Monday, September 26, 2016

பாட்டியின் மண் பானை சமையல்.....

பாட்டியின் மண் பானை சமையல், அம்மாவின் வெண்கல பானை ஆயிற்று;
எவர் சில்வர் என்று ஒன்று பளபளப்பாக வர, வெண்கல பானை பரணுக்கு ஏறிற்று !
வந்தது ருக்மிணி குக்கர்... ஆஹா... எவ்வளவு எளிமை இனி..சாதம் சமைப்பது...!!
அம்மா எனக்கு குடுத்தாள் கல் சட்டியும், வெண்கல பானையும்...
"அம்மா குடுத்தது... தூக்கிப்போட மனசில்லை..."
பரணுக்கு ஏற்று...அம்மாவின் ஞாபகமாக இருக்கட்டும் !!!
பின்னர் பஜாரில் தலை காட்டியது பிரஷர் குக்கர்.. அதில் சமைப்பது "ப்ரெஸ்டிஜ்"ஆயிற்று;
ருக்மணி போனாள் பரணுக்கு...!!!
எவ்வளவு மகிழ்ச்சி ! அந்த விசில் சத்தம் எவ்வளவு இனிமை !!
பக்கத்தில் நிற்க வேண்டாம், அடிக்கடி கிளற வேண்டாம், எரி வாயு மிச்சம்...
இதெல்லாம் சொல்லப்பட்ட காரணங்கள் ... குடும்பத்தலைவனிடம் !!
 அத்தோடு நின்றதா... ??
 அப்புறம் வந்தது எவர் சில்வர் குக்கர் ! துலக்குவது சுலபம், எல்லோரும்வைத்திருக்கிறார்கள்
இப்போது சொல்லப்பட்ட காரணங்கள் !
 ஆகா.... ஏறிற்று பரணுக்கு இன்னொரு குக்கர்...!!
 தூக்கி போட மனமில்லை... "அடி கெட்டி" ... ஸ்வீட் செய்ய உதவும் - இது சமாதானம்; ]
 இப்போது... எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர்; மைக்ரோ வேவ் !!
 மனைவி சொல்கிறாள் கணவனிடம்...
"வேறு வீடு பாருங்கள்.. சமையல் அறையில் பெரிய பரணுடன் "
 ஆனால்... பாட்டியின் மண் சட்டி கீரையும், கல் சட்டி குழம்பும் எவ்வளவுருசி..

நாக்கு ஏங்குகிறது ... !!!!

Saturday, September 24, 2016

VK & DOGS ....

 நாயும், நானும்.

எனக்கு சின்ன வயசுலேர்ந்து நாய்ன்னா ரொம்ப பயம். இந்த அதீத பயம் எப்போ, ஏன், எப்படி ஆரம்பிச்சுதுன்னு ஞாபகம் இல்ல. ஆனா, நெனவு தெரிஞ்ச நாள் லேர்ந்து பயம் தான்.
யார் வீட்டுக்காவது போய் , அவா வீட்டில நாய் இருந்தா, என்ன ஆனாலும் அந்த வீட்டுக்குள் நுழையவே மாட்டேன். நாயை சும்மா கட்டிப் போட்டால் மட்டும் போறாது; அது கண் காணாமலும் இருக்க வேண்டும்.
இந்த நாய் வளக்கறவா எல்லாம் சொல்ற லாஜிக், எனக்கு இன்னி வரைக்கும் புரிஞ்சதில்ல.
"பயப்படாதேங்கோ, அவ ஒண்ணுமே பண்ண மாட்டா; ரொம்ப நல்லவ"
"அச்சோ, அவன் கொழந்த மாதிரி, சும்மா கிட்ட வந்து மோந்து பாத்துட்டு, அந்தண்ட போய் சமத்தா ஒக்காந்துடுவான் "
"கடிக்கிற நாய் கொலைக்காது. நீங்க கேள்விப்பட்டது இல்லையா ?" ன்னு நமக்கு பழ மொழி டெஸ்ட் வேற.
இவ்வளவு பேசுவாளே தவிர, நாயை அந்த ரூமை விட்டு அனுப்ப மாட்டா; ரொம்ப சொன்னா, என்னை அனுப்பிச்சுடுவா !
அப்புறம் நாய் மேல் ஒரு கண்ணும், பாதி மனசும் வெச்சிண்டு, நான் ஒக்காந்திருப்பேன்;
எனக்கு ஹார்ட் பீட் எகிறி, "டக் டக் " சத்தம் (ஹார்ட் அடிக்கறது) stethescopeஇல்லாமலே வெளில கேக்கறது , அவாளுக்கு தெரியாது.
இதுல ஒண்ணு  கவனிச்சேளா? "அவள், அவன்" ன்னு அவா எல்லாம் பேசறது நாயை பத்தி... அவ்வளவு பாசமாம்.
"உங்க குழந்தையை எங்க காணோம்?" ன்னு கேட்டா, "அது விளையாடப் போயிருக்கு; ஸ்கூலுக்கு போயிருக்கு; இப்போ வந்துடும்; அதுக்கு பிடிக்குமேன்னு Maggiதான் குடுக்கப் போறேன் " ம்பா... (maggiபாசத்தினால அல்ல, வேலை  கொறச்சல் !!)
"உங்க husband எங்க" ன்னா, அதுக்கும் "அது ஆபீஸ் லர்ந்து வர ஆறு மணியாகும் " ன்னு....
ஆக, அங்கே மனுஷா எல்லாம் பொதுவா "அது" ; நாய் மட்டும் "அவள், அவன்"...
என் பையனிடம் ரெண்டு நாய் இருக்கு... skype ல பேசலாம்னு போட்டா, மொதல்ல இந்த நாய்கள் மூஞ்சிதான் தெரியும்.
"நாயை பத்தி விசாரிக்கலைன்னா  அவனுக்கு கோபம் வந்துடும்.
"நாய் எப்படிடா இருக்கு? " ன்னு கேட்டா, "அம்மா, அவளுக்கு நல்ல பேர் இருக்கு, நாய்ன்னு எல்லாம் சொல்லாதே " ம்பான்.
நாயை நாய்ன்னு சொல்லாம எப்படி சொல்றது ?
"நாயா, தாயா" ன்னு கேட்டா, பட்டுன்னு "dogsன்னுட்டான் ... (கவனிக்க.. dogsன்னு சொல்லலாம்; நாய் ன்னு சொல்லக் கூடாது !!)
  நிற்க...
என் நாய் அனுபவங்களை பத்தி பாப்போம்...
அனுபவம் 1  
அண்ணா நகர்ல குடி இருந்தேன். ஒருநாள், குமுதத்தில் இருந்து
(நமக்கு கஷ்ட காலம் எப்படி எல்லாம், எங்கே இருந்தெல்லாம் வரது பாருங்கோ !)

ஒரு நிருபர் வந்து "All India Radio " என்கிற பேரை "ஆகாஷ்வாணி" ன்னு மாத்தினது கரெக்டா" - என் அபிப்ராயம் கேட்டா. நானும் ஏதோ, நான் சொல்ற பதிலில் தான் இந்த பெயர் மாற்றமே நடக்கப் போறதுங்கற மாதிரி நெனச்சு, என் கருத்தை, வள வள என்று சொன்னேன். (குகுதத்தில், அது ஒரு நாலு லைன் தான் வந்ததுங்கறது வேற விஷயம் !!)
அதோட நிறுத்தி இருக்கலாமோன்னோ..
அவர்  "இங்க உங்க friendயாராவது இருந்தா சொல்லுங்கோ. அவாளையும் பேட்டி (!!) எடுக்கறேன்" ன்னு சொன்னார். நாலு வீடு தள்ளி இருந்த ஒரு மங்கை, தெருவில் பாத்து பேசித்தான் பழக்கம். "அவா போட்டோவும் , பேரும் என் மூலமா புக்ல வரப்போறதுன்னு" ரொம்ப ஆசையா அவா ஆத்துக்கு கூட்டிண்டு போய், ஸ்டைல் ஆ கேட்டை திறந்து , உள் படி வரைக்கும் போனேன். அவ்வளவு தான் தெரியும்.. ஒரு குட்டி பொமரேனியன் நாய் குலைத்துக் கொண்டே ஓடி வர, ("எடுத்தது கண்டனர் , இற்றது கேட்டனர்" ன்னு கம்பன் சொன்னா மாதிரி)அங்கே பிடித்த ஓட்டம், கேட்டை தாண்டி வந்துதான் நின்றது... அந்த அவசரத்திலும் கேட்டை மூட மறக்க வில்லை.. கேட்டில் இடித்து, காலில் ரத்தக் காயம் வேறு.. இதுலே தமாஷ் என்னன்னா , அந்த நிருபர், என்ன நடக்கிறதுன்னு தெரியாம, என் பின்னாலேயே ஓடி வந்தது தான் !!
அப்புறம் அவள் பேட்டி வந்து தான்னு கேக்கறேளா ? யாருக்குத் தெரியும் !! (என்னுது வந்துது !!)    
ஒலிம்பிக்ஸ்ல மட்டும் என்னை ஓட விட்டு, பின்னால் ஒரு நாயை அவுத்து விட்டா, நான் கோல்ட் மெடல் வாங்குவது நிச்சயம்.
அனுபவம் 2 

மௌபரீஸ் ரோட் ல ஒரு தனி வீட்டில குடி இருந்தோம். அப்போ எல்லாம் பாட்டில் பால். காலம்பர 5 மணிக்கு டெப்போ க்கு வந்துடும்..
அந்தத் தெருவில் நேரே போய் , வலது பக்கம் திரும்பினா டெப்போ .
எனக்கு எல்லாத்திலையும் அவசரம். 5 மணிக்கெல்லாம், இருட்டுல பால் வாங்க பொறப்பட்டுட்டேன்..
ஒரு பங்களாவில ரெண்டு அல்சேஷன் நாய்கள்... தப்பு தப்பு DOGS . வேலைக்கார பையன் அவைகளை "வாக்கிங்" கூட்டிண்டு போகணும் போல. சங்கிலியை பிடிக்க மாட்டானோ ? DOGSரெண்டையும் அவுத்து விட்டுட்டு, சாவகாசமா வரான்.. அதுக்குள்ளே அந்த ரெண்டு அல்சேஷனும் பாஞ்சு வந்து, பாவம் போல நடந்திண்டிருந்த என் மேல பாஞ்சு, கீழேயே தள்ளிடுத்துகள் ! நான் பயந்து அலற, அந்த பையன் மெள்ளமா வந்து, அவைகளை விலக்கி, என்ன கண்டுக்காம, போனான்.. அப்புறம் நானே எழுந்து, வாய் வழியா வெளில வந்துட்ட ஹார்ட்ட உள்ளே தள்ளிட்டு, போய் பால் வாங்கிண்டு வந்து சேந்து, படுத் துண்டுட்டேன்.. நாய்மேல விட, "ஏதோ வசந்தா குரல் மாதிரி கேக்கறதேன்னு நெனச்சிண்டே தூங்கிப் போயிட்டேன்" ன்னு சொன்ன இவர் மேல கோபம் அதிகம்.

அனுபவம் 3 

ராஜா அண்ணாமலை புறத்துல, ரெண்டாவது மாடி flat . மூணாவது மாடிக்கு, நாயும் குடித்தனுமுமா ஒருத்தர் வந்தார்.        
நான் எப்ப எல்லாம் பயந்துண்டு வாச கதவை தொறந்துண்டு வெளில வருவேனோ, அப்ப எல்லாம் அந்த நாய், நாலு நாலுபடியா தாண்டி என் மேல பாய வரும்..
இனிமேலும் தாங்க முடியாது..."பொறுத்ததுபோறும்.. பொங்கி ஏழு" ன்னு நான் கீழே போய் , எல்லா flatக்காராளுக்கும் கேக்கறாப்பல, கத்தினேன்.
(ஏன் அந்த நாய் owner flatக்கு போய் ஞாயம் கேக்க வேண்டியது தானே? ங் கரேளா. மாட்டேனே;அங்கே நாய் இருக்குமே)
"எனக்கு ஹார்ட் ரொம்ப வீக்; எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தா அந்த நாய் தான் பொறுப்பு" ன்னு கத்தினேன்.
அவர் இந்த வம்பே வேண்டாம்னு, வீட்டை காலி பண்ணிண்டு போயிட்டார்...
இந்த மாதிரி ஏன் எனக்கு மட்டும் நடக்கிறது ?
நாம பயந்தா , நாய் “சென்ஸ்” பண்ணிடுமாமே ? அப்போ அது பயமில்லாம பேசாம தானே இருக்கணும் ? ஆனா தூரத்துமாம்.
"நாய் ஓட ஓட விரட்டும்"
"நாய் நன்றி உள்ள பிராணி"
"நாய் காவலுக்கு கெட்டிக் காரன் "
"குலைக்கிற நாய் கடிக்காது"
ன்னு எல்லாம் வஜனங்கள் !!
அந்த நாய்க்கு தெரியல்லே...
"நாயை குளிப்பாட்டி நடு வீட்டிலே வெச்சாலும் அது, வாலை குழச் சிண்டு நடு ரோடுக்கு தான் போகும்"
"நாய் வாலை நிமித்த முடியாது"
ன்னு, பழ மொழிகள் ;
"சீ, நாயே" ன்னு வெசவு;
"நாய் மாதிரி வள்ளு வள்ளு ன்னு குறைக்காதே "
இப்படி இதே ஜனங்கள், தங்கள் இனத்தைப் பத்தி பேசறது, அவைகளுக்கு தெரியறது இல்ல.
இப்பவும் ரோடில் நாயைக் கண்டா , அடுத்த சைடுக்கு ரோடை க்ராஸ் பண்ணி போயிடுவேன், பஸ் வரத கூட பாக்காம.
அப்பவும் அந்த நாய் என்னை முறைக்கிற மாதிரி ஒரு தோற்றம் !
ஒரு வேளை நானே ஒரு நாயை வளத்தா இந்த பயம் போயிடுமோ ?


Wednesday, September 21, 2016

PEN

பேனா
அப்பா எழுதினது எல்லாம் ஸ்டீல் பேனாவை, இன்க்கில் தோய்த்து. 
ஸ்டீல் பேனா என்பது, (பெயர்க் காரணம் தெரியவில்லை) நீளமாக இருக்கும், மேலே நிப் (கொஞ்சம் பெரியதாகவே பொருத்தியிருக்கும். ) இருக்கும். மூடி கிடையாது. இன்க் பாட்டில் எப்பவும் டேபிள் மேல் இருக்கும். ( blue black color). பாட்டிலின் மூடியை திறந்து வைத்துக்கொண்டு, ஸ்டீல் பேனாவை அதில் தோய்த்து, எழுதுவார். ஒரு தரம் தோய்த்தால், ஒன்றிரண்டு வரிகள் தான் எழுத முடியும். மறுபடியும் தோய்த்துக் கொள்ள வேண்டும். hand writing நன்றாக இருக்கும். strokesநன்றாக விழும். எழுத்துக்கள் பெரிசாக இருக்கும். கைக்கு strainஇருக்காது.   
    
எங்களுக்கெல்லாம் மூன்றாம் கிளாஸ் வரை, எல்லாமே ஸ்லேட்டில் . ஐதாம் கிளாஸ் வரை, நோட்டில், பென்சிலால் தான் எழுத வேண்டும். பென்சில் சீவ ப்ளேட் தான். அடிக்கடி, கையில் வெட்டுப் படும். அதனால், பென்சில் சீவ, ஒரு பக்கம், நீள வாட்டில், ஒரு சின்ன பேபரை மடித்து, கவர் பண்ணி குடுப்பார் அப்பா. கையில் வெட்டுப் படாமல் இருக்க. 

ஆறாம் கிளாசிலிருந்து பேனா. fountain penஅப்பதான் கிடைக்கும். சாதாரண பேனா, ஒரு ரூபா இருக்கும். அதில் இன்க் போட, ஒரு filler இருக்கும். தினமும் இன்க் போட வேண்டும். fillerஆல் எடுத்து இரண்டு தரம் போட சோம்பல் பட்டு, மறைவாகப் போய், பாட்டிலை திறந்து, அப்படியே சாய்த்து ஊத்தி, கீழே எல்லாம் கொட்டிய நாட்களும் உண்டு. 
இன்க் பாட்டில் கிட்ட எப்பவும் துணி இருக்கும். இன்க் போட்டு, மூடியதும், பேனாவின் வெளிப் பக்கம் சுத்தமாக துடைக்க வேண்டும். 
இந்த பேனாவால் எழுதினால் எழுத்து formationநன்றாக இருக்கும். ஆனால் சில பிரச்சினைகளும் உண்டு.
நிப் சில சமயம் பட்டை அடிக்கும். கோடெல்லாம் பட்டையாக விழும்.
சில சமயம், கூறாக இருந்து, பேப்பரை கிழிக்கும். 
வழ வழவென்று எழுதாமல், மக்கர் பண்ணும். கர கரவென்று இருக்கும். 
நிப் அடிக்கடி பிளந்து போகும். 
இப்படி எல்லாம் - ஆனால், ஓரணா குடுத்து, நிப் மட்டும் மாத்தலாம். 
பல சமயம், இன்க் பேனாவின் சைட் வழியாக லீக்  ஆகும். கையெல்லாம்இன்க். இதுஸ்கூலில்ரொம்ப common sight . சில சமயம், தடக்கென்று, சொட்டு இன்க் நோட்டில் கொட்டி விடும். அதற்கு blotting பேப்பர் எப்பவும் வைத்திருக்கணும் . அநேகமாக, ஜியாமெட்ரி பாக்ஸில் ள்ளே மூடியில் இருக்கும். அவசரத்துக்கு, சாக் பீஸ் வைத்து, உருட்டி, எக்ஸ்ட்ரா இங்கை எடுப்பதும் உண்டு.. 
நல்ல பேனாவாக அமையா விட்டால் கஷ்டம் தான். எக்ஸாமுக்கு போகும்போது, இரண்டு பேனாக்கள் அல்லது, இன்க் பாட்டில் எடுத்துக்கொண்டு போகணும். கிளாசில் இன்க் தீர்ந்து போனால், ஒருத்தர் பேனாவிலிருந்து, மாற்றுவர்  இன்க்மாற்றும்காட்சிரொம்பசாதாரணம். 
நான் அதிக பட்சமாக 5 ரூ. பேனா வாங்கியிருக்கிறேன். 

நான் படிப்பு முடிக்கும் வரை கூட பால் பாய்ன்ட் பேனாவெல்லாம் கிடையாது. ரொம்ப நாள் கழித்துதான் வந்தது. டெஸ்ட் நோட் திருத்த தனி பேனா, சிகப்பு இங்குடன். 
பால் பாய்ன்ட் வந்த பிறகு கூட, எக்ஸாம் அதால் எழுதக் கூடாது. 
வீட்டில் கணக்கு practiceபண்ண, physicsஎழுதி பாக்க, problems போட்டுப் பாக்க நான் காலேஜ் முடிக்கும் வரை ஸ்லேட் , ஸ்லேட் குச்சி தான். அழித்து அழித்து போடலாம் . 
வருஷம் முடிந்ததும், எல்லா நோட்டில் மிஞ்சி இருக்கும் பேப்பரை சேர்த்து, roughநோட் . 
கடையில் காலணா கொடுத்தால் பேனாக்கு இன்க் போட்டுத் தருவான். (Royal Blue or Blue blackதான் போட வேண்டும்) 
இன்க் மாத்திரை என்று ஒன்று விக்கும். சில பேர் அதை bagஇல் வைத்துக்கொள்வார்கள். ஸ்கூலில் பேனாவில் இன்க் தீர்ந்து விட்டால், இந்த மாத்திரையை தண்ணீர் விட்டு கரைத்து, பேனாவில் போட்டுக்கொள்வார்கள். 
எங்கப்பா அதெல்லாம் encourageபண்ண மாட்டார். qualityநன்றாக இருக்காது என்று சொல்வார். 
கணக்கு நோட் மட்டும்,கோடு போடாத நோட், திருப்பி வைத்து, கீழும் மேலும் திருப்புகிராற்போல், இடது பக்கம் ஒரு இன்ச் மார்ஜினும்,வலது பக்கம் மூணு இன்ச் மார்ஜினும் போட்டு இருக்கும். அது தான் சௌகரியம், வழி எழுதுவதற்கு, roughவொர்க் பண்ண. இப்போ ஏன் அந்த சிஸ்டம் இல்லை என்று தெரியவில்லை.      
                



Monday, September 19, 2016

VK & Musical Instruments

நானும் , Music Instruments ம்

தௌ கீர்த்தனாரம்பத்திலே.....
8 thபடிக்கும்போதுன்னு ஞாபகம். அப்பாக்கு, எனக்கு வீணை 'சொல்லி வைக்கணும்' (இது தஞ்சாவூர் சொலவடை - 'எம்ப்ளது ' - 80 மாதிரி ) ன்னு ஆசை வர,சரஸ்வதி ன்னு ஒரு டீச்சரை வீட்டுக்கு வந்து சொல்லி வைக்க (மாசம் 5 ரூபாய்) ஏற்பாடு பண்ணி, தன் ஒரு மாச சம்பளத்தை போட்டு, ஒரு வீணையும், செய்யும் இடத்திலேயே போய் வாங்கி வந்தார். (அதுக்கு அம்மா கிட்ட வாங்க கட்டிண்டது இப்போ அவசியமில்லை. அப்பாக்கு பதில் சொல்ல தெரியலைன்னா, "சரசு, உள்ளே போ" ஒரே அதட்டல் தான்.
நிற்க ...எனக்கு வாய்ப்பாட்டின் ஆரம்பப்பாடங்கள், கீதம், ஸ்வரஜதி, கிருதி எல்லாம் ஓரளவு தெரியும் என்பதால், கொஞ்சம் சீக்கிரமே பாடம் ஆனது. இங்கே தான் problem மும் ஆரம்பித்தது.
அதாவது வாத்தியங்கள் பயித்தியம்.

நான் 9 வது படிக்கறச்சே, எங்கண்ணா , புல்புல்தாரா வாங்கி கொண்டு வந்து வாசிச்சு காண்பித்தான்.. உடனே, எனக்கும் ஆசை வர, தட்டி, கொட்டி, ஒரு ஹிந்தி பாட்டு, "சுன்,சுன்,சுன் , ஹரே பாபு சுன் - Howra Bridge " முதல் முதல் வெற்றிகரமாக வாசிச்சேன். (ஏன் ஹிந்தின்னு கேக்கறீங்களா.. நீங்க கேக்காட்டிலும் சொல்றேன்; ஹிந்தி பாட்டு வாசிப்பது கொஞ்சம் ஈசியாகவே இருக்கிறது)
என் வாசிப்பில் பூரித்து போன அண்ணா, அந்த type writer மாடல் புல் புல் எனக்கு குடுத்து விட்டுப் போனான்... (பொல்லாது; தான் கொஞ்சம் புதிய ஹார்மோனியம் மாடல் வாங்கிண்டான்)
அவ்வளவு தான்; எனக்கு தெரிஞ்ச, புரிஞ்ச பாட்டெல்லாம் practice பண்ண ஆரம்பிச்சேன். எனக்கும் ஒரு ரசிகர் கூட்டம் (தஞ்சாவூரில்).

வீட்டில் ஹார்மோனியம் எப்போதும் உண்டு. இப்போ ஒரு நம்பிக்கை வந்து, ஹார்மோனியத்தில், அப்பா இருக்கும்போது கர்நாடக சங்கீதம், அப்பா வெளியில் போனதும் சினிமா பாட்டுன்னு life interesting ஒடித்து. யாரும் என்னை, "ஏன் பாடம் படிக்காமல், இப்படி time வேஸ்ட் பண்ற" ன்னு கேக்காதது பெரிய ப்ளஸ் பாய்ன்ட் .
அப்பாக்கு கோட்டு வாத்தியமும் தெரியும்முதலில், இரண்டு தூண்களில் கம்பி கட்டி, அடியில் மரக்கட்டையை முட்டுக் கொடுத்து,Frequency கணக்கு போட்டு கட்டையை நகர்த்தி, distance between கட்டையை adjust பண்ணி , வாத்தியம் பண்ணி வாசிப்பா. வீணை வந்ததும், அதற்கு pegs வைத்து, தந்தியை உயர்த்தி கோ ட்டு வாத்தியமாக வாசிப்பா. வீணை டீச்சர் வந்ததும், என்னை திட்டி விட்டு, சுருதி சேர்ப்பா . இப்படியாக, கோ ட்டு வாத்தியம் வாசிச்சாச்சு.


காலேஜ் சேர்ந்ததும், புல்புல்தாரா தவிர மற்றவற்றிற்கு நேரமில்லை. ஆனால் Physics Lab ல் "Sonometer" வைத்துக்கொண்டு, வித்தை காமிச்சேன்...




ஒரு முறை QMC க்கு குமாரி கமலா டான்ஸ் ஆட வந்தார்கள். தம்புரா போட ஆள் இல்லை. உடனே அடித்தது சான்ஸ் என்று மேடை ஏறி விட்டேன். எப்படி போட வேண்டுமென்று எனக்கு சொல்லி தரப்பு பட, அதையும் செய்து விட்டேன்.

அப்புறம் என்ன,  கல்யாணம் .. எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி... இல்லை இல்லை .. கமா. ஆனால் வீணை, புல்புல்தாரா எல்லாம் கொண்டு வரப்பட்டது எல்லாம் துணி போட்டு மூடி தூங்கியது. காலம் வேகமாக நகர்ந்தது.... (இதெல்லாம் கதைக்கு பில்ட் அப் கொடுக்க )

என் பையன் 5 thபடிக்கும்போது, அவனுக்கு டீச்சர் ஏற்பாடு பண்ணி முறையாக கத்துக் கொடுக்க ஆரம்பித்தேன். இன்னொரு வீணையும் வாங்கினேன். ஏதோ அவன் புண்ணியத்தில் , நானும் கொஞ்சம் தட்டினேன் !!
அடுத்தது, என் பெண் 6 thபடிக்கும்போது வயலின். லால்குடியின் சிஸ்டர்; பிறகு லால்குடியின் தங்கை கணவர்; சாவித்திரி சத்திய மூர்த்தி, M S அனந்த ராமன் என்று தொடர்ந்தது...
எனக்கு கிடைத்தது.. ஒரு அறிய சான்ஸ்... அதை விடுவேனா... வயலினில் என் கை வரிசையை காட்ட ஆசைப் பட்டேன்... என் over confidence க்கு அது ஓர் செமத்தையான அடி. அது என்ன இனிமையான இசையாகவா வந்துது ? கற முற கற முற ன்னு பூனை அடித்தொண்டையில், கீச்சுன்னு கத்தர மாதிரி, ரம்பம் அறுக்கும் சத்தம் நமக்கு உடம்புக்குள் என்னமோ பண்ணுமே... அது மாதிரி... ஒரு வேளை எலிகள் இருந்திருந்தால், பயந்து ஓடியிருக்கும். பசங்களுக்கு சொல்லவும் முடியவில்லை, மெல்லவும் முடியவில்லை... அதை சீக்கிரமே கைவிட்டேன் !!

என் கடைசி son 4 thபடிக்கறச்சே, drums கேட்க, அது விலை அதிகமாக இருக்க, "drums க்கு அடிப்படை மிருதங்கம் என்று ஒரே போடாக போட்டு, மிருதங்கம் சொல்லி வைக்க ஆரம்பித்தேன்; அவனை விட எனக்கு ரொம்ப குஷி... எல்லோரும் போனது "தா, தை, தீம், தக் " என்று ஆரம்பப் பாடங்கள் சரியாக வாசிக்க ரொம்ப சந்தோஷமாக போய்விட்டது . ஆனால், பாடம் அதிகமாக ஆக , குழந்தையை போல் என்னால் கற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்காக யார் கவலை பட்டா... நான் வாசிப்பது என்ன தாளம் என்று தெரியாமல், நானே ஆசை தீர தட்டுவேன். அவன் practice பண்ணும்போது "கணேஷ், நான் பாடுகிறேன்; நீ பக்க வாதியமாக வாசி" என்று சொல்ல, அவனும் பெருமையாக வாசிக்க, சில நிமிடங்களிலேயே, "அம்மா, உன் தாளமில்லாத பாட்டுக்கு சரியாக என்னால் adjust பண்ண முடியவில்லை என்று open ஆக comment பண்ண , நானும் விடாமல் பல நாட்கள் ட்ரை பண்ணி give up .

அவனுக்கு எதிர் மிருதங்கம், கடம் வேறு வாங்க வேண்டி இருக்க, "அய்யா, கடம் தட்டலாம் " என்று ஆசையாக, பானை உடையாமல், மெல்ல தட்டினேன்... சத்தம் எங்கே " வந்தாதானே. ஹும்ம்ம்... அதுவும் போச்சு.

அப்போ என் பெரியவன் , key board (சிங்கப்பூரிலிருந்து இவர் வங்கி வந்தார்-சின்னதாக)... அவனுக்கு ஒரு natural talent உம் , வீணை தெரிந்ததும் சேர்ந்து, நன்றாக வாசித்தான்... விடுவேனா சான்சை. அவன் ஸ்கூலுக்கு போனப்புறம், கீ போர்டும் கையுமாகவே இருப்பேன். சினிமா பாட்டெல்லாம் வாசிப்பேன்...
அவன் வேலைக்கு போனதும் பெரிய key board , stand உடன் வாங்கினான். எனக்குப் பொறுக்குமா ? SK வை நச்சரிக்க, ஒரு பிறந்த நாளைக்கு, 12000 ரூ போட்டு வாங்கிக் கொடுத்தார்; cycle மாதிரி, இதற்கும் stand க்கு தனி காசு ... இப்படி 15000 க்கு ஆயிடுத்து.கடைக்காரன் காசு கேக்காமல் குடுத்தது 2 striker தான். அதில் நல்ல கலராகப் (!) பொருக்கி எடுத்துக் கொண்டேன்... வாசிக்க ஆரம்பித்தேன்.. என் ஒரே ரசிகர் (out of compulsion SK மட்டும்தான் )...
அவரும், சித்த நாழியில் பொறுமை இழந்து போய் விடுவார்.. பின்ன, practice பண்றச்சே கொஞ்சம் தடுமாராதா?"இன்னும் என்னை என்ன செய்யப் .... " ... அந்த இன்னும் என்னை க்கு 4 trial . அப்புறம் தேவலாம்னு வாசிச்சேன்.. என் son வரும் வரை.
அவன் வந்து, ரிதம் எப்படி அட்ஜஸ்ட் பண்ணிக்கணும், வாத்தியங்கள் சத்தத்தை எப்படி மாற்றணும் என்று சொல்லிக் குடுக்க தலையாலே தண்ணி குடிச்சான்... ஒரு ஸ்டேஜில் கை விட்டான். ஆனாலும் பாவம் " நன்னா இருக்கும்மா, கொஞ்சம் practice பண்ணு ; அவ்வளவுதான்" என்று சொல்லி விட்டு பெங்களூருக்கு எஸ்கேப்



இதற்கு நடுவில், 1987 இல் , கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டேன் (அப்போ என் son sinclairகம்ப்யூட்டர் வைத்து அசத்தினான்... ) நான் NIIT யில் சேர்ந்து முறையாக (!!!) கற்றுக் கொண்டேன். BASIC language.ஸ்கூலில் டீச் பண்ணவும் ஆரம்பித்தேன்...
BASIC langக்கு ஒரு manual கொடுத்தான்..ஹய்யா... அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்... அதில் நம் , ரி, , , வுக்கு frequency யும், corresponding key யும் போட்டிருந்தான்... அவ்வளவு தான்; பிடித்தது வெறி program எழுத ஆரம்பித்தேன் ... நன்றாக வந்தது... (நாம சொல்றத தட்டாம கேக்கறது கம்ப்யூட்டர் ஒண்ணுதான்) ..
கொஞ்சம் கொஞ்சமாக develop பண்ணி...ஆரம்பப் படங்களான, சரளி, சண்டை, தாட்டு, வரிசைகள், அலங்காரம், கீதம் என்று, இரவும், பகலும் அதே வேலை..
இரண்டு வர்ணங்கள்--- ஆரபி, வசந்தா... ஸ்வரங்கள் தெரிந்த தெல்லாம் போட்டேன்... SUPERO SUPER ... அப்புறம் அதற்கு ஒரு MENU ... replay the same ?proceed to the next ? stop " என்று, ஒரே interactive program .... ஒரு enter தட்டி விட்டா, அது பாட்டுக்கும் பாடும்..
பிறகு, சினிமா பாட்டுக்களை புல் புல் தாராவில் வாசித்து சுரத்தை எழுதி வெச்சுண்டு, நிறைய போட்டேன்...
அதில் length of a note , கமகங்கள் என்று அசத்தி விட்டேன்.கடைசியாக போட்டது... "வெள்ளைப்புறா ஒன்று... கையில் வராமலே..." breakஇல்லாமல் continuous ஆக...
வீட்டில் போட்டுக் காண்பித்தேன்.... SK க்கு பெருமை பிடிபடவில்லை.உடனே சாமிகிட்ட நின்னு, "என்ன தவம் செய்தேனோ.." என்று பாடாத குறை.
ஆனால், LKG குழந்தைகளை படுத்தற மாதிரி, யாரு வந்தாலும், "வசந்தா, அந்த பாட்டை போட்டு காண்பி" என்று ஆரம்பித்து விடுவார்...
ஒரு மியூசிக் தெரிந்த friend வர, அவர் அசந்து போய், இன்று வரை என்னை பாக்கும்போதெல்லாம் SW பண்ணி விக்க சொல்லி படுத்தல்ஸ்
Languages மாற, மாற, அவைகளில் ப்ரோக்ராம் எழுதி, டீச் பண்ண வேண்டி இருக்க, dos இல்ருந்து windows க்கு மாற, BASIC obsolete ஆக, என் innovative மியூசிக் அங்கேயே நின்றுவிட்டது... (ஒரு 3 வருடத்தில்.)
ஆனால் அந்த friend மட்டும், amnesia வந்த மாதிரி , இப்போது வந்து விட்ட மாற்றங்களை மறந்து " computer மியூசிக் இப்போது எங்கே இருக்கிறது ?" என்று, 1990 லேயே நிக்கறார். LIONSகிளப் போனால், மைக் கில் வேறு என் சாதனைகளை பட்டியலிடுவார்; எனக்கு மனசு திக் திக் என்று இருக்கும். ஒரு அசட்டு சிரிப்பு சிரிப்பேன்; அதற்காகவே இப்போதெல்லாம் போறதில்லை.
இவர் தான் , என்னுடைய key board விலைக்கு வாங்கிக் கொண்டு போனார்... "கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்னு"... ஏன் விற்றேன்? அது நிறைய இடத்தை அடைத்துக் கொண்டு, பேத்தி கையில் படாத பாடு பட்டுது. SK யும், "இவ்வளவு விலை போட்டு வாங்கிக் கொடுத்தேன்; வாசிக்கவே மாட்டேங்கரையே?" ன்னு படுத்த ஆரம்பிச்சுட்டார்.

இப்போ, இன்னும் கொஞ்சம் பின்னால்.....
என் அக்கா பெண் கல்யாணம் ... நம் வீட்டு கல்யாணத்தில் நமக்கு இல்லாத உரிமையா? முஹூர்த்தம் முடிந்து, மேளக்காரன் உரையை போட்டு மூடப் பார்க்கையில், பாய்ந்தேன்..

"என் பையன் (8 வயது இருக்கும்) நன்றாக மிருதங்கம் வாசிப்பான்; கொஞ்சம் அந்த தவிலை குடுங்களேன் என்று சொல்லவும், வேற வழி இல்லாமல், குடுக்க, சும்மா சொல்லக் கூடாது, நன்றாகவே வாசிச்சான்... எனக்கு ஆசையாக இருக்காதா.. "நானும் கொஞ்சம்" என்று இழுத்தேன். அவனுக்கு என் மேல் நம்பிக்கை வந்து விட்டது; நான்தான் என் son க்கு ஆசான் ன்னு நினைத்து, என் கையில் கட்டையை குடுக்க, நான் சிவாஜி (மிருதங்க சக்ரவர்த்தி) பாவனையில், இரண்டயு தட்டு தட்ட, அரண்டு விட்டான்...

நாதஸ்வர காரரை, சில பல கேள்விகள் கேட்டு, மஸ்கா அடித்து, கையில் எடுத்தால், தூக்கவே முடியவில்லை. இருந்தாலும் தம் கட்டி, "பி,பி,பி" என்று ஊத, தூங்கிண்டிருந்தவா எல்லாம் "என்னவோ ஏதோ..." ன்னு ஓடி வர, நான் அந்த சீனை விட்டு எஸ்.வி.சேகர் மாதிரி, டபக் என்று escape

என் அத்திம்பேரில் ரெண்டு பேர் flute நன்றாக வாசிப்பார்கள்; சின்ன அத்திம்பேர் மாலியின் சிஷ்யர்; எனக்கு குஷி பிறந்து விட்டது. அத்திம்பேர் எல்லாம் wife sister மேல் தனி பாசம் வைப்பா..(உடனே, சினிமாத்தனமா கற்பனை பண்ண வேண்டாம்)...
அன்றிலிருந்து (இரண்டு நாட்கள்) புல்லாங்குழல் என் கையில் படாத பாடு..அசுர சாதகம்... ஊதினால் காத்துதாங்க வருது. சத்தமே இல்லை; கொஞ்சம் சத்தம் வந்ததும், எங்காத்து அடுப்பூதும், குழல், விளையாட்டு ஊதல் மாதிரி சத்தம். அந்த holes மூடி, திறந்து, பாதி மூடி, ஒரு சரளி வரிசை கூட வாசிக்க வரவில்லை... பெரிய ஏமாற்றத்தோடு திருப்பிக் குடுத்து விட்டேன்; ரொம்ப குறை

திருவிழா சமயத்தில் ஊதல் விக்கறவன், அனாயசமாக பாட்டு வாசிப்பான்; உடனே நம்பிக்கை வந்து, அதை நாலணா குடுத்து வாங்கி, பாவனை எல்லாம் நன்றாக இருக்கும்; சத்தமும் வரும்; மனதில் பாட்டு ஓடும்; வெளியே, ஒரே மாதிரி சத்தம் தான் கேக்கும்; ஆனால், நான் நன்றாக வாசிப்பது போல் எனக்கே தோன்றும்... மனதில் தான் பாட்டு இருக்கே? வாயில் ஊதலை வைத்துக் கொண்டு, தொண்டையிலிருந்து ஹம்மிங் பண்ணுவேன்; என்னால் அதுதான் முடியும்...

இது வரை stringed , percussion , wind எல்லாம் வாசித்தாகி விட்டது...
இன்னும் பின்னால் போனால்.... நாரதர் கை வீணை மாதிரி, தெருவில் பிக்ஷை எடுப்பவன், கையில் அதை வைத்துக் கொண்டு "ராம ஜோசியம், ராம ஜோசியம்" ன்னு தட்டினே போவான்; எனக்கு அந்த instrument மேல் ஆசை வர... "ढो आंकें बाऱा हाथ " சாந்தாராம் சினிமாவில், சந்த்யா , இதைத்தான் தெருவில் வியாபாரம் செய்வாள்.
ஒரு நாள் வாசலில் விற்றுக் கொண்டு போனவனிடம், அதை வாங்கினேன். அவன் சில பாடல்களை கத்துக்கொண்டு, என்னமாய் வாசிக்கறான்? எனக்கு தான் வீணை தெரியுமே... (அதனால் வந்த வினை தானே இதெல்லாம்) வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து, வில்லை தந்தியில் வைத்து இழுத்தால் ஒரே ஸ்வரம் வரத்து; நானும், விரலை, வேறு வேறு இடங்களில் வைத்து, வாசிச்சு பாத்து, மூன்றே நாளில், கை விட்டேன்.

அப்புறம் life இல் ஒரு பெரிய gap ... musicக்கு இடமில்லாமல்...
பெங்களூர் போனால், என் son பியானோ வைத்திருக்கிறான் !! திருட்டுக் கொட்டு, என்கிட்டே சொல்லவே இல்லை. நான் வரேன்னு தெரிஞ்சதும், பெரிய கவர் போட்டு மூடி விட்டான். விடுவேனா... அவன் office போனதும் பூந்து விளையாடி விடுவேன்... அது சித்த பரவா இல்லை.. என்ன.. பாட்டில் continuity இல்லாமல், தனித்தனியா ஸ்வரம் விழும். பரவா இல்லை. (QMC prayer ஹாலில் Piano உண்டு... free period இல், அதில் சினிமா பாட்டு வாசிக்க, என் friends ரசித்து கேட்க ,இது அந்த lecturer in charge க்கு தெரியும் வரை கொஞ்சம் ஒடித்து)
எனக்கு ரொம்ப ஆசை பரத நாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று.. நடக்கவில்லை... என் பெண்ணுக்கு (ஜெமினி கணேசனின் ??????? wife ) .. கிட்டக்கவே இருக்க, அவளிடம் சேர்த்து விட்டேன், சலங்கை பூஜை கூட முடிந்தது; அரங்கேற்றம் பண்ணலாமா என்பதற்குள், அவள் தேவ தாஸ் மாதிரி...... .... (புரிஞ்சிக்கணும்) இறந்து விட டான்ஸ் நின்றது.. ஆனால் எங்காத்தில் நிற்க விடுவேனா?
காலால், "தா, தீ, தை, நம்? என்று காலில் தாளம் போடும் முதல் பாடமே ஒரு வாரம் ஆகி (அப்பவும் வராமல்) ... காலை கவனித்தால், கை எங்கியோ போகிறது... கையை பார்த்தால், காலுக்கு தாளமே இல்லை... என் பெண் பொறுமை இழந்து... டான்ஸ் டீச்சர் வேலையே resign பண்ணி விட்டாள்
ஆனால், இன்றும் நான் "காலை தூக்கி நின்று...ஆடும் தெய்வமே என்னை.." என்று, நானே பாடி, நடராஜர் pose இல் நின்று ஆடிக்கொள் கிறேன்.. ஆனால் இப்போ கால் கொஞ்சம் வீக் ஆகி, நடுங்குவதால், நடராஜரே, குளிர் ஜுரம் வந்த மாதிரி நடுங்குகிறார்.
அப்புறம் என்ன.. நம்ம குத்துப் பாட்டுதான் இருக்கே... classical ன்னா ,ஓரளவு , நகராமலேயே, முகத்தில் ஏக பாவனை காட்டி ஆடுவேன்; சினிமா பாட்டென்றால் சுத்தி சுழன்று ஆடுவேன்...

குழந்தைகள் எல்லாம் "கூட்டை விட்டு பறக்க " (ஆஹா , என்ன தமிழ் நடை... வசந்தா... கொன்னுட்ட..) வீட்டில் அடைந்து கிடந்தது, சிறகொடிந்த நானும், என் வாத்தியங்களும்...
அவைகளை சரஸ்வதி பூஜைக்கு துடைத்து வைக்க கூட போர் அடித்தது...
வீணையை பெங்களூரு, வயலினை வேளா சேரி, ஒரு மிருதங்கம் அமேரிக்கா என்று அனுப்பி விட்டு, மற்றொரு மிருதங்கம், கடம் (வீட்டு வேலை செய்பவள் "அம்மா, அந்த பானையை எனக்கு குடுங்க , தண்ணி வைக்கங்கரா !!!) ஸ்ருதி பாக்ஸ் (இரண்டு... manual , electronic ) ஒன்றை வேளா சேரி பார்சல்.... மிச்ச தட்டு முட்டு வாட்த்யங்கள் எதிர் வீணை எல்லாம் தானம் !!! இத்துடன் என் வாத்ய வாசிப்புகள், ஒரு முடிவுக்கு வர... சோகமான நான்...

அய்யா... பேத்தி பிறந்ததும், அவளுக்கு 2 வயதில் ஒரு நீளமான instrument (பேர் தெரியவில்லை - may be xylaphone type), ஒரு குச்சி... விளையாட்டு சாமான்... வாங்கிக் கொடுத்து விட்டு...
"பாட்டிதானே வாங்கிக் கொடுத்தேன்.. எனக்கு கொஞ்சம் குடு" ன்னு பிடுங்கி, Rhymes வாசித்து காட்டறேன் என்று, (அதெல்லாம் ரொம்ப ஈசி..) அவளை அழ விட்டு...
"பாட்டி, நீ வசிக்க வேண்டாம், எனக்கே தெரியும் - உனக்கு ஒண்ணும் தெரியல்லே... " என்று நாக்கு மேல பல்லை போட்டு, பேத்தியால் தான் பாட்டியை திட்ட முடியும்...
ஹும்ம்... இப்போ யார் வீட்டுக்கு போனாலும் (குழந்தைகள்) அவா instrument களை , அவசரமாக ஒளித்து வைக்கிறார்கள்.

அந்த "கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை"
என்ன, இப்ப நீங்க யாராவது வந்தால் வாசித்துக் காட்ட ஒன்றும் இல்லை... என் வாயை தவிர (விசில் அடிக்க) !!
இத்துடன், என் "மிகச்சிறிய கட்டுரையை" முடித்துக் கொள்கிறேன் !!
எனக்கு யாராவது ஒரு சபாவில் வைத்து, "சகல கலா கொல்லி " (சீ சீ - வல்லி ) என்று பட்டம் வாங்கித்தாங்களேன்.
அச்சச்சோ , கஞ்சிரா, சிப்பலா கட்டை , ஜிங் சக் (பஜனைக்கு அடிக்கிறது) எல்லாம் விட்டுப் போயிடுத்தே. மறந்துட்டேன். 

.