Wednesday, January 10, 2018

APPA......




அப்பா பிறந்தது 1899 . January 11. 'சேத்தூர்' கிராமம். காரைக்கால் கிட்ட. தஞ்சாவூர் ஜில்லா படிச்சது அங்கேயே ஏதோ ஸ்கூல் - 9 கிளாஸ் வரைக்கும்.
பிரிட்டிஷ் கால படிப்பு... இங்கிலீஷ் எல்லாம் ரொம்ப நன்னா இருந்திருக்கணும். அப்பாக்கு Maths தான் பிடித்தது.
மாயவரத்தில் அப்பாவோட மாமா .. காவிரிக் கரையில அக்ரஹாரத்தில பெரிய வீடு... என்ன அப்பா ஒரு தரம் அழைச்சிண்டு போயிருக்கா..
அப்பா, ஹை ஸ்கூல் படிச்சது மாமாவாத்துல தங்கி...
அப்போல்லாம் இது ரொம்ப சகஜம்... உறவுக்காராத்துல தங்கி படிக்கிறது...
சாப்பாட்டுக்கு காசு குடுக்கறது, அவா திட்டராளா, அடிக்கராளான்னு பாக்கறது, சாப்பாடு சரியா போடராளா ன்னு கவலைப் படறது... ஒண்ணும் கிடையாது...
அவாத்து வழக்கம் என்னவோ அதத்தான் தங்கி படிக்கிற குழந்தையும் follow பண்ணும்... எதிலும் வித்தியாசம் பாராட்ட மாட்டா..
அம்மா அப்பாவ விட்டு இருக்கானே ன்னு கொஞ்சறதும் இல்ல... நமக்கு பாரமா இருக்கானே ன்னு மனசால கூட நேனைக்கறதும் இல்ல.
அப்பா, குத்தமாகவோ, சோகமாகவோ அல்லது ஸ்பெஷல் ஆகவோ தன் மாயவரம் life பத்தி சொன்னது இல்ல. ஏன்னா.. எல்லாமே நார்மலா தான் உணர்ந்திருக்கா !!

காவிரியில் தினமும் மணிக்கணக்கில் நீச்ச்சலடித்தது பத்தி நெறைய சொல்லி இருக்கா.
S.S.L.C. பாஸ் பண்ணினதும்  Intermediate படிக்க, அப்பா மெட்ராஸ் போயிருக்கா.. பிரெசிடென்சி காலேஜ் ... 1916 ல , ஒரு குக்கிராமத்திலேர்ந்து, அப்பாக்கு எப்படி அந்த தைர்யம் வந்துது... அதுவும் படிக்காத அம்மா அப்பா ஆத்துலேர்ந்து !!
அப்போ அப்பாவோட பெரிய அக்காக்கு கல்யாணம் ஆயிடுத்து.அத்தை மெட்ராஸ் ல குடுத்தனம்....
அப்பா B . A . Mathsபடிச்சுட்டு , Law சேந்தா.. அது முடிக்க முடிக்க கல்யாணம்ஆயிடுத்து. அம்மாவ  சேத்தூர்ல  விட்டுட்டு, அப்பா govt ல சர்வேயர் ஆ வேலைக்குசேந்தா. அதிலேயே இருந்திருந்தா, நல்ல நெலமைக்கு வந்திருப்பா... நான் சொல்றதுபணத்தாலே. ஆனா அப்பாக்கு teaching தான் புடிச்சுதாம். அதானாலே, Saidapet  teachers காலேஜ் ல சேந்து B . T . பண்ணி இருக்கா.
தஞ்சாவூருல Girls' Christian School la Maths Teacher aa வேலை பண்ணஆரம்பிச்சா.. 1923 ல. 1959 ல... 36 வருஷ சர்வீசோடretireஆனா....
படித்து முடிக்கும் வரை ... நாலு முழம் வேஷ்டி, அரைக்கை சட்டை...
வேலைக்குப் போகும்போது, எட்டு முழம் வேஷ்டி, அரைக்கை சட்டை, மேலே அங்கவஸ்திரம்...

அப்பாவுக்கு நிறைய ஞானம். நிறைய படிப்பா. படித்ததை எங்களோடு ஷேர் பண்ணிப்பா.
கர்நாடக சங்கீதம் expert . ஆனால் முறையாக படித்தது இல்லை. கேள்வி ஞானம். ஹார்மோனியம் , கோட்டு வாத்யம் ரொம்ப நன்னா வாசிப்பா.

எலெக்ட்ரிக்கல் வேலை எல்லாம் தானே செய்வா. செருப்பு தைப்பது முதற்கொண்டு எல்லாம் தானே.
அப்பாவ பத்தி எல்லாம் சொல்லனும்னா, ஒரு தனி புக் எழுதணும்... அவ்வளவுஇருக்கு...
அந்த மாதிரி அப்பா கிடைக்கக் குடுத்து வெச்சிருக்கணும்.

அப்போ, அப்பாவோட அடுத்த தங்கைக்கு பாட்டி அவசர அவசரமா கல்யாணம் நிச்சயம் பண்ணிஇருக்கா. மாப்பிள்ளை ஏற்கனவே கல்யாணம் ஆனவர். பெரிய பணக்காரர். அத்தை ரொம்பசிகப்பாகவும் அழகாகவும் இருப்பா. 16 வயசு ஆயிடுத்துன்னு பாட்டிக்கு அவசரம்.அத்திம்பேர், இந்த ஊருக்கு தற்செயலா வந்து, அத்தைய பாத்துட்டு, கல்யாணம்பண்ணித்தரச்சொல்லி ஒத்த கால்ல நின்னாராம்... தெரிஞ்சே, ரெண்டாம் தாரமா, செலவில்லாமகல்யாணம் பண்ணலாம்னு  நெனச்சு ஒரே வாரத்துல கல்யாணம் பண்ணி அனுப்பிச்சுட்டாளாம் .அப்பாக்கு ஒரே கோபம்.
அதை விட கொடுமை... அத்தைய அவர் தனி வீட்டில் வைக்க, மூத்தாள், கடுப்பாகி சண்டைபோட .. அத்தைக்கும் சமத்து போறாது... தனக்குன்னுஒண்ணும் இல்லாம ஒரு வருஷத்துல ,அம்மாவத்துக்கு வந்துட்டா... அதுக்கப்புறம் ஒரு வருஷம் கூட அவர் உயிரோட இல்ல.வயத்து வலின்னு படுத்தவர், எவ்வளவு சொல்லி அனுப்பியும்போகாம அவர் இறந்து போனப்புறம்அத்தை போய், காரியத்தை முடிச்சுட்டு வந்துட்டாளாம்... அப்புறம் தான்பிரளயம்...
பாட்டி, ரொம்பப் பிடிவாதம்... அப்பாக்கு தெரியாம, அத்தைய, நார்மடி புடவை கட்டவெச்சு, கோலம் பண்ணிட்டா. அதுக்கு கோபப்பட்டுண்டு அப்பா கடைசி வரைக்கும் பாட்டிகிட்ட பேசவே இல்லையாம்.
கடைசி அத்தையையும்பாட்டி, பட்டுக் கோட்டையில், ஒரு மிராசுதாரருக்கு, ரெண்டாம்தாரமாக குடுத்துட்டா. ஆனா, அங்கே பிரச்சனை இல்லை. முதல் தாரம் உயிரோட இல்லை.
இதுக்கெல்லாம் காரணம் தாத்தாவின் பொறுப்பில்லாத்தனம்... பணம் அழித்தவிதம்...
விதவையான அத்தைக்கு, சொத்தெல்லாம் கிடைக்கல்ல... ஆனா, மூத்தாளோட முதல் பிள்ளை, அத்தைய விட வயசு அதிகம், அவர் ஒரு  ஞாய தர்மத்துக்குக் கட்டுப் பட்டு, வருஷத்துக்கு 10 கலம் நெல்லு, 800 ரூ. பணம் குடுத்தார். நாங்க எல்லாம் மெட்ராஸ் வந்தப்புறம் கூட அதுதொடர்ந்தது. விலை வாசி ஏற,அவரே, நெல்லை நிறுத்தி விட்டு, பணமும் சேர்த்துக்குடுத்தார். அவருக்கப்புறம் அவர் பிள்ளை வந்து குடுப்பார். அத்தை செத்துப் போன பொதுகூட அவர் வந்திருக்கார். எவ்வளவு நேர்மை !!!

பாட்டி, தாத்தாக்கு அப்புறமா , எங்க அத்தை தனியா அந்தவீட்டுல இருந்தா...
நான் லீவுக்கு போயிருக்கேன்...
எங்கக்காக்கு மேலாத்து குஞ்சலா ரொம்ப friend . அங்க எல்லாம திசைய வெச்சுமேலாம், கீழாம், அப்புறம், எதித்தாம், கோடி ஆம் ன்னு அடையாளங்கள்...

நாங்க போனா, அத்தை நன்னா சமைச்சு போடுவா... வெறகு அடுப்புல, கல்ல போட்டு, சின்னதா எரிய  விட்டு, பட்டு பட்டா தோச வாத்து போடுவா.. அத்தை வெச்சிருந்த அந்தசின்ன நல்லெண்ண ஜாடி கூட எனக்கு படம் மாதிரி நன்னா ஞாபகம் இருக்கு !! பாக்குமரத்துல அவ்வளவு பாக்கு காச்சிருக்கும். அத பறிச்சு, கொட்ட பாக்கு எடுப்பா..

ஒரு தடவ, அத்தை தனியா இருக்கறச்சே, வருஷப் பணம் வந்தத ஒரு திருடன்பாத்துட்டான்... ராத்திரி அத்தைகொல்லை கதவ திறந்து போகரச்சே... அத்தை வாயில துணிஅடச்சு, கைய கட்டிப் போட்டுட்டு, பணத்த எடுத்துண்டு போயிட்டான்.. அத்தைக்கு நெஞ்சுவலி வந்துடுத்து... செய்தி வந்து அப்பா போய், அத்தைய தஞ்சாவூருக்கே அழைச்சிண்டுவந்துட்டா...
அப்புறம் கடைசி வரைக்கும் அத்தை எங்க கூடத்தான்...

அப்பா வீட்டை வாடைகைக்கு விட்டுட்டு, மாந்தோப்ப குத்தகைக்கு விட்டா... குத்தகைகாரன் சரியா பணம் தரல்லேன்னு, 1955  ல இருக்கும்னு நெனைக்கிறேன்... அந்த மாந்தோப்பவித்துட்டா... 800 ரூபாய்க்கு... அம்மா அதை அப்படியே பவுன் காசா மாத்திவெச்சுட்டா... பவுன் 40 ரூ ன்னு 20 பவுன் வந்துது.

வீடு மட்டும் வாடகைக்கு... 1980 கள்ல  வாடகை 5 ரூ. அதுவும் ஒழுங்கா வராது...வீட்ட 5000 ரூ க்கு வித்துட்டா... எங்க கிட்ட சொல்லி இருந்தா நாங்க யாராவது அதஇன்னும் மேல குடுத்து வாங்கி இருப்போம்...
பெரிய அண்ணாக்கு ஒரே கோபம்...என்னாட்டமா எங்க எல்லாருக்கும் இந்த பழசெல்லாம்பசுமையான நினைவுகள்...
அண்ணா கேஸ் போடப்போறேன் ன்னு பய முறுத்தி, வாங்கினவா பயந்து போய் .. அப்புறம்நாங்க எல்லாரும்கையெழுத்து  போட்டுக் குடுத்துட்டோம்...
ஒரு 10 வருஷம் முன்னே நான் போனேன்.. அந்த மாமி, ரொம்ப ஆசையா, எனக்குபோன்விட்டா எல்லாம் குடுத்து, வெத்திலை பாக்குல 10 ரூ வெச்சுக் குடுத்தா...
இப்ப போன மாதம் போனப்ப, அந்த மாமி இல்ல... வீடு பெண், மாப்பிள்ளைக்கு... முன்பக்கம் மாத்தி கட்டிட்டா... கொல்லை பக்கம் மட்டும் அப்படியே இருக்கு... பாக்குமரமும் இருக்கு... !!

Wednesday, December 13, 2017

வத்தக் குழம்பும் நானும் .....

வத்தக் குழம்பும் நானும் .....

எப்போது சாப்பிட ஆரம்பித்தேன் என்று ஞாபகம் இல்லை...ஆனால் என்று நானே பண்ண ஆரம்பித்தேன் என்று நன்றாக ஞாபகம் இருக்கிறது.

கல்யாணம் ஆன புதிதில் புக்காத்தில் எல்லோரும் சாயந்திரம் வெளியே போகும்போது, "ராத்திரிக்கு வத்த குழம்பு வைத்து, சாதம் குக்கரில் வைத்து விடு" என்று இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்து விட்டு போய் விட்டார்கள். நானும் பயந்துண்டே "சரி"  என்று சொல்லி விட்டேன். ஆனால் எனக்கு சமையலில் ABC  கூட தெரியாது. SK தான் ஸ்டெப் by ஸ்டெப் சொல்லிக் கொடுத்தார். !! ஒரு வழியாக சமைச்சுட்டேன். !! (இன்று வரை தான் சமையல் சொல்லிக் கொடுத்ததை பீத்திக் கொள்வதுதான் எரிச்சல் !!)

வடாம், பொரிச்ச அப்பளம், தேன்குழல், முறுக்கு - இதுல ஏதாவது ஒண்ண எடுத்து, வத்தக் குழம்புல தோச்சு தோச்சு சாப்பிடுவேன்.
பிஸ்கட், ரஸ்க், பிரெட் - வத்தக்  குழம்பை spread  பண்ணி சாப்பிடலாம்.

வாழை இலையில் சுடச்  சுட சாதம் போட்டுண்டு, பருப்பு, நெய் ஊத்தி பிசைஞ்சு சைடில கொஞ்சம் வத்தக் குழம்பு ஊத்தி தொட்டு தொட்டு சாப்பிட்டா ... ஆஹா...

அதே இலையில சாதம் போட்டு , நெய் அல்லது நல்ல எண்ணெய் விட்டு, வத்தக் குழம்பு ஊத்தி பெசஞ்சு, பொரிச்ச அரிசி அப்பளம் தொட்டுண்டு சாப்பிட்டா... "சொர்கம்" ....

அதே இலையில சாதம் போட்டு, கெட்டி தயிர் விட்டு பிசைஞ்சு , நடுவில குழிச்சு, குழம்பு ஊத்தி, கலந்து கலந்து சாப்பிட்டா பிரமாதமா இருக்கும். அந்த குழியிலே கீரை  மசியல் போட்டு, அதை குழித்து  வத்தக்  குழம்பு விட்டு கலந்து சாப்பிட்டால் இன்னும் ருசி.

அம்மா தயிர் சாதம் உருட்டி கையில் குடுக்க, நான் கட்டை விரலால் அதில் ஒரு குழி குழிக்க, அம்மா அதில் ஒரு ஸ்பூன்  வத்தக்  குழம்பு விட , அடா, அடா , அடா... அளவு தெறியாமல் சாப்பிடலாம். ஹும்ம்ம்ம்.... அதெல்லாம் ஒரு காலம்.

Tuesday, December 5, 2017

June 1st memories....

with all 3 children settled & away from me.. my pleasure now is recalling life with my children in their child hood days.
I talk - SK listens ( that is what i think !-- he listens !!)
when all three were in early school days... June 1st week is the most awaited period for them.
schools re-opening in june... a major, interesting shopping to be done.
1. School bag - 5 to 10 rs.
2. pensil box - 1 re.
3. leather shoes - 30 to 40 rs. - sockes - 3 rs. pair
4. canvas shoes for PT - 5 to -10 rs.
5. fountain pen 1 or 2 rs.
6. pencil - 25 ps. each - bought as 1 ozen
7. erasers / sharpeners / instrument box (5 rs.)
children சாமான்களின் அழகை பார்க்க, இவர் விலையை பார்க்க, நான் தரத்தை பார்க்க .....
எல்லோரும் ஒரு comromise க்கு வந்து, பேரம் பேசி, இவர் இன்னொரு கடை பார்க்கலாம் என்று கடைக்காரனுக்கு போக்கு காட்ட...
குழந்தைகள், அந்த சாமான் கை நழுவி விடுமோ என்ற உணர்வை முகத்தில் காட்ட..
கடைக்காரன் அதை கவனித்து, சாமர்த்தியமாக கொக்கி போட ....
when all purchases were finished...
கொஞ்சம் கோபம், கொஞ்சம் தாபம், கொஞ்சம் கண்ணில் நீர் முட்டுதல் ... அப்பாவுக்கும் குழந்தைகளுக்கும் நடுவில் நான் சமாதான தூதுவராக பேச்சு வார்த்தை, சமாதானம், some promises etc. etc.
With the purchase of cone ice cream (1 re.) , shopping ends happily.
next few days, covering the books, arranging the new things, daily morning take the new items out & compare between them....
அருமையான நாட்கள்.
ஒரு ஆறுதல்....
காலம் எவ்வளவு மாறினாலும்... இந்த குழந்தைகளின் போக்கும், உணர்ச்சிகளும், சிறிய சிறிய சந்தோஷங்களும், ஸ்கூலுக்காக புதிதாக வாங்கும் சாமான்களும் இன்னும் மாற வில்லை.
மாறவே இல்லை....
மைலாபூர், பாண்டி பஜார் போனால்... இந்த காட்சிகள் இப்பவும்.
நாடகம் அதே.. சீன்ஸ் அதே.. வசனம் அதே.. நடிப்பும் அதே... நடிகர்கள் மட்டும் வேறு ... !!!!

Tuesday, November 21, 2017

Fashion & VK

Fashion ன்னா என்னன்னே தெரியாம வளர்ந்தவ நான். காலேஜ் சேந்தப்புரம் ஒரே மலைப்பு city  பெண்களைப் பார்த்து. தெரியாதது மட்டுமில்லை.. நெறைய பிடிக்காது.. (வளர்ப்பு அப்படி).. கட்டுப்படி ஆகாது.. அதனால் அதைப்பத்தி யோசிச்சதே இல்லை.
காலேஜில் P.U.C யில் பாவாடை தாவணி, B.Sc. யிலிருந்து புடவை compulsory.

காலேஜ் வேலைக்குப் போனப்புறம், புடவை தலைப்பு, நீளும், குறையும், ஆனால் யாரும் பின்னு குத்தி பாக்க முடியாது. சல்வார் கமீஸ் போட யாருக்கும் அனுமதி இல்லை.
இந்த குட்டை தலைப்பை மட்டும் follow பண்ணினேன்.. எப்போ? அநேகமாக அந்த பேஷன் முடியிற தருவாயில். "ஹமேஷா தஸ் கதம் பீச்சே" அதாவது.. பத்தடி பின்னே..
80, 90 களில் ப்ளௌஸ் pattern மாற ஆரம்பித்தது. ஆனால் எனக்கு பயம்...
"நான் நீள கைக்கு போகையில், குட்டை கை தான் வந்தது...
குட்டை கை போகையில் (தையல் காரரை பிடித்து, அத்தனை கையையும் வெட்டி, தைத்து, அட்டகாசம் அடித்து) ..... பஃப் கை வந்தது.
இது சூட் ஆகுமா என்று, trial பாத்து, மாறும்போது, பேஷன் உம் மாறி விட்டது. அதுக்காக தூக்கிப் போட முடியுமா... எப்போதும் போல் அவுட் of பேஷன் தான்.

என்னோட டைலர் அதுக்கும் மேல. நான் ஏதாவது மாறுதல் சொன்னால் "கொஞ்சம் கை நீளத்தை குறை,நெக் back ஐ. கொஞ்சம் இறக்கு" ன்னு சொல்லிட்டு வந்தால், அதற்கு நேர் மாறாக, கொஞ்சம் நீள கை, கழுத்து வரை கழுத்து.. இப்படி "ஏன்" என்று கேட்டால், "அதெல்லாம் உங்களுக்கு வேண்டாம் மா" என்று, நான் என்னவோ சினிமாவில் சில்க் ஸ்மிதா மாதிரி act பண்ணப்போறேன். அதை தடுக்கணும் என்ற முடிவோட இருப்பான். யாரை எதிர்க்க முடியும் ? கோச்சுண்டா, அடுத்தது சாக்கை இரண்டு பக்கம் தையல் போட்டார் போல் இருக்கும்.

ஒரே ஒரு தடவை, சுமார் 6 வருஷத்துக்கு முன்ன, ஒரு துணி குடுத்து, படம் எல்லாம் வரஞ்சு, "தோளில் 3 சின்ன மடிப்பு; சின்ன பஃப்; குட்டை கை; கை விளிம்பில் கொஞ்சம் அகல பைப்பிங்" என்று சொல்லி குடுத்தேன். எனக்குள் மகா சந்தோஷம், முதல் முறை நானே பாஷனாக இருக்கப் போறேன் என்று.
அவனுக்கு புரியல்லே, தெரியல்லே ன்னா சொல்லி இருக்கலாம் இல்லையா? "அதெல்லாம் உங்களுக்கு சூட் ஆகாது" ன்னுட்டான். பேசாம வந்துட்டேன்.
இதில் கொடுமை என்னன்னா.. சரவணன்-மீனாக்ஷி யில் மீனாக்ஷி அதே மாதிரி போட்டுண்டு வரா!! எனக்கு எப்படி இருக்கும்? அநேகமாக, என் தையல் காரன் தான் நான் குடுத்த படத்தை வைத்து தைத்திருப்பான்.

சரி; இவனை ஒழித்துக் கட்டுவோம் என்று ஒரு லேடி , டிசைனுக்காக பரிசு எல்லாம் வாங்கியவள்; அவள் கிட்ட போனா, "கவலையை விடுங்கோ, நான் உங்களை அப்படியே மாத்திடறேன்" ன்னு வாக்கு கொடுத்துட்டு, ஒரு நல்ல பட்டுப் புடவை சட்டையை, தைத்துக் கொடுத்தாள். ஆசையாக போட்டா... சட்டைக்கு முதுகு பக்கம் துணியே காணும் !! 2 இன்ச் துணி கீழே.. தடிமனான கயிறு மேலே.. !!
இதை போடப் பிடிக்குமா? அப்படியே கிடந்தது... இதில் தையல் காரரை குற்றம் சொல்ல என்ன வேண்டி இருக்கு??
இப்போ அதே கலர்ல துணி வாங்கி, ஜரிகை மட்டும் கட் பண்ணி வைத்து, தைத்துக் கொண்டேன்.
எனக்கு freedom for dressing 1947 க்கு பதில் 1997 இல் கிடைத்தது. சல்வாரில் ஆரம்பித்தேன். அதிலும், குட்டை டாப், டைட் leggings இதெல்லாம் கிடையாது. அனார்கலி, அமராவதி, லைலா ஒன்றும் கிடையாது.
ஒரு வழியாக அதெல்லாம் பழகி, மூன்று பேரக் குழந்தைகளுக்கு பாட்டி ஆனப்புறம், "why not jeans & top" ன்னு யோசிக்கரச்சே... அதை செயல் படுத்தரதுக்குள்ள, உடம்புக்குக் கூட பிடிக்காமல், என்னை தடுப்பதற்காக, கண்டபடி குண்டாயிட்டேன்.
இப்ப, மரியாதையா, காட்டன் புடவை, கொஞ்சம் லூசாக தைத்த சட்டை (இன்றைய லூஸ் நாளைய டைட்) என்று போகிறது வாழ்க்கை.

Sunday, November 19, 2017

ஏமாந்தவ .......

என் நெத்தியில ஏமாந்தவ ன்னு எழுதி 'பச்சக்' ன்னு ஒட்டி இருக்கு போல இருக்கு.
வீடியோ டேப் வந்த புதுசு. சிங்கபூர்லேர்ந்து பிளேயர் வாங்கி வந்தாச்சு. ஒரு பையன் டேப் எடுத்துண்டு வருவான். "அம்மா, இந்த படத்துல கதை சூப்பர்; இதுல டைரக்ஷன் பிரமாதம்; இதுல பாட்டெல்லாம் ஓஹோ ..." இப்படி சொல்லியே மூணு சினிமா டேப் குடுப்பான். என் குழந்தைகள் வேண்டாம் என்று சொன்னாலும், அவர்களை நம்பாமல், அந்த பையனை நம்பி வாங்குவேன். இப்படி வாங்கித்தான் விசு, மனோரமா, எஸ்.வி.சேகர் படம் 'சிதம்பர ரகசியம்' - மனோரமா ஒரு குட்டை பாவாடையுடன் ... பார்த்து நொந்தோம். ஆனாலும் புத்தி வரவில்லை.
இதே போல் - ஸ்ரீலங்கா போன பொது ... ஒரு ஆயுர்வேத தைலங்கள் கடையில் அந்த கைட் நிறுத்த (கமிஷன், கமிஷன்) , அந்த கடை சேல்ஸ் பையன் நெத்தியில், தோளில், எண்ணெய் தடவி அமுக்கி விட... ஒரே ஆர்வக் கோளாறில், 10,000 Rs. பழுத்தது. சென்னை வந்து பிரித்து பார்த்தால் எல்லாம், நம்ம கேரளா சமாச்சாரங்கள். இதில், அதிக விலை கொடுத்தது சந்தன எண்ணைக்கு. மனதிற்குள் ஒரே கற்பனை - சந்தோஷம். தண்ணீரில் சொட்டு விட்டு குளித்தால் நாள் முழுவதும் வாசனை என்று. முதல் நாள் மிகப் பெருமையாக, கொஞ்சம் தாராளமாக விட்டு குளித்தால், உடம்பெல்லாம் ஒரே பிச்சுக்..பிச்சுக். ஒவ்வொரு பாட்டிலாக வேலைக்காரிக்கு குடுத்து (எப்படி யூஸ் பண்ணனும்னு கிளாஸ் வேற) , கடைசியாக, ஒரு மாதம் முன்பு, சந்தன எண்ணையும் கை மாறியது !!
இப்போதைய கதைக்கு வருவோம்.
டெட் ஸீ யில் குளித்து, அடி கருப்பு மண்ணை உடம்பு பூரா பூசிக்கொண்டு, அரை மணி காய்ந்து, குளித்து, ஏக சந்தோஷம் ! அந்த கைட், இந்த மண்ணை தினமும் பூசி குளித்தால், டாக்டர், ஆஸ்பத்திரி, மருந்து ஒன்றும் வேண்டாம். எங்கம்மாவுக்கு ஹார்ட் கோளாறு, மனைவிக்கு மூட்டு வலி, குழந்தைகளின் ஜலதோஷம், இருமல் எல்லாத்துக்கும் ஒரே வைத்தியம் இதுதான் என்று ரீல் சுத்த, நாங்கள் அப்படியே வேத வாக்காக நம்பி... அவன் "இங்கே எல்லாம் வாங்காதீங்க; நான் நல்ல கடைக்கு கூட்டிண்டு போகிறேன்" என்று சொல்லி (கமிஷன், கமிஷன்) ஒரு கடையில் கொண்டு விட்டான்.
அங்கே சால்ட்... வித விதமான கலர், வாசனையுடன். "தோல் வியாதி எல்லாம் பறந்து விடும். காலை வெந்நீரில் சால்ட் போட்டு பத்து நிமிஷம் உக்காந்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்" என்று மானாவாரியாக கடைக்காரன் பேச (ஒரு பெரிய கடை முழுதும் 'டெட் ஸீ ப்ராடக்ட்ஸ்' ... இது மாதிரி நூற்றுக்கணக்கான கடைகள். நிஜமாக அதிலிருந்து எடுக்கப் பட்டிருந்தால், ஸீ வற்றி, காய்ந்து, மணல் கூட இல்லாமல், பாறையாக இருந்திருக்கும் !!) . இதை தவிர 'குழ, குழ' கருப்பு மண்.
சிகப்பழகு க்ரீமிலிருந்து , என்னென்னவோ. உடனே எங்களுக்கு, நுரையீரல் பாதிப்பால் ௦௦ அவதிப்படும் ஒன்று விட்ட அண்ணா, தோல் வியாதியால் தவிக்கும் இரண்டு விட்ட அக்கா, மூட்டு வலி ஆரம்பித்துள்ள எங்கள் மகள், ஸ்கின் அலர்ஜி உள்ள பேத்தி .. என்று உறவுகள் மனதில் வரிசை கட்டி நிற்க, எங்களை யோசிக்க விடாமல் கடைக்காரன், "ஒன்று வாங்கினால் ஒன்று ப்ரீ ; மூன்று வாங்கினால், இரண்டு ப்ரீ" என்று மூளை சலவை செய்ய, "சரி, கஞ்சத்தனம் பார்க்காமல் வாங்கிப் போடுவோம்; இனிமே யாரு இவ்வளவு தூரம் வரப்போறா" ன்னு சகட்டுமேனிக்கு வாங்கித்தள்ளி, பொட்டி கனமாகிப்போக- வந்து சேர்ந்தோம். "தினமும் காலை வெந்நீரில் வைக்கணும் - டி.வி. பார்க்கும்போது. joints ல எல்லாம் கருப்பு மண் பூசி குளிக்கணும்" என்று ஏக டிஸ்கஷன்.
திரும்பி வந்து அஞ்சு நாள் ஆச்சு. இரண்டு பெரும் அசடு வழிகிறோம். பெண் விழுந்து விழுந்து சிரிக்கிறாள். அப்படி இருக்க, யாருக்கு குடுப்பது. எங்களுக்கும் பொறுமை இல்லை. இப்போதுதான் ஞானோதயம். "இந்த பாக்கட் தீர்ந்துதுன்னா , அப்புறம் எப்படி வாங்கறது?" ன்னு. ஹும்ம்ம்ம்......
"பட்டா தெரியும் பாப்பானுக்கு" என்று பழ மொழி.
"பட்டாக் கூட தெரியாது இந்த வசந்தா பாப்பாத்திக்கு " என்பது புது மொழி.

Monday, November 13, 2017

நாடகம்........

பழைய நாள் ல ரேடியோவில Sunday afternoon நாடகம் உண்டு. ஒரு ரேடியோ வை சுத்தி whole family உக்காந்து கேப்போம். நன்னா இருக்கும்.
கல்யாணம் ஆனதும் பெரிய சந்தோஷம் , இவர் கிட்ட இருந்த Mylapore Fine Arts membership தான். 2 டிக்கெட். அதை தவிர வாணி மஹாலில், இரண்டு - வீட்டில் போட்டி இல்லாமல் இருக்க.
67 களில் பாலச்சந்தர், சோ, மேஜர் சுந்தரராஜன், சேஷாத்ரி, மனோகர் ... இவர்கள் நாடகமெல்லாம் ரொம்ப நன்னா இருக்கும். ஆனால் முக்கால் வாசி சீரியஸ். Cho உடையது மட்டும் political satire.
ஞான ஒளி, நீர்க்குமிழி, சோ வின் மனம் ஒரு குரங்கு, இன்னும் பல படமாக்கப் பட்டன. மெரினாவின் கதைகள், பூரணம் விஸ்வநாதன், YGP, எல்லாம் சூப்பரா இருக்கும். சோ வின் "மனம் ஒரு குரங்கு", "மொஹமத் பின் துக்ளக்" எல்லாம் படமாகி இருக்கு.
ஸ்கூட்டரில் நுங்கம் பாக்கத்திலிருந்து , சனிக்கிழமை மாலை கிளம்பி, drive in இல் டிபன் சாப்பிட்டு, வாசலில் அடர்த்தியாக கட்டி விற்கும் மல்லிகைப்பூ வாங்கி தலை நிறைய வெச்சுண்டு... (சந்தோஷமான நாட்கள்).
ஒரு YGP நாடகத்தில் , (YGM சின்ன பையன்), YGP , கூப்பிட்டு, "என் பையன் ரொம்ப நன்னா சஹஸ்ர நாமம் சொல்லுவான்" என்று வந்தவரிடம் அலட்டி விட்டு, YGM ஐ "கண்ணா, எங்கே, சஹஸ்ர சொல்லு" ம்பார். YGM கணீரென்று, "சஹஸ்ர நாமம்" என்று சொல்லுவான். மெரீனாவின் தனிக்குடித்தனம் எல்லாம் இன்றைக்கும் பார்த்து சிரிக்கலாம்.
அப்புறம் வந்தவர்கள், மௌலி, எஸ்.வீ.சேகர், பிறகு கிரேசி மோகன், காத்தாடி ... எல்லாம் காமெடி. டெல்லி கணேஷும் , T.V.Varadarajanum (வித் மெசேஜ்)
Mylapore Fine arts ராசி என்று எல்லா நாடகமும் அங்கே அரங்கேறும்.
80 மேல் நாரத கான சபா. ... இன்று வரை.
எல்லா ட்ராமாவுக்கும் போவேன். டிராமா ஆரம்பிக்கும் வரை ப்ரெஷ் ஆ இருப்பேன். அந்த ஹாலின் comfort & AC சேந்து, டிராமா ஆரம்பித்த 5 நிமிஷத்தில் தூங்கி போயிடுவேன். இவரும் எழுப்பி எழுப்பி பாத்து, இதற்குமேல் இவளை சீண்டினால். கொத்தி விடுவாள் என்று, விட்டு விட்டார்.
ஆனால், நடுவில் இன்டர்வெல் மணி அடித்ததும், போய் chips வாங்கிண்டு வந்து கொடுப்பார். அப்போது அதுவரை (!) நடந்த கதையை கேட்டுப்பேன்.
சிப்ஸ் ஒவ்வொண்ணா, சத்தமில்லாமல் சாப்பிடுவேன். பாக்கெட் காலி ஆனதும், என்னை அறியாமல் தூங்கி விடுவேன்.
டிராமா முடிந்ததும், சத்தத்தில் முழித்து, "என்ன ஆச்சு" ன்னு பாக்கி கதையை கேட்டால், இவர் கடுப்பை அடக்கிக் கொண்டு, சொல்லுவார். இதுவும் இன்று வரை தொடர்கிறது.
அதனால் தானோ என்னமோ, இப்போதெல்லாம் டிராமா, இடைவெளி இல்லாமல் 2 மணி நேரத்தில் முடித்து விடுகிறார்கள் !!
S.V.Shekhar, Kaatthaadi, Crazy Mohan, இவங்க டிராமாவில் எல்லாம் தூங்க முடியாமல் சிரிப்புத் தோரணங்கள் !!
அதிலும் சேகர் டிராமாவில், அன்றைய நிகழ்ச்சிகள், அரசியல் எல்லாம் நுழைத்து on the spot comment அடிக்க, கூட நடிப்பவர்கள் சட்டென்று re-act பண்ண முடியாமல், அவர்களும் சேர்ந்து சிரிப்பார்கள். அதை பார்த்தே நமக்கும் சிரிப்பு வரும்.
T.V. ல கூட, பொதிகை மட்டும் இருக்கும்போது, every Tuesday 7-8 PM டிராமா உண்டு. என் பெண் ஸ்கூலில் படித்தாலும், அதை என்னுடன் சேர்ந்து பார்க்க அனுமதி உண்டு !!
LikeShow 

Monday, October 30, 2017

cooking tips - 1

காலையில், முதல் காரியமாக, காப்பி கலந்து, ஆற்றி, நுரையுடன், எல்லார்க்கும் முன்னாடி, (husband எழுந்துட்டா கூட குடுக்க கூடாது), பதட்ட படாம, சாப்பிட்டு, வேலையை ஆரம்பிக்கவும் !!!!!
1. சேப்பங்கிழங்கை முதல் நாளே 3/4 பாகம் வேக வைத்து (குக்கர் இல் அல்ல), உரித்து, கட் பண்ணி fridge இல் வைத்து, மறு நாள், அதில் உப்பு, பெருங்காயம், சாம்பார் பவுடர், மஞ்சள் போடி கலந்து, பிசிறி, கொஞ்ச நேரம் வைத்து, தாளித்த பின், போட்டு கலந்து, சில நிமிடங்களுக்கு அப்புறம், transfer to a shallow non-stick frying pan... spread... ஒத்தை ஒத்தையாக..சிம் இல் வைத்து, அப்படியே விட்டு விட்டால், கொஞ்ச நேரத்தில் crisp கரி தயார்.
வாழை, உருளை,சேனை இதை எல்லாம் கூட தளித்த பின் transfer to a shallow non-stick frying pan... spread...
2. பருப்பு உசிலிக்கு முதல் நாளே அரைத்து, இட்லி தட்டில் ஊற்றி, வெட்டில் வைத்து, எடுத்து, fridge இல் வைத்து, மறு நாள் உதிர்த்து உசித்தால், என்னை அதிகம் இல்லாமல், உசிலிக்கலாம்.
3 . சாம்பாருக்கு அரைக்க வறுக்கும்போது, ரொம்ப வறுக்காமல், 75 % வறுத்தால் போதும் வாசனையாக இருக்கும்
4 . இட்லி க்கு வெங்காய சாம்பார் செய்யும்போது, அரைப்பதற்கு, தனியா, பொட்டுக்கடலை (கடலை பருப்புக்கு பதில்), வெங்காயம், தேங்காய் - பச்சையாக (வறுக்காமல்) அரைத்து, கடுகு, வெந்தயம், மி.வற்றல் தாளித்து, சின்ன வெங்காயம் வதக்கி புளி குறைவாக விட்டு, ஒரு தக்காளி கட் பண்ணி போட்டு, வெந்த காரட் ஒன்று போட்டு (நறுக்கி தாங்க..!!!), சாம்பார் பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து, ரொம்ப நேரம் கொதிக்க விடாமல், பருப்பு, அரைத்த விழுது சேர்த்து, கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
5 . பருப்பு போடும்போது, வெந்த பருப்பை மிக்ஸ் யில் ஒரு சுற்று அரைத்து விடுவேன். ரசம், சாம்பாரில், முழித்து பார்க்காமல் இருக்கும்.
6 . ஊத்தப்பத்துக்கு , பச்சை அரிசி ஒரு கப், புழுங்கல் அரிசி ஒரு கப் ஊற வைத்து, துவரம் பருப்பு 3 / 4 கப், வெந்தயம் ஒரு ஸ்பூன் சேர்த்து ஊறவைத்து, தனி தனி ஆக, அரைத்து, (பருப்பு, வெந்தயம் கொட கொட ன்னு அரைக்கணும்) , உப்பு சேர்த்து, கலந்து, கொஞ்சம் அதிகமாக புளிக்க வைத்து, சின்ன தாக வெட்டிய தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை , துருவிய காரட் எல்லாம் தனி தனியாக வைத்துக்கொண்டு, கல்லில் கெட்டியாக தோசை ஊற்றி, veg தூவி, சிம் இல் வைத்து, எக்ஸ்ட்ரா எண்ணெய் ஊற்றி, திருப்பி போட்டு, நன்றாக வேக வைத்து, கொத்த மல்லி சட்னி உடன் சாப்பிடவும். (சரஸ்வதி, கரென்ட் போவற்கு முன்னாள் சட்னி அரைக்கவும் !!)
7 . சப்பாத்திக்கு செய்த கரி, salad ஏதாவது மிஞ்சினால், கவலை வேண்டாம். மிக்ஸ் இல் அரைத்து, stuffed பராத்தா செய்யலாம்
இதை எல்லாம் படித்து, முத்து லக்ஷ்மி மாதிரி "அதான் எனக்கு தெரியுமே, அதான் எனக்கு தெரியுமே" என்று சொல்கிறவர்கள், "அதாங்க எனக்கு தெரியாது" என்கிறமாதிரி ஏதாவது எழுதலாம். !!!!!