Saturday, September 10, 2016

TRAIN TRAVEL .....

ரயில் பயணம்...

 அப்போ எல்லாம் ஊருக்கு போவது என்பது ரொம்ப அபூர்வம்... அதுவும் குடும்பத்தோட-
ஆபீஸ் டூர் என்பதும் கிடையாது...

குடும்பத்தோடு என்றால் வெளியூரில் நடக்கும் கல்யாணத்துக்கு  அல்லது கல்யாணம் முடிந்து குல தெய்வக்கொவிலுக்கு

முக்கால் வாசி ரயில்..பாசென்ஜெர் தான்... ஒவ்வொரு சின்ன சின்ன ஊரிலும் நின்று நின்று போகும்.
அதனாலேயே..அந்த ஊரில் சாப்பிட விஷேமானது என்ன என்று தெரியும்.
திண்டுக்கல் மலைப்பழம், பேரளம் வடை  என்று
(போன வரம் திருநள்ளாறு போற வழியில் பேரளம் வடை கேட்டால்... எல்லாரும் திரு திரு.. !!)

மற்றப்படி வாங்கி சாப்பிடுவது அபூர்வம்.
பயணத்துக்கான முதல் ஏற்பாடு... சாப்பாடு...!
சத்து மாவு பொடித்து கலக்க வேண்டும்.
(பெரியவர்களுக்கு, மடிக்காரகளுக்கு, முக்கியமான உணவு)
மிளகாய் பொடி இடிக்க வேண்டும்.
இட்லிக்கு அரைக்க வேண்டும்
கிளம்பும் அன்று , ரொம்ப விடிகாலையில் எழுந்து...
இட்லி வார்த்து, கிண்ணத்தில் மிளகாய் போடி+ நல்லெண்ணெய்+ கொஞ்சம் தண்ணி கலந்து, இட்லியை பிரட்டி, ஒரு தூக்கில் அடுக்கப்படும்.
முறுக்கு, தேங் குழல் என்று பக்ஷணம் பண்ணப்படும்..
முதல் நாளே புளிக்காச்ச்சல் காச்சி, காலையில் புது சாதம் வடித்து, புளியஞ்சாதம் கலந்து, வடாம் வறுத்து... அது ஒரு தூக்கில் ரெடி.
கூஜாவில் தண்ணீர் ரெடி.

துணி மணி பாக்கிங் எல்லாம் ரொம்ப குறச்சல் !

பயணம் என்னவோ ரொம்ப தூரம் இருக்காது... ஆனால் நேரம் ஒரு நாள்... காலை டு மாலை.
ரயிலடிக்கு போக மாட்டு வண்டி. பெண்களும், குழந்தைகளும் வண்டியில் ஏற, ஆண்கள் நடை.. பின்னாடியே.
பத்து, பதினைத்து பேர் தேறுவார்கள் இந்த பயணத்துக்கு !
இதில் குழந்தைகள்.. தங்கள் சந்தோஷத்தை கும்மாளம் போட்டுக் காட்டுவார்கள்.
பெண்கள் அடக்கம் (!) காரணமாக மனதின் குஷியை வெளிக்காட்டாமல் ஒரு excitement ஓடு.
ஆண்கள், எதோ தாங்கள் அடிக்கடி போகிறவர்கள் மாதிரியும், இதில் என்ன ரொம்ப த்ரில் என்கிற மாதிரியும், எல்லோரையும் பத்திரமாக கொண்டு வந்து சேர்க்க வேண்டுமே என்று கவலைப்பட்டுக்கொண்டு... பேசிக்கொண்டு....

ரயிலடியில் காத்து.. ரயில் வந்ததும் சாமான்களை ஏற்றி... குழந்தைகள் ஜன்னலோர இடம் பிடித்து... கொஞ்ச நேரத்தில் கண்ணில் கரி விழ கண்ணை கசக்கி ...
சுமார் பத்து மணியானதும்... சாப்பாட்டுக்கடை..
பெண்கள் தையல் இலையை எல்லோர் கையிலும் கொடுத்து, புளியஞ்சாதம், தயிர் சாதம் வடாம், ஊறுகாய் பரிமாற, ரசித்து, ருசித்து சாப்பிட்டு, கீழே இறைத்து, கூஜாவிலிருந்து தண்ணீர் சரித்து குடித்து...
கற்றல்களும், அமர்க்களமும் ....
" ராஜு, சாதத்தை சிந்தாமல் சாப்பிடு; கிட்டு, கொஞ்சம் தயிர் சாதம் போட்டுக்கோ; பாப்பா, அவனோட என்ன சண்டை எப்போ பாத்தாலும்; சவட்டிப்புடுவேன்; (அப்போ எல்லாம் வீட்டுக்கு ஒரு பாப்பா !!) ; தண்ணியை தூக்கி சாப்டேண்டா-கடங்காரா !; வைத்தி, எட்டி பாக்காதே; கையை  வெளில நீட்டாதே.. சாம்பு... அம்மாளத்துக்குத்தான்
சித்த நாழி  ஜன்னலோரம் குடேண்டா; பாட்டி சத்து மாவு எடுத்துக்கறேளா ?
" இத்யாதி இத்யாதி பேச்சுக்களுடன் சாப்பாட்டு கடை முடியும்.
இந்த ஒரு நாள் பயணத்தில் ரயில் மாற வேண்டி இருந்தால்... ஒரு சின்ன ஸ்டேஷனில் இறங்கி.. மரத்தடி பார்த்து உக்காந்து... இட்லி கடை பரப்பப்படும்.. அப்புறம் flask இல் இருந்து காபி. இங்கே "ஓடாதே; கூச்சல் போடாதே; தண்டவாளத்துக்கு கிட்டக்க போகாதே" என்று ஓயாது வசவு.
இதில் மடிசாரில் புது மாட்டுப்பெண் இருந்தால் , பயந்து, ஒதுங்கி, அரவணைக்கப்பட்டு, சாப்பிட உபசாரம் செய்யப்பட்டு, பாத்திரம் அலம்பும் வேலை வாங்கப்பட்டு... !!

இதே குஷி ஊரிலிருந்து திரும்பும்போது... குறைவாகத்தான் இருக்கும்.

இதை எல்லாம் நாவலில் படித்து அனுபவிக்க வேணும்னா ...
தா. ந. குமாரசாமியின் "அன்பின் எல்லை" படியுங்கள்...



GOOJA.........

கூஜா.. 

முன்னாளில் ரயில் பிரயாணங்களில் முந்தி நிற்பது கூஜா..
கூஜா என்பது எல்லார் வீட்டிலும் ஒரு முக்கியமான அங்கத்தினர் !
கல்யாணத்தில் முக்கிய சீர் ! வசதி இருந்தால் வெள்ளியில்; இல்லேன்னா வெங்கலத்தில் கண்டிப்பாக உண்டு ! (இப்போது நம்மால் பழசையும் விடமுடிய வில்லை... ஆனால் இந்த நாளில் பித்தளையை ரசிப்பவரும் இல்லை.. அதனால் எவர்சில்வருடன் பித்தளை போட்டியிட்டு தோற்று விட்டது... வழி விட்டு ஒதுங்கி விட்டது...)

ரயிலில் போவதே அபூர்வம்... அதுவே ஒரு குஷி... ட்ரங்கு பெட்டியில் (கொஞ்சம் துரு பிடித்திருந்தால் இன்னும் விசேஷம்... கட்டுப்படியானால் , அதுக்கு பச்சை பெயின்ட் உண்டு...
(எங்கள் எல்லார் கல்யாணத்திற்கும், புக்காத்துக்கு பாக்கிங், பெரிய, புது  பெயின்ட் வாசனையுடன் ட்ரங்கு பெட்டிதான்.. என் சாய்ஸ் சாம்பல் நிறம் ) 

சரி; கூஜாவுக்கு வருவோம்...
ஊருக்கு புறப்படும் முன்பு, கூஜாவை பள பள என்று   புளி போட்டு   தேய்த்து (அடுப்பு சாம்பலில்தான்), தண்ணீர் நிரப்பி... (என்ன, எல்லாம் குழாய் தண்ணிதான்... மினரல் என்றால் அர்த்தம் கூட தெரியாது) .. சிறுவர் யாராவது தூக்குவார்கள்... மிக பெருமையாக... (பொறுப்பு குடுத்துட்டாளாம் !)
ரயிலில் தாகம் எடுத்தால், பித்தளை டம்ளரில் நீரை சரித்து விட்டுக்கொடுக்கும் அழகே தனி. அந்த பொறுப்பு ஆத்து மாட்டு பொண்ணுக்கு...!!
ரயில்எல்லாம் வேகம் குறைவு தான்... எல்லாம் பாசெஞ்சர்  வண்டி...நின்று நின்று போகும்...
பயணம் என்ன... ஒரு டவுனிலிருந்து... மூன்று நான்கு டவுன் தள்ளி...
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் , அந்தந்த வீட்டு ஆண் பிள்ளைகள், இறங்கி கூஜாவில் தண்ணீர் நிரப்புவது பயணத்தில் தவிர்க்க முடியாத ஒரு அங்கம்.
அதுவும், மிளகாய் பொடி தடவிய இட்லியை சாப்பிட்டு, கூஜாவிலிருந்து தண்ணீர் குடித்தால் அமிர்தம் !!

அக்ரஹாரத்தில் கூஜாவுக்கு தினசரி வாழ்க்கையில்  ஒரு முக்கியமான பங்கு...
வீட்டு பெரிசுகள் திண்ணையில் உட்காந்து, ஜமா சேர்த்து சீட்டு... தஞ்சாவூர் ஆக்ரஹாரத்தின் மாற்ற முடியாத பழக்கம் இந்த சீட்டு..
பக்கத்தில் கூஜாவில் தண்ணீர்... மூடி வைக்க மாட்டார்கள்.. ஒரு டம்ளர் அதன் மேல் கவுத்து இருக்கும்...
அதன் அவசியம் .. தாகத்தை தவிர மற்றொன்று உண்டு...
சீட்டுக் கச்சேரியில் மற்றொரு முக்கிய அங்கம்... வெற்றிலை பாக்கு...
அதை போடாவிட்டால், மூளை வேலை செய்யாது இந்த ஆண்களுக்கு...
உள்ளேருந்து மாமி காபி குடுத்து அனுப்புவாள்.. மற்றொரு சொம்பில்..
அப்போ, எல்லாரும் கூஜா தண்ணியை கவுத்து, வாய் கொப்பளித்து (காலடியில் திறந்த காவாய் .. open drainage ), துப்பி... காபியை சாப்பிடுவார்கள்..

என்னருமை கூஜாவை நான் இன்னும் வைத்திருக்கிறேன் !!


Tuesday, September 6, 2016

FESTIVALS - 4. PONGAL.....

பொங்கல்

சங்கராந்தி என்பது, இந்தியா முழுவதும் கொண்டாடும் ஒரு பண்டிகை.
நம் எல்லா பண்டிகைகளும் சந்திரனை வைத்து, இன்ன நாளில் கொண்டாட வேண்டும் என்று இருக்கும். ஆனால், சங்கராந்தி மட்டு, சூரியனை அடிப்படையாக கொண்டது.

சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிப்பதால், மகர சங்கராந்தி.
தஞ்சாவூர் மாவட்டத்தில், அறுவடை மாதம் ஆனதால் பொங்கல் பண்ணி , சூரியனுக்கு நெய்வேத்யம்.
மார்கழி முடிந்து, தை ஆரம்பிக்கும்போது, காய் கறிகளும் நிறைய இருக்கும்.
இது சூரியனுக்கு நன்றி சொல்லும் பண்டிகை. அதோடு, உழவிற்கு பயன் படும் மாட்டுக்கும் பூஜை.
அதனால் தான் தமிழ் நாட்டில், இதை "உழவர் திருநாள்" என்று பெயர் வைத்தார்கள்.

இந்த பண்டிகை மூன்று நாட்கள் கொண்டாடப்படும்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14 ம் தேதி வரும் இந்த பண்டிகை, 8 வருஷத்துக்கு ஒரு முறை ஜனவரி 15 ம் தேதி வரும். ஒவ்வொரு வருஷமும் சில நாழிகைகள் தள்ளி, 8 வருஷத்துக்கு ஒரு நாள் தள்ளும்.
 முதல் நாள் - போகி
"பழயன கழிதலும், புதான புகுதலும்" ன்னு சொல்லி, மெட்ராஸ் ல கண்ட பழைய குப்பையெல்லாம் போட்டு, எரிச்சு, pollution create பண்ற மாதிரி, எங்க ஊர்ல எல்லாம் கிடையாது.
போகி பண்டிகை தான். Religious significance எதுவும் கிடையாது.


 வாசலில், பெரிய கோலம், காவி..
சமையல் - பாயசம், ஆம வடை, பச்சடி, கறி, கூட்டு, சாம்பார், ரசம், போளி (போளி தான் ஸ்பெஷல்) என்று வகையான சமையல்.
இரண்டாம் நாள் பொங்கல்
பொங்கலுக்கு நாங்க எல்லாம் புதுசு போட்டுக்கறது இல்லை. தீபாவளிக்குத்தான் புதுசு. ஆனால், பிராமணர்கள் அல்லாதவர்கள் பொங்கலுக்கும் புதுசு வாங்கிப்  போடுவார்கள்.
பொங்கலுக்கான சாமான்கள், போகிக்கு முதல் நாளே வாங்கி விடுவோம்.
கரும்பு இரண்டு - முழுசாக; மஞ்சள் கொத்து; இஞ்சிக் கொத்து; பூவன் பழம், தேங்காய், தொடுத்த பூ; உதிரி பூ ... இப்படி நிறைய சாமான்கள்.
பொங்கல் அன்று, நாட்டுப் புறத்தில், சாயங்காலம் தான் பொங்கல் பானை வைப்பார்கள்.
ஆனால் நாங்கள், தை மாசப் பிறப்பு எத்தனை மணிக்கு என்று பஞ்சாங்கத்தை பார்த்து, அந்த நேரத்தில் தான் வைப்போம்.
காலையிலிருந்து சாப்பிடுவதில்லை...
வெண்கலப் பானையில், அரிசி மாவை குழைத்து பூசி, அதில் காவியால் சூரிய, சந்திரனை வரைந்து, கழுத்தில் மஞ்சள், இஞ்சிக் கொத்துகளை கட்டி, பால் விட்டு ரெடியாக வைத்திருப்போம்.
பச்சை அரிசியை கொஞ்சம் வறுத்து வைத்து, வெல்லம் பொடித்து வைத்து, ஏலக்காய் பொடித்து, தேங்காய் துருவி வறுத்து, முந்திரிப் பருப்பு, திராக்ஷை வறுத்து எல்லாம் ரெடியாக இருக்கும்.


ஏழு விதக் கறிகாய்களை,க் கிழங்கு, பட்டாணி, சேப்பங்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு  இப்படிஎல்லாகாய்களையும்கொஞ்சம்பெரியதாகவேநறுக்கி, பருப்பு போட்டு, அரைத்து விட்டு சாம்பாரையும் பண்ணி வைத்து விடுவோம்.
அந்த குறிப்பிட்ட நேரம் வந்ததும், அடுப்பில் வெண்கலப் பானையை வைத்து, பால் பொங்கியதும், அரிசியை போட்டு, குழைய வேக வைத்து, வெல்லம் , ஏலக்காய், இன்ன பிற சாமான்களையும் சேர்த்து, நிறைய நெய் விட்டு, இறக்குவோம்.


திறந்த வெளியில் ரதம், சூரியன் சந்திரன் கோலங்கள் போட்டு, பொங்கலை வெண்கலப் பானையோடு வைத்து, இரண்டு பக்கமும் கரும்பு வைத்து, தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் தேங்காய் எல்லாம் வைத்து .. ரொம்ப நாள் எங்காத்தில்  சாஸ்த்ரிகள் வந்து பூஜை பண்ணுவார். மெட்ராஸ் வந்ததும், அந்த பழக்கத்தை விட்டு, அப்பாவே தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி, பூ போட்டு பூஜை பண்ணுவார்.

பிறகென்ன .. சாப்பாடு தான். பொங்கல், சதம், சாம்பார், இரண்டு தினுசு கறி,, உளுத்தம் வடையுடன் சாப்பாடு.

வெண்கலப் பானையை அன்று ஒழித்து, தேய்க்கப் போடுவதில்லை. அதில் இருக்கும் மஞ்சள் இலைகளை மட்டும் பத்திரமாக எடுத்து வைப்போம்.

அன்று மாலை, சின்னப் பெண்கள் ஒரு பானையை அலங்கரித்து எடுத்துக்கொண்டு, வீடு வீடாக பொய், பானையை நடுவில் வைத்து, கும்மி கொட்டுவார்கள். எல்லா வீடுகளிலும் அரிசி , காசு என்று கிடைக்கும். எல்லா பெண்களும் பாவாடை சட்டையில் கொள்ளை அழகாக இருப்பார்கள்.

மூன்றாம் நாள்


கனுப்பிடி .. காக்கைக்கு சாதம் வைப்பது. இது அண்ணா, தம்பிகள் சௌக்கியமாக இருக்க ஒரு வேண்டுதல். அதற்கு சகோதரகளிடமிருந்து, அல்லது பிறந்த வீட்டிலிருந்து பணம் வரும் !

எங்கம்மாக்கு, மாமாவிடமிருந்து, வருடம் தவறாமல் 5 ரூ. மணி ஆர்டர் வரும்.

காலம்பர சீக்கிரம் எழுந்து (காபி கூட கிடையாது) , முதலில் பெரியவர்களிடம் 'பசும்' மஞ்சளை கொடுத்து, நெற்றியில் தீத்திக் கொண்டு, திறந்த வெளியில், சின்ன சின்ன கோலங்கள் போட்டு, அதன் மேல் இரண்டிரண்டாக மஞ்சள் இலைகளை வைத்து, அம்மா எடுத்துக் கொடுக்க, பெண்கள் எல்லாரும், பொங்கல், வாழைப் பழம், சாம்பார் தான்கள்  , கரும்பு துண்டுகள், மஞ்சள் சாதம், குங்கும சாதம் என்று வரிசையாக கிள்ளி வைப்போம்.
அந்த கலர் கலரான  சாதங்களை பார்த்து காக்கைகள் பயந்து பறப்பதுதான் நடக்கும் !!

பிறகு, தலைக்கு ஸ்நானம் பண்ணி வந்தால், முதல் நாள் சாம்பார், கறி மீந்ததை எல்லாம் சுண்ட கொதிக்க விட்டு, 'எரித்த குழம்பு' ன்னு வெச்சிருப்பா. பழைய சாதத்தை தயிர் விட்டு பிசிஞ்சு வெச்சிருப்பா. இலை ஏடு போட்டு, தயிர் சாதம், சாம்பார் தொட்டுக்கொண்டு குளுமையாக சாப்பிடணும். அப்புறம் தான் காப்பி எல்லாம். பெரியவர்களுக்கு நமஸ்காரம் பண்ணினால் வருமானம் வரும்.
அன்றைய சாப்பாடு... கலந்த சாதங்கள்.
அன்று மாலையும் கும்மி உண்டு.

அன்று மாடு வைத்திருப்பவர்கள் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவார்கள்.
மாடுகளுக்கு காலையிலிருந்து ஆகாரம் கிடையாது. மாட்டை குளிப்பாட்டி, சந்தனம் குங்குமம் இட்டு, நெட்டியில் கலர் கலராக மலைகள் விற்கும். ரொம்ப அழகு.. அந்த மாலைகளை போட்டு, சாயந்திரம் தெருவில் ஒட்டி வருவார்கள். மாடெல்லாம் பசியோடு, கோபமாக இருக்கும் ! மாட்டிற்கு எல்லார் வீட்டிலையும் ஆரத்தி எடுத்து, மஞ்சள் குங்குமம் இட்டு, பொங்கல் வாழப் பழம் கொடுத்து அனுப்புவார்கள்.


"மஞ்சு விரட்டு" நடக்கும். ஆனால், நாங்கள் போய் பார்த்தது இல்லை. மாடு முட்டும் என்று பயம் !

மாட்டுப் பொங்கல் அன்னிக்கு சாயந்திரம், "பூம் பூம் மாடு" என்று, ஒரு காளை மாட்டுக்கு விசேஷ அலங்காரம் பண்ணி, முதுகில் நல்ல கலர் துணியெல்லாம் போட்டு, உடுக்கை அடித்துக் கொண்டு ஒருவன் வருவான். ஒவ்வொரு வீட்டிலும் நின்று ஏதோ ஒரு நல்  வாக்கு சொல்லுவான். அந்த மாடு, அவன் சொல்வதை ஆமோதிப்பது போல், தலையை ஆட்டும்.. அப்போது கிண் கிணி கிணி என்று மணி ஓசை கேட்கும். எல்லார் வீட்டிலையும் அரிசி, கரும்பு, பழம், காசு என்று கொடுப்பார்கள்.
இப்படியாக மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல் பண்டிகை. ஊரே அமர்க்களப் படும்.

எப்படி இவ்வளவு சாப்பிட்டோம் - அதுவும் தொடர்ச்சியாக மூன்று நாளைக்கு ! இப்போது நினைத்தால் அதிசயமாக தோன்றுகிறது. இப்போதைய குழந்தைகள் , அதுவும் சென்னையில், இவ்வளவு சந்தோஷமாக இந்த பண்டிகைகளை, அர்த்தம் புரிந்து கொண்டாடி, இவ்வளவு சாப்பிடுகிறார்களா ங்கறது சந்தேஹம் தான்.




 

Thursday, September 1, 2016

MAARGAZHI CELEBRATION.....

மார்கழி கொண்டாட்டம்...

மார்கழி ஆரம்பிக்கறதுக்கு முன்னே... படிப்  படியா கோல மாவு வாங்கி யாயிடும்.அப்போ எல்லாம் கலர் பொடி  எல்லாம் கிடையாது... வெள்ளை புள்ளி கோலம் தான்...
காலம்பர நாலு மணிக்கு எழுந்துடுவோம்...
அப்பா எங்களுக்காக ஸ்பெஷல்லா wire இழுத்து, ஒரு நாப்பது வாட் பல்பை வாசலில் தொங்க விட்டுக்குடுப்பா - வெளிச்சத்துக் காக.

(அப்பாவுக்கு கோலத்தில் ரொம்ப ஆசை. அதையும் Maths மாதிரி, நோட்டில் ஸ்கேலால் அளவெடுத்து,புள்ளி வைத்து, பேனாவால் கோலம் போட்டு வைத்திருப்பார்...

பாரதியாருக்கு   எல்லாவற்றிலும் கண்ணன் தெரிந்த மாதிரி, அப்பாக்கு எல்லாத்திலையும் கணக்குதெரியும் !! மியூசிக்   notation கூட frequency கணக்குப் படி எப்படி வரதுன்னு சொல்லிக் குடுத்திருக்கா. அந்தகணக்கை வைத்து, கோட்டு வாத்தியம் பண்ணி வாசிச் சிருக்கா -- எதை பத்தி பேசினாலும்... அங்க அப்பாஇருக்கா !!!)

சரி - கோலத்துக்கு வருவோம்.


முதல் நாளே, மறு நாள் என்ன கோலம் னு தீர்மானிக்கறது பெரிய அக்கா தான். !!)
  எத்தனை புள்ளின்னும் அவதான் decision .
கோலத்தை ஒரு குறிப்பிட்ட கணக்கில் எவ்வளவு பெரிசாக வேணும்னாலும்
விஸ்தாரம் பண்ணலாம்.அந்த கணக்கும் அப்பா எழுதி வெச்சிருப்பா.
நேர் புள்ளி கோலம்னா ஒத்தை படை நம்பர் எது வேணா எடுத்துக்கலாம்... அதெல்லாம் சிக்கு கோலம்...

நாங்கள் அதிகமாக சிக்கு கோலம் போட மாட்டோம்.
காலம்பர ஆளுக்கொரு கொட்டாங்கச்சியில் மாவோடு வாசலுக்கு வந்து விடுவோம்...
வாசலில் தண்ணீர் தெளித்து, கட்டை துடைப் பத்தால் பெருக்கி...
 விடியறதுக்குள்ள கோலம் போட்டுட்டு உள்ளே போயிடணும்...
அந்த தெருவில எல்லாருக்கும் முன்னாடி, எல்லாரையும் விட பெரிசா போடணும்...


எத்தனை கவலைகள் !!
நடு வரிசையை அக்கா வைக்க, நாலு பாகமாக பிரித்து, நாலு பேரும் பெரிசா போடுவோம்... நாலு பேர்போட்டாலும், புள்ளி நடுவில் gap , symetry எல்லாம் கரெக்ட் ஆ இருக்கும்...
போட்டு  முடித்ததும்...
ஒரு சின்ன பெண் பரங்கி பூ கொண்டு வருவா.. அவகிட்ட மாசத்துக்கு பேசி இருப்போம்...
அதை இடம் பார்த்து, சாணி வைத்து, பூவை சொருகுவோம்...

பிறகு தள்ளி நின்று கோலத்தை ரசித்து விட்டு, அப்பாவை கூப்பிட்டு காமித்து விட்டு உள்ளே போவோம்..
கொஞ்ச நேரம் கழித்து ஒரு சர்வே   நடக்கும்...
யார் வீட்டு கோலம் பெரிசு ? யார் வீட்டிலாவது புதுசா கோலம் இருக்கா ? அப்படி இருந்தா, நோட்போக்கோடு ஆஜர்.. காப்பி  அடிக்க... அவா எல்லாம் கோச்சுக்க மாட்டா... infact சொல்லித் தருவா !!

முப்பது நாளும், ஒரு கோலத்தை மறு முறை போடாம, முடிச்சிடுவோம்..
போகி அன்னிக்கு... அக்கா கட்டம் கட்டமாக பிரிச்சுக்குடுப்பா... ஆளுக்கு இவ்வளவு கட்டம்னுஒதுக்கிடுவா... எங்க கட்டத்துக்குள்ள நாங்க சின்ன சின்னதா நெறைய கோலம் போடுவோம்...ஒவ்வொரு கட்டத்துக்கும் border கட்டுவோம்.. அதுவும் புள்ளி வைத்து...

பொங்கல் அன்று.. நடுவில் படிக்கோலம்... காவி வைத்து... அதை சுற்றி கட்டங்கள், கோலங்கள்....
எங்க வீட்டுக்கு இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்போம்... அவர்கள் permission னுடன்... எதிர்த்தாற்போல்வீடுகள் இல்லாத தெரு எங்கள் சௌகரியம்...

   

மார்கழின்னா இது மட்டுமா....


ஆண்கள், சப்பளாக் கட்டையுடன், கழுத்தில் muflar உடன் .. பஜனை....செய்து கொண்டே போவார்கள்
மார்கழியில் ozone லேயர் கீழாக இருப்பதால் உடம்புக்கு நல்லது...
ஆண்கள் அதில் நனைந்து நடந்து போக, பெண்களுக்கு அதற்கு அனுமதி இல்லாததால்... கோலம்போடும் சாக்கில் வெளிக் காற்று...

பக்கத்து கோவிலிலிருந்து  தினமும் 30 திருப்பாவை, 30 திருவெம்பாவை... எம்.எல்.வசந்த குமாரிபாடியது...
நான் இந்த 60 பாடல்களையும் கற்றுக்கொண்டது, மார்கழியில் தான்.. அதுவும் திருப்பாவை முழுவதும்...

எங்கள் concentration யும், aesthetic sense யும் வளர்த்தது இந்த கோலங்கள் தான்...

உட்காராமல், குனிந்து போட முடிந்தது... will power வளர்ந்தது....

இவைகளை தவிர...
தஞ்சாவூரில் பெரிய மார்கெட் , சின்ன மார்கெட் என்று இரண்டு உண்டு...
பெரியது whole sale ...  சின்னது... retail ...
பெரிசிலிருந்து, சின்னதுக்கு கூடை கூடையாக பச்சை பசேல் என்று காய் கறிகள் போகும்.. கூலி ஆள்கள்,பெண்களும் கூட அவைகளை தலையில் தூக்கிக் கொண்டு,  கையால் கூட பிடித்துக்கொள்ளாமல் வேகவேக மாக போவதை தினமும் வேடிக்கை பார்க்கலாம்...

அவரை, கொத்தவரை, புடலை, பாகை என்ற பந்தல் காய்கள் இந்த மாதம் ஏராளம்

ஜனவரி முதல் தேதி... ஒரு பெரிய தேர் கோலம்... எங்காத்து ஸ்பெஷல்...
(தேருக்கு அடியில் இரண்டு சக்கரங்கள், நடுவில் கருடன், மேலே கொடி, அதற்கு மேல் வருடம்...வாழ்க்கை சக்கரம் அப்படி ஓடுகிறதாம் !!)

 வைகுண்ட எகாதிசிக்கு ரங்கர் திண்டு  கோலம்,
 முடவன் முழுக்கு அன்னிக்கு எருக்கம் இலையை தலையில் வைத்து ஸ்நானம்,
திருவாதிரை பண்டிகை, அதற்கு களி, கூட்டு,
 கூடார வல்லி அன்று சர்க்கரை பொங்கல்
 இதெல்லாமும் இந்த மாத விசேஷ அனுபவங்கள் தான்...

இன்றைக்கும், நாங்கள் ஐவரும், எங்கெங்கே இருக்கிறோமோ, அங்கங்கே அன்று தேர் கோலம் உண்டு.
(family கோலம் !!)

இப்போது சென்னையில் flat இல்.. படிப்படியாக மாவாவது, கோலமாவது...
அதற்கு, நேரம், இடம், மனம், knowledge எதுவுமில்லை இந்த அவசர காலத்தில்...
பாதிப்பேர் வீட்டில் ஸ்டிக்கர் கோலம்... மீதிப்பேர் வீட்டில்.. நாலு இழைகள்...

இப்பவும் மார்கழியில் தஞ்சாவூர் பக்க கிராமங்களுக்குப் போய் பாருங்கள்.. அந்த மக்களின் உணர்வுகள்புரியும்...
ஆனால் இப்போ எல்லாரும் கலர் கோலம், ரங்கோலி என்று அசத்துகிறார்கள்...            

 ஏன் நாம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம் ?
அவசியமில்லை என்றா?
நேரமில்லை என்றா?
அமெரிக்கா வில் இதெல்லாம் கிடையாது என்றா?
குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் ஐயும், பாடத்தையும் தவிர ஒரு உலகம் இருக்கிறது என்று தெரியஅவசியமில்லை என்று நினைத்து விட்டோமா?
வழி வழியாக வந்த இந்த வழக்கங்களும், அதற்கான முக்கியத்துவங்களும், உடல் நலத்தையும் , மனநலத்தையும், society உடன் சேர்ந்து வாழும் அவசியங்களும் ஏன் தெரியாது போயிற்று... !!

இவைகள் தான் நம் வாழ்வை முழுமை ஆக்கும் என்று நான் சொல்ல வில்லை...
இவைகளை அழியாமல் காப்பாற்றலாம் என்றுதான் சொல்கிறேன்....!!

West இல் social     life   க்கு அதிகமாக ஒன்றும் இல்லாது, மெஷின் வாழ்க்கை ஆனதால்,Mothers' day, Fathers' day, Valentines' day என்று கொண்டாடுகிறார்கள். அவைகளை காபி அடிக்கும் நாம் (நம்மூரில்அதெல்லாம் வியாபாரத்தை பெருக்க), நம் பண்டிகை களையும், கொண்டாட்டங்களையும் மறந்துபோனோம் !!