Saturday, September 10, 2016

GOOJA.........

கூஜா.. 

முன்னாளில் ரயில் பிரயாணங்களில் முந்தி நிற்பது கூஜா..
கூஜா என்பது எல்லார் வீட்டிலும் ஒரு முக்கியமான அங்கத்தினர் !
கல்யாணத்தில் முக்கிய சீர் ! வசதி இருந்தால் வெள்ளியில்இல்லேன்னா வெங்கலத்தில் கண்டிப்பாக உண்டு ! (இப்போது நம்மால் பழசையும் விடமுடிய வில்லை... ஆனால் இந்த நாளில் பித்தளையை ரசிப்பவரும் இல்லை.. அதனால் எவர்சில்வருடன் பித்தளை போட்டியிட்டு தோற்று விட்டது... வழி விட்டு ஒதுங்கி விட்டது...)

ரயிலில் போவதே அபூர்வம்... அதுவே ஒரு குஷி... ட்ரங்கு பெட்டியில் (கொஞ்சம் துரு பிடித்திருந்தால் இன்னும் விசேஷம்... கட்டுப்படியானால் , அதுக்கு பச்சை பெயின்ட் உண்டு...
(எங்கள் எல்லார் கல்யாணத்திற்கும், புக்காத்துக்கு பாக்கிங், பெரிய, புது  பெயின்ட் வாசனையுடன் ட்ரங்கு பெட்டிதான்.. என் சாய்ஸ் சாம்பல் நிறம் ) 

சரி; கூஜாவுக்கு வருவோம்...
ஊருக்கு புறப்படும் முன்பு, கூஜாவை பள பள என்று   புளி போட்டு   தேய்த்து (அடுப்பு சாம்பலில்தான்), தண்ணீர் நிரப்பி... (என்ன, எல்லாம் குழாய் தண்ணிதான்... மினரல் என்றால் அர்த்தம் கூட தெரியாது) .. சிறுவர் யாராவது தூக்குவார்கள்... மிக பெருமையாக... (பொறுப்பு குடுத்துட்டாளாம் !)
ரயிலில் தாகம் எடுத்தால், பித்தளை டம்ளரில் நீரை சரித்து விட்டுக்கொடுக்கும் அழகே தனி. அந்த பொறுப்பு ஆத்து மாட்டு பொண்ணுக்கு...!!
ரயில்எல்லாம் வேகம் குறைவு தான்... எல்லாம் பாசெஞ்சர்  வண்டி...நின்று நின்று போகும்...
பயணம் என்ன... ஒரு டவுனிலிருந்து... மூன்று நான்கு டவுன் தள்ளி...
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் , அந்தந்த வீட்டு ஆண் பிள்ளைகள், இறங்கி கூஜாவில் தண்ணீர் நிரப்புவது பயணத்தில் தவிர்க்க முடியாத ஒரு அங்கம்.
அதுவும், மிளகாய் பொடி தடவிய இட்லியை சாப்பிட்டு, கூஜாவிலிருந்து தண்ணீர் குடித்தால் அமிர்தம் !!

அக்ரஹாரத்தில் கூஜாவுக்கு தினசரி வாழ்க்கையில்  ஒரு முக்கியமான பங்கு...
வீட்டு பெரிசுகள் திண்ணையில் உட்காந்துஜமா சேர்த்து சீட்டு... தஞ்சாவூர் ஆக்ரஹாரத்தின் மாற்ற முடியாத பழக்கம் இந்த சீட்டு..
பக்கத்தில் கூஜாவில் தண்ணீர்... மூடி வைக்க மாட்டார்கள்.. ஒரு டம்ளர் அதன் மேல் கவுத்து இருக்கும்...
அதன் அவசியம் .. தாகத்தை தவிர மற்றொன்று உண்டு...
சீட்டுக் கச்சேரியில் மற்றொரு முக்கிய அங்கம்... வெற்றிலை பாக்கு...
அதை போடாவிட்டால்மூளை வேலை செய்யாது இந்த ஆண்களுக்கு...
உள்ளேருந்து மாமி காபி குடுத்து அனுப்புவாள்.. மற்றொரு சொம்பில்..
அப்போஎல்லாரும் கூஜா தண்ணியை கவுத்துவாய் கொப்பளித்து (காலடியில் திறந்த காவாய் .. open drainage ), துப்பி... காபியை சாப்பிடுவார்கள்..

என்னருமை கூஜாவை நான் இன்னும் வைத்திருக்கிறேன் !!


No comments:

Post a Comment