Monday, May 15, 2023

When I think of my father....

 



When I think of my father, I think of …….

His profound knowledge in Carnatic Music, although he had no formal learning of the same. He could play couple of instruments, like Harmonium, and during my childhood, he used to play the harmonium and make me sleep. In radio, it will be continuously Carnatic music concerts, and we were trained to identify the raga. He was the one who arranged for my Veena learning and motivated me.

My father was interested in several subjects, English, Maths, Physics, Logic, Astronomy to mention a few. From a remote village in South, from a family of uneducated people around, he went to Madras to pursue his higher education. He was well versed in writing poems in English. He was a very knowledgeable person.

 He used to read a lot and a variety of books and will always share what he read with us. He used to teach the fundamentals of Physics, Maths etc. in a casual way, without forcing us into it, and it used to be so natural. This is one reason which motivated me to chose Physics & Maths in College.

He was a very respected and popular Maths teacher, and I am sure I inherited that interest from him to take up teaching as a career.

 He was very affectionate with all us children. I remember, he used to make two of us sit in his cycle, and push the cycle, while returning from school.

 Though he earned a meagre salary as a teacher, with my mother’s managing skills, he gave us, simple nourishing food, which helps me to keep good health till date. He himself was very healthy, without any chronic illness, till his death, at the age of 87.

 He used to be strict with us and inculcated certain discipline and trained us to be very punctual, which helps me till date to lead a disciplined life and also helped me to bring up my children teaching similar values of life.

 
My father will always remain as my HERO and ROLEMODEL

Thursday, May 12, 2022

SK's Surgery

 எங்காத்துல அவருக்கு ஒரு சின்ன சர்ஜரி - February 21ம் தேதி,2022. அது பெரிய விஷயமில்லை. நான்தான் பக்க பலமாக இருந்தேனே. எப்படி என்று கேட்கிறீர்களா.

"கொல்லம் பட்டறையில் ஈக்கு என்ன வேலை" ங்கற மாதிரி ... நானும் ஆஸ்பத்திரியில் இருந்தேன். என் பெண் எங்களை அழைத்துப் போக, அங்கே கையெழுத்தெல்லாம், பேச்சுவார்த்தையெல்லாம் எல்லோரும் அவளோடு. என்னை ஒரு பொருட்டாகவே யாரும் மதிக்க வில்லை !!
ஒரு நல்ல ரூம் கொடுக்கப்பட, காலை 7.30 க்கு ரூமிற்குள் போய் செட்டில் ஆனேன் . 8.30 க்கு கையில் கொண்டு போன, இட்லியும் சட்னியும் சாப்பிட்டு, காபி குடித்தேன். 11 மணிக்கு, காஃ பி ஷாப் போய் ஒரு சின்ன கேக் பீஸ் சாப்பிட்டேன். 1 மணிக்கு கேன்டீனில் சாப்பாடு. நடுவில், கதை புத்தகம், சு டோ கு என்று பொழுதை ஓட்டினேன். பிறகு, மொபைலில் வித விதமான கேம்ஸ். 3 மணிக்கு காஃபி . ஒரு பார் சாக்லேட் .

ஓ .... இவரை பற்றி ஒன்றும் சொல்ல வில்லையா... இவருக்கு, வெரிகோஸ் வெயினுக்காக சர்ஜெரி . அது என்னவோ, அரை மணிக்கொருதரம், நர்ஸ் வருவதும், பி.பி. , சுகர் டெஸ்ட் எடுப்பதும், டாக்டர்ஸ் வந்து பார்ப்பதும், ஒரே போல,எல்லா staff ம் - "என்னென்ன சர்ஜெரி இதுவரை ஆகியிருக்கிறது, சுகர் உண்டா, பி.பி. உண்டா, ஹார்ட் ப்ராப்லம் உண்டா என்று கேட்க , இவரும் பொறுமையாக எல்லோருக்கும் அதே பதில் சொல்ல, எனக்கு எல்லாம் பராபரியாக காதில் விழ, நான் பாட்டுக்கும் என் பொழுது போக்கில் பிசியாக இருந்தேன். ஒரு வழியாக 2.30 மணிக்கு கூட்டிப் போய் , 5 வரை சர்ஜரி முடிந்து, 6.30 க்கு ரூமில் கொண்டு விட்டார்கள்.

வலி இருக்கா என்று போனால் போகிறதென்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டு, நான் பாட்டுக்கும் என் வேலையை கவனித்துக் கொண்டு, 8 மணிக்கு இரவு டிபன் , என் பேத்தி ஆசையாக கொண்டு வர, சாப்பிட்டு, அவளுடன் கொஞ்சி பேசி விட்டு, 8.30 மணிக்கு தூக்கம். நர்ஸ் அப்பப்போ வந்து, தூங்குகிறவரை எழுப்பி, ஏதேதோ விசாரிப்பதும் , மாத்திரை கொடுப்பதும், அரை குறையாக தெரிந்தது.
எப்போதும் போல் காலை 3.30 மணிக்கு எழுந்து, பல் தேய்த்து, நாலு மணிக்கு சிஸ்டரிடம் காஃபி பற்றி விசாரிக்க, கேன்டீனில் 24 மணி நேரமும் காஃபி கிடைக்கும் என்று சொல்ல, குஷி யாகி, கான்டீன் போய் 4.30க்கு ஒரு சூப்பர் பில்டர் காபி குடித்து, அதி விசேஷம்.

அப்புறம் என்ன, என் பெண் டிஸ்சார்ஜ் வேலைகளை கவனிக்க, நான், என் கடமைகளை , முதல் நாள் மாதிரியே ரிப்பீட் !!

இதெல்லாம் விட டாப், டாக்டர் வந்து இவரை பார்த்து விட்டு, "வீட்டில் யார் இவரை கவனித்துக் கொள்ளவார்கள்" என்று கேட்டதுதான். இத்தனைக்கும் ஒவ்வொரு முறை, டாக்டர் consultation க்கு போகும்போதும், நான் கூட போயிருக்கிறேன் !!!
இப்படியாக, ஆபரேஷன் முடிந்து , வழக்கப் படி, பில் செட்டில் பண்ண ஊரு பட்ட நாழி எடுத்துக் கொண்டு, எல்லாவற்றையும் என் பெண் பார்த்துக் கொள்ள, நான் ஏதோ பிகினிக் போனமாதிதி, 3.30 க்கு வீடு வந்து சேர்ந்தேன்.

இது எப்படி இருக்கு !!!! - போனால் போகிறதென்று ஒரு வார்த்தை - இவர் சாதாரணமாக , நடமாடிக் கொண்டு, நலமாக இருக்கிறார்.





Sunday, December 20, 2020

சரணாகதி...

 நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது....


ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence 

இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா..

நடுவில் வந்த இடைஞ்சல்களை சமாளிக்க முடியுமா...

சீதையை பார்த்து, ராவணனை பார்த்து, இலங்கையை கொஞ்சம் தீக்கு இரையாக்கி.. 

ராமர் கண்டிப்பாக வந்து காப்பாற்றுவார் என்று நம்பிக்கை கொடுத்து...

(சீதைக்கு தெரியாதா? இல்லை நம்பிக்கை இல்லையா) இது ஒரு சாதாரண மனிதர்கள் படும் அவஸ்தையும், anxiety  யும்.


ஹனுமான் திரும்பி வந்து... ஆவலுடன் காத்திருந்த ராமனிடம்..."கண்டேன் சீதையை " என்று கண்டேனை  முதலில் வைத்து... எப்படி முக்கியமான செய்திகளை, முக்கிய தருணத்தில் சொல்ல வேண்டும் என்ற பாடத்தை நமக்கு சொல்லித் தரவில்லையா... (நாம் அப்படி செய்கிறோமா.. போனில் ஒரு செய்தி சொல்ல அரை மணி நேரம் !!!  )

படிக்கும்போது சிலிர்த்துத் தான் போகிறது..

அப்போது, "எப்படி, எந்த தைரியத்தில் ஹனுமான், கடலை தாண்ட நினைத்தார்?.. " என்று ஆரம்பித்து கேள்விகள் கேக்கலாம்.. ஏனென்றால் நம்மளால் முடியாத காரியம். 

அதற்காகத்தான், அனுமனை "தடங்கலை   சக்திக்காக"  சக்திக்காக வேண்டுகிறோம். 


ஒரு குழந்தை, தன் தாயை எப்படி நம்புகிறது ? தாயின்  கையை பிடித்துக் கொண்டு விட்டால், தாய் போகுமிடமெல்லாம் போய், ஒரு இடத்தில் உட்கார வைத்தால் நம்பிக்கையாக உட்கார்ந்து, வேறு யாருடனும் போகாமல், காத்திருந்து, தாயை பார்த்ததும், கையை பற்றி கூட வரவில்லையா? எவ்வளவு செக்யூரிட்டி அம்மாவிடம்? 

அதே குழந்தை... வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக விலகி, தானே சிந்திக்கும் போது, அவநம்பிக்கை கொள்கிறது... சமூகம் கற்றுக் கொடுக்கும் பாடம்... ஸ்திதப் ப்ரக்ன்யா இல்லை... 


அதனால் தான் , மார்க் குறைந்ததால், வீட்டுக்கு போகாமல், மூன்று நாள், தூரத்து உறவுக்காரர் வீட்டில் தங்கி... எவ்வளவு சங்கடம் அந்த அம்மாவுக்கு.. இனி அந்த பெண்ணை எப்படி கையாள்வது என்று புரியாமல்..... இதெல்லாம் மனதில் கள்ளம் புகுவதால் வருகிறது... (மனதில் நடக்கும் குருக்ஷேத்திர சண்டையில், அர்ஜுனனாக , குழப்பமாக இருப்பதால் வருகிறது..)


நான் ஏற்கெனெவே எழுதி  இருக்கிறேன்.. எப்படி என் பேத்தி மூன்று வயதில் வில் அம்பு எடுத்துக் கொண்டு , தனுஷ் கோடி போய் , அம்பு விட்டு, ராவணை அடித்து விட்டதாக நம்பி, ராமருக்கு ஆறுதல் சொன்னாள்  என்று... அந்த innocence  எப்போது மாறுகிறது ?     

நாமெல்லாரும் கடவுளின் குழந்தைகளாகவே இருப்போம். 


சந்தேகங்கள் வந்தால் சுந்தர காண்டம் படித்து பலன் உண்டா?


ஆண்டாள் சொல்லும் "நீராடல்" என்ன ? குளத்தில் வெறும் குளியலா ? இல்லை... பகவானிடம் அதீத பக்தி கொண்டு, அவன் அருளில் முங்கி முங்கி குளிப்பது.. அவனை பற்றிய எண்ணங்களில் மூழ்கி மூழ்கி அனுபவித்து, மனதை சுத்தப் படுத்துவது... அவள் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. இஷ்டப் பட்டவர்கள் வரலாம் என்று எழுப்புகிறாள். மாலையை சூடிக் கொடுக்கிறாள்... அதுதான் பக்தி...


கண்ணப்பன் லாஜிக்   யோசிக்க வில்லை, ஆத்மார்த்தமாக , வாயில் தண்ணீர் கொண்டு வந்து லிங்கத்திற்கு அபிஷேகம் பண்ணி, செருப்பால் கூட்டி சுத்தம் பண்ணி, ஒரு கண்ணை கொடுத்து, மறு கண்ணை எடுக்கும் முன், ஒரு காலால் இறைவனின் கண் இருக்க வேண்டிய இடத்தில் அடையாளம் வைத்துக் கொண்டு... 

இதுதான் சரணாகதி... 


இந்த சரணாகதி ஒரு முறைதான் பண்ண முடியும்.. ஒரு முறை சரணாகதி என்று பாதங்களில் விழுந்து விட்டால், மறுபடியும் எழுந்து, எழுந்து விழ முடியுமா... பிறகு பகவான் வேறு, நான் வேறு என்ற எண்ணம் எப்படி வரும் ? அது தானே கடவுள் நம்மை ஆக்ரமிக்கும் தருணம் ? 

அதனால் தானே கண்ணப்பனுக்கு சிவா லோகப் ப்ராப்தி ? 


"சிக்கென ப் பிடித்தேன் ... எங்கு எழுந்தருளுவது இனியே " என்று தேவாரமாக மலர்ந்தது !!

மானசரோவரிலும், கண்டகி ஆற்றிலும் (108 ) குழாய்களின் அடியில் குளிக்கும்போது, இறைவனை நம்பித் தான் இறங்குகிறோம்.. இல்லாவிட்டால் அந்த குளிர் தாங்குமா...??


Friday, November 13, 2020

நினைத்துப் பார்க்கிறேன்....

 நினைத்துப் பார்க்கிறேன்.... பிறந்த வீட்டில், தீபாவளி திருநாட்கள்...ஒரு வார பட்சண களேபரம் ..கடைசி நேர புது ட்ரெஸ் கொண்டாட்டம்.....முதல் நாள் இரவு, வெங்காய சாம்பார், உருளை கறி , சேமியா பாயசம், அப்பளம் பொரித்து, சாப்பாடு... .வெகு தாராளமாக 5, 10 ரூபாய்க்கு பட்டாசு, மத்தாப்பு.. விறகடுப்பில் கொதிக்கும் வென்னீர் ... 7 குழந்தைகளில் கடைசி குழந்தையான என்னிலிருந்து துவங்கி, எண்ணெய் குளியல் அமர்க்களம்... அப்பா கையிலிருந்து புது துணி பெற்று, உடுத்தி...ரேடியோவில் தீபாவளி வாழ்த்தும், நாதஸ்வரமும் விடியற்காலை 4 மணிக்கு கேட்டு.... பகல் விருந்து....... ஹும்ம்ம்ம்

நினைத்துப் பார்க்கிறேன்... கல்யாணத்துக்குப் பிறகு, கூட்டுக் குடும்பத்தில்...அதே பக்ஷண களேபரங்கள்... புது புடவை... இரண்டு நாத்தனார்கள், இரண்டு மச்சினர்களுக்கிடையில், மாமியார், மாமனாருடன்... முதல் நாள் இரவு, வெங்காய சாம்பார், உருளை கறி , சேமியா பாயசம், அப்பளம் பொரித்து, சாப்பாடு... .பாய்லரில் வென்னீர் கொதிக்க, கடைசி மச்சினரில் ஆரம்பித்து.... வரிசையாக எண்ணெய் குளியல்... மாமனாரிடம் புது துணி பெற்று... உடுத்தி... பகல் விருந்து சமைத்து.... ஹும்ம்ம்ம்
நினைத்துப் பார்க்கிறேன்... 3 குழந்தைகளுக்கு அம்மாவாக... தீபாவளி ஷாப்பிங் பண்ணி , குழந்தைகளுக்கு திருப்தியாக, பட்ஜெட்டை கொஞ்சம் மீறி... துணி மணி வாங்கி, தைத்து... அடுப்பில் எண்ணெய் வைத்தால்தான் தீபாவளி வாசனை வரும் என்று, குழந்தைகளுக்குப் பிடித்த பக்ஷணங்கள் பண்ணி .... பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்து... முதல் நாள் இரவு, வெங்காய சாம்பார், உருளை கறி , சேமியா பாயசம், அப்பளம் பொரித்து, சாப்பாடு... .கெய்சரில் வென்னீர் போட்டு.... SK இடம் புதுக் துணி பெற்று... மதியம் பாயசத்துடன் சமைத்து... ஹும்ம்ம்ம்....

இன்னும்.... சின்ன வயதில் அம்மா கிளறிய லேகியத்தை சாப்பிட பிடிவாதம் பிடித்து, மாமியாரிடம், பவ்யமாக வாங்கி, (பிடிக்காமல்தான்) சாப்பிட்டு, பிறகு, அம்பிகாவிலும், டப் பா செட்டி கடையிலும் வாங்கிய ரெடி மேட் மருந்தை வாங்கி, குழந்தைகளை படுத்தி சாப்பிட வைத்து....
ஒரு தாம்பாளத்தில் புதுத் துணிகளையும் , ஒரு தட்டில் பக்ஷணங்களையும் பரத்தி வைத்து, எண்ணெய் வைக்கும் முன் துளி சுவீட் சாப்பிட்டு, ஒரு வெற்றிலையை போட்டு மென்று, அதே சம்பிரதாயத்தை பெண்ணிடம் செய்ய, அவள் கண்ணில் நீர் தளும்ப அந்த வெற்றிலையை மென்று, துப்பி....
பட்டாசுகளை பங்கு போட்டு, அவரவர் கூரிலிருந்து மத்தாப்பு எடுத்து கொளுத்தி, பட்டாசு வெடித்து, சாயங்காலத்திற்குள் போர் அடித்து, எல்லா மிச்சம் மீதிகளையும் சேர்த்து வைத்து கொளுத்தி....
எல்லாமே அமர்க்களம் தான்....
நினைத்துப் பார்க்கிறேன்... பெண்ணிற்கு தலை தீபாவளி முடிந்த பிறகு, 1968 லிருந்து, "நீயும் நானுமடி , எதிரும் புதிருமடி" என்று, அப்போதும் முதல் நாள் வெங்காய சாம்பாருடன் சமைத்து... ஆனால் முதல் நாள் மதியமே அதை சமைத்து.. (இரவு அவ்வளவு ஹெவியாக சாப்பிட முடியாதென்று... (வயதான கோளாறு )... பட்டாசெல்லாம் வாங்காமல் ... நாங்களே அவரவர் தலையில் சாஸ்திரத்துக்கு எண்ணெய் வைத்துக் கொண்டு... பகலில் ரொம்ப சிம்பிளாக சமைத்து... தீபாவளியை முடித்து...
இப்போது.... ?? அந்த நினைவுகளே நெஞ்சில் நிறைந்த பொக்கிஷங்களாக... இங்கு senior citizen home ல் , புதிதாக சேர்த்துக் கொண்ட நட்புகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி... தீபாவளி ஷாப்பிங் எல்லாம் பழங் கனவாக நேற்று இரவுக்கு தோசை, சாம்பார், சட்னி சாப்பிட்டு......உள்ளே ஏற்கனேவே இருக்கும் புதுப் புடவையை எடுத்து வைத்திருக்கிறேன்... இங்கு common ஆக , ஆர்டர் எடுத்து, செய்து கொடுத்த பக்ஷணங்களில், சாஸ்திரத்துக்கு கொஞ்சம் மிக்சரும், மைசூர் பாகும் வாங்கி, அதுவும் செலவாகாமல்...
இப்போது மணி மூன்று... அவசரமில்லை... 5.30 மணிக்குள் சாஸ்திர எண்ணெய் குளியல் முடித்து... புதுப் புடவை உடுத்தி... டைனிங் ஹாலில் மற்றவரை மீட் பண்ணி... தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி... டிபன் சாப்பிட்டு... மதியம் வடை, பாயசம் மட்டும் எக்ஸ்ட்ராவாக கிடைக்க, லன்ச் சாப்பிட்டு இப்படியாக இந்த தீபாவளி கழியும்...
பிழைத்துக் கிடந்தால் இனி வரும் தீபாவளிக்காவது... கொரோனா பயமில்லாமல், இந்த அளவிலாவது கொண்டாட கிடைத்தால் சந்தோஷம் ...
குறையொன்றும் இல்லை கண்ணா.....
எல்லா நட்புகளுக்கும் என் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்... சந்தோஷமாக கொண்டாடுங்கள்... குழந்தைகளுடன் கொண்டாடுபவர்கள், ஒவ்வொரு வினாடியையும் அனுபவித்து ரசியுங்கள்...

Friday, August 21, 2020

பிள்ளையார்........

 SK க்கு பிள்ளையார் இஷ்ட தெய்வம்... இன்றும் எங்கள் சுவாமி ரூமில் பெரிய பிள்ளையார் படம் மட்டும் தான்.

எங்கள் கல்யாண நிச்சயதார்த்தம் கூட பிள்ளையார் சதுர்த்தி அன்று தான் நடந்தது... அப்படி பிளான் பண்ணவில்லை. அதுவாக அமைந்தது. அந்த வருடம் செப்டம்பர் 7 ம் தேதி அன்று.

பூனாவில், எனக்கு கடைசி பையன் பிறந்து, ஆஸ்பத்திரியில் இருந்தபோது, என் கூட தங்க வீட்டிலிருந்து யாரும் இல்லாததால், ரூமில் தனியாகத்தான் இருந்தேன். தினமும் இரவு ஒரு மூஞ்சூர் தொட்டிலை சுற்றி ஓடி மறையும். எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கும். அப்போது வேண்டிக் கொண்டோம் - குழந்தைக்கு கணேஷ் என்று பெயர் வைப்பதாக. அப்படியே வைத்தோம் .

இன்னொரு சம்பவம். சென்னையில், அண்ணா நகரில் , தனி வீட்டில் குடி இருந்தோம். மூன்று குழந்தைகளும் சிறியவர்கள். இவர் ஆபீஸ் வேலையாக வெளிநாடு போனார் - ஒரு மாதத்திற்கு. சொன்னால் நம்புவதற்கு கஷ்டம். தினமும், இரவு, ஒரு மூஞ்சூர் ஹாலில் நாங்கள் படுத்திருக்கும் இடத்தில் ஒரு சுற்று சுற்றிவிட்டு, சுவாமி ரூமில் மறைந்து விடும். ஒரு மாதமும் தவறாமல் நடந்தது.

இப்படி அநேக விஷயங்கள் சொல்லலாம். எங்கள் குடும்பத்தை காப்பாற்றி, ஒவ்வொரு விஷயத்திலும் எங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க உதவுவது பிள்ளையார் தான்.... லஸ் பிள்ளையார் என் கடைசி பையன் கணேஷுக்கு ரொம்ப ஹெல்ப்.

எங்கள் வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை.

Thursday, August 20, 2020

ஆகஸ்ட் 22 - மறக்க முடியாத நாள்...

 

ஆகஸ்ட் 22 - மறக்க முடியாத நாள்... நான் டீச்சராக பிறவி எடுத்த நாள்.

 

படிக்கும்போது டாக்டர் கனவுகளுடன் படித்தேன். டீச்சராவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. பிடிக்காது என்று நினைத்திருந்தேன் .  எக்ஸாம் முடிந்து, ரிசல்ட்டும் வந்ததும், அப்பா சொல்படி  A.G. 's office, Telephones , Government College க்கு எல்லாம் அப்ளை  செய்துவிட்டு, அலஹாபாதில் , அண்ணா வீட்டிற்கு போயிருந்தேன். அப்பாவிடமிருந்து தந்தி... "உடனே கிளம்பி வா... Q.M.C. யில் வேலை என்று. அண்ணா railways ல் இருந்ததால், உடனே டிக்கெட் வாங்கி, கல்கத்தாவில் , ஹௌரா எக்ஸ்பிரஸில் ஏற்றி விட்டார் .

 

மெட்றாஸ் வந்து சேர்ந்ததும், 22ம் தேதி காலேஜில் வேலைக்கு சேர்ந்தேன். பிறகு, மற்ற இடங்களிலும் வேலை கிடைத்தாலும், அம்மா, அப்பாக்கு, காலேஜ் தான் பிடித்தது. அப்பாக்கு டீச்சிங் பிடித்தது... அம்மாவுக்கு அது பெண்கள் காலேஜ் என்பது பிடித்தது !!!

 

நான் படித்த காலேஜிலேயே, நான் படித்த lecturers உடன் வேலை பார்க்க பயங்கர கூச்சம். எனக்கு ஒரு வருடம் ஜுனியர் ஆக இருந்த பெண்களெல்லாம் ரொம்ப friends . லன்ச் சாப்பிட அவர்களுடன் மரத்தடிக்கு போய் விடுவேன். !! சில நாட்களுக்கப்புறம், staff ரூம் பழகி விட்டது. வேலையை ரொம்ப என்ஜாய் பண்ணித்தான் செய்தேன். 1963 - 1973.

 

1974 ல் SK பூனாவிற்கு வேலைக்குப் போக , நானும் குழந்தைகளுடன், காலேஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு , பூனா போய் , 1980ல் திரும்பி மெட்றாஸ் வந்து, மூன்று குழந்தைகளும் முழு நேரம் ஸ்கூலுக்குப் போக , தபால் வழி மேலும் படித்து, ஸ்கூலில் டீச்சராக சேர்ந்தேன் - 1985, ஜூலை 8. 

மறுபடியும் நான் கற்பனை கூட செய்யாத வேலை. ஏனென்றால், "நான் ஸ்கூல் டீச்சிங் எல்லாம் போக மாட்டேன்" என்று சொல்லிக் கொண்டிருப்பேன். ஆனால் அதையும் மிகவும் விரும்பி செய்தேன்.

 

அங்கேயே பிரின்சிபால் ஆக வேலை பார்த்து, ஓய்வு பெற்று, 2001 லிருந்து, 2015 வரை கோச்சிங் சென்டர் .

 

ஆக 1963 லிருந்து, 2015 வரை (நடுவில் ஒரு 11 வருட பிரேக்குடன் ) டீச்சர்.

 

இப்போதும், டீச்சர்களை பார்க்கும்போது, டி.வி. யில் கிளாஸ் ரூம், டீச்சிங் என்று காண்பிக்கும் போது மறுபடியும் அதே உத்தியோகம் பார்க்க ஆசையாக இருக்கிறது.

 

 

 

Wednesday, August 12, 2020

VK and Garden........

 எனக்கும் கொஞ்சம் தோட்ட ஆசை உண்டுதான். தஞ்சையில் இருந்தபோது, அந்த டிபார்ட்மென்ட் அம்மாது. நானும் சிறுமி. எனக்கே என்னை தெரியவில்லை. !!!

சென்னை வந்து அதற்கு ஸ்கோப் இல்லை.
கல்யாணம் பண்ணி , நுங்கம்பாக்கம் தனி வீட்டிற்கு வந்தால், அங்கு பின்னால் பெரிய காலி இடம். ஆனால் அப்போதும் எனக்கு தோட்ட ஆசை எழவில்லை. வீட்டில் நல்ல பெயர் வாங்கவும் (!!!), காலேஜுக்கு வேலைக்குப் போகவும் தான் நேரம் சரியாக இருந்தது...

பூனா வந்து, முதலில் ஒரு இரண்டாவது மாடி குடி இருப்பில் இருந்து, பிறகு ஒரு பெரிய தனி வீட்டின் கீழ் பகுதியில் இருக்கும் வாய்ப்பு கிடைத்ததும், அங்கு வீட்டின் முன்னாடி நிறைய இடம் இருந்ததும் என் மனதில் நீறு பூத்த நெருப்பாக இருந்த தோட்ட ஆசை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது...

நானே கொத்தி, மண் போட்டு, சமன் படுத்தி , விதைகள் வாங்கிப் போட ஆரம்பித்தேன். எனக்கு அவ்வளவாக அதில் பரிச்சயம் இல்லை. இருந்தாலும் விடுவேனா?

ரொம்ப ஆர்வமாக, தக்காளி, கத்திரிக்காய் , வெண்டை எல்லாம் போட்டேன். அதெல்லாம் முளை விட்டு வளர வளர ஒரே சந்தோஷம்.... ஆனால், அய்யகோ.... எல்லாம் மினியேச்சர் காய்கள்... அதுவும் ஒன்றிரண்டு. அதற்கு செலவழித்ததற்கு, கிலோ நாலணாவுக்கு விற்ற வெண்டை, கத்திரிக்காய் எல்லாம் கடையில் வாங்கி இருக்கலாம்.

இப்போது, சோளம் .... அழகாக காய்த்தது. எல்லாம் ஒரு விறல் நீளம்... ஆசையே போய் விட்டது. மணி பிளான்ட் மட்டும் தொட்டியில் மிக நன்றாக வந்தது.
அப்புறம் cactus ல் இறங்கி விட்டேன். தொட்டிகளில் வித விதமான cactus . சுற்றி மலைய் ப் பாங்கான இடமாதலால் , நிறைய cactus கிடைக்கும்.. ஒத்த இன்டெரெஸ்ட் உள்ள சின்ன பச ங்களுடன் டீல் போட்டு, வித விதமான cactus exchange பண்ணி, வளர்த்தேன்.

ஆச்சு. அந்த தோட்டத்திடம் பிரியா விடை பெற்று, எல்லா தொட்டிகளையும் கொடுத்துவிட்டு, சென்னை வந்தோம்.

சென்னையில் அண்ணா நகரில் தனி வீடு. சுற்றி செடி போட இடம். விடுவேனா ... இங்கேயும் எல்லாம் மினியேச்சர் காய்கள் தான். அது என்ன ராசி ? கொய்யா , சீதா பழம் மரங்கள் இருந்தன.. அவைகளில் கூட பழங்கள் சிறியதுதான். கொய்யா நல்ல ருசி என்பது ஆறுதல்.

சைடில் மணி பிளான்ட் வைத்து, அது காடு போல் வளர்ந்து, அதில் குட்டி பாம்பு குடி இருப்பது தெரிய, வெட்டிப் போட்டோம்.

இப்போது, வீட்டின் பின் பக்கம் வாழை. எங்கப்பா, நான் பிறந்த வீட்டில் நிறைய வாழை மரம் வைத்திருந்ததை பற்றி, ஒரு போஸ்டில் எழுதி இருந்தேன். அந்த ஆசை என் உள் மனதில் இருந்தது போல.

நர்சரி யிலிருந்து வாழைக் கன்று வாங்கி நட்டேன். ஐயா .... அது பெரிய மரமாக வளர்ந்து, ஒரு குலை தள்ளியது. ரொம்ப கற்பனை செய்யாதீர்கள். அந்த தார் பழுத்ததும், நானும் என் பெரிய பையனும் ஒரு தார் பழங்களையும் சாப்பிட்டோம் என்று சொன்னால் அதன் சைஸை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பல வருடங்கள் ஓடி, பலப் பல அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து விட்டு, ஒரு வீட்டில், இரண்டாவது மாடியில் அதிஷ்ட வசமாக கொஞசம் திறந்த வெளி இருக்க, நிறைய தொட்டி... எல்லாம் அழகுக்குத்தான் . ஆனால் ரொம்ப ரசித்து செடி வளர்த்து, வீட்டிற்குள்ளும் வைத்து, அழகு பார்த்து , அவைகளை அப்பப்போ, வெய்யிலில் தூக்கி வைத்து, இடுப்பில் வலி வந்து .... அவஸ்தை. ஒரு மணி பிளான்ட் , ரொம்ப நன்றாக, அடர்த்தியாக வர, அழகு பார்த்து மகிழ்ந்தேன். ஆனால், அதன் உள்ளே... எண்ணிலடங்கா எலிக் குஞ்சுகள். அருவருப்புடன் வெட்டிப் போட்டோம்.

கடைசியாக மைலாப்பூரில் கீழ் வீடு. எனக்கு பயங்கர சந்தோஷம் . ஆனால், அந்த இடத்தில் மழை நீர் சேகரிப்புக்காக ஏற்பாடு. அதனால் வெறும் புல் தான் போட்டோம். லான் என்பது அதன் பெயர் அவ்வளவுதான். சகிக்கவில்லை.

வீட்டின் சைடில் நீளமாக இடம் இருக்க, மறுபடியும் வாழை. இப்போது தோட்டக் காரன் அட்வைஸ் . பூவன், மொந்தன் என்று 2,3 வித வாழைக் கன்று வாங்கி நட்டேன். கர்ணன் படத்தில் கிருஷ்ணர் , குந்தி இடம் "ஆனாலும் உனக்கு ஆசை அதிகம் அத்தை " என்று சொல்வது போல் நானும் ஆசையாக நட்டேன்... கன்றை நட்டேன்... அவ்வளவுதான்.. ஒரு வருடத்தில் வாழைக் குலை என்பது கற்பனையில் தான். அய்யகோ... வாழைக் கன்று , கன்றாகவே இருந்தது... ஒன்றிரண்டு இன்ச் வளர்ந்திருக்குமோ என்னவோ... தோட்டக் காரன், "நான்தான் அப்போதே சொன்னேனே" என்று குத்திக் காண்பித்தான்.

முன்னால் இருந்த கொஞ்சம் இடத்தில் சாயந்திரம் கொஞ்சம் வெய்யில் வரும். அங்கு தொட்டிகளில் பல வித செம்பருத்தி வைத்து, அவைகள் கொஞ்சம் பூத்தன என்பது ஆறுதல். இங்கேயும் மணி பிளான்ட் நன்றாக வந்தது. அது என்ன ராசியோ.

இனி அந்த தோட்டக் கவலையும் இல்லை... ஆசையும் இல்லை..