Sunday, May 24, 2020

SK & Fruits

எங்க வீட்டில், எப்போதும் பழங்கள் வாங்குவது நான்தான்.
கொஞ்ச நாள் முன்பு, "நான் ரொம்ப வருஷம் இதெல்லாம் பண்ணியாச்சு. இனிமே நீங்க வாங்கிண்டு வாங்கோ" ன்னு இவர் கிட்ட சொல்ல, ஆரம்பிச்சுது வினை.
வாழைப்பழம் வாங்கிண்டு வரச்சொல்லி, "பச்சைப் பழம், பெரிசா" இருக்கும் ன்னு அடையாளம் சொல்லி, ஆறு பழம் வாங்கிண்டு வரச்சொன்னேன்.
வந்தது 12 பழம். "ஏன் இவ்வளவு?" ன்னா, "வண்டிக்காரன்தான் ஒரு சீப்பு எடுத்து, வாங்கிக்கச் சொன்னான்" ங்கறார்.
(உலகத்தில், என்னைத் தவிர யார் எது சொன்னாலும் கேக்கும் ஜாதி)
அதுதான் போகட்டும்னா,"பெரிய" பழத்துக்கு ஒரு அளவில்லை? ஒரு பழத்தை உரித்து, ஆளுக்கு பாதி சாப்பிட்டால், அன்று காலை டிபன் வேண்டியிருக்கவில்லை.
வயிறு ரொம்பிடுத்து. இந்த ரேட்டில 12 பழத்தை எப்படி முடிக்கிறது? குடு, பாதி, வேலை செய்பவளுக்கு !
அடுத்த முறை, பயந்துண்டு, சின்னதா, 6 பழம். மேலே கொஞ்சம் கருப்பு. "இதை ஏன் வாங்கி னேள். தோல் கருப்பா இருக்கே?" ன்னேன். "அந்த கடைக் காரன்தான் "மேலே அப்படித் தான் இருக்கும் சாமி. உள்ளே பளம் நல்லா இருக்கும்" ன்னான் ங்கறார் ! தூக்கி குடு, நாலு பழத்தை, வேலை செய்பவளுக்கு. (அவளே திகைத்து போனாள் நான் பழம் தரும் ரேட்டை பாத்து !)
மற்றொரு நாள் 1 டஜன் கொய்யாப் பழம் ! கூட இருந்த friend வாங்கினார்னு இவரும். இதுல விசேஷம் என்னன்னா , இவர் கொய்யாப் பழம் சாப்பிட மாட்டார். So , மிச்ச பழம் என்ன ஆகியிருக்கும் ? ன்னு ஊகிச்சிறுப் பேள் ! ஆனால் இந்த தடவை டிரைவருக்கு.
ஆப்பிள் உடம்புக்கு நல்லது. விலை அதிகம்னாலும், அப்பப்ப வாங்கலாம்னு சொல்லியிருக்க, ஒரு நாள் 6 ஆப்பிள் வந்தது. சிகப்பா, பள பளப்பா.... ஆசையா கட் பண்ணினா, உள்ளே ப்ரௌனா, கொஞ்சம் கொஞ்சம் கெட்டுப் போய் ! இரண்டு நறுக்கினால் தான் 4 துண்டுகளாவது தேறுகிறது. வெளியில பார்த்தால் தெரியாதுதான். ஒத்துக்கறேன். ஆனால், இந்த கடைக்காரனுக்கேல்லாம், இவர் முகத்தை பார்த்தோண எப்படி தெரிகிறது, இந்த பழங்களை இவரிடம் தள்ளலாம் என்று ?
இப்படித்தான் ஒரு நாள், நான் சொல்லாமலே, சுமார் 10 விளாம்பழம் வாங்கிண்டு வந்தார்.
நாங்கள் இருவரும் காசியில் விளாம்பழத்தை விட்டாச்சு. ! "உனக்கு ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிண்டு வந்தேன்" ன்னு இவர் சொன்னதும், உருகித்தான் போய் விட்டேன்.
"காசி சபதமா, கணவன் சந்தோஷமா? " ன்னு மனசில ஒரு பட்டி மன்றம் நடத்திட்டு, கண்ணுக்குத் தெரியாத "காசி சபதத்தை" கை விட்டு, "கண்ணுக்கு தெரிந்த" இவர் ஆசையை அனுபவிக்க, பழத்தை உடைத்து (அவைகளில் பாதிக்குப் பாதி காய்கள் என்பது வேறு விஷயம்) , வெல்லம் போட்டு, சாப்பிட்டேன். இவருக்கு ரொம்ப சந்தோஷம்.
காசி சமாசாரம் எல்லாம் மனதோடு புதைத்து விட்டேன்.
"விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோட " ன்னு , அன்னிலேர்ந்து பழம் சாப்பிடும் ஆசையே போய் விட்டது.


No comments:

Post a Comment