Saturday, April 18, 2020

தஞ்சை பற்றி நீங்காத நினைவுகள்...

தஞ்சை பற்றி நீங்காத நினைவுகள்...
--------------------------------------------------------
நாடார் ஸ்டார், கண்டிராஜா அரண்மனை, வண்டிக்கார தெரு, கீழலங்கம் வீடுகள்....
விடியற்காலை , பெரிய மார்க்கெட்டிலிருந்து, கீழ வாசல் சின்ன மார்க்கெட்டுக்கு கூடை கூடையாக போகும் பச்சை பசேல் என்ற நாட்டு காய்கறிகள்; அவைகளை தூக்கிக்கொண்டு ஒரு தாள நயத்துடன் வேகமாக நடக்கும் பெண்களும், ஆண்களும்.
பல்லக்கு திருவிழா - சுமார் 11 பல்லக்குகள்; பல கோவில்களில் இருந்து கிளம்பி, ராஜ வீதியில் ஒன்று சேர்ந்து, ஒன்றன் பின் ஒன்றாக வீதியில் போக, அவைகளை இரவு கண் விழித்து, நல்ல பாவாடை சட்டை போட்டு, இரண்டணா பாக்கெட் மணியில் பலூன் , மிட்டாய்கள் வாங்கிய நினைவுகள் .....
எங்கள் தெரு அம்மன் கோவிலில் ஆடி மாசம் நடக்கும் கரகமும், பால்குடமும், காவடியும்...
சரஸ்வதி மஹால்... அங்கே அருமையான புத்தகங்களும் , ஸ்டேஜும் , காலை நிகழ்ச்சிகளும்... அப்போது அதன் அருமை தெரியவில்லை என்பதுதான் நிஜம்...
மேல வீதிக்கு போக, அரண்மனை வழியாக செல்லும் குறுக்குப் பாதை...
தொள்ளைக்காது மண்டபம்.. அரண்மனை கோவில்... அங்கே சுரங்கப் பாதை இருக்கு என்ற கதைகள்....
அருகே திருவையாறு...
தஞ்சை மாரியம்மன் கோவில்...
நடக்கும் தூரத்தில் நான்கு சினிமா கொட்டகைகள் - யாகப்பா, ராஜா, ஞானம், கிருஷ்ணா ....இரண்டணா , நாலணா டிக்கெட்.... பெஞ்ச்; ஓரணாவுக்கு பாட்டு புத்தகம்
சிவகங்கை தோட்டம்...
பூவரசம் பூ மரமும், அதன் பூவில் பொம்மையும், இலையில் ஊதலும்....
மார்கழி மாத கோலங்கள்... நாங்கள் ஐந்து சகோதரிகளும் ஒற்றுமையாக பெரியதாக போட்டது...
நவராத்திரியின் பெரிய கொலுக்களும் , பாட்டும், சுண்டலும்... பகிர்ந்து உண்டலும்...
ஐம்பதுகளின் பிற்பகுதியில் விடப்பட்ட ஒன்றிரண்டு டவுன் பஸ்...அதை வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு, பொடி நடையாக ஸ்கூலுக்கு நடந்தது.....
கூடப் படித்த ஜாய் ஜென், ராபீன்ஸா, வசந்தா, பிருந்தா...
வெளியூரில் வேலை பார்த்த அண்ணா வரும்போது எங்களுக்கு வாங்கி வந்த சாக்கலேட்டுகள்... அவனுக்காக அம்மா செய்த பூப் போன்ற இட்லியும், வெங்காய சாம்பாரும்...
டென்ஷன் , ஸ்ட்ரெஸ் இல்லாத படிப்பு... முதல் ரேங்க் பற்றி கவலை படாத, அம்மா, அப்பா , நாங்கள்...
பள்ளியில் மாலை ஸ்கூல் முடிந்து கேம்ஸ்.... அங்கே நெட் பால் , த்ரோ பால் வெறித்தனமாக விளையாடியது....
மொட்டை மாடியில் படுத்து, அப்பாவிடம் அஸ்ட்ரானாமி கேட்டது....
அக்காக்கள் கற்றுக்கொண்ட கர்நாடக சங்கீதம், நான் கற்றுக் கொண்ட வீணையும் ...
ரேடியோவில் கேட்ட கட்சேரிகளும், அப்பாவுக்கு தெரியாமல் கேட்ட சினிமா பாடல்களும்.. அந்த பாடல்கள் இன்று வரை அடி பிறழாமல் ஞாபகம்...
அம்மா செய்யும் பக்ஷணங்கள்...
சேர் கணக்கில் - ஒரு சேர் எட்டு அணா என்று வாங்கிய எண்ணெய் ... வீசையில் வாங்கிய கறிகாய்கள்... படியில் வாங்கிய அரிசி...
தெருக் கோடியில் 'ராஜா' கடையில் வாங்கி குடித்த கலரும், வாங்கி சாப்பிட்ட கடலை மிட்டாயும்...
இலந்தை பழம், நாகப் பழம், முந்திரிப் பழம், கமர்கட்டு... ,
அப்பா, தானே பெரிய ஊசி போட்டு தைத்து வைத்த , விகடனில் வந்த நாவல்கள்....
இன்னும், இன்னும், எவ்வளவோ நினைவுகள்....
இப்பவும், நாங்கள் எல்லோரும் கூடினால் பேசி மகிழ்வது... இவைகளும், அம்மா, அப்பா எங்களை கஷ்டப் பட்டு வளர்ந்ததும்..

No comments:

Post a Comment