Friday, March 22, 2019

VK & SURGERY


எனக்கு 2013 ல் ஒரு சின்ன ஆப்பரேஷன். இசபெல் ஆஸ்பத்திரியில். அந்த அனுபவங்கள் இங்கே .......

வியாழன், 26 செப்டம்பர் காலை, குளித்து, நல்ல ட்ரெஸ் (!!) பண்ணிக்கொண்டு, ஓட்ஸ் கஞ்சி சாப்பிட்டு, தம்பதி சமேதராய் 9 மணிக்கு ஆஸ்பத்திரியில் ஆஜர். ரூம் காலி இல்லை என்று 11.30 வரை காத்திருக்க வைக்க, நானும் அங்கு வருபவர் போகிறவர் எல்லாரையும் வேடிக்கை பார்த்து, "அவர்களுக்கெல்லாம் என்ன வியாதியை இருக்கும்; எத்தனை பேர் என்னை விட குண்டு ; எத்தனை சல்வார் கமீஸ், எத்தனை புடவை; எவ்வளவு ஒல்லி ஒல்லி பெண்கள் என்று வித விதமான கணக்கெடுப்பு செய்து கொண்டு, நாடு நடுவில் SUDOCU போட்டுக்கொண்டு காத்திருந்தேன். பொறுமை போனபோது, டாக்டருக்கு போன் செய்ய, 15 நிமிஷத்தில் ரூம் கிடைத்து, போனேன். பலப் பல ஷோடக உபசாரங்கள்....
ஒன்றும் சாப்பிடக் கூடாது. ஆனால் பசிக்கவே இல்லையே !! அதான் மனசின் கண்ட்ரோல் !! மோட்டு வளையை பார்த்து, மனசில் ஏக கற்பனைகளோடு காத்திருந்தேன்.
என்ன கற்பனை என்கிறீர்களா...
எனக்கோ முழு மயக்க மருந்து... அப்படியே டாக்டர் ஒரு கிட்னி ஐ சத்தம் போடாமல் எடுத்து விடுகிறார். மற்றபடி ஆபரேஷன் முடிந்து, வெளியே வருகிறேன். வயிற்றில் தையல் போட்டிருப்பதை 2 நாள் கழித்துத்தான் உணருகிறேன்; சந்தேஹம் வர, வயிற்ரை அமுக்கிப் பார்க்கிறேன்; கொஞ்சம் வெற்றிடம் தெரிகிறது. ஒருவருக்கும் தெரியாமல், இன்னொரு டாக்டரிடம் காட்டியதில் கிட்னி பறி போனது தெரிய வருகிறது. கேஸ் போடுகிறேன்...
டாக்டர் உண்மையை ஒத்துக் கொண்டு, "வசந்தாதான் கிட்னி டொனேட் பண்ண ஆசைப் பட்டாள்" என்று தன வாதத்தை வைக்கிறாள்.
நான் ஒரு முறை டாக்டரை பார்க்கும்போது , சற்றே உணர்ச்சி வசப்பட்டு, "டாக்டர், எனக்கோ வசாயிடுத்து; ஒரு கிட்னியை வெச்சுண்டு சொச்ச நாளை கழிச்சா போரும்..யாருக்காவது வேணும்னா நான் தரேன்" என்று சொன்னதென்னவோ உண்மை தான். அதற்காக என்கிட்டே சொல்லாம எடுக்கலாமோ? " இது என் வாதம். அதாவது யாருக்காவது தேவைன்னா, என்னைக் கேட்டு எடுத்துக்க வேண்டியது தானே; அதென்ன திருட்டுத்தனம் ... என்பது என் வாதம்.
வழக்கு முடிந்து, டாக்டருக்கு 25 லட்சம் fine . அதை நான் வாங்கிக் கொள்ளாமல், என் கிட்னியை யாருக்கு பொருத்துகிறார்களோ, அவர்கள் மெடிக்கல் செலவுக்கு என்று கொடுத்து விடுகிறேன்....
இதையே விவரமாக கற்பனை செய்து கொண்டு படுத்திருந்தேன்.
அப்போது ஒரு நர்ஸ் நிறைய பேப்பர் கொண்டு வந்து கையெழுத்து வாங்கினாள். அதில் பொடி எழுத்தில் என்ன பிரிண்ட் பண்ணி இருந்தது என்று ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் எல்லா பக்கத்திலையும் SK கையெழுத்து... (!) நானும் போட்டு விட்டேன், என்கையெழுத்து ... இல்லை இல்லை ... என் தலை எழுத்தை ... படித்துப் பார்க்காமலேயே... படிக்க ஆரம்பித்தால் இரண்டு நாளாகும். என் சந்தேஹம் இப்போது பலத்த சந்தேஹம் ஆச்சு...

இப்போது நர்சுகள் வரிசை கட்டி உள்ளே நுழைய, என் கற்பனைகளை ஓரம் கட்டி, காரியத்தில் கவனம் செலுத்த ஆரம்பிக்க....
என்ன கொடுமை இது சரவணா?
ஒரு nurse வந்து, "உங்களுக்கு உடம்புக்கு என்ன.." என்று விசாரிக்க, நானும் அதௌ கீர்தனாரம்பித்திலே என்று ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்ல, ஒரு reaction உம் காமிக்காமல் வெளியேறினாள்.
மறுபடி மற்றொரு நர்ஸ்... அதே கேள்வி... சற்றே சுருக்கமான பதில்...
மற்றொரு டாக்டர்... "உங்க ஹிஸ்டரிய" கேக்க வந்தேன்" அதே கேள்விகள்...
"
எத்தனை குழந்தைகள்; நார்மல் டெலிவெரியா; வேற ஆபேரஷன் என்னவெல்லாம் பண்ணியிருக்கு; இப்போ என்ன ப்ராப்ளம் .... "
இதையே எத்தனை தரம் சொல்றது...?
இனிமே history கேக்க வந்தா, என் புக் "வசந்த கால நினைவலைகள்" குடுத்து என் history ஐ படிக்க சொல்ல வேண்டியதுதான்.
இதற்கு அடுத்த ordeal - preparation for surgery.... முதல் நாள் தான் B.P. போய் oil massage பண்ணி, ஹேர் ஐ லூசாக, பறக்க விட்டு, pedicure பண்ணி, நல்ல சிகப்பு பாலிஷ் (symbolic ) போட்டுண்டு வந்தா, ஒருத்தி, தலைமுடியை இறுக்கி கட்டி, cap போட, மற்றொரு நர்ஸ், ஸ்பிரிட் குடுத்து பாலிஷ் ஐ எல்லாம் துடை என்கிறாள் !! கையிலும், காலிலும் எடுக்கப் பட்ட பாடு, பெரும் பாடு.
இந்த நர்ஸ் எல்லாம் பார்த்தால், 10 ம் , 11 ம் கிளாஸ் குழந்தைகளை கூட்டி வந்து, நர்ஸ் யூனிபார்ம் போட்ட மாதிரி இருந்தது.
இப்படியாக, எனக்கு ஒரு கவுனையும் மாட்டி, (யாராவது பாக்க வந்தா, நான் அழகாக இருக்கத்தானே Beauty Parlour. ??) ரெடி பண்ணி காத்திருந்தேன்.
ஒரு வழியாக 4.45 க்கு stretcher வந்தது. அதில் படுக்க வைத்து, போர்த்தி, நான் நாலு பக்கமும் பெருமையாக பார்க்க, தள்ளிக்கொண்டு போனது என்னமோ ஜாலியாகத்தான் இருந்தது. ஆனால், என் ரூமுக்கும்.. ஆபரஷன் தியேட்டருக்கும் நடுவில் இருந்த கரடு முரடு பாதையில் தள்ளரச்சே, குலுங்கின குலுக்கலில், வயிறு கலங்கி த்தான் போனது. (ப்ரெக்னன்ட் ஆக இருந்தால், குழந்தை சுகப் பிரசவம் ஆகி இருக்கும்.

என்னை சுற்றி 3 நர்ஸ் , 2 வார்ட் பாய் , ஒரு சலைன் பாட்டில் ... 7 கடல், 7 மலை மாதிரி, ஈரேழு கதவுகள், ரூம்கள் எல்லாம் தாண்டி, ஒரு இடத்தில் நங்கூரம் பாச்சி stretcher ஐ நிக்க வைத்து....
அந்த பக்கம் பார்த்தால், சில பல ரூம்கள்... எல்லாம் காலிதான்... கண்ணாடி கதவுகளுடன். ரொம்ப பிசியாக சில நடமாட்டங்கள். அங்கே தான் ஆபரேஷன் தியேட்டர் ... என்னை தள்ளி வந்தவர்கள் கூவுகிறார்கள்... "யாராவது patient ஐ receive பண்ணுங்களேன்" என்று. அதற்குள் மற்றொரு patient . நாங்கள் இருவரும் friend ஆகி, பேச ஆரம்பித்து விட்டோம். ஆனால் யாருக்கும் எங்களை கூட்டி போக டைம் இல்லை. ஒரு வழியாக நர்ஸ்கள் வர, என்னை ஓரம் கட்டி விட்டு (!!) அந்த லேடியை அழைத்துப் போக, கொஞ்ச நேரத்தில் எனக்கும் அதிர்ஷ்டம் வந்தது.
ஆபரேஷன் டேபிளில் படுக்க வைத்து மயக்க ஊசி போடப் போவதாக ஒரு சின்ன அறிவிப்பு.
எனக்கு அதெல்லாம் தேவையே இல்லை. ஒரு டிவி சீரியல் போட்டு விட்டால், அசந்து தூங்கி விடுவேன். ஆனால் டிவி மட்டும் அணைக்கக் கூடாது. எத்தனை நேரமானாலும் ஆபரேஷன் பண்ணலாம் என்பது SK யின் ஜோக்.
கடைசியில், முதுகில் ஊசி போட்டு, மரத்துப் போக வைத்து, 3/4 டாக்டர்கள், 5/6 நர்சுகள் ... எல்லாரும் சந்தோஷமாக தயாரானார்கள் ! எனக்கு தூக்க ஊசி. என்னத்துக்கு. டிவி ல ஒரு சினிமா போடக் கூடாது. நான் பாட்டுக்கு பாத்துண்டிருப்பேன்.
5.30 க்கு ஆரம்பித்த ஆபரேஷன், முடிந்தது என்று டாக்டர் சொல்லும்போது 7.30. (ஹும்ம்ம்.... டிவி யில் நாதஸ்வரம் ஆரம்பித்திருக்கும் !!)
அப்படியே என்னை post operative ICU வில் தள்ளி விட்டு, "நிம்மதியாக தூங்குங்கள்" என்று சொல்லி விட்டு எல்லோரும் காயப். ஆனால், தூங்க விட்டார்களா என்னை !!
5
நிமிஷத்துக் கொருதரம் நர்ஸ் வந்து, BP , temp , பல்ஸ், எல்லாம் பாக்கறதும், அதை விட கொடுமை, என்னை எழுப்பி, "தூக்கம் வரதா, இல்லை இன்னொரு ஊசி போடணுமா" ன்னு கேட்டதுதான்.
மொத்தத்தில தூங்கவே விடல்லே.
வெள்ளி காலை 4 மணிக்கு எழுப்பி, வாய் கொப்பளிக்க சொல்லி - காபியா குடுக்கப் போறா - உடம்பைத் துடைத்து; கவுன் மாத்தி... அவாளுக்கும் பொழுது போக வேண்டாமா... 7 மணிக்கு அடுத்த செட் duty க்கு வந்து, BP பாத்து, டெம்ப். பாத்து, .... பாத்து...பாத்து... "நல்லா தூங்குங்க" என்ற அட்வைசுடன் போய், அரை மணியில் அடுத்த ரவுண்டு. அதற்குள் டாக்டரே வந்தாச்சு...
ஒரு வழியாக 1 மணிக்கு என் ரூமுக்கு transfer .

இப்படியாக ICU விலிருந்து, stretcher இல் ஏற்றப்பட்டு, ஆடி, குலுங்கி, அதிர்ந்து, வழியில் "அம்மா, அப்பா" என்று முனகி, ரூமிற்கு வந்தேன்....
பிறகென்ன... தண்ணீரில் ஆரம்பித்து, 2 நாள் வெறும் நீர் ஆகாரம்... என் பிரிய காப்பி மட்டும் கிடையாது... பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பாடு என்று 3 நாள் ரூமில்.
Style லாக டிவி பார்த்துக்கொண்டு, புக் படித்துக் கொண்டு , friends ஓடு பேசிக் கொண்டு....பொழுது போக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒன்றும் பிடிக்கவில்லை...
நர்சும், அவள் எடுக்கும் இரத்த அழுத்தமும், ஜுர மானியும் (ஆகா... என்ன தமிழ், என்ன தமிழ்) ஊசிகளும் பழகிப் போக... அதுவே 3 நாட்கள் வாழ்க்கையானது. ஒரே இடத்தில், இடது கை புறங் கையில் , ஊசி குத்தி குத்தி, ஒரு பெரிய இட்லி சைசுக்கு அழகாக வீங்கிப் போனது... அந்த வீக்கத்தின் உப்புதலும், வழ வழப்பும் ரொம்ப அழகு. தடவி தடவி ஆனந்தப் பட்டேன். ஊசியை எடுத்து, வலது கையில் மாற்றிக் குத்தினாள் நர்ஸ். அந்த வீக்கம் வடிந்ததும் என் கை அழகே போய் விட்டது.
சில friends நான் மருத்துவ இல்லத்தில் இருக்கிறேன் என்று கேள்விப் பட்டு, என்னை பார்க்க சாத்துக் குடி, ஆப்பிள் சகிதம் வர, என்ன கொடுமை இது... அவர்களிடம் என்ன வியாதி என்று சொல்வது ?? ஆனந்த் சினிமாவில், ராஜேஷ் கன்னா "ah.. kyaa naam hai, lympho sychomaa of the intestine" என்று சொல்லி மகிழ்வார். அந்த அளவு வேண்டாம். சொல்லிக் கொள்ளும்படியாக நல்ல பெயர் உள்ள விதமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்புறம் ஒரு நல்ல இங்கிலீஷ் பேர் கண்டு பிடித்து ஸ்டைலாக சொல்ல ஆரம்பித்தேன்.
தனிமையில் இருக்கும் போது கற்பனை சிறகை தட்டி விட்டு , ஒரே கதைகள் தான் !!!!
கூட்டிக் கழித்துப் பார்த்தால்... இதுவும் ஒரு நல்ல அனுபவம் தான் !!


Saturday, February 23, 2019

ஜிமிக்கியும் நானும்....


எனக்கு சின்ன வயசிலேர்ந்து ஜிமிக்கி போட்டுக் கொள்வதென்றால் ரொம்ப இஷ்டம். எப்பவும் ஜிமிக்கி போட்டு, காது துளை பெரிசானதுதான் மிச்சம்.
காலேஜுக்கு வேலைக்கு போனதும் ஜிமிக்கி போனது. கல்யாணம் நிச்சயம் ஆனதும் போயே போச்.
மூத்த மாட்டுப்பெண் . ஜிமிக்கி எல்லாம் போட்டுக் கொள்ளக் கூடாது என்பது அம்மாவின் வாதம். கட்டுப் பட்டேன்.
நாற்பது வயதுக்கு மேல் ஒரு ஆசை வந்தது. ஆனால் வயது தடுத்தது. என்னை விட சின்னவர்கள் எல்லாம் ஜிமிக்கி போட எனக்கு என்னவோ அந்த வயதை தாண்டி விட்டாற்போல் எண்ணம்.
ஐம்பது வயதில், துணிவாக குட்டி ஜிமிக்கியாக பிளைன் , சிகப்பு கல், பச்சை கல், கருப்பு மணி என்று (அப்பவும் குடை ஜிமிக்கி போட பயம்) வாங்கினேன். ஆனால் என் வயது ஒரு தடையாக தோன்றியதால் அதிகம் போட வில்லை.
அறுபது வயதில் குட்டி குட்டியாக , கலர் கலராக (duplicate) ஜிமிக்கி வாங்கி கொஞ்சம் ட்ரை பண்ணினேன். கொஞ்ச நாளில் விட்டு விட்டேன்.
எப்பவும் என்னைவிட ஐந்து, பத்து வயது சின்னவர்கள் போட்டுக் கொள்ளும்போது "நாம் ஏன் அந்த வயதில் போடவில்லை ?" என்று நானே என்னை திட்டிக் கொள்வேன்.
எழுபது வயது தாண்டியவுடன் ஜிமிக்கி போடும் வயதை தாண்டிவிட்டேன் என்று நானே முடிவு செய்து, ஜிமிக்கி எல்லாம் கொடுத்து விட்டேன்.
இப்போது எழுபத்தாறு வயதில், late sixties இல் இருக்கும் பெண்கள் கூட ஜிமிக்கி போடுவதை பார்த்து, "சே, நானும் போட்டிருக்க வேண்டும்" என்று நினைக்கிறேன். இப்போது டூ லேட்.
உள்ளூர ஜிமிக்கி ஆசை போக வில்லை.
எப்போதும் என் வயதை உத்தேசித்து நானே எனக்கு தடை விதித்துக் கொண்டேன். ஜிமிக்கி ஒரு அழகுதான். ஏன் இப்படி செய்தேன் ?
ஜிமிக்கி போட ஆசை உள்ளவர்கள் தயங்காமல் போட்டுக் கொள்ளுங்கள் . வயது ஒரு தடையே இல்லை. இப்போது போடா விட்டால் அப்புறம் என்னாட்டம் புலம்ப வேண்டி இருக்கும்.

Monday, September 10, 2018

திருவாதிரை களி...

திருவாதிரை களி..
அரிசியை களைந்து, நிழல் உலர்த்தலாக உலர்த்தி, அதனுடன் 1 பிடி பயத்தம் பருப்பு சேர்த்து ,கடாயில் போட்டு, பொரிய வறுத்துக் கொள்ள வேண்டும்.
இதை மெஷினில் குடுத்து சன்னமான ரவையாக உடைத்துக் கொள்ள வேண்டும்.
அடி கெட்டியான பாத்திரத்தில், (குக்கரில் ,அல்லது வெண்கல பானையில்) ஒரு பங்கு ரவைக்கு 2 1/2 பங்கு என்ற விகிதத்தில் (நல்ல அரிசியாக இருந்தால் மூன்று பங்கு தாங்கும்) தண்ணீர் வைத்து, ஒரு பங்குக்கு 2 1/2 பங்கு விகிதத்தில் வெல்லத்தை உடைத்து போட வேண்டும்.(நான் 3 பங்கு வைப்பேன்.. இப்போதெல்லாம் வெல்லத்தில் தித்திப்பு குறைச்சலாக இருக்கிறது)
நீர் கொதித்து வரும்போது, ஒரு மூடி தேங்காய் துருவலையும் சேர்த்து, தள தள வென்று கொதிக்கும்போது, அடுப்பை சின்னதாக வைத்து, அரிசி நொய்யை சீராக கொட்டிக்கொண்டே கிளற வேண்டும்.
அப்பப்ப அடி பிடிக்காமல் கிளறிக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும்.
களி வெந்ததும் அதி ஏலக்காய் பொடி, வருத்த முந்திரி பருப்பு, நெய் சேர்த்து கிளற வேண்டும்.
அப்படியே மூடி வைத்தால், கொஞ்ச நேரத்தில் களி பொல பொல வென்று உதிர்ந்து கொள்ளும்.
(இரண்டு டம்ளர் அரிசி உடைத்தது, 3 டம்ளர் தண்ணீர், 3 டம்ளர் வெல்லம், ஒரு மூடி தேங்காய் போட்டால், 4 பேருக்கு களி தாராளமாய் இருக்கும்)
வெண்கல பானையில் செய்யும் போது, மேலே தட்டை போட்டு மூடி, அந்த தட்டின் மேல் கொஞ்சம் தண்ணீர் விட்டால், உள்ளே தண்ணீர் சோர்ந்து, களி நன்றாக வேகும்
7 கறி கூட்டு பண்ணி, களியுடன் சேர்த்து சாப்பிட்டால், ஆஹா - என்ன ருசி.

Thursday, August 30, 2018

உப்பு சீடை....


உப்பு சீடை செய்யும் முறை. (வசந்தா ஸ்பெஷல்)... மறு பதிவு.
அரிசியை களைந்து, நிழல் உலர்த்தலாக உலர்த்தி, மெஷின் இல் அரைத்து வாங்கி, சலித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
(இப்போதெல்லாம் processed maavu என்று கிடைக்கிறது)
அரிசி மாவு 8 டம்ளர்
மைதா மாவு 6 டம்ளர்
உப்பு, பெருங்காயம், ஊற வைத்த இரு பிடி கடலை பருப்பு, துருவிய தேங்காய் (ஒரு மூடி மித்தல் காய்)
வெண்ணை - 200 gm
(தேவையானால் எள். இது எண்ணையில் தங்கும் அதனால் விட்டு விடலாம். )
[வருத்த உளுந்து மாவெல்லாம் போடாதீங்க]
இப்போ செய் முறை - கவனமா படிங்க.
எல்லா சாமானையும் போட்டு (ஒரு பெரிய அடுக்கு, தேக்குசா, உருளி, அருக்கஞ்சட்டி... இதெல்லாம் இல்லேன்னா... ஹிண்டலியம் குக்கர்), நன்றாக கலக்க வேண்டும். (தண்ணீர் கண்டிப்பாக விடக்கூடாது. )
வேஷ்டியை விரித்து போட்டு வைத்து விட்டு, பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு உட்காரவும்.. (ஒரு கால நீட்டிக்கொள்ளலாம்)
நன்கு கலந்த மாவில், நடுவில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து, (மாவில் மைதா, வெண்ணை கொஞ்ச பிசுக்கு கொடுக்கும்) , அந்த மாவை மட்டும் இடது கையில் வைத்துக்கொண்டு, சிறிய பிள்ளையார் (வெறுமே கூம்பு மாதிரி) பிடித்து, வைக்க வேண்டும்.
மீதி மாவை, வலது கட்டை விரல், ஆட்காட்டி விரலால் ரொம்ப கொஞ்சமாக கிள்ளி , சட்டென்று ஒரு உருட்டு உருட்டி வேஷ்டியில் போட வேண்டும்...
கை மாவு தீர்ந்து விட்டால், மறுபடியும் அதே போல், நடுவில் தண்ணி... பிசிறல்.. இடது கையில் வைத்துக்கொண்டு உருட்டல் ...
கணிசமாக உருட்டியதும் ... அடுப்பில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், தட்டில் சீடைகளை எடுத்து, எண்ணையில் மெல்ல போட வேண்டும்.
அடுப்பை கொஞ்சம் சிறியதாக வைத்து, பிரவுன் நிறம் வந்ததும், ஜல்லி கரண்டியால் வரித்து எடுத்து டப்பாவில் போட வேண்டும்.
சூடு ஆறும் வரை டப்பாவை மூடக்கூடாது...
தைரிய மாக செய்யுங்கள் ஒன்றும் தப்பாக போகாது. உப்பு போட மறக்க வேண்டாம். தூள் பெருங்காயம் அல்லது தண்ணீரில் ஊறவைத்த கட்டி பெருங்காய தண்ணீர்.
ரொம்ப சின்னதாக உருட்ட வேண்டும்... பழகி விடும்... சோம்பல் படக்கூடாது... எல்லாரும் "எப்படி இவ்வளவு கரகரப்பு ? " ன்னு கேப்பா...
அது தொழில் ரகசியம்... அதாவது.... இந்த மைதாவும், கொஞ்சம் அதிகப்படி வெண்ணையும், மொத்தமாக பிசையாததும் !!

Wednesday, August 22, 2018

மெட்றாஸ் டே ஞாபகங்கள் ---நானும் மெட்ராசும் :-

மெட்றாஸ் டே ஞாபகங்கள் ---நானும் மெட்ராசும் :-
நான் மெட்ராஸ் வந்தது 1959 .
முதல் வீடு புரசைவாக்கத்தில. 15 ரூ. வாடகை. அது சின்ன போர்ஷன் ன்னு ஒரு தனி வீட்டுக்கு மாறினோம். புரசைவாக்கம் High ரோடுக்கு பக்கத்தில. 30 ரூ.
அப்போ எல்லாம் நான் flat ஏ பாத்தது இல்ல.
புரசை High ரோடுல, ஏதோ சின்ன சின்ன கடைகள் இருக்கும். ராக்சி தியேட்டர் இருக்கும். வெள்ளாள தெரு ரொம்ப பாபுலர். ஒரு பெரிய கடை கூட இருக்காது. இப்போ மாதிரி கூட்டமும் இருக்காது.
13 ம் நம்பர் பஸ்ஏறி, 2 அணா குடுத்து பிரெசிடென்சி வரை போவேன். அங்கேர்ந்து 1 அணா குடுத்தா, 21 B ஏறி QMC . அனேகமா நடந்து, ஒரு அணா மிச்சம். பீச் ரோட், இவ்வளவு பந்தாவா இருக்காது. ரொம்ப சிம்பிள். பீச் ரோடில University, Senate Hall, Presidency, QMC, IG Office .. இவ்வளவுதான் பெரிய கட்டடங்கள். இவ்வளவு பஸ், கார் கிடையாது. South Beach Road, North Beach Road தான் பேர். சமாதிகள் கிடையாது. Harbor to Santhome ... பீச்.
Edward Elliots Road இல் Woodlands, Sri.Vasan's house, Dr.Radha Krishnan's House, SimsonKrishnamurthi'sHouse ..இப்படி பெரிய பெரிய வீடுகள். அந்த ரோட் பீச் ரோட் ஜெமினியிலிருந்து , பீச் ரோட் வரை... அந்த ரோடின் கடைசியில் பத்மினியின் வீடு !
பெரிய ஜெமினி ஸ்டுடியோ.
மவுண்ட் ரோட் ன்னு பேரு (இப்போ அண்ணா சாலை) ... St.Thomas Mount வரை போவதால்.
இப்போ இருக்கும் T.T.K. Road - "Mowbray's ரோடு" ... Business Centre கிடையாது. எல்லாம் தனித்தனி வீடுகள். ரெண்டு பக்கமும் அடர்ந்த மரங்கள்.
South பக்கம் மைலாபூரோடு சரி. மந்தவெளி இருந்தது. ஆனா கொஞ்சம் தனி வீடுகள். R.A.Puramகிடையாது.
அடையாறுக்கு அப்புறம் Beasant Nagar எல்லாம் கிடையாது. திருவான்மியூர் கிராமம் மாதிரி இருக்கும்.
வடக்கில், ஹார்பருக்கு அப்புறம், ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு , ராயபுறம் ஒரு சின்ன ஊர்.
Broadway, Paris Corner, Esplanade, Armenian Street, Pavazhakkaaratheru (Coral Merchant Street), Evening Bazaar... இதெல்லாம் famous . அந்த பக்கம் தான் பூக்கடை, கொத்தவால் சாவடி, பழக்கடை.
சென்ட்ரல் பக்கத்தில , மூர் மார்கெட் shopping போனா, superb ஆ இருக்கும். அங்க கிடைக்காத பழைய சாமான்களே இருக்காது. புக்ஸ் க்காக நான் அடிக்கடி போவேன். சின்ன சின்ன கடைகள். ரொம்ப பாபுலர். எரிஞ்சுபோச்சு. ரொம்பவருத்தமானவிஷயம்.
அங்கே இருந்து பூந்த மல்லி ஹை ரோட். (இப்போ பெரியார் சாலை ன்னு நெனைக்கிறேன்). அப்போதான் கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் கட்டினார்கள். தசப்ரகாஷ் ரொம்ப விசேஷம்.
பெரிய ஹோட்டல் ன்னா , தாசப்ரகாஷ், வூட்லண்ட்ஸ், எவரெஸ்ட் (எக்மோர் ஸ்டேஷன் எதிரில்)
இப்போதிருக்கும் அண்ணா நகர், அப்போ பொட்டால் காடு. அந்த பக்கம் மெட்ராஸ், Kilpaukகோடு முடிய, ஷெனாய் நகர் ஒரு எக்ஸ்டென்ஷன் . அதோடு முடிந்தது.
1969 இல் ஒரு பெரிய Industrial Exhibition நடந்தது. அது முடிந்ததும், அந்த ஏரியாவை பிளாட் போட்டு, ஒரு கிரௌண்ட் 5000 ரூ. ன்னு வித்தா. ஊரை விட்டு ரொம்ப தள்ளின்னு நாங்க வாங்கல்லே!!
ஜெமினி சர்க்கஸ் , ரெண்டு வருஷத்துக்கு ஒரு தரம் வரும் - மூர் மார்கட் பக்கத்தில. இப்போ அது நேரு ஸ்டேடியம் ஆயிடுத்து.
சைக்கிள் ரிக்ஷா, கை ரிக்ஷா உண்டு. MGR தான் கை ரிக்ஷாவை ban பண்ணினார். பாவமா இருக்கும். ஓரணா, ரெண்டனா வுக்கு எல்லாரும் பேரம் பண்ணுவா.
சைக்கிள் ரிக்ஷா , எங்கே போனாலும் நாலணா தான் ஆகும்.
1970 ல நாங்க ஸ்கூட்டர் ,அப்புறம் கார் வாங்கரச்சே, பெட்ரோல் 1.30 Rs. Diesel 0.80 Rs. Kerosine 0.50 per litre.
சுமார் 2400 சதுர அடி , தனி வீட்டுக்கு, 1300 ரூ. குடுத்தோம். (1980 ல) . 1350 Sq.Ft. Flat - 3.75 lacs !!in 1984 in R.A.Puram !!
Gas - 15 Rs. Milk 1/2 litre bottle - 0.60 Re. ; Auto - minimum - 0.80 ; Taxi - minimum 1.60. மீட்டர் போட்டு, ஒழுங்கா காசு வாங்கிப்பான்.
தண்டையார் பேட்டயிலிருந்து , கோஷா ஆஸ்பத்திரிக்கு 5 ரூ. ல வந்துடலாம்.
தி. நகர். பக்கா residential ஏரியா. உஸ்மான் ரோடில் இவ்வளவு கடைகள் எல்லாம் கிடையாது. ஈசியா நடக்கலாம். நல்லி, குமரன், உம்மிடியார் .. இவ்வளவுதான்.
சிலைகளே கிடையாது. அப்புறம் தான் முக்குக்கு முக்கு சிலை.

Monday, May 21, 2018

ஈய சொம்பும் நானும்....


எங்கம்மா வீட்டில் குமுட்டி அடுப்பில் ஈய சொம்பில் ரசம் கொதித்து பார்த்திருக்கிறேன். சமைத்த அனுபவம் கிடையாது.
கல்யாணத்துக்குப் பிறகு, எனக்கும் அந்த ஆசை வந்தது. அம்மாவை தொந்தரவு பண்ணி ஒரு ஈய சொம்பு வாங்கினேன். 
ஈய சொம்பில் புளி கரைத்து, கட்டி பெருங்காய துண்டு போட்டு, மஞ்சள் தூள், ரஸப் பொடி, தக்காளி, கறிவேப்பிலை போட்டு, பக்கத்திலேயே நின்று, அதையே பார்த்துக்கொண்டிருந்து , கொஞ்சம் கொதித்ததும், வெந்த பருப்பை மசித்துப் போட்டு, வேணுங்கிற அளவு விளாவி, மிளகு, ஜீரகப் பொடி போட்டு, கொத்தமல்லி தழை போட்டு ..... ஒரு கொதி வந்ததும் அணைத்து, அப்பாடா என்று இறக்கி வைத்து....
எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.....
ஒரு நாள் எலுமிச்சை ரசம் வைக்க ஆரம்பித்தேன். எலுமிச்சை ரசத்துக்கு, முதலில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு துண்டு நசுக்கிய இஞ்சி தாளித்து பிறகு தண்ணீர் விட வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொண்டேன்.
அதே போல் ஈய சொம்பை அடுப்பில் வைத்து, நெய் விட்டு, கடுகு போடுவதற்குள் சொம்பு உருகி சப்பையாக போய் விட்டது. ரொம்ப வருத்தமாக போய் விட்டது. அம்மாவிடம் திட்டு வாங்கி கொண்டு, அந்த வருத்தம் போனதும், மறுபடியும் ஒரு சொம்பு. இந்த தடவை ரொம்ப careful. ஆனால் அந்தோ... மறுபடியும் ஒரு தவறு. ரசம் கொதித்ததும், சூட்டோடு, இடுக்கியால் இறக்கினேன். அப்படியே இடுக்கி அமுக்கின இடம் நசுங்கி விட்டது.
கொஞ்ச நாள் விட்டுப் பிடிப்போம் என்று ..... ரொம்ப நாள் கழித்து மறுபடியும் ஈய சொம்பு ஆசை. கொஞ்சம் flame பெரிசாக வைக்க, சொம்பின் மேலே ஒரு ஓட்டை.
அதோடு ஈய சொம்பு ஆசையை விட்டேன்.
ஆனால் இப்போது தேறிவிட்டேன். ரசம் வைக்கும்போது, enough தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்து, அந்தண்டை, இந்தண்டை நகராமல் low flame இல் வைத்து, ரசம் ஒரு கொதி வந்ததும், அடுப்பை அணைத்து, துணியால் இறங்குகிறேன். இருந்தாலும் சொம்பை பத்திரமாக இறக்கும் வரை டென்ஷன் தான்.
lesson learnt... to be learnt.....
Never move too far away from the kitchen when the rasam is being made. For if you do, you may neither find the rasam nor the sombu.