Saturday, February 23, 2019

ஜிமிக்கியும் நானும்....


எனக்கு சின்ன வயசிலேர்ந்து ஜிமிக்கி போட்டுக் கொள்வதென்றால் ரொம்ப இஷ்டம். எப்பவும் ஜிமிக்கி போட்டு, காது துளை பெரிசானதுதான் மிச்சம்.
காலேஜுக்கு வேலைக்கு போனதும் ஜிமிக்கி போனது. கல்யாணம் நிச்சயம் ஆனதும் போயே போச்.
மூத்த மாட்டுப்பெண் . ஜிமிக்கி எல்லாம் போட்டுக் கொள்ளக் கூடாது என்பது அம்மாவின் வாதம். கட்டுப் பட்டேன்.
நாற்பது வயதுக்கு மேல் ஒரு ஆசை வந்தது. ஆனால் வயது தடுத்தது. என்னை விட சின்னவர்கள் எல்லாம் ஜிமிக்கி போட எனக்கு என்னவோ அந்த வயதை தாண்டி விட்டாற்போல் எண்ணம்.
ஐம்பது வயதில், துணிவாக குட்டி ஜிமிக்கியாக பிளைன் , சிகப்பு கல், பச்சை கல், கருப்பு மணி என்று (அப்பவும் குடை ஜிமிக்கி போட பயம்) வாங்கினேன். ஆனால் என் வயது ஒரு தடையாக தோன்றியதால் அதிகம் போட வில்லை.
அறுபது வயதில் குட்டி குட்டியாக , கலர் கலராக (duplicate) ஜிமிக்கி வாங்கி கொஞ்சம் ட்ரை பண்ணினேன். கொஞ்ச நாளில் விட்டு விட்டேன்.
எப்பவும் என்னைவிட ஐந்து, பத்து வயது சின்னவர்கள் போட்டுக் கொள்ளும்போது "நாம் ஏன் அந்த வயதில் போடவில்லை ?" என்று நானே என்னை திட்டிக் கொள்வேன்.
எழுபது வயது தாண்டியவுடன் ஜிமிக்கி போடும் வயதை தாண்டிவிட்டேன் என்று நானே முடிவு செய்து, ஜிமிக்கி எல்லாம் கொடுத்து விட்டேன்.
இப்போது எழுபத்தாறு வயதில், late sixties இல் இருக்கும் பெண்கள் கூட ஜிமிக்கி போடுவதை பார்த்து, "சே, நானும் போட்டிருக்க வேண்டும்" என்று நினைக்கிறேன். இப்போது டூ லேட்.
உள்ளூர ஜிமிக்கி ஆசை போக வில்லை.
எப்போதும் என் வயதை உத்தேசித்து நானே எனக்கு தடை விதித்துக் கொண்டேன். ஜிமிக்கி ஒரு அழகுதான். ஏன் இப்படி செய்தேன் ?
ஜிமிக்கி போட ஆசை உள்ளவர்கள் தயங்காமல் போட்டுக் கொள்ளுங்கள் . வயது ஒரு தடையே இல்லை. இப்போது போடா விட்டால் அப்புறம் என்னாட்டம் புலம்ப வேண்டி இருக்கும்.

No comments:

Post a Comment