Monday, October 9, 2017

பிறந்தநாள்.....

3ம் தேதி பிறந்தநாள். அன்று ரொம்பவும் அம்மா அப்பா ஞாபகம்.
நான் செல்ல மகளாக இருந்ததுமல்லாமல், மாத முதலில் பிறந்த நாள் வருவதால், அப்பாவுக்கு எனக்கு ஏதாவது வாங்கி தருவதில் மகிழ்ச்சி.
நான் S.S.L.C. படிக்கும்போது, ஸ்கூல் கடைசி வருஷம் என்பதால் அப்பாக்கு எனக்கு புது ட்ரெஸ் வாங்கித்தர ஆசை. ஆனால் பண வசதி இல்லை. அப்பா அதற்காக அழுதது, இப்போதும் பசுமையாக நினைவில் இருந்து அழுத்துகிறது. வழக்கம் போல தீபாவளி பாவாடை தாவணியை போட்டுக் கொண்டு ஸ்கூலுக்கு போனேன்.
டிசம்பர் சீசனில் ரோஜாப்பூ நிறைய . சீப்பாக கிடைக்கும். என் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அம்மா 1 அணாவுக்கு 25 ரோஜாப்பூ என்று 50 பூ வாங்கி (ரோஸ் நிறம் மட்டும்-பாக்கி கலர் ரோஜா வெல்லாம் நான் அப்போது பார்த்ததே இல்லை) - பிளாஸ்டிக் கவர் எல்லாம் கிடையாது - ஆதலால் வழக்கமான மஞ்சள் துணிப்பையில் போட்டு தருவாள். எல்லா டீச்சருக்கும் குடுப்பேன். எல்லோரும் அதை வைத்துக் கொள்ளும்போது பெருமையாக இருக்கும். சாகலேட் பழக்கம் எல்லாம் கிடையாது.
ஆனாலும் அப்போது இருந்த சந்தோஷம் இப்பொது என்ன வாங்கிக் கொண்டாலும் கிடையாது. அம்மா, அப்பா பாசத்துக்கு ஈடேது??

சாப்பாடு பரிமாறுதல் .....

சாப்பாடு பரிமாறுதல்
தினசரி சாப்பாடு:-
வெறும் தட்டில், முதலில் சாதம் போடக் கூடாது (ஆகாது).
கறி / கூட்டு (தொட்டுக்க என்னவோ) அதை போட்டுவிட்டு, அப்புறம் சாதம்.
நெய் விடும் வரை, தட்டில் கை வைக்கக் கூடாது. நெய் விட்டதும், ஒரு சிறு கவளம் நெய் சாதம் சாப்பிட்டு விட்டு, அப்புறம் வழக்கப்படி, சாம்பார், ரசம், தயிர் etc
விசேஷ நாட்களில்.
இலையை, நுனி இடது பக்கம் இருக்குமாறு போட வேண்டும்.
டம்ளரில் தண்ணீர் இடது பக்கம். - இலையில் கொஞ்சம் தெளித்து விட்டு.
முதலில், பாயசம், இலையின் கீழ் பக்கம், வலது கோடியில்.
அடுத்தது, தயிர் பச்சடி, ஸ்வீட் பச்சடி, இலையின் மேல் பக்கம், வலது கோடி.
வரிசையாக, பச்சடிக்கு இடது புறமாக
பிறகு, ப. பருப்பு கோசுமல்லி, க.பருப்பு கோசுமல்லி.
தேங்காய் கறி, காரக்கறி, கூட்டு (அல்லது அவியல்)
வடை, அப்பளம், கொஞ்சமாக உப்பு.
மேல் வரிசை நிறைந்து விட்டால், இடது கோடி, கொஞ்சம் கீழே, ஸ்வீட்.
இலையின் இடது பக்கம் கோடியில், கலந்த சாதம் கொஞ்சம்.
அப்புறம், பருப்பு, சாதம், நெய்
இது வரை, சாப்பிடுபவர்கள், இலையில் கை வைக்கக் கூடாது.
பிறகு, சாம்பார், கொஞ்சம் மோர் குழம்பு (சாதத்தின் மேல் ஊற்றக் கூடாது. சாதத்துக்கு கிட்ட, பக்கத்தில, தனியா.
அடுத்தது, ரசத்துக்கு சாதம்.
ரசம் கேட்கும் முன், பச்சடி, கறி வகைகள், அப்பளம்.
பிறகு ரசம்.
ரசம் சாதத்துக்கு அப்புறம், பாயசம்.
இப்போ, கொஞ்சம் ஊறுகாய் வைத்து விட்டு, தயிருக்கு சாதம்.
தயிருக்கு சாதம் போடுகையில், கேட்டு, கணக்காக போட வேண்டும்.
சாப்பிடுபவர்கள், தங்களுக்கு வேண்டியதை போட்டுக்கொண்டு, மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும்.
அதிகமாக போட்டுக்கொண்டு, இலையில் எரிந்து விட்டு போவது கூடாது.
எதையும் "எனக்குப் பிடிக்காது. வேண்டாம்" என்று சொல்லக் கூடாது. சமைத்தவர்களுக்கு சங்கடமாக இருக்கும். அனாவசிய வாக்கு வாதம் எழும். பிடிக்காது என்றாலும், ரொம்ப கொஞ்சமாக போட்டுக்கொண்டு (பிடிக்காது என்ற வார்த்தையை தவிர்த்து) , முடித்து விட வேண்டும். (சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்குள் ஒளித்து, கண்ணை ஏமாற்ற வேண்டியது தான்)
கரண்டியை மரித்துப் பரிமாறக் கூடாது.
(திவசத்தில், முதல் தலைமுறை விட்டு, ரெண்டாம் தலை முறைக்கு தான் சாதக் கரண்டியை மரித்துப் போட வேண்டும்; husband பூணல் எந்த பக்கம் முடிகிறதோ, அந்த பக்கம் wife நிற்க வேண்டும்.
இதற்கு ஒரே exception ஆசீர்வாதத்தின் போது. இடது பக்கம் நின்று, அங்க வதிரத்தின் நுனியை பிடிக்கும்போது)
கரண்டிகள் தவறி கூட இலையில் படக் கூடாது.
ஒரே பந்தியில் இருக்கிறவர்கள், முடிந்தவரை, ஒன்றாக எழுந்திருக்க வேண்டும். (சீக்கிரம் முடித்து விட்டால் கூட, கொஞ்சம் காத்திருக்கலாம்)
அவசியமானால் ஒழிய, நடுவில் தண்ணீர் குடிக்கக் கூடாது.
அவரவர் சாப்பிட்ட இலையை , எடுக்கக் கூடாது; மடக்கிப் போடக் கூடாது.
ஒவ்வொரு sub sect க்கும் ஒரு முறை இருக்கும். நான் சொல்லியிருப்பது, ஐயராத்து சம்பிரதாயம்.
ரொம்ப கஷ்டமாக தோன்றுகிறதா ?
சித்திரமும் கைப் பழக்கம். செந்தமிழும் நாப் பழக்கம்.

என் அக்கா..

என் அக்கா..
அம்மாவிற்கு முதல் குழந்தை இறந்து போக, இரண்டாவதாக பிறந்த பெண்; பிறவியிலேயே, காது கேளாமல், வாய் பேசாமல் பிறந்தவள்.
நான் கடைசி குழந்தையாக பிறக்கும்போது, அம்மாவுக்கு 32 வயது; அக்காக்கு 15.
எங்களிருவருக்கும் இடையில் இன்னும் 2 பையன்களும், 3 பெண்களும்.
எனக்கு தெரிந்து, பெரியவர்கள் சொல்லக் கேட்டு, நான் பிறந்ததிலிருந்து சமையலறை மட்டுமே தன் சாம்ராஜ்யமாக கொண்டவள். தன் உடன் பிறந்தவர்களுக்கு சேவை செய்வதே அவள் வாழ்வின் ஒரே லட்சியம்; பொழுது போக்கு.
சமைத்து, பரிமாறி, எங்களை அன்போடும், அதட்டலோடும் சாப்பிட வைத்து, எண்ணெய் குளியல் செய்வித்து.... டிபனுக்கு பஜ்ஜியும், போண்டாவுமாக, 9 பேருக்கு செய்து கொடுத்து, மாற்றுத் துணிகள் கூட அதிகம் இல்லாமல், அந்த ஏழ்மையை ஏற்றுக்கொண்டு, தன் வாழ்வில் கல்யாணம், கார்த்திகை என்று ஒன்றையும் காணாமல்......
தன் 4 சகோதரிகளுக்கும், ஆளுக்கு இரண்டு குழந்தை பேற்றுக்கு செய்து, ஓடை உழைத்து....
எப்போது அம்மாவை பார்க்க போனாலும், அம்மாவுக்கப்புறம் அண்ணா வீட்டில் இருந்த அவளை பார்க்கப் போனாலும், ஒரு பிடி சாப்பிடாமல் அனுப்ப மாட்டாள்... டிபன் அல்லது, ஒரு வாய் சாதம் பிசைந்து, கண்டிப்பாக சாப்பிட வைத்து, காபி குடுத்து, முகம் சுழிக்காமல்...
தன்னலமில்லாத சேவை 86 வயது வரைக்கும்...
கீழே விழுந்ததே காரணமாக படுக்கையில் 7 மாதம் முன்பு வீழ்ந்து, நடமாட்டமில்லாமல், அப்போதும், நாங்கள் பார்க்கப் போனால், சாப்பிட்டாயா? ஏன் நல்ல நகை போட்டுக் கொண்டு வரவில்லை; ஏன் இன்னும் வேலை பார்க்கிறாய் என்று எண்ணெய் உரிமையோடு கடிந்து.....
எழுதிக் கொண்டே போகலாம்.
கடைசி வரைக்கும், அவளுக்கு செய்து புண்ணியம் தேடிக்கொண்டவன் எங்கள் சின்ன அண்ணா, மன்னி.
vital organs எதுவும் fail ஆகாமல், அமைதியாக மார்ச் 6ம் தேதி தன் இறுதி மூச்சை விட்டு, எங்களை எல்லாம் மீளா துயரில் ஆழ்த்தியவள்...
அவள் கண்கள் தானமாகக் கொடுக்கப் பட்டு, இறந்தும் தன் ஈகையால் வாழ்கிறாள்.
எங்கள் துக்கம் இன்னும் ஆறவில்லை... எங்களுக்கெல்லாம் அம்மாவாக இருந்தவளின் இழப்பை எங்கள் 6 பேராலும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறோம்.
கண்டிப்பாக அவளுக்கு மறு பிறவி கிடையாது. அப்படி இருந்தால்,அவள் நல்ல குடும்பத்தில் பிறந்து நன்றாக வாழ வேண்டும்.

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க .......

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க சோம்பல்...
beauty parlour போய், style ஆ oil massage ன்னு சொல்லி, லேசாக சூடு செய்யப்பட எண்ணையை (ஆயுர் வேதிக் என்று சொல்லியே நம்மை கவுத்து ) தலையில் வைத்து, தலை முடி நடுவில் விரலால் கோதி மசாஜ் செய்து, ஷாம்பூ போட்டு அலசி, drier சூடாக வைத்து (கெடுதல் ன்னு தெரிஞ்சும்) காய வைத்து, விரித்துப் போட்டு, காசை பிடுங்கி அனுப்பும் போது அம்மாவின் ஞாபகம்.
இந்த மாதிரி விடுவாளா அம்மா...
ஞாயத்திக் கிழமை க்கு என்று ஒரு படுத்தல் ...
ஒரு டபரா எண்ணையை எடுத்து, தாராளமாக உச்சந்தலையில் கொட்டி , 'டொப், டொப் என்று பத்து தட்டு தட்டி, உச்சியில் சூடு பறக்க அழுத்தி அழுத்தி தேச்சு "ஒடம்பு சூடு கண்டு போச்சு" ங்கற கமென்ட் சொல்லாம இருந்ததில்ல...
தலை முழுதும் முடிந்ததும், நுனி முடி வரை எண்ணெய் வைத்து உருவி, தூக்கி கட்டி விட்டு, டபராவை வழித்து, முகத்தில் இரண்டு கன்னத்திலும் தடவுவாள் (முகம் மறக்காமல் இருக்கவாம் !!)
பிறகு ஒரு கிண்ணத்தில் எண்ணெய் குடுத்து, உடம்பு முழுதும் தாராளமாக பூசிக்கச் சொல்லி, பாத் ரூமில் 1/2 மணி தேவுடு காத்தப்புரம் சீயக்காய் படலம்.
ஆத்தில் அரைத்த பொடி. சீயக்காய், அரப்புக் கட்டி, முழு உளுந்து, வெந்தயம், காய்ந்த எலுமிச்சை தோலி எல்லாம் போட்டு அரைத்து, கப்பி இல்லாமல் சலித்து வைத்திருப்பாள் . அதை தாராளமாக ஒரு பெரிய கிண்ணத்தில் எடுத்து வந்து, அத்துடன் சாதம் வடித்த காஞ்சி சேர்த்து கரைத்து, உச்சந்தலையில் ஆரம்பீத்தால், கர கர என்று எண்ணெய் போக தேய்த்து, நிறைய தண்ணீர் விட்டு அலசி.....
உடம்புக்கும் அந்த சீயக்காயை தேய்த்துத் தான் குளிக்க வேண்டும்.
பிறகு, 1/2 மணி டவல் வைத்து துடைத்து, சாம்பிராணி போட்டு, (கூடை மேல் கவுத்து) ... விட்டு விடுவாள். அன்று முழுவதும் எண்ணெய் தடவ கூடாது. சீப்பு போடக் கூடாது. சின்ன பின்னல் போட்டு, விரித்து விட்டு விடுவாள்.
சாயந்திரம், பொறுமையாக, ஒவ்வொரு முடியை விலக்கி, சிடுக்கு எடுத்து, கையாலேயே வாரி, தளர பின்னி விடுவாள்.
மறு நாள்தான், கொஞ்சம் எண்ணெய் தடவி, சீப்பால் வலிக்க வலிக்க வாரி, இழுத்துப் பின்னுவாள்...
சண்டே வந்தாலே night mare !!
இப்போ ஏதோ ஒரு குட்டிப் பெண்ணிடம் தலையை குடுத்து விட்டு, டிப்ஸ் வேறு !!

PESTS

எனக்கு கரப்பான் பூச்சி ன்னா ரொம்ப அருவருப்பு. (யாருக்கு தான் இருக்காது)
ஆறு மாசத்துக்கு ஒரு தரம் pest control பண்றேன். அப்படியும் ரொம்ப வரது. அதுவும் சின்ன சின்ன பூச்சியா இருக்குமே. அந்த variety .
ஒரு நாள் பாத்தா, வெள்ளை கரப்பான் பூச்சி. இந்த கரப்பான் பூச்சி மட்டும் எப்படித்தான் பல்கி பெருகுமோ தெரியல்லே. எதை சாப்பிடுமா. எப்படி வளருமோ.
நான் நாலு variety வெச்சிருக்கேன் எங்க வீட்டிலே.
எங்கம்மா, "கரப்பு நெறைய இருந்தா, அதுவும் வெள்ளை கரப்பு, பணம் நெறைய வரும். லக்ஷ்மி வாசம் பண்ணுவா. கொல்லாதே" ம்பா.
லக்ஷ்மி வாசம் பண்ண, கரப்பாம் பூச்சிதான் கெடச்சிதா என்ன? பணம் வந்துதோ என்னமோ; பூச்சியை அழிக்க நெறைய செலவு ஆறது !!
அடுத்தது பல்லி. சின்ன வயசில, பல்லி விழுந்த எண்ணையில வருத்த வடாம சாப்பிட்டு, வாந்தி எடுத்து, கண் சொருகினது, தினமும் ஞாபகம் வருகிறது. எதை எடுத்தாலும், அதுக்குள்ளே உத்துப் பாப்பேன்; பல்லி இருக்கான்னு. அதுவே ஒரு psycho mania ஆயிடுத்து.
pest control பண்ணினா, பல்லி போக மாட்டேன்கிறது. எனக்கு எங்க வீட்டில இருக்கிற, ரெண்டு மூணு பல்லி, நன்னா அடையாளம் தெரியும். பேர் வைக்காததுதான் குறை. அது எப்படி, எப்போ டைனிங் டேபிள் அடியில ஒளிஞ்சிகுமோ தெரியல்ல. ராத்திரி, மேலே உலாத்தும். அதனாலே, பழம் எல்லாம் வைக்க மாட்டேன். அப்படி வெச்சிருந்தா, "இது மேல பல்லி ஊர்ந்திருக்குமோ" ங்கற நினைவே என்னை கொன்னுடும். அலம்பு அலம்பு ன்னு அலம்புவேன். ஆனா, வாழைப்பழமா இருந்தா, அதன் நுனி திறந்திருந்தா, தூக்கித்தான் போடுவேன்.
இதுல என்ன கொடுமைன்னா, SK வோட "பல்லி மேலே ஊர்ந்து போச்சுன்னா, விஷம் இல்லை. உள்ளே விழுந்து, எச்ச்சமிட்டாத் தான் விஷம்" ங்கற பல்லிக்கான support !
அடுத்த torture கொசு. ("அற்பப் பயலே சிறு கொசுவே.; யாரென்றேன்னை எண்ணினை நீ " ) .. அது எப்படி, வீட்டுக்குள்ள ஒரே ஒரு கொசு வந்தா, அது என்னை மட்டும் target பண்ணி கடிக்கிறது? இதுல SK க்கு பரம சந்தோஷம்.
அதுவும், என்ன punctual ! டாண்ணு ஆறு மணிக்கு, பாட்டோட ஆஜர். இப்போ எல்லாம் அதுக்கு immunity ஜாஸ்தி ஆயிடுத்து. கொசுகளுக்கும் scientists research பண்ணி, immunity develop பண்ணுவா போல இருக்கு. அதனாலே, நான் சான்சே எடுக்கறது இல்ல;
கொசு வத்தி சுருள் ஏத்தி, (ஆறு மணிக்கு வீட்டுக்கு விளக்கேத்த என்னை மருமகளா கொண்டு வந்தா. நான் இப்போ கொசு வத்தி சுருள் தான் ஏத்தறேன்) , குட் நைட் மேட் வெச்சு, ஒடோமாஸ் அரை ட்யூப் தடவி, கால் கையை போர்வையால் மூடி, கையை கொஞ்சம் வெளியே நீட்டி, bat ஆல் அடிக்கிறேன்.
இன்னும் ஹிம்சை நெறைய இருக்கு. மரவட்டை, பாச்சை, bizzzzzzங்கற வண்டு , கம்பளி பூச்சி இப்படி !!
ஆனா, கடைசியாக ஒண்ணே ஒண்ணு சொல்லி முடிச்சிக்கறேன்.
எனக்கு பாம்பை, படத்தில் பார்த்தால் கூட பயம். பாம்பு சினிமா வந்தால், இரண்டு கையாலும் கண்ணை மூடிண்டு, கொஞ்சமா விரலை பிரித்து, பார்ப்பேன். பாக்காமலும் இருக்க முடியாது, அது என்னவோ டி வி போட்டாலே, பாதி நாள் பாம்பு படம் தான்.
இதுல, என் பேத்திக்கு மேலே, என் ரெண்டு கையையும் மாலையா போட்டு கொஞ்சினா, "பாட்டி, விடு" ன்னு கோபமா சொல்றா.
ஆனா, பாட்டிய திட்டரவ, பாம்பை (python ) மேலே போட்டுண்டு, அதை போட்டோ வேற எடுத்துண்டு என்கிட்டே காமிக்கறா !
காலக்ஷேபத்துக்குப் போனா, "இறைவனுடைய எல்லா படைப்புக்கும் அர்த்தம் இருக்கு" ங்கறா. (purpose )
ஒரு வேளை, என்னை படுத்தறதுதான் அந்த purpose ஒ ?

பதினெட்டாம்பெருக்கு

காவேரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு
இந்த ஐந்து நதிகளும்... திருவையாறில்...தஞ்சாவூருக்கு மிக அருகில்...
இதை எதற்கு இங்கே சொல்கிறேன் ?
பதினெட்டாம்பெருக்கு வருகிறது. இது அனேமாக பெண்களை முன்னிறுத்தி செய்வதுதான்...
காவிரியில் புதுத் தண்ணீர் திறந்து விடப்பட்டு பாய்ந்து வரும்..
அதை கொண்டாடி, காவிரிக்கு நன்றி சொல்ல வேண்டும்.
கலந்த சாதங்கள் கட்டி எடுத்துக்கொண்டு, இருப்பதற்குள் நல்ல ட்ரெஸ் போட்டுக்கொண்டு, மருதாணி இட்டு, வளையல், மாலைகள், கதம்பம் பூ அலங்காரங்களுடன், குடும்பம் குடும்பமாக ஏதாவது ஒரு நதிக்கரைக்கு போவோம்...மாலை 5 மணிக்கு...வெயில் தாழ.
நடந்துதான் போவோம்...
அங்கு... எவ்வளவு குடும் ங்கள்...மகிழிச்சி ததும்ப, சிரித்த முகத்துடன்..!! குழந்தைகள் எல்லாரும் சேர்ந்து ஓடி பிடித்து விளையாட்டு ஆரம்பமாகிவிடும்..
Brahmin அல்லாத community களில் சில பழக்கங்கள் உண்டு...
அகல் ஏற்றி நதியில் விடுதல்; தாலி சரடு மாற்றுதல்; பெண்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்தல் ...இப்படி.
(ஆண்கள் எல்லாம் DUMMY தான் .. சாப்பாடு உண்டு... செலவு, அழைத்து போய் வருவது எல்லாம் அவர்கள் பொறுப்பு .. அவர்களையும் சில சௌகரியங்களுக்காக சேர்த்துக்கொள்ள வேண்டும் !! )
அப்புறம் என்ன... பகிர்ந்து உண்ணுதல் தான்... கையில் தாமரை இல்லை, தையல் இல்லை வைத்து, அளவு தெரியாமல் சாப்பிட்டு, கல்யாணம் ஆன பெண்கள் வெற்றிலை பாக்கு போட்டு வாய் சிவந்து.. (கட்டிக்கொடுத்த சோறும், கத்துக்கொடுத்த வித்தையும் எத்தனை நாளைக்கு !!!)
இந்த ஒரு நாள் மகிழ்ச்சி.. ஒரு ஆண்டு தாங்கி.. அடுத்த ஆடி பிறக்கும்போது... சந்தோஷமாக எதிர் நோக்க வைக்கும்.
பெண்களே.. எந்த ஊரில் இருந்தாலும்.. உறவுகளை / நட்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள்... இப்போதே plan பண்ணுங்கள்.. ஆளுக்கு ஒன்று என்று சமையல் வேலையே பகிர்ந்து கொள்ளுங்கள்... நதி, குளம், ஏறி.. ஒன்றும் இல்லை என்றால்..இருக்கவே இருக்கிறது மொட்டை மாடி...
திறந்த வெளிதான் சந்தோஷம்.. இயற்கையோடு ஒன்ற முடியும்.. !!
அந்த ஒரு நாள் ஆபீஸ், வேலை, tension எல்லாவற்றையும் விட்டு, மறந்து., நல்ல ட்ரெஸ், நகைகள் போட்டு, வயதை மறந்து... கூடி கும்மி அடித்து கொண்டாடினால்.. புது ரத்தம் உடலில் பெருகும்...
ஒரு சின்ன அட்வைஸ் ...
Traditional பட்டு புடவை, சின்ன பெண்களுக்கு பாவாடை, சட்டை, தாவணி, நகைகள்
தலை நிறைய பூ, கை நிறைய வளையல், மனம் நிறைய சந்தோஷம், வாய் நிறைய சிரிப்பு... இவற்றுடன் கொண்டாடுங்கள் !
தலையில் வைக்கும் ஒரு முழம் மல்லிகை பூ, நம் மனதை மிக சந்தோஷமாக வைக்கும்... என் அனுபவத்தில் உணர்ந்தது !!

காலைக் காட்சிகள் - நடுத்தரக் குடும்பத்தில் -

காலைக் காட்சிகள் - நடுத்தரக் குடும்பத்தில் -
100 வருடங்களுக்கு முன்....
"சீதா, எங்க தொலஞ்சிப் போன? - டிகாஷன் இறக்கியாச்சா? வாசல் தெளிச்சு கோலம் போட்டாச்சா? போய் சட்டுன்னு ஒரு சோம்பு விட்டுண்டு வந்து அடுப்பை பத்த வை; வெந்நீர் அடுப்பைப் போடு" (மாமியார்)
"அம்மா காப்பித் தரையா? (மாமனார்)
"மன்னி; நான் இன்னிக்கு செக்கிரமே கிளம்பணும்; பழையதைப் பிசஞ்சு வெச்சுடுங்கோ" (மச்சினன்)
"சீதா, ஸ்நானத்துக்கு முன்னே பழயதை பிசஞ்சுடு. பழம் பத்தை வெளில வெச்சுட்டு, அந்த இடத்த தொடச்சுட்டு குளிக்கப் போ" (மறுபடியும் மாமியார்)
"அம்மா, இந்த சீமாச்சு என்ன தொரத்தறான்" (மகள்)
"அடி செருப்பால, அவன்கிட்ட ஏன் வம்புக்கு போற. போய் எண்ணெய் சீப்பை எடுத்துண்டு வா" (பாட்டி)
" அம்மா என்ன சமையல்?" (சீதா)
"ஆத்தாடி சீதாம்மா.. கொஞ்சம் சாம்பல் அள்ளிப் போடும்மா" (வேலைக்காரி)
சமையல் ஆயிடுத்தா? நானும் கிச்சாவும் உக்காரலாமா" (கணவன்)
"அம்மா வண்ணான் வந்திருக்கேன்..." (வண்ணான்)
9 மணி வரை கூச்சலும் குழப்பமும்...
தாத்தா பாட்டி, அம்மா அப்பா, அண்ணன் தம்பி, அவர்கள் குழந்தைகள் எல்லோருக்கும் ஈடு கொடுக்கும் சீதா... பெரிய மாட்டுப் பொண்
-----------------------------
60 வருஷத்துக்கு முன்...
"அம்மா, ஸ்கூலுக்கு சீக்கிரம் போணும்; தலை வாரி விடு " (மகள் காயத்ரி )
"நான் பின்னட்டுமா காயு " (பாட்டி)
"போ பாட்டி, நீ இறுக்கி பட்டிக் காடு மாதிரி பின்னுவ.."
"காயு, பாட்டிய எதுத்துப் பேசாத; நான் இதோ வரேன்.." (கோமளா.. நாட்டுப் பெண் )
"அம்மா , என் ரெகார்ட் நோட்டு எங்கே? ராத்திரி இங்கேதானே வெச்சேன்?" (கோகுல்)
"நீ காக்கா படம் வரஞ்சியோனோ; அதைப் பாத்து கோவப்பட்டு காக்கா தூக்கிண்டு போயிடுத்து.." (காயத்ரி)
"காயு, கீயு, தோயு, உன்ன அடிக்காம இப்ப விட மாட்டேன்..." (கோகுல்)
"என்ன அங்க சத்தம்- ஒரு பேப்பர் கூட நிம்மதியா படிக்க முடியல்லே" (கல்யாண ராமன் என்ற அப்பா)
"கல்யாணம், காலம்பர வேலையில கொழந்தைகளை வெய்யாதே.." (தாத்தா)
"இப்போ அடங்கறேளா, இல்லை, வெளக்கமாத்த எடுக்கவா" ..(ஆத்தோடு இருக்கும் அத்தை)
"அக்கா, தூளில கொழந்தை சினுங்கறான். கொஞ்சம் பாருங்களேன்" (கோமளா)
9 மணி... "அப்பாடா.. ஒவ்வொரு நாள் காத்தாலையும் ஒரு பிரளயம்"
--------------------------------
30 வருஷங்களுக்கு முன்...
"ஸ்ரீதர், யூனிபார்ம் போட்டாச்சா?"
"அம்மா, ஷூ பாலிஷ் போடல்லே"
"கொஞ்சம் தானே போட்டுக்கோ; சாயங்காலமே போட்டு வெச்சா என்ன. நான் மட்டும் எவ்வளவுதான் பண்ணுவேன். எனக்கும் நாழி ஆறது ஆபீசுக்கு"
"ஸ்ரீதர், அம்மாவை தொந்தரவு பண்ணாதே"
"அப்பா, அப்பா நீ போட்டுக் கொடு"
"அடி , ராஸ்கல், அப்படியே போடா, போய் அடி வாங்கு"
"அம்மா , தலை வாரி விடறியா"
"இருடி வரேன்; 15 வயசாச்சு, இன்னும் தலை வாரிக்கக் கூடத் தெரியாது; அந்த நாள்ல, உன் வயசுல எனக்கு வரன் தேட ஆரம்பிச்சாச்சு"
"அம்மா பழைய புராணம் பாடாதே. நான் தான் தலை மயிராய் 'U' CUT பண்ணிக்கரேனே."
"என்னவோ பண்ணித்தொலை; எண்ணெய் தொந்தரவு பண்ணாதே..இந்த மனுஷனுக்கு நியூஸ் பேபரை தவிர ஒன்னும் தெரியாது. சாயங்காலம் வந்தா, TV... news. ஒரு சீரியல், சினிமா பாக்க விடறதில்ல. ஆபீசுல, அந்த கடங்கார மனேஜர் வேலை குடுத்து பிழியறான்"
"முடியல்லன்னா வேலைய விடேன். ஏன் பொலம்பற"
"ஆமாம், வேலைய விட்டுட்டு, புல் டைம் வேலைக்காரி ஆகிடுறேன். ஏதோ ரெண்டு காசு வந்தா, கொஞ்சம் துணி மணி நகை நட்டு வாங்கலாம். வீட்டுக் கடன் அடிக்கலாம்"
"சரி சரி சீக்கிரம் கிளம்பு. போற வழியில விட்டுட்டுப் போறேன். சாயந்திரம் எங்கம்மா அப்பாவை பாத்துட்டு வரேன். கொஞ்சம் நாழி ஆகும்"
9 மணிக்கு வீடு பூட்டப் படுகிறது
-----------------------------
10 வருடங்களுக்கு முன்...
"Shuba , come for break fast. its getting late"
"please wait 'mmaa .. why are you so tense"
"I also have to go early today, Geethu. where is Suresh?"
"having a shower 'mmaa. ammaa, pl. tell him not to come to my class during interval time"
"please adjust Shuba; he is still young maa "
"maa, at the same age, I used to do so much on my own & help you also. it is his turn today to fill water bottles"
"OK...OK... no shouting in the morning. have you prepared well for the test?"
"Suresh, take your bread toast & milk. Have you finished all the home work?"
"ammaa, daily bread?"
"kannaa.. evening something nice OK... " now let me leave for office.
"ராஜீவ், நான் வரட்டுமா? போறச்சே பெட்ரோல் வேற போடணும். சார் சாவி TV மேலே இருக்கு. நான் வரேன். லக்ஷ்மி (வேலைக்காரி) , வேலைய முடிச்சுத்து, இட்லிக்கு அரச்சு வெச்சுட்டு, பாத்து பூட்டிண்டு போ."
10 மணி... வேலைக்காரியும் போக, அந்தகாரம் சூழ்கிறது
-----------------------------
இன்று...
"Mom, I am ready. taking choco chips for break fast. pack just 2 chappaatthis for lunch with chocolate spread. your vegetables I will eat for dinner" - Dharshini
"Mummy, daaddy has checked my bag. give me cornflex & banana" (Dhaarini)
"take from the cupboard ; milk is on the table. pretty hot. take care. aask appaa to pack some cakes & fruits for short break. I am getting ready.
"Bye Seema, I will drop the kids in school & proceed to office"
"OK dear. I am also ready. Pl. drop me also. My car has gone for service"
7.45 am ... the house is empty... !!!! till they all say hi between 6 pm to 8 pm & disperse to solitude in their rooms at 8 pm.
-----------------------------------