SK க்கு திடீரென்று, வீட்டு சாமானெல்லாம் இன்னும் குறைக்கணும் என்று தோணிடுத்து. ஏற்கெனெவே மினிமம் தான் ... (எனக்கும் கூட உண்டு அந்த கிறுக்கு) ... வீடு மாத்தலாம்னு ஒரு ஐடியா.
எங்கள் பேரரசு பம்பாயில் இருக்கிறார். நாங்கள் கப்பம் கட்டும், சிற்றரசு. எங்கள் மாளிகை சின்னதுதான். ஒரு தர்பார் மண்டபம், அந்தப்புரத்தில் ஒரு அறை, விருந்தினர் அறை ஒன்று, பண்டக சாலை, சமையல் கூடம்.. இவ்வளவு தான்.
ரெண்டு வருஷத்துக்கு முந்தி, ரகசியமாக ,கரையான் நெறைய வந்து, படை எடுத்து, துணிமணி, பேப்பர் இன்ன பிற சாமான்கள் வைக்கும் அலமாரியில், கோட்டை யின் பின் பக்கமாக வந்து, பல்கிப் பெருகி, படையை பெருக்கி, திடீர் அட்டாக்...
கோட்டை சுவர் (அலமாரியின் கதவுகள்) இடி படும் முன், எங்களுக்கு ஒற்றன் தகவல் தர, போருக்கு ஆகும் செலவுக்கு, எங்கள் பேரரசுக்கு ஓலை அனுப்ப, அதை 'எலி' எடுத்து, ரகசிய ஒயர் மூலம் சேர்க்க, அவர் மந்திராலோசனை செய்து , தன் பட்டத்து ராணியையும் கேட்டு, பொருளுதவி செய்தார்.
(சாரி... சரித்திர நாவல் படிப்பதின் பாதிப்பு...படித்து விட்டு தூங்கினால், கனவிலாவது பட்டத்து ராணியாக நான் இருக்கக் கூடாதா? ஒரு சேடிப் பெண்ணாக வந்து, மகாராணிக்கு "சேவை செய்து, சாப்பாடு போட்டு, சாமரம் வீசுகிறேன்... ஹும்ம்ம்ம்... சோழ நாட்டின் இளவரசியாக பிறந்திருக்கணும்.!!)
நாங்களும், எங்கள் காலாட்படையை சேர்த்து, படைத்தளபதியின் மேற்பார்வையில், போர் தொடுத்து, கரையான் படையை கதற கதற அழித்து, துரத்தி .... கோட்டை கொத்தளங்களை புதுப்பித்து... மாளிகையை புதுப்பித்தோம்.
இந்த போர்களத்தில் எனக்கு என்ன வேலை? எல்லாம் நன்றாக நடக்கிறதா என்று பார்க்கப் போக,, ஒரு குதிரையால் தள்ளப் பட்டு, கேடயக் குவியலில் விழுந்து அடி பட்டு, கை கால் வீங்கி, அரண்மனை வைத்தியர் வீட்டுக்குப் போனால்... ஆச்சரியம்.. அங்கே , அண்டை நாட்டு, மா.. மா.. மன்னர்.. ஏகாதிபத்திய சக்கரவர்த்தி.. ஸ்ரீ ல ஸ்ரீ ரஜினி காந்த், விஜய சாம்ராஜ்ய மகா ராஜா, நகர் வலம் வரும்போது, மார்பு வலி வர, அவசரத்திற்கு, இந்த வைத்தியர் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
அவ்வளவு தான்.. நான் என் வலியை மறந்து, ஓடி, கூட்டத்தில் இடி பட்டு, தரிசனம் பண்ணி விட்டு, அவருடைய மெய் காவலர் துரத்த, ஓடி வந்து, முதலில் என் பெண்ணுக்கு தகவல் சொல்லி... அப்போ தான் இவரால் இடித்துரைக்கப் பட்டேன்... என் வீக்கத்திற்கு கட்டுப்போட செவிலியர்கள் தயாராக இருக்கிறார்கள்.
(இது ஒரு கிளைக் கதை. ராஜா கதையில் இப்படி கிளைக் கதைகள் நிறைய வருமில்லையா? )
மாளிகை தயாரானதும், என் வீட்டு வேலைக்காரர்களை வைத்து, போரில் மடிந்த எதிரிகளை அகற்றி, சுத்தம் செய்து, மறுபடியும் , நார்மல் வாழ்க்கைக்குத் திரும்பினோம்.
அப்போதே நான் சொன்னேன்.. "இந்த மாளிகை வேண்டாம்.. உப்பரிகை அலுத்து விட்டது... சிறை மாதிரி இருக்கு. வேறு மாளிகைக்கு மாறலாம்" என்று. என் பட்டத்து ராசா வுக்கு பிடிவாதம் அதிகம். இளவரசர்கள் , இளவரசி சொன்னாலும் கேட்பதில்லை. விதியை நோவதை தவிர வேறென்ன செய்ய முடியும்?
ஒரு சில எதிரிகள் தப்பி ஓடி, இரண்டு வருடங்களாக படை சேர்த்து, மறுபடியும் அட்டாக்.... இந்த முறை போர் செய்ய எங்களுக்கு சக்தி இல்லை... பணமும் இல்லை.. அதனால் வேறு மாளிகை பார்க்கிறோம்..
இவ்வளவு கதை எதற்கு என்று பார்க்கிறீர்களா? சொல்கிறேன்...
ஒரு நாள் நான் வெளியே பொய் விட்டு வருகிறேன்.. அதிர்ச்சி... வீட்டில் ஒரு கட்டில், மெத்தை, சிம்மாசனம், நாற்காலி ஒன்றும் இல்லை.. எல்லாவற்றையும் விற்று விட்டார் !! எல்லாம் பெரியதாக இருக்காம்... அடுத்த மாளிகை இவ்வளவு பெரிசு இல்லை என்றால், சமாளிக்க முடியாதாம். !! நல்ல வேளை, என் கயிற்றுக் கட்டிலும், பாயும் இருந்தது... உட்கார இரண்டு மூன்று சாதாரண நாற்காலிகள்.
நல்லவேளை, இயல், இசை, நாட்டிய மன்றமும், திரையும் இருந்தது.. பொழுது போக !!
அடுத்த நாள் பார்த்தால், பரண் சாமானெல்லாம் இறக்கப் பட்டு, நிறைய ஒதுக்கப் பட்டு, லிகிதங்கள், ஓலைகள் எரிக்கப் பட்டு... பட்டு..பட்டு..
அதில் பொக்கிஷமாக இவர் தந்தை சேஷாத்ரி உடையார் வைத்திருந்த ஒரு ஒரு செப்பேடு இருந்தது. அதில் எங்கள் கல்யாணத்தின், வைதீக செலவு குறிக்கப் பட்டிருந்தது.
வைதீகத்திற்கு, 1 ரூ., 5 ரூ, அதிக பட்சமாக 50 ரூ. என்று பொறிக்கப்பட்டு, கூட்டுத் தொகை 173 ரூபாய்கள்.
சம்பந்திக்கு, அப்பக்கூடை, பொரியிடல், பதில் மரியாதை என்று 25 ரூபாய்களை என் மாமனார் வாரி இறைத்திருக்கிறார் !!
அப்புறம், பலதானம், பாலிகை என்று எல்லாமுமாக சேர்த்து....
வைதீக செலவு ..... சுமார் 220 பொற்காசுகள் செலவாகி இருக்கிறது.
வைதீக செலவு ..... சுமார் 220 பொற்காசுகள் செலவாகி இருக்கிறது.
நாம் அந்த மாதிரி செலவழிக்க முடியுமோ? ஏதோ என்னாலான செலவாக , மொத்தமாக என் பையன் கல்யாணத்திற்கு போக வர செலவை சேர்த்து 50000 ரூ. யும், பெண்ணிற்கு சீர் வரிசை சேர்த்து, 2,00,000 ரூ. செலவு -- சக்திக்கு மீறி, நஞ்சை, புஞ்சை நிலங்களை விற்று செலவு செய்தோம். நம் பெண் நன்றாக இருக்க வேண்டும் இல்லையா.
(ஒளறல் போறுமா ... ஹிஹிஹிஹி ... இன்னிக்கு வாக்கிங் போகல்லே.. லீவு விட்டுட்டேன்... அதான் இப்படி...)
No comments:
Post a Comment