Saturday, August 27, 2016

TREES & FLOWERS (1)....

 பூக்களும், மரங்களும் 

பூவரசம்பூ மரம் ( Portia tree)
நான் மெட்ராசில பூவரசம் பூ பாத்ததே இல்ல.  எங்கஊரிலநெறைய இருக்கும்... மஞ்சள்பூ... அதன்ஐந்துஇதழ்கள்பாவாடைவிரித்தாற்போல்.
மேலே மெல்லிய காம்பு; பூவின் அடிப்பாகம் பச்சையாய், கவிழ்த்து வைத்த  அரைஉருண்டையாய். அந்தஅரைஉருண்டையின்முகம், தட்டையாய், நான்கு பாகங்களை பிரித்தாற்போல், மாணிக்கச் சிவப்பாய். 
அதை சுற்றி, ஐந்து மஞ்சள் இதழ்கள்.. பெரிசாக மலராது.. கொஞ்சம் கூம்பியே இருக்கும். 
மரம் கொள்ளாமல் பூக்கும்.
இரண்டு பூக்களை எடுத்துக்கொள்வோம். ஒன்றை, காம்பு கிள்ளி, இதழ்களை உள்ளே விரல்கள் விட்டு, கொஞ்சமாக விரித்து விட்டால், பம்மென்று பாவாடை விரித்தாற்போல் இருக்கும். 
மற்றொரு பூவை எடுத்து, எடுத்து, இதழ்களை எடுத்து விட்டு, காம்பையும் கிள்ளி, கலர் முகம் தெரியராப்போல வெச்சு,  ஒரு மெல்லிய துடைப்பக் குச்சிய குத்தி, குச்சியோட இன்னொரு பக்கத்த, பாவாடை  பூவழியாசசொருகி, அதன் நுனியை வெளிக்கொணர்ந்து பிடித்துக் கொண்டால் பொம்மை மாதிரி இருக்கும் ! 
பூவின் நடுவில் இருக்கும் மகரந்தம், மெல்லியதாக, நீளமாக இருக்கும். இரண்டு பூக்களின் மகரந்த காம்பை, இரண்டு பக்கமும் கை போல சொருகலாம்

பனை மரம் : (palm tree)
எங்க ஊர்ல, எதுத்தாப்புல, மேட்டுல (ஒரு காலத்துல கோட்டை சுவர் !) பனை மரம் வரிசையா இருக்கும். அது தனிப்பட்ட யாருக்கும் சொந்தம் இல்லை. அதனால், ஆட்கள் வந்து, பனம் கிழங்கு வெட்டிப் போட (அவர்கள் கள் இறக்குவார்கள்... அது ஒரு தனி கலை) , எங்களுக்கு பிரெஷ் ஆகபனம் நுங்கு கிடைக்கும்.. வெட்டிப் போட்ட பனை ஓலை களையே, ஒரு கலை நயத் தோடு மடக்கி, நீள கப் மாதிரி பண்ணி அதில் நுங்கு.. பதநீரும் அதிலே எல்லாரும் வாங்கிக் குடிப்பா.. நான் குடிச்சதில்லை !

"பனை மரமே, பனை மரமே , ஏன் வளர்ந்தாய் பனை மரமே"
"நான் வளர்ந்த காரணத்தை, நாட்டாரே சொல்லிடுவேன்"
"படுக்க நல்ல பாய் ஆவேன், மழைக்கு நல்ல குடை ஆவேன்
விசிற நல்ல விசிறி ஆவேன், ......
என்று கற்றுக்கொண்ட ஒண்ணாம் கிளாஸ் பாட்டுகூட மறக்கவில்லை.  
இப்படித்தான் பொருட்களின் உபயோகங்களை பற்றி பாட்டாய் படித்தோம் !!

ஈச்ச மரம்.. (Date Palm Tree)

அதே மேட்டுல நெறைய ஈச்ச மரம்... கொத்துக் கொத்தாக ஈச்சம் பழம். துபாய், மஸ்கட் மாதிரி பெரிசா, அவ்வளவு ருசியான பழமா இருக்காது. ஆனாலும் அந்த ஈச்சங்கொத்தை யாராவது குரங்கு பசங்க மரத்துல ஏறி , பழுத்த கொத்தா பறிச்சுப்  போட்டா, "மந்தி" (பெண் குரங்கு ) மாதிரி, திம்போம். 

ஆல மரம்.. (banyan tree)
அங்கங்கே பெரிசு பெரிசா இருக்கும். அந்த விழுதுகள் மேலே இருந்து கீழ் வரை தொங்கி, தரையில் பதிந்து, விழுதுகளே தடிமனான மரம் மாதிரி இருக்க பரந்து விரிந்து இருக்கும்.
அந்த விழுதுல, ரெண்டை முடிச்சுப் போட்டோ, அல்லது, ஒற்றை விழுதை பிடிச் சிண்டோ ஊஞ்சல் ஆடுவது மஜா. 
அது மட்டுமா... 
ஆல மரம், அத்தி மரம், மாமரம், அரச மரம் இதிலெல்லாம் , கிளி, குருவி, மைனா, குயில், மரங் கொத்தி, அக்கூ பட்சி இதெல்லாம் நெறைய இருக்கும். 

மெட்ராஸ்ல இதெல்லாம் நெறைய அழிஞ்சுடுத்து... 
சமீபத்துல, ஒரு தனி வீடு , பின்னாலேதோட்டத்தில்  பெரிய மரங்களுடன், flat கட்டுவதற்காக இடிக்கப்பட,  அவைகளில் வசித்த பறவைகள், அந்த இடிக்கும் சத்தத்தில் பயந்து , பட படத்து திரிந்ததாகவும், வேறு இடத்துக்கு (எங்கே அந்த மாதிரி மரம் கிடைக்கும்?) புலம் பெயர்ந்த தாகவும், என் நாத்தனார் விவரிக்க, கற்பனை செய்து பாக்கும் போதே, மனசு கஷ்டப் பட்டது. 

அரச மரம்... (peepal tree)
அநேகமாக இப்போ கோவில்களில் மட்டும் தான். குழந்தைகளை, கோவிலுக்கு அழைத்துச் சென்றால் காண்பிக்கலாம்.
ஆல மரம் பாக்க, அடையார் theosophical society     போகணும். அந்த ஆல மரமும் விழுந்து விட, சுமாராக நிறுத்தி வைக்கப் பட்டிருக்கு.

புளிய மரம்... (tamarind tree)

கிராமப் புறங்களிலே, ரோட் ஓரத்திலே நெறைய புளிய மரம். உலுக்கினால் பிஞ்சாகவும், செங்காயாகவும் , சிலது பழமாகவும் கிடைக்கும்... கீழேயே உதிர்ந்தும் கிடக்கும்.. அப்படியே சாப்பிடலாம்...    

பாக்கு மரம் (beetal nut tree)
எங்க சேத்தூர் வீட்டிலே , கொல்லைப் பக்கம் நெறைய பாக்கு மரம். கொட்டை பாக்கு பழுத்த நிலைக்கு வந்ததும், ஆள் காரன் வந்து பறித்துப் போடுவான். அதை பக்குவப் படுத்தி, தோல் உரித்து, கொட்டை பாக்காக எடுத்து சேமிப்பா. அதை பாக்கு வெட்டியால் உடைத்து, வெற்றிலை போட்டுக்கொள்ள கொஞ்சம் வைத்து விட்டு, பாக்கி, கடைகளுக்கு விற்கப்படும்

இலவம் பஞ்சு மரம் (cotton tree)
அதே கொல்லையில இலவம் பஞ்சு மரம் இருக்கும். நெறைய காய்க்கும். அது பக்குவ மானதும், வெடிக்கும். அந்த நிலையில் பறித்து வைப்பார்கள். நாங்க அதை உடைத்து, பஞ்சை எடுத்து, அதற்குள் இருக்கும் கருப்பு கொட்டையை நீக்கி.. விளையாடுவோம்.. அத்தை கிட்ட திட்டும் வாங்குவோம், காயை வீணாக்குவதற் காக. 
அந்த பஞ்சு காய்கள் , தஞ்சாவூருக்கு எங்காத்துக்கு வரும். கொட்டை நீக்கி, பஞ்சை பிரித்து, பிய்த்து, அம்மா தலைகாணிகளில் ரொப்பியது, நன்றாக நினைவிருக்கிறது... 

வேப்ப மரம் (neem tree)
இதை neem   tree என்று பட்டணத்தில்  வசிக்கும்குழந்தைகள்காண்பித்தாலும், 
அதிலிருந்து  முத்திய பழங்களை எடுத்து, கையால் பிதுக்கி, விளையாட்டு நேரத்தில் மற்றவர் மேல் தடவி, கத்த விட்டு விளையாடுவதையும்,
காலையில் நிறைய ஆண்கள், பசுமையான, மெல்லிய வேப்பங்  குச்சியை உடைத்து, நுனியை தட்டி, அகல மாக்கி, பல்லால் கடித்து, பல் தேயப்பதையும்,
வீட்டில் அம்மை போட்டினால், வேப்ப தழைகளை வெட்டி, பாயில் பரப்பி, சுற்றிலும் போட்டு, அடையாளமாக வாசலில் நிலையில் சொருகி வைப் பதையும்,
அரிசி முதலிய வருடாந்திரசாமான்கள் , கம்பளி துணிகளுக்கிடையில்,  பூச்சி வராமல் இருக்க , வேப்பிலை போட்டு வைப்பதையும்
வேப்பங் கொழுந்தை , துளசியோடு சேர்த்து அரைத்து , சாறெடுத்து, குழந்தைகள் வயிற்றில் பூச்சியை தடுக்க, மருந்தாக போட்டுவதையும், 
இனி வரும் (ஏன் , இப்போதிருக்கும்) சந்ததிகள் பார்க்க மாட்டார்கள். 

பங்குனி, சித்திரை மாதம்,வேப்பம்பூ பூக்கும் மாதம். மரத்தடியை பெருக்கி சுத்தம் பண்ணி வைத்தால், நெறைய உதுந்து கிடக்கும் 
அதை திரட்டி, வாரி, முறத்தில் போட்டு சுத்தம் பண்ணி, நன்கு காய வைத்து, புடைத்து, மண் நீக்கி, வைத்துக்கொண்டால் வருஷம் பூரா வரும். 
அங்காயப் பொடிக்கு, ரசத்துக்கு உபயோகிச்சால், வயத்துக்கு நல்லது. 

இன்னும் எவ்வளவோ மரங்களுடனும், செடிக் கொடிகளுடனும் வாழ்ந்திருக்கிறோம்; இயற்கையை ரசித்திருக்கிறோம். 

எவ்வளவு பூக்களை புஸ்தகத்தில் வைத்து பாடம் பண்ணி இருப்போம்? 
எவ்வளவு இலைகளை ஸ்கூலுக்கு கிளாஸ்க்கு கொண்டு போயிருப்போம்?
எவ்வளவு மயில் ஒற்றை இறகை புக்கில் வைத்து, குட்டி போடும் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம்?
எவ்வளவு பட்டாம் பூச்சிகளை துரத்தி பிடித்திருப்போம்?

இப்போது நகர பள்ளி மாணவர்களுக்கு, எல்லாவற்றையும் படங்களாகவும், இன்டெர் நெட்டிலும் காண்பிப்பதற்கு பதில், ஊர் பக்கங்களுக்கும், தோட்டங்களுக்கும் கொண்டு போய் காண்பிக்கலாம். 

இப்போ குழந்தைகளை கேட்டால், அவர்களுக்கு இன்று கிடைக்கும் வசதிகளுடனும், High Tech Gamesஉடனும், தனிமையிலும், enjoyபண்ணுவதாகத் தான் சொல்கிறார்கள்.

ஆனால், இயற்கையோடும், சூரிய சந்திர ஒளியிலும், நண்பர்களுடனும், பெரியவர்களுடனும், குழந்தைகளுடனும் கழித்த நாட்கள் , அனுபவித்த !! சந்தோஷம் அதிகம் தான்.. இனிமையானவை தான்... 

இந்த நாள் குழந்தைகளுக்கு, city  யில் வாழ்பவர்களுக்கு கிடைக்காதது தான் 



Wednesday, August 24, 2016

PALLAKKU (CAR) FESTIVAL....

வருடம் ஒருமறை வரும் பல்லக்கு திருவிழா
மொத்தம் 11 பல்லக்குகள்
ஒவ்வொன்று ஒருவித அலங்காரம்
முத்து, பூ, மணி என்று.....


தெற்கு வீதி கோவிலில் இருந்து புறப்படும் ஒரு பல்லக்கு...
அது ஆடி அசைந்து வருகையில்
மேற்கு வீதி பல்லக்கு வரிசையில் சேர்ந்து கொள்ளும்
இப்படி 10 கோவில்களின் பல்லக்கு சேர்ந்து
எங்கள் கீழலங்கம் பிள்ளையார் கோவில் அருகில் வருகையில்
எங்கள் முத்து பல்லக்கு வரிசையில் சேரும்...

எங்கள் வீட்டருகில் இருக்கும் பிள்ளையார் கோவில் பல்லக்கு முத்து பல்லக்கு
அதனாலேயே... மொத்த விழாவிற்கும் நாங்கள் சூட்டிய பெயர்
முத்து பல்லக்கு விழா !!

ஒவ்வொரு கோவிலும் போட்டி போட்டுக்கொண்டு
பெரியதாகவும், அழகாகவும் அலங்கரிப்பார்கள் !!
ஆக்க பூர்வமான போட்டிதான்...

ஒவ்வொரு பல்லக்கிலும் கோவில் குருக்கள் .. பூஜை செய்த வாறு...
சாமியை பார்ப்பதை விட, அந்த பல்லக்கின் அலங்கார பொம்மைகளையும், மணி சரங்களையும், பூ அலங்காரத்தையும் பார்ப்பதுதான் எங்கள் மகிழ்ச்சி...
வருடா வருடம் பார்ப்பதுதான் என்றாலும்... ஒவ்வொரு வருடமும்.. புதிதாய்.. முதல் முறை பார்ப்பது போல்...
எங்களுக்கு ஆளுக்கு 2 அணா உண்டு செலவுக்கு... கணக்கு கேட்கப்படாத காசு !!
வருடத்திற்கு ஒரு முறை pocket money !
8
காலணா !!!
கைக்கடிகார மிட்டாய் கண்டிப்பாக வாங்குவோம்...
அதைத்தவிர...
பலூன், குச்சியில் சுற்றும் ஓலை மணி, கிளி பொம்மை
கிரு கிரு .. டிக் டிக்... சத்தம் போடும் சுற்றும் பொம்மை...
எல்லா சாமான்களுக்கும்... ஆயுள் ஒரு நாள் தான்...
அந்த ஒரு நாள் மகிழ்ச்சிக்கு ஒரு வருடம் காத்திருக்கலாம் !!

இருப்பதிலேயே (என்ன.. இரண்டோ.. மூன்றோ.. !!) பிடித்த பாவாடை , சட்டை..
தலை நிறைய பூ
கண்ணாடி வளையல்கள்

8 மணிக்கு தெருக்கோடிக்கு போனால்...
இரவு ஒரு மணி ஆகும் திரும்ப !!
அந்த மகிழ்ச்சி நீடிக்கும் ஒரு வருடம்...

இப்போதும் நடக்கிறது அந்த பல்லக்கு விழா..
நானும் என் சகோதரிகளும் இல்லாமல் !!!

Monday, August 22, 2016

PAAL KUDAM.....

பால் குடம் 

அதே மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை பால் குடம் எடுப்பார்கள். 
பால் குடம் யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் எடுப்பார்கள். 
நிறைய பேருக்கு வேண்டுதல் இருக்கும். 
கரகம் மாதிரி இல்லாமல், பால் குடம் காலையில் எடுப்பார்கள்.
பால் குடம் எடுப்பவர்கள் காலையிலேயே ஸ்நானம் செய்து, 7 மணிக்குள் கோவிலுக்கு வந்து விடுவார்கள். குடம் என்று பெயரே தவிர, அநேகமாக எல்லாம் சொம்புதான். 
சில பேர் காவடியும் எடுப்பார்கள். காவடிக்கு இரண்டு பக்கமும் இரு சின்ன சோம்பு கட்டி தொங்க விட்டிருப்பார்கள் .
 எல்லா சொம்புக்கும் சந்தன குங்குமம் இட்டு, பூ சுத்தி, பால் நிரப்புவார்கள். 
குறிப்பிட்ட நேரம் வந்ததும், அம்மனுக்கு தேங்காய் உடைத்து, பால் குடங்கள் தலையிலும், காவடி தொழிலும் வைக்கப் படும். ஊர்வலமாக, உறவினர்களும் புடை சூழ, நாலு வீதியிலும் போவார்கள். காலுக்கு செருப்புப் போடக் கூடாது. வெய்யில் ஏற ஏற தரை சூடாக இருக்கும். அதனால், எல்லா வீடுகளிலும் தண்ணீர் குடங்கள் ரெடியாக வைக்கப் பட்டிருக்கும். அவர்கள் இரண்டு மூன்று வீடு தள்ளி வரும்போது, எல்லோரும் வாசலில் நிறைய தண்ணீர் தெளிப்பார்கள். இப்படி வரிசையாக எல்லார் வீட்டிலும் தெளிப்பதால் தரை ஜில்லென்று இருக்கும். இதை தவிர, பால் குடம் எடுப்பவர்கள் காலிலும் தண்ணீர் ஊற்றுவார்கள். 
 ஊர்வலத்தோடு, மேளம்,, தாரை, தப்பட்டை எல்லாம் போகும். 
கோவிலுக்கு வந்து சேர்வார்கள். ஆனால், சில பேருக்காவது சாமி வந்து ஆடாவிடில் பால் குடத்தை இறக்க மாட்டார்கள். நிறைய பேருக்கு சாமி வந்து ஆடுவார்கள் மேளம் பலமாக அடிக்கப் படும். அந்த சூழலே வித்தியாசமாக இருக்கும். 
ஒவ்வொருத்தருக்காக சாமி வர, அவர்கள் குடம் இறக்கப் பட்டு, அவர்களுக்கு விபூதி, குங்குமம் பூசி, இளநீர் கொடுப்பார்கள். எல்லா குடங்களையும் இறக்கியதும் அம்மனுக்கு கற்பூரம் காண்பிக்கப் படும். எல்லோருக்கும் பிரசாதம் கொடுப்பார்கள். 
                                                                    காவடி 


  


Sunday, August 21, 2016

KARAGAM....


நம் வாழ்க்கை - குடும்பம், சமூகம்என்ற பல அங்கங்களை கொண்டது...
சமூக வாழ்க்கை என்பது, நம் சுற்றமும், நட்பும்சூழ, அவர்களுடன் சந்தோஷங்களை பகிர்ந்து, கஷ்டங்களில் பங்கெடுத்து வாழ்வது.

இதற்கு நாம் குழந்தை பருவத்திலிருந்தே பழக்கப்படுத்தப் பட்டோம்...
விளையாட்டுகள் மூலமாக; பண்டிகை, கொண்டாட்டங்கள் மூலமாக; கோவில், திருவிழாக்களின் மூலமாக...
பண்டிகைகள், திருவிழாக்கள் சும்மா பக்திக்காகமட்டும் அல்ல; 
all those activities gave us good SOCIALISATION ! we learnt values, customs, co-existance, give & take, to be satisfied with what we have etc. etc. 

முதலில் கோவில் திருவிழாக்களைப் பற்றிப் பார்ப்போம்....

தஞ்சாவூரில், எங்கள் தெருவில், எங்கள் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி ஒருசின்ன மாரியம்மன் கோவில்... வருடத்தில் இரண்டு முக்கியமான விழா.
ஒன்று ...கரகம்...

கரகம் எடுப்பவர் (யார் அதை தீர்மானிப்பார்கள் என்று தெரிய வில்லை -ஒரு particular குடும்பத்தில் வந்தவராக இருக்கலாம்) முதல் நாளிலிருந்தே விரதம்..

கரகம் அன்று..

அதை கட்டுவதற்கு --- அந்த கலையில் கை தேர்ந்தவர்கள்இருப்பார்கள் ... அவர்கள் 3/4 பேர் சேர்ந்து கட்டுவார்கள்...

ஒரு பெரியசொம்பு / வெண்கலப்பானை மாதிரி இருக்கும். அதன் மேல் கோபுரம் மாதிரி அலங்காரம்பண்ணி, நெட்டியில் கலர் கலராக பொம்மைகள் (கிளிகள் எல்லாம் இருக்கும்) கட்டி...ரொம்ப அலங்காரமாக இருக்கும்...

அதை கட்டும்போது நாங்கள் எல்லாம் வேடிக்கைபார்த்துக்கொண்டே இருப்போம். ரொம்ப சுவாரசியமாக இருக்கும்... வீட்டில் இருந்துவெளியே இருப்பதே ஒரு சுவாரசியம்.. அதுவும் மற்ற குழந்தைகள் கும்பலோடு !!
எல்லாம் கட்டி முடிந்து...

கரகம் எடுக்கப்போகிறவரை சாயந்திரம் ஆறுஅல்லது குளத்துக்கு கூட்டி போவார்கள்.. அங்கே அவரை குளிக்க வைத்து, ஈர வேஷ்டி கட்டி
(அந்த வேஷ்டிக் கட்டே வித்தியாசமாக, கச்சாம் போட்டு, மேலே குறுக்காக இரண்டுஅங்கவஸ்திரம் மாதிரி போட்டு, அவருக்கு நடக்க சௌகரியமாக இருக்கும்)

குளித்து, வேஷ்டி கட்டியதும், மாலைகள் போட்டு, விபூதி, குங்குமம் பட்டையாகவைத்து, கூட்டி வருவார்கள்.

கோவிலில் கரகத்துக்கு பூஜை செய்து, நல்லநேரத்தில் அவர் தலை மீது வைக்கப்படும்.

அதை சுமந்து (பிடித்துக்கொள்ளலாம்... கரகம் டான்ஸ் ல தான் பிடிக்காமல் ஆடுவார்கள்) அவர் தெருத்தெருவாக அழைத்துச் செல்லப்படுவார்...
முன்னால், தவில், நாதஸ்வரம், உடுக்கை, பம்பை, முனி போன்ற வாத்தியங்கள்

முன்னாலே... மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, புலி வேஷம் பச்சை காளி பவளக் காளி எல்லாம் போகும்...

(பச்சை காளி பவளக்காளி என்பது... இரண்டு ஆண்கள்... பெரிய கொம்பை இரண்டுகாலிலும் கட்டி (உயரமாக) ,பச்சை , சிகப்பு ட்ரெஸ் போட்டு, அந்த ட்ரெஸ், பொம்மென்று stiff ஆக, இடுப்பிலிருந்து கவுன் போல் இருக்கும்; மேலே அதே கலரில் சட்டை மாதிரி...அலங்காரமெல்லாம்.. கொஞ்சம் ஓவர் ஆகத்தான் இருக்கும்.. ஆனால் பார்க்கவேடிக்கையாகவும் இருக்கும்... அப்படியே உயரமாக, குச்சி காலில் balance பண்ணிநடப்பார்கள்)

6 மணிக்கு (மாலை) ஆரம்பிக்கும். எல்லார் வீட்டு மனிதர்களும்இரவு கரகம் வரும் வரை தெருவில்தான்.
சாயந்திரம் வாசல் தெளித்து, கோலம் போட்டுவைத்திருப்போம்...
இரவில் தெருவில் இருப்பது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்கொண்டாட்டம் தான்...
பயமே இல்லை... Stampede, திருட்டு, அடிதடி, கிண்டல்கேலி... ஒன்றும் இல்லாமல், பெண்களும் சுதந்திரமாக இருப்பார்கள்..

ஒருவழியாக ராத்திரி 12 மணிக்கு ஊர்வலம் முடிந்ததும், கோவிலில் கரகத்தை இறக்கி வைத்து, அம்மனுக்கு பூஜை. அது வரைக்கும் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்.

நல்ல ட்ரெஸ்போட்டு, பின்னி, பூ வைத்து, வளையல் போட்டு, அலங்காரம் பண்ணி...

எல்லாரும்அழகு பொம்மைகளாக வலம் வருவோம்...