மூன்று நாட்கள் கொண்டாடப்படும்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14 ம் தேதி வரும் இந்த பண்டிகை, 8 வருஷத்துக்கு ஒரு முறை ஜனவரி 15 ம் தேதி வரும். ஒவ்வொரு வருஷமும் சில நாழிகைகள் தள்ளி, 8 வருஷத்துக்கு ஒரு நாள் தள்ளும்.
 முதல் நாள் - போகி
"பழயன கழிதலும், புதான புகுதலும்" ன்னு சொல்லி, மெட்ராஸ் ல கண்ட பழைய குப்பையெல்லாம் போட்டு, எரிச்சு, pollution create பண்ற மாதிரி, எங்க ஊர்ல எல்லாம் கிடையாது.
போகி பண்டிகை தான். Religious significance எதுவும் கிடையாது.


 வாசலில், பெரிய கோலம், காவி..
சமையல் - பாயசம், ஆம வடை, பச்சடி, கறி, கூட்டு, சாம்பார், ரசம், போளி (போளி தான் ஸ்பெஷல்) என்று வகையான சமையல்.
இரண்டாம் நாள் பொங்கல்
பொங்கலுக்கு நாங்க எல்லாம் புதுசு போட்டுக்கறது இல்லை. தீபாவளிக்குத்தான் புதுசு. ஆனால், பிராமணர்கள் அல்லாதவர்கள் பொங்கலுக்கும் புதுசு வாங்கிப்  போடுவார்கள்.
பொங்கலுக்கான சாமான்கள், போகிக்கு முதல் நாளே வாங்கி விடுவோம்.
கரும்பு இரண்டு - முழுசாக; மஞ்சள் கொத்து; இஞ்சிக் கொத்து; பூவன் பழம், தேங்காய், தொடுத்த பூ; உதிரி பூ ... இப்படி நிறைய சாமான்கள்.
பொங்கல் அன்று, நாட்டுப் புறத்தில், சாயங்காலம் தான் பொங்கல் பானை வைப்பார்கள்.
ஆனால் நாங்கள், தை மாசப் பிறப்பு எத்தனை மணிக்கு என்று பஞ்சாங்கத்தை பார்த்து, அந்த நேரத்தில் தான் வைப்போம்.
காலையிலிருந்து சாப்பிடுவதில்லை...
வெண்கலப் பானையில், அரிசி மாவை குழைத்து பூசி, அதில் காவியால் சூரிய, சந்திரனை வரைந்து, கழுத்தில் மஞ்சள், இஞ்சிக் கொத்துகளை கட்டி, பால் விட்டு ரெடியாக வைத்திருப்போம்.
பச்சை அரிசியை கொஞ்சம் வறுத்து வைத்து, வெல்லம் பொடித்து வைத்து, ஏலக்காய் பொடித்து, தேங்காய் துருவி வறுத்து, முந்திரிப் பருப்பு, திராக்ஷை வறுத்து எல்லாம் ரெடியாக இருக்கும்.


ஏழு விதக் கறிகாய்களை,க் கிழங்கு, பட்டாணி, சேப்பங்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு  இப்படிஎல்லாகாய்களையும்கொஞ்சம்பெரியதாகவேநறுக்கி, பருப்பு போட்டு, அரைத்து விட்டு சாம்பாரையும் பண்ணி வைத்து விடுவோம்.
அந்த குறிப்பிட்ட நேரம் வந்ததும், அடுப்பில் வெண்கலப் பானையை வைத்து, பால் பொங்கியதும், அரிசியை போட்டு, குழைய வேக வைத்து, வெல்லம் , ஏலக்காய், இன்ன பிற சாமான்களையும் சேர்த்து, நிறைய நெய் விட்டு, இறக்குவோம்.


திறந்த வெளியில் ரதம், சூரியன் சந்திரன் கோலங்கள் போட்டு, பொங்கலை வெண்கலப் பானையோடு வைத்து, இரண்டு பக்கமும் கரும்பு வைத்து, தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் தேங்காய் எல்லாம் வைத்து .. ரொம்ப நாள் எங்காத்தில்  சாஸ்த்ரிகள் வந்து பூஜை பண்ணுவார். மெட்ராஸ் வந்ததும், அந்த பழக்கத்தை விட்டு, அப்பாவே தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி, பூ போட்டு பூஜை பண்ணுவார்.

பிறகென்ன .. சாப்பாடு தான். பொங்கல், சதம், சாம்பார், இரண்டு தினுசு கறி,, உளுத்தம் வடையுடன் சாப்பாடு.

வெண்கலப் பானையை அன்று ஒழித்து, தேய்க்கப் போடுவதில்லை. அதில் இருக்கும் மஞ்சள் இலைகளை மட்டும் பத்திரமாக எடுத்து வைப்போம்.

அன்று மாலை, சின்னப் பெண்கள் ஒரு பானையை அலங்கரித்து எடுத்துக்கொண்டு, வீடு வீடாக பொய், பானையை நடுவில் வைத்து, கும்மி கொட்டுவார்கள். எல்லா வீடுகளிலும் அரிசி , காசு என்று கிடைக்கும். எல்லா பெண்களும் பாவாடை சட்டையில் கொள்ளை அழகாக இருப்பார்கள்.

மூன்றாம் நாள்


கனுப்பிடி .. காக்கைக்கு சாதம் வைப்பது. இது அண்ணா, தம்பிகள் சௌக்கியமாக இருக்க ஒரு வேண்டுதல். அதற்கு சகோதரகளிடமிருந்து, அல்லது பிறந்த வீட்டிலிருந்து பணம் வரும் !

எங்கம்மாக்கு, மாமாவிடமிருந்து, வருடம் தவறாமல் 5 ரூ. மணி ஆர்டர் வரும்.

காலம்பர சீக்கிரம் எழுந்து (காபி கூட கிடையாது) , முதலில் பெரியவர்களிடம் 'பசும்' மஞ்சளை கொடுத்து, நெற்றியில் தீத்திக் கொண்டு, திறந்த வெளியில், சின்ன சின்ன கோலங்கள் போட்டு, அதன் மேல் இரண்டிரண்டாக மஞ்சள் இலைகளை வைத்து, அம்மா எடுத்துக் கொடுக்க, பெண்கள் எல்லாரும், பொங்கல், வாழைப் பழம், சாம்பார் தான்கள்  , கரும்பு துண்டுகள், மஞ்சள் சாதம், குங்கும சாதம் என்று வரிசையாக கிள்ளி வைப்போம்.
அந்த கலர் கலரான  சாதங்களை பார்த்து காக்கைகள் பயந்து பறப்பதுதான் நடக்கும் !!

பிறகு, தலைக்கு ஸ்நானம் பண்ணி வந்தால், முதல் நாள் சாம்பார், கறி மீந்ததை எல்லாம் சுண்ட கொதிக்க விட்டு, 'எரித்த குழம்பு' ன்னு வெச்சிருப்பா. பழைய சாதத்தை தயிர் விட்டு பிசிஞ்சு வெச்சிருப்பா. இலை ஏடு போட்டு, தயிர் சாதம், சாம்பார் தொட்டுக்கொண்டு குளுமையாக சாப்பிடணும். அப்புறம் தான் காப்பி எல்லாம். பெரியவர்களுக்கு நமஸ்காரம் பண்ணினால் வருமானம் வரும்.
அன்றைய சாப்பாடு... கலந்த சாதங்கள்.
அன்று மாலையும் கும்மி உண்டு.

அன்று மாடு வைத்திருப்பவர்கள் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவார்கள்.
மாடுகளுக்கு காலையிலிருந்து ஆகாரம் கிடையாது. மாட்டை குளிப்பாட்டி, சந்தனம் குங்குமம் இட்டு, நெட்டியில் கலர் கலராக மலைகள் விற்கும். ரொம்ப அழகு.. அந்த மாலைகளை போட்டு, சாயந்திரம் தெருவில் ஒட்டி வருவார்கள். மாடெல்லாம் பசியோடு, கோபமாக இருக்கும் ! மாட்டிற்கு எல்லார் வீட்டிலையும் ஆரத்தி எடுத்து, மஞ்சள் குங்குமம் இட்டு, பொங்கல் வாழப் பழம் கொடுத்து அனுப்புவார்கள்.


"மஞ்சு விரட்டு" நடக்கும். ஆனால், நாங்கள் போய் பார்த்தது இல்லை. மாடு முட்டும் என்று பயம் !

மாட்டுப் பொங்கல் அன்னிக்கு சாயந்திரம், "பூம் பூம் மாடு" என்று, ஒரு காளை மாட்டுக்கு விசேஷ அலங்காரம் பண்ணி, முதுகில் நல்ல கலர் துணியெல்லாம் போட்டு, உடுக்கை அடித்துக் கொண்டு ஒருவன் வருவான். ஒவ்வொரு வீட்டிலும் நின்று ஏதோ ஒரு நல்  வாக்கு சொல்லுவான். அந்த மாடு, அவன் சொல்வதை ஆமோதிப்பது போல், தலையை ஆட்டும்.. அப்போது கிண் கிணி கிணி என்று மணி ஓசை கேட்கும். எல்லார் வீட்டிலையும் அரிசி, கரும்பு, பழம், காசு என்று கொடுப்பார்கள்.
இப்படியாக மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல் பண்டிகை. ஊரே அமர்க்களப் படும்.

எப்படி இவ்வளவு சாப்பிட்டோம் - அதுவும் தொடர்ச்சியாக மூன்று நாளைக்கு ! இப்போது நினைத்தால் அதிசயமாக தோன்றுகிறது. இப்போதைய குழந்தைகள் , அதுவும் சென்னையில், இவ்வளவு சந்தோஷமாக இந்த பண்டிகைகளை, அர்த்தம் புரிந்து கொண்டாடி, இவ்வளவு சாப்பிடுகிறார்களா ங்கறது சந்தேஹம் தான்.




 

No comments:

Post a Comment