Tuesday, June 2, 2020

வாழ்க்கைய பத்தி ரொம்ப யோசிக்காதீங்க. .

வாழ்க்கைய பத்தி ரொம்ப யோசிக்காதீங்க. . அது உங்களுக்கும், எனக்கும், யாருக்கும் புரி படாத மர்மம். யோசிக்க ஆரம்பித்தால், முடிவு, தெளிவு ஒன்றும் கிடைக்காது. குழப்பம் தான் மிஞ்சும். ஒவ்வொரு தடவை சிந்திக்கும் போதும், வெவேறு குழப்பங்கள் வரும். வெவேறு விளக்கம் வராது. நாம் மகான்கள் அல்ல. கடவுள் நமக்கு எவ்வளவு புரியணுமோ , அவ்வளவு ஞானம் தான் தந்திருக்கிறார்.

மூளையைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவியுங்கள்.

சில நம்பிக்கைகள் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், சுவாரசியமாகவும் ஆக்கும். அந்த நம்பிக்கையை பற்றுக் கோடாக பிடித்து, "நம்மை நன்றாக இறைவன் படைத்திருக்கிறான்; அவனை நன்றாக துதிப்பதற்கு" என்று மட்டும் தினமும் நினைத்து எது சந்தோஷம் கொடுக்கிறதோ, அதை செய்து, (இங்கு அந்த சந்தோஷம், பிறருக்கு தீமையாக  இல்லாமல்) "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா" என்று அனுபவியுங்கள். இயற்கையை பார்த்து வியந்து போய் , அதே போல், நியமம் தவறாமல், யாருக்கும் கெடுதல் நினைக்காமல், முடிந்த உதவியை மனதார செய்து விட்டு, உங்கள் கையில் கொடுக்கப் பட்டிருக்கும் வேலையே முழு அர்ப்பணிப்புடன் செய்து, உடம்பை நன்றாக பார்த்துக் கொண்டு, சந்தோஷமாக இருங்கள்.

ignorance & innocence are some times blissful. மனம் குழந்தை மாதிரி குதூகலிக்கணும். பாரம் தெரியாது. நடப்பவை எல்லாம் நாராயணன் செயல்.

நமக்கும் சில, பல நல்ல அனுபவங்கள் தோன்றும்; கிடைக்கும்; இறைவன் யார் மூலமாவது காட்சி கொடுக்கிறான்; தன்னை உணர வைக்கிறான்;

அனாவசியமாக contemplate பண்ணுகிறேன், பேர்வழி" ன்னு குழம்பாதீங்க.

நாள் முழுவதும் , "ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே ; சஹஸ்ர  நாம தத்துல்யம் ராம நான வரானனே " என்று, மனதில் ஒட்டிக் கொண்டு, எது செய்தாலும் அதை திருந்தச் செய்து... ஒரு நாள் at a time வாழ்க்கையை அனுபவியுங்கள்.

நம்மை சுற்றி நடப்பவைகளை பார்த்து, கேட்டு, ரசிக்கக் கற்றுக் கொண்டாலே, வாழ்க்கை பாதி சுவாரசியமாக ஆகிவிடும்.

வடவம் முத்தி வைஷ்ணவம்..........


எங்க தாத்தா நாமம் (ஒற்றை) போட்டுக் கொள்வார். அதற்கு அம்மாவின் விளக்கம் "நாங்க எல்லாம் 'வடவம் முத்தி வைஷ்ணவம்' " ... ஏதோ இது ஒரு படி ஒஸ்தி மாதிரி.
இதன் ரகசியத்தை நரசிம்ஹன் மாமா விளக்கினார்.
மன்னார்குடி யில் அதிகமாக வைஷ்ணவர்கள். ஆங்கிலேயர் காலத்தில் ஐயங்கார்களுக்கு நிலம் வாங்குவது, பட்டா போடுவது சுலபம். இதனால் அய்யர்கள், நாமத்தை போட்டுக் கொண்டு, நிலம் வாங்கினார்களாம். அதை justify பண்ண, இப்படி "வடவம் முத்தி வைஷ்ணவம்" என்று சொல்லிக் கொண்டார்களாம். "புஸ்........." என்று ஒரு விஷயம் !!
அந்த கிராமமே எங்க தாத்தாவுக்கும், மாமாவுக்கும் சொந்தம். இவர்களைத் தவிர குடியானவர்கள் தான் அதிகம். எங்கும் பசுமை. எவ்வளவு நிலங்கள்.
தாத்தாவிடம் மட்டும் லைசென்ஸ் உடன் துப்பாக்கி.
மாமாவின் பூந்தோட்டத்தை கோவில் குருக்கள் (பெருமாள் கோவில் ) வாங்கி வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். மாமா இருந்த வீடு தரை மட்டம். அஸ்திவாரம் மட்டும் தெரிகிறது.

Monday, June 1, 2020

வேர்களைத் தேடி... (1 )

வேர்களைத் தேடி... (1 )
சில வருடங்களுக்கு முன் திருவையாறு தியாகராஜ உற்சவத்திற்கு போனோம். இரண்டு நாள் தங்கியிருந்தால், ஒரு அரை நாள் , அம்மா பிறந்து, வாழ்ந்த கிராமத்திற்கு கிளம்பினோம்.
திருவையாறிலிருந்து மன்னார்குடி நோக்கி பயணம்... டாக்ஸி யில்... என் அம்மா பிறந்து வளர்ந்த ஊரான "மூர்த்தியம்பாள் புறம் "நோக்கி. சுமார் 65 வருஷங்கள் கழித்து. மனசில் ஒரு கலவையான உணர்வுகளுடன்.
வழியிலேயே மூர்த்தியம்பாள்புறம் " என்ற போர்ட் ஐ பார்த்ததும், உடம்பு சிலிர்த்தது உண்மை. ஒரே excitement .
அம்மா தன சிறு வயது life , ஐந்தாம் க்ளாஸ் வரை படித்தது, கல்யாணம் பண்ணியது (11 வயதில்), தன் குடும்பம், தாத்தா, அண்ணா, அக்கா என்று நிறைய கதைகள் சொல்லியிருந்ததால், மிராசுதார் தாத்தா, மாமா ஊரை பார்க்க ஒரே ஆவல். ஆனால் யாராவது தெரிந்தவர்கள் இருப்பார்களோ? சந்தேஹம்...
இப்படி பேசிக் கொண்டே , மெயின் ரோட்டிலிருந்து, ஊர் நோக்கி திரும்ப, கார் டிரைவருக்கும் தொத்திக் கொண்டது உற்சாகம்.
அக்கிரஹாரத்தைத் தேடிக் கொண்டு போனால், அங்கு இருந்தது மூணே வீடுகள். என்ன ஆச்சரியம்... அதில் இரண்டில் வயதானவர்கள், எங்கள் தாத்தா மாமா குடும்பத்தை நன்கு அறிந்தவர்கள்.
முதல் தம்பதி நரசிம்ஹர், லக்ஷ்மி. திண்ணை, மித்தம் என்று மூன்று கட்டு வீடு. அவர் 80 வருஷமாக அங்கு இருப்பதாக சொல்ல ஒரே சந்தோஷம். அவர்கள் குழந்தைகள் எல்லாம் வேறு வேறு ஊர்களில் செட்டில் ஆக, இவர்கள் இருவர் மட்டும் பூர்வீக வீட்டில், தனியாக.
அவர்களுக்கு என் தாத்தா கிருஷ்ணையர், மாமா கோதண்டராமய்யர், அம்மா சரஸ்வதி, மாமாவின் குழந்தைகள், இன்றைய தலைமுறை வரை தெரிந்து வைத்திருந்ததுமல்லாமல், அவர்களின் இன்றைய சந்ததி, பழைய கதைகள், நினைவு மாறாமல் சொல்ல, எல்லாம் எங்கம்மா சொன்னதுக்கு ஒத்துப்போக ... ஒரே சந்தோஷம்.
ஒரு சொம்பில் தீர்த்தம் குடுத்தார் அந்த மாமி. அது என்ன மினெரல் தண்ணீரா... இல்லை. சாதாரண தண்ணீர். அதுக்கு இவ்வளவு ருசியா? நாம் குடிக்கும் தண்ணீரில் என்ன ருசி இருக்கிறது? அந்த மன நிலையில், சொந்த மண்ணில் அது இன்னும் ருசியாகத் தெரிந்தது. நல்ல மனிதர்கள்.
மாமா வீட்டை, கோவில் குருக்கள் தோட்டமாக்கி இருந்தார், பெருமாள் சேவைக்கு மலர்களுக்காக. தாத்தா வீடு தரை மட்டம். அங்கு எப்படி எல்லாம் அம்மா வளர்ந்திருப்பார், அதே வீட்டில் கல்யாணம் நடந்திருக்கும், குழந்தைகள் பிறந்திருக்கும் என்று ஒவ்வொன்றாக நினைத்து பார்த்து .....
ஆசை தீர பேசினோம். போட்டோ எடுத்தோம்....

Sunday, May 24, 2020

SK & Fruits

எங்க வீட்டில், எப்போதும் பழங்கள் வாங்குவது நான்தான்.
கொஞ்ச நாள் முன்பு, "நான் ரொம்ப வருஷம் இதெல்லாம் பண்ணியாச்சு. இனிமே நீங்க வாங்கிண்டு வாங்கோ" ன்னு இவர் கிட்ட சொல்ல, ஆரம்பிச்சுது வினை.
வாழைப்பழம் வாங்கிண்டு வரச்சொல்லி, "பச்சைப் பழம், பெரிசா" இருக்கும் ன்னு அடையாளம் சொல்லி, ஆறு பழம் வாங்கிண்டு வரச்சொன்னேன்.
வந்தது 12 பழம். "ஏன் இவ்வளவு?" ன்னா, "வண்டிக்காரன்தான் ஒரு சீப்பு எடுத்து, வாங்கிக்கச் சொன்னான்" ங்கறார்.
(உலகத்தில், என்னைத் தவிர யார் எது சொன்னாலும் கேக்கும் ஜாதி)
அதுதான் போகட்டும்னா,"பெரிய" பழத்துக்கு ஒரு அளவில்லை? ஒரு பழத்தை உரித்து, ஆளுக்கு பாதி சாப்பிட்டால், அன்று காலை டிபன் வேண்டியிருக்கவில்லை.
வயிறு ரொம்பிடுத்து. இந்த ரேட்டில 12 பழத்தை எப்படி முடிக்கிறது? குடு, பாதி, வேலை செய்பவளுக்கு !
அடுத்த முறை, பயந்துண்டு, சின்னதா, 6 பழம். மேலே கொஞ்சம் கருப்பு. "இதை ஏன் வாங்கி னேள். தோல் கருப்பா இருக்கே?" ன்னேன். "அந்த கடைக் காரன்தான் "மேலே அப்படித் தான் இருக்கும் சாமி. உள்ளே பளம் நல்லா இருக்கும்" ன்னான் ங்கறார் ! தூக்கி குடு, நாலு பழத்தை, வேலை செய்பவளுக்கு. (அவளே திகைத்து போனாள் நான் பழம் தரும் ரேட்டை பாத்து !)
மற்றொரு நாள் 1 டஜன் கொய்யாப் பழம் ! கூட இருந்த friend வாங்கினார்னு இவரும். இதுல விசேஷம் என்னன்னா , இவர் கொய்யாப் பழம் சாப்பிட மாட்டார். So , மிச்ச பழம் என்ன ஆகியிருக்கும் ? ன்னு ஊகிச்சிறுப் பேள் ! ஆனால் இந்த தடவை டிரைவருக்கு.
ஆப்பிள் உடம்புக்கு நல்லது. விலை அதிகம்னாலும், அப்பப்ப வாங்கலாம்னு சொல்லியிருக்க, ஒரு நாள் 6 ஆப்பிள் வந்தது. சிகப்பா, பள பளப்பா.... ஆசையா கட் பண்ணினா, உள்ளே ப்ரௌனா, கொஞ்சம் கொஞ்சம் கெட்டுப் போய் ! இரண்டு நறுக்கினால் தான் 4 துண்டுகளாவது தேறுகிறது. வெளியில பார்த்தால் தெரியாதுதான். ஒத்துக்கறேன். ஆனால், இந்த கடைக்காரனுக்கேல்லாம், இவர் முகத்தை பார்த்தோண எப்படி தெரிகிறது, இந்த பழங்களை இவரிடம் தள்ளலாம் என்று ?
இப்படித்தான் ஒரு நாள், நான் சொல்லாமலே, சுமார் 10 விளாம்பழம் வாங்கிண்டு வந்தார்.
நாங்கள் இருவரும் காசியில் விளாம்பழத்தை விட்டாச்சு. ! "உனக்கு ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிண்டு வந்தேன்" ன்னு இவர் சொன்னதும், உருகித்தான் போய் விட்டேன்.
"காசி சபதமா, கணவன் சந்தோஷமா? " ன்னு மனசில ஒரு பட்டி மன்றம் நடத்திட்டு, கண்ணுக்குத் தெரியாத "காசி சபதத்தை" கை விட்டு, "கண்ணுக்கு தெரிந்த" இவர் ஆசையை அனுபவிக்க, பழத்தை உடைத்து (அவைகளில் பாதிக்குப் பாதி காய்கள் என்பது வேறு விஷயம்) , வெல்லம் போட்டு, சாப்பிட்டேன். இவருக்கு ரொம்ப சந்தோஷம்.
காசி சமாசாரம் எல்லாம் மனதோடு புதைத்து விட்டேன்.
"விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோட " ன்னு , அன்னிலேர்ந்து பழம் சாப்பிடும் ஆசையே போய் விட்டது.


Friday, May 1, 2020

மாவடு.......





ஹும்ம்ம்...... வருடா வருடம், இத்தனை நாளைக்கு மாவடு போட்டிருப்பேன். இனி மாவடு போடுவதெல்லாம், கனவாய், பழங் கதையாய் போய் விடும்.
"அந்த நாளில்....." என்று நான் தஞ்சாவூர் கதைகள் போடுவதை போல், இதுவும், இனி "அந்த நாளில்..." என்று ஆகிவிட்டது.
மைலாப்பூரில், வழக்கமாக நான் மாவடு வாங்குபவரின் போன் நம்பர் கூட இருக்கு. நான் போன் பண்ணினதும், " வாங்கம்மா, இன்னிக்குதான் நல்ல வடு வந்திருக்கிறது. கிலோ 250 ரூ. தான். உடனே வாங்க" என்று , என்று கேட்டாலும் அதே மாதிரி சொல்வாள். வார்த்தை மாறமாட்டாள். தினம் ஒரு பேச்சு கிடையாது. நானும் அதை நம்பி, உடனே ஓடி, சுமார் 6 கிலோ வாங்கி, கல் உப்பு வாங்கி, வரளி மஞ்சள், கடுகு வாங்கி, மெனக்கெட்டு போட்டு, என் பெண்ணிற்கும் பாதி குடுப்பேன்.
எனக்கு குழம்பு சாதத்திலிருந்து, தயிர் சாதம் வரை மாவடு தொட்டுக்க கொள்ள பிடிக்கும். இங்கே , சோளிங்க நல்லூர் வந்த பிறகு, அது பழங் கதை தான்.
வடு போட ஒரு பெரிய டப் வைத்திருந்தேன். அதில் போட்டு, வடு தண்ணீர் வீட்டுக் கொண்டு, கொஞ்சம் சுருங்கியதும், பெரிய கண்ணாடி பாட்டில்களில் மாற்றி விட்டு, ஒரு சிறிய ஜாடியில் தினப்படிக்கு கொஞ்சம் போட்டு டேபிளில் வைத்து விடுவேன்.
எல்லா பாத்திரங்களையும் , சாமான்களையும் விஸ்ராந்திக்கு கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.
ஹும்ம்ம்...... இனி மாவடு போடுவதெல்லாம், கனவாய், பழங் கதையாய் போய் விடும்.

Saturday, April 18, 2020

Tanjore.....

நான் பிறந்து வளர்ந்தது தஞ்சாவூரில்.
அப்பா ஒரு கிறிஸ்டியன் பள்ளியில் கணக்கு வாத்தியார். அவருடைய ஒரு வருமானத்தில் - அதுவும் வாத்தியாருக்கு எவ்வளவு சம்பளம் வந்துவிட போகிறது - ஏழு குழந்தைகளை சாமர்த்தியமாக , நல்ல சாப்பாடு போட்டு வளர்த்தது அம்மாதான்.
பெரிய வீடு. அரண்மனையை சுற்றி நாலு வீதிகள்; நாலு அலங்கங்கள். நாங்கள் கீழலங்கம் . ராஜா காலத்தில் இந்த தெரு வீடுகள் எல்லாம் குதிரை படை ஆட்களுடையது என்று சொல்வார்கள். நான் சொல்வது சர ஃ போஜி ராஜா காலத்தில் .
எங்கள் வீட்டிற்கு எதிர்த்தாற்போல் அகழி.
அப்போதெல்லாம் தெருவில் பஸ், கார் ஒன்றும் ஓடாது. ஜாலியாக விளையாடுவோம்.
அப்போ தஞ்சாவூரில் காலேஜ் இல்லாததால் என் சிஸ்டேர்ஸ் எல்லாம் ஸ்கூலோடு படிப்பை முடித்துக் கொள்ள , என் அண்ணாக்கள் மட்டும் , ட்ரெயினில் திருச்சி போய் படித்தார்கள்.
அப்போ சாப்பிட்ட கோதுமை கஞ்சியும், வேக வாய்த்த கடலை, வேக வாய்த்த சர்க்கரை வள்ளி கிழங்கு, நல்ல கறிகாய்கள், வாழை பழங்கள் - இன்று வரை நல்ல திடமான ஹெல்த் கொடுத்திருக்கிறது என்றால் மிகையில்லை. ஹோட்டல் எல்லாம் தெரியாது.
எவ்வளவு பண்டிகைகள் ..... எல்லாவற்றையும் எவ்வளவு இன்வால்வ்மெண்ட்டோடு கொண்டாடி இருப்போம். மாமா, அத்தை எல்லாம் கிராம வாசிகள். லீவுக்கு போயிருக்கிறோம். அப்போது தஞ்சை என்ன செழுமை....
எங்களுக்கு தெரிந்த அவுட்டிங் எல்லாம் அய்யங்கடை தெரு, சினிமா இவ்வளவு தான். பெரிய கோவில் கூட அதிகம் போனதில்லை.
தஞ்சை வாழ்க்கையை பற்றியும், அண்ணாக்கள், அக்காக்களோடு வாழ்ந்ததையும் (சண்டை எல்லாம் போட்டுக் கொண்டு தான் !!! ) சொல்வதென்றால் ஒரு புத்தகமே போடலாம்.

தஞ்சை பற்றி நீங்காத நினைவுகள்...

தஞ்சை பற்றி நீங்காத நினைவுகள்...
--------------------------------------------------------
நாடார் ஸ்டார், கண்டிராஜா அரண்மனை, வண்டிக்கார தெரு, கீழலங்கம் வீடுகள்....
விடியற்காலை , பெரிய மார்க்கெட்டிலிருந்து, கீழ வாசல் சின்ன மார்க்கெட்டுக்கு கூடை கூடையாக போகும் பச்சை பசேல் என்ற நாட்டு காய்கறிகள்; அவைகளை தூக்கிக்கொண்டு ஒரு தாள நயத்துடன் வேகமாக நடக்கும் பெண்களும், ஆண்களும்.
பல்லக்கு திருவிழா - சுமார் 11 பல்லக்குகள்; பல கோவில்களில் இருந்து கிளம்பி, ராஜ வீதியில் ஒன்று சேர்ந்து, ஒன்றன் பின் ஒன்றாக வீதியில் போக, அவைகளை இரவு கண் விழித்து, நல்ல பாவாடை சட்டை போட்டு, இரண்டணா பாக்கெட் மணியில் பலூன் , மிட்டாய்கள் வாங்கிய நினைவுகள் .....
எங்கள் தெரு அம்மன் கோவிலில் ஆடி மாசம் நடக்கும் கரகமும், பால்குடமும், காவடியும்...
சரஸ்வதி மஹால்... அங்கே அருமையான புத்தகங்களும் , ஸ்டேஜும் , காலை நிகழ்ச்சிகளும்... அப்போது அதன் அருமை தெரியவில்லை என்பதுதான் நிஜம்...
மேல வீதிக்கு போக, அரண்மனை வழியாக செல்லும் குறுக்குப் பாதை...
தொள்ளைக்காது மண்டபம்.. அரண்மனை கோவில்... அங்கே சுரங்கப் பாதை இருக்கு என்ற கதைகள்....
அருகே திருவையாறு...
தஞ்சை மாரியம்மன் கோவில்...
நடக்கும் தூரத்தில் நான்கு சினிமா கொட்டகைகள் - யாகப்பா, ராஜா, ஞானம், கிருஷ்ணா ....இரண்டணா , நாலணா டிக்கெட்.... பெஞ்ச்; ஓரணாவுக்கு பாட்டு புத்தகம்
சிவகங்கை தோட்டம்...
பூவரசம் பூ மரமும், அதன் பூவில் பொம்மையும், இலையில் ஊதலும்....
மார்கழி மாத கோலங்கள்... நாங்கள் ஐந்து சகோதரிகளும் ஒற்றுமையாக பெரியதாக போட்டது...
நவராத்திரியின் பெரிய கொலுக்களும் , பாட்டும், சுண்டலும்... பகிர்ந்து உண்டலும்...
ஐம்பதுகளின் பிற்பகுதியில் விடப்பட்ட ஒன்றிரண்டு டவுன் பஸ்...அதை வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு, பொடி நடையாக ஸ்கூலுக்கு நடந்தது.....
கூடப் படித்த ஜாய் ஜென், ராபீன்ஸா, வசந்தா, பிருந்தா...
வெளியூரில் வேலை பார்த்த அண்ணா வரும்போது எங்களுக்கு வாங்கி வந்த சாக்கலேட்டுகள்... அவனுக்காக அம்மா செய்த பூப் போன்ற இட்லியும், வெங்காய சாம்பாரும்...
டென்ஷன் , ஸ்ட்ரெஸ் இல்லாத படிப்பு... முதல் ரேங்க் பற்றி கவலை படாத, அம்மா, அப்பா , நாங்கள்...
பள்ளியில் மாலை ஸ்கூல் முடிந்து கேம்ஸ்.... அங்கே நெட் பால் , த்ரோ பால் வெறித்தனமாக விளையாடியது....
மொட்டை மாடியில் படுத்து, அப்பாவிடம் அஸ்ட்ரானாமி கேட்டது....
அக்காக்கள் கற்றுக்கொண்ட கர்நாடக சங்கீதம், நான் கற்றுக் கொண்ட வீணையும் ...
ரேடியோவில் கேட்ட கட்சேரிகளும், அப்பாவுக்கு தெரியாமல் கேட்ட சினிமா பாடல்களும்.. அந்த பாடல்கள் இன்று வரை அடி பிறழாமல் ஞாபகம்...
அம்மா செய்யும் பக்ஷணங்கள்...
சேர் கணக்கில் - ஒரு சேர் எட்டு அணா என்று வாங்கிய எண்ணெய் ... வீசையில் வாங்கிய கறிகாய்கள்... படியில் வாங்கிய அரிசி...
தெருக் கோடியில் 'ராஜா' கடையில் வாங்கி குடித்த கலரும், வாங்கி சாப்பிட்ட கடலை மிட்டாயும்...
இலந்தை பழம், நாகப் பழம், முந்திரிப் பழம், கமர்கட்டு... ,
அப்பா, தானே பெரிய ஊசி போட்டு தைத்து வைத்த , விகடனில் வந்த நாவல்கள்....
இன்னும், இன்னும், எவ்வளவோ நினைவுகள்....
இப்பவும், நாங்கள் எல்லோரும் கூடினால் பேசி மகிழ்வது... இவைகளும், அம்மா, அப்பா எங்களை கஷ்டப் பட்டு வளர்ந்ததும்..