Friday, July 24, 2020

நானும் பூனாவும்.......

நானும் பூனாவும்.......
1974 - எங்காத்துக்காரருக்கு பூனாவில் டெல்கோவில் வேலை கிடைக்க , பிப்ரவரி மாதம் புறப்பட்டு பூனா போய் விட்டார். என் பெரிய பையன் பெரி.......ய கிளாஸ் .... UKG ... அவனுக்கு எக்ஸாம் முடிய வேண்டாமா ? அதோடு பூனாவில் வீடு கிடைக்க வேண்டும்..
ஏப்ரல் 14 அவர் வந்து, என்னையும் , குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போனார்... முதல் தடவையாக ரயிலில் முதல் வகுப்பு பயணம் !!! எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.
ரயிலை விட்டு இறங்கி, பூனா ஸ்டேஷனில் கால் வைக்கிறேன், அந்தோ, என் செருப்பு அறுந்தது...வெறும் காலுடன் நடந்து போனேன்... நமக்குத்தான் அது பழக்கமாச்சே ... 18 வயது வரை !!! இருந்தாலும் கொஞ்சம் ஷேமாக இருந்தது.
பூனாவில் முதலில் வீடு கிடைக்காததால் , ஒரு நல்ல காலேஜ் friend சுமார் 15 நாட்கள், எங்களை அவள் வீட்டில் தங்க வைத்து, ஆதரித்தாள் .
வீடு கிடைத்து, ஷிஃப்ட் பண்ணினோம். முதல் முறையாக தனிக் குடித்தனம் வேறு... (ஒரு வருடம் தான் ) . ஒரே excitement .
பூனாவில் எல்லோரும் ஸ்ட்ரிக்ட்டாக மாராத்தித்தான். ஹிந்தி சினிமாக்கள் பார்த்து, எனக்கு கொஞ்சம் ஓட்டை ஹிந்தி தெரியும். அவ்வளவுதான். வீட்டு வேலை செய்பவளிடம் கொஞ்ச நாள் ஜாடைதான்.
அதெல்லாம் போக , முதல் முறையாக கறிகாய் வாங்க கடைக்குப் போனேன். காயை கையால் காண்பித்து (பெயர் தெரியாத கொடுமை ) - விலை கேட்டு, புரிந்தாற்போல் "ஆதா கிலோ " என்று, (ஏனென்றால் அது ஒன்று தான் தெரியும். ஒன்றிரண்டு சுமார் 20 வரை ) , சில கறிகாய்கள் வாங்கி கொண்டு, மொத்தம் எவ்வளவு என்று கேட்டேன் - ஜாடையில்தான்... கடைக்காரன், "அடைரூப்யா " என்றான். அதாவது 2 1/2 ரூ. எனக்கு புரியாததால், அதை காட்டிக் கொள்ள இஷ்டமில்லாமல், "பாஞ்ச் " என்றேன்... சாமர்த்தியமாக bargain பண்ணுவதாக நினைத்துக் கொண்டு... பரவா இல்லை... கடைக்கு காரன் நல்லவன்தான்... என் கையில் இருந்த 5 ரூபாயை எடுத்துக் கொண்டு, பாக்கி 2 1/2 ரூ. திருப்பிக் கொடுத்தான் !!!
அப்போதெல்லாம் பூனாவில் காய்கறிகள் அவ்வளவு மலிவு. மொத்த மார்கெட் போனால் , 4 அணாவுக்கு ஒரு கிலோ கிடைக்கும். கறிகாய்க்கு என் மாத பட்ஜெட் 15 ரூபாய் தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ரூபாய்க்கு 8 வாழைப்பழம் ... பச்சை வாழை - பெரிது பெரிதாக. இன்னும் சாமான் விலையெல்லாம் சொன்னால் மயங்கி விடுவீர்கள்
குழந்தைகளை நல்ல ஸ்கூலில் சேர்த்தோம்.
இவருக்கு வியாழக் கிழமை வார விடுமுறை. குழந்தைகளுக்கு ஞாயிறு . ஜாலி , ஜாலி. வியாழக்கிழமை, ஷாப்பிங்தான் (என்ன- கறிகாய் , மளிகை ஷாப்பிங் ) , சினிமாதான். குழந்தைகள் வருவதற்குள் வீட்டிற்கு வந்து விடலாம்.
எவ்வளவு ஹிந்தி சினிமா? ஞாயிறுகளில் , எப்போதாவது காலை ஷோ தமிழ் வரும். friends ஸோடு , போய் வருவேன்.
அப்புறம் மராத்தி பேசியதென்ன... (வீட்டு வேலை செய்பவளுடன்தான் ) , கார் ஒட்டக் கற்று க் கொண்டு , rash driving என்று பேர் வாங்கியதென்ன.... நல்ல தமிழ் friends ...
6 வருடங்கள் பூனாவில் வாழ்ந்தது, திரும்பி சென்னை வரும் போது அழுது தள்ளியது... ஒரு புத்தகமே போடலாம் .

Thursday, July 23, 2020

பழைய நினைவுகள் !! தஞ்சாவூர் ...

பழைய நினைவுகள் !!
தஞ்சாவூர் ...
காலை 4 மணிக்கு ... 4 சகோதரிகள்... வாசலில் அப்பா போட்டுக்கொடுக்கும் ஒரு பல்பு விளக்கு 40 வாட்...
ஆளுக்கொரு கொட்டாங்கச்சி கோல மாவு ... ஒரே கோலம்... பெரிய கோலம்..
ஒற்றுமையாக இருக்கும்போது, கோலம் தவறில்லாமல், பெரியதாக, அழகாக, மகிழ்ச்சியாக உருவாகிறதே !!
அருகிலிருக்கும் கோவிலில் இருந்து திருப்பாவையும், திருவெம்பாவையும் ...
இப்படித்தானே 50 பாடல்களையும் கற்றோம் !!!
ஒரு சாரியில் வீடு... எதுத்த சாரியில்... கோட்டை சுவர்.. அதன் அப்பால் அகழி.. ராஜா காலத்தியது.. ... எதுத்த சாரியில் வீடு கிடையாது... கோலம் போட நிறைய இடம்...
கார் பஸ் என்று வாகன போக்குவரத்து கிடையாது... நடந்து செல்பவர்களும், கவனமாக, கோலத்தை மிதிக்காமல், நம் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து..
பெரிய கோலம் போட்டு, அதன் மேல் அங்கங்கே பரங்கி பூ வைத்து ..(ஒ, அந்த பரங்கிப்பூ வாடிக்கையாக கொடுக்கும் சிறிய பெண்ணின் முகம் கூட நினைவில் நிற்கிறது...!!)
கோலத்தை முடித்து... கொஞ்சம் தள்ளி நின்று, அதை முழுவதுமாக ரசித்து... 5 . 30 க்கு உள்ளே சென்று... அம்மா, அப்பாவை கூப்பிட்டு காமித்து.. அவர்களும் நம் மகிழ்ச்சியில் பங்கேற்று...
என்ன ஒரு சந்தோஷமான நிகழ்வுகள் ....
இன்னும் இரண்டு நாட்களில் மார்கழி பிறக்கிறது ...
சென்னை அடுக்கு மாடி குடியிருப்பில், பெரிய கோலமாவது, பரங்கி பூவாவது ...
பழைய நினைவுகளில் வாழ்கிறேன் !!!!

கண்ணாடி வளையல்கள்......

கண்ணாடி வளையல்கள் பார்க்கும்போது எனக்கு பழைய ஞாபகங்கள்.

நானும், என் 4 சிஸ்டர்ஸும் , வளையல் பைத்தியங்கள் . எல்லா பண்டிகைகளுக்கு - ஆவணி அவிட்டத்துக் கூட கை நிறைய கண்ணாடி வளையல்கள் போட்டுக் கொள்வோம். மேட்ச் எல்லாம் தெரியாது... கலர் கலராக போட வேண்டும். அவ்வளவுதான்.

இவ்வளவு ஏன்; ஆத்தில் திவசம்னா கூட, கை நிறைய வளையல் போட்டுக்கொண்ட பேக்குகள் .

தீபாவளிக்கு முதல் நாள் அய்யங்கடை தெரு ட்ரிப் கண்டிப்பாக உண்டு; என்ன - புது வளையல் வாங்கத்தான். பாவம் அம்மா- வளையலுக்கு மட்டும் காசு கண்டிப்பாக கொடுத்துவிடுவாள்... ஆளுக்கு 4 அணா .

வாசலில், வளையல்காரர் சத்தம் கேட்டுவிட்டால், அம்மாவுக்கு காபராத்தான். ஆனால், சந்தோஷமாக எல்லோருக்கும் வளையல் வாங்கித் தருவாள். ஸ்கூல் போகும்போது, கழட்டி விட வேண்டும்.

அதுவும், மருதாணி இட்டுக் கொண்ட மறுநாள், உள்ளங்கை, விரல்கள் சிவப்புக்கும், வளையலுக்கும் அவ்வளவு அழகு - நாங்களே ரசித்துக் கொண்டு மகிழ்வோம்.

இப்போது நினைத்தால் சிரிப்பாக வருகிறது.

சாதாரணமாக , வளைகாப்பு function க்கு போனால் , சாஸ்திரத்துக்கு எல்லோருக்கும் நாலு வளையல்கள் தருவார்கள். என் அத்யந்த சினேகிதி பெண்ணிற்கு வளைகாப்பு... "நமக்கு இல்லாத உரிமையா ?" என்று, கூச்ச நாச்சமில்லாமல் நிறைய எடுத்துக் கொண்டேன்.

இப்பவும் என்னிடம் நிறைய உண்டு. ஆனால் கொஞ்சம் கலர் புடவைக்கு பொருந்துகிறாற்போல் போட்டுக் கொள்வேன் . மயிலையை காலி பண்ணி, இங்கு வரும்போது, என் பெண் எடுத்துக் கொண்டது போக மற்றதெல்லாம் distribution .


Wednesday, July 22, 2020

அம்மாவும் தோட்டமும்.....

அம்மாவும் தோட்டமும்.....
தஞ்சாவூரில் , நான் பிறந்த வீட்டில், கொல்லை பக்கம் தோட்டம் போட இடம் உண்டு. அதில் அம்மா நிறைய வாழை மரம் வளர்த்திருந்தாள் . எவ்வளவு வாழை தார்..! நான் சுமார் 6 வயது வரைதான் அந்த வீட்டில் இருந்தேன். ஆனாலும், வாழைப் பழத்தை பழுக்க வைத்து, அம்மா குடுத்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. திடீரென்று வீட்டுக்காரன் அந்த வீட்டை காலி பண்ண சொல்ல, அப்பாக்கு ரொம்ப கோபம் வந்து, காலி பண்ணும் முன் அந்த மரங்களை எல்லாம் வெட்டிப் போட்டார். !!
அதற்குப் பிறகு, கீழலங்கத்தில் ஒரு தனி வீடு. வீட்டின் சைடில் தோட்டம் போட ஒரு பெரிய இடம். அதில் அம்மா, சில கறிகாய்கள் - வெண்டை, கத்திரிக்காய், பூசணி, பரங்கி, அவரை, புடலை பந்தல்கள் எல்லாம் போட்டிருந்தாள்..அம்மாக்கு தோட்ட இன்டெரெஸ்ட் அதிகம் இருந்தது. புடலை பிஞ்சு வந்ததும், அதன் நுனியில் கல் கட்டி வைப்பாள் - நீண்டு வளர.
பூச் செடிகள் நிறைய. முக்கியமாக கனகாம்பரம், டிசம்பர் பூக்கள் - கலர் கலராக. நிறைய பூக்கும். தினமும் பூக்களை பறித்து, தொடுப்பது அவ்வளவு சுவாரசியம். பூ மிஞ்சிப்போய் அக்கம் பக்கம் முதலில் இலவசமாக, போகப் போக விலைக்கு.... ஓரணாவுக்கு அவ்வளவு பூ கொடுப்பாள்.
அந்த தோட்டத்தின் நடுவில் சென்ட் ரோஜா என்று ஒரு செடி. அடர்த்தியாக இருக்கும். வெள்ளை பூக்கள் கொத்து கொத்தாக பூக்கும். ரொம்ப வாசனை. ஆனால் தலையில் வைத்துக் கொள்ள முடியாது.
அந்த வாசனைக்கு பாம்பு வந்தது.
ஒரு நாள் , நடுக் கூடத்திலிருந்து, சமையல் ரூமிற்கு போகும் இடத்தில் , கதவு நிலைக்கு மேல் ஒரு பெரி ........ ய பாம்பு , ஹாயாக படுத்துக்க கொண்டிருக்க, அதை முதலில் பார்த்தது என் பெரிய அக்கா. அக்கம் பக்கம் எல்லோரும் வந்து, அந்த பாம்பை கிளப்பி, அடித்துக் கொன்றார்கள். ஆனால் எனக்கு பாம்பை பார்த்தாலே ரொம்ப பயம்... யாருக்குத்தான் இருக்காது. பின்னால் தள்ளி நின்று கொண்டிருந்த எனக்கு, அந்த கும்பலில், பாம்பு சரியாக தெரிய வில்லை. எங்கள் வீட்டு பாம்பை நானே சரியாக பார்க்கமுடியவில்லை.
இப்போது போல், அப்போது செல் போன் இருந்திருந்தால் போட்டோவாவது எடுத்திருக்கலாம் !!!
அன்றைக்கே அந்த சென்ட் ரோஸ் செடியை அம்மா வேருடன் வெட்டிப் போட்டாள் .
ஹும்ம்ம் ... அதல்லாம் இனிமையான நினைவுகள்.

Friday, July 17, 2020

அம்மாவின் சாந்து.....

அம்மாவின் சாந்து.....
நெற்றிக்கு இட்டுக் கொள்ள , கருப்பு சாந்து, அம்மாவே ஆத்தில் பண்ணுவாள் .
சாந்து பண்ண, அரிசி மாவு; அதற்கு ஒரு "ஷைன்" கொடுக்க ஜவ்வரிசி மாவு.
ஜவ்வரிசியை ஏந்திரத்தில் மாவாக்கி, அரிசி மாவுடன் கலப்பாள்.
அந்த மாவை வெறும் இரும்பு இலுப்பச் சட்டியில் போட்டு, கிளறிக்கொண்டே இருந்தால், மாவு கறுப்பாகிவிடும் .
நன்றாக கறுப்பானவுடன், அதில் தண்ணீர் சேர்த்து கிளறுவாள்.
பதமாக, சாஃப்டாக வந்துவிடும்
அதை சாந்து கொட்டாங்கச்சியில் எடுத்து வைத்தால் காய்ந்துவிடும் .
நெற்றிக்கு இட்டுக் கொள்ளும்போது, நடுவில் சொட்டு தண்ணீர் விட்டு , சுட்டு விரலால் குழைத்து , இட்டுக் கொள்ள வேண்டும். அதை வட்டமாகவோ, திலகமாகவோ இடுவது ஒரு கலை !!
குழந்தைகளுக்கு இடும்போது, அம்மா வாயில் நாக்கை துருத்தி ஒரு சத்தம் ... குழந்தை கவனத்தை ஈர்க்க. கேட்டிருக்கிறீர்களா அந்த சத்தத்தை ?

அம்மா கூட்டிய கண் மை ....

அம்மா கூட்டிய கண் மை ....

நாங்க எல்லாம் சிறுமிகளாக இருந்த போது , கடையில கண் மை வாங்கியதே இல்லை. ஆத்தில் அம்மாதான் கூட்டுவாள்.
மூன்று செங்கல் வைத்து, அடுப்பு பண்ணி, ஒரு பெரிய மண் அகலில் நிறைய விளக்கெண்ணெய் விடுவாள்.
வேஷ்டி துணி எடுத்து , தோய்த்து போட்டு, அதில் கெட்டியாக , பெரிய திரி சுற்றுவாள்.
அந்த திரியை அகலில் போட்டு, ஏற்றுவாள்.
மார்க்கெட்டிலிருந்து, புது மண் தட்டு வாங்கி வருவாள்.
அந்த தட்டின் அடி பாகத்தில் விளக்கெண்ணெய் ஒரு கோட் பூசி விட்டு, அதை செங்கல் மேல் விளக்கின் சுடர் படும்படி வைத்து , மொத்தத்தையும் ஒரு புது கூடையால் மூடி விடுவாள்.
காலையில் பார்த்தால் , அந்த மண் மண் தட்டின் அடியில் கருப்பாக தூள் படிந்திருக்கும். அதை, ஒரு புது குச்சியால் ஒரு பேப்பரில் தள்ளி மடித்து வைத்து விடுவாள்.
அதில் கொஞ்சம் போடி எடுத்து , விளக்கெண்ணெய் துளித் துளியாக விட்டு, மையாக குழைத்து மை கூட்டில் அடைத்து வைத்து விடுவாள். மை ரொம்ப கருமையாக இருக்கும்.
எங்களுக்கெல்லாம் கல்யாணத்தின் போது கூட வெள்ளியில் இந்த மைக் கூடு சீராக உண்டு.

படம் கிடைக்கவில்லை. 

காலத்தால் மாறிய என் விளையாட்டுக்கள் .......


சிறு வயதில்
பாண்டி, சடு குடு, கண்ணா மூச்சி, கல்லாமண்ணா.....

பிறகு
பல்லாங்குழி, பரம பதம், தாயம், சோழி, புளியங்கொட்டை, ஏழு கல் ... இத்யாதி

குழந்தைகளுடன்
carom , cards, monopoly, scrabble, chess etc.

இப்போது...
தனிமையில்
solitaire in Computer.....