Sunday, November 19, 2017

ஏமாந்தவ .......

என் நெத்தியில ஏமாந்தவ ன்னு எழுதி 'பச்சக்' ன்னு ஒட்டி இருக்கு போல இருக்கு.
வீடியோ டேப் வந்த புதுசு. சிங்கபூர்லேர்ந்து பிளேயர் வாங்கி வந்தாச்சு. ஒரு பையன் டேப் எடுத்துண்டு வருவான். "அம்மா, இந்த படத்துல கதை சூப்பர்; இதுல டைரக்ஷன் பிரமாதம்; இதுல பாட்டெல்லாம் ஓஹோ ..." இப்படி சொல்லியே மூணு சினிமா டேப் குடுப்பான். என் குழந்தைகள் வேண்டாம் என்று சொன்னாலும், அவர்களை நம்பாமல், அந்த பையனை நம்பி வாங்குவேன். இப்படி வாங்கித்தான் விசு, மனோரமா, எஸ்.வி.சேகர் படம் 'சிதம்பர ரகசியம்' - மனோரமா ஒரு குட்டை பாவாடையுடன் ... பார்த்து நொந்தோம். ஆனாலும் புத்தி வரவில்லை.
இதே போல் - ஸ்ரீலங்கா போன பொது ... ஒரு ஆயுர்வேத தைலங்கள் கடையில் அந்த கைட் நிறுத்த (கமிஷன், கமிஷன்) , அந்த கடை சேல்ஸ் பையன் நெத்தியில், தோளில், எண்ணெய் தடவி அமுக்கி விட... ஒரே ஆர்வக் கோளாறில், 10,000 Rs. பழுத்தது. சென்னை வந்து பிரித்து பார்த்தால் எல்லாம், நம்ம கேரளா சமாச்சாரங்கள். இதில், அதிக விலை கொடுத்தது சந்தன எண்ணைக்கு. மனதிற்குள் ஒரே கற்பனை - சந்தோஷம். தண்ணீரில் சொட்டு விட்டு குளித்தால் நாள் முழுவதும் வாசனை என்று. முதல் நாள் மிகப் பெருமையாக, கொஞ்சம் தாராளமாக விட்டு குளித்தால், உடம்பெல்லாம் ஒரே பிச்சுக்..பிச்சுக். ஒவ்வொரு பாட்டிலாக வேலைக்காரிக்கு குடுத்து (எப்படி யூஸ் பண்ணனும்னு கிளாஸ் வேற) , கடைசியாக, ஒரு மாதம் முன்பு, சந்தன எண்ணையும் கை மாறியது !!
இப்போதைய கதைக்கு வருவோம்.
டெட் ஸீ யில் குளித்து, அடி கருப்பு மண்ணை உடம்பு பூரா பூசிக்கொண்டு, அரை மணி காய்ந்து, குளித்து, ஏக சந்தோஷம் ! அந்த கைட், இந்த மண்ணை தினமும் பூசி குளித்தால், டாக்டர், ஆஸ்பத்திரி, மருந்து ஒன்றும் வேண்டாம். எங்கம்மாவுக்கு ஹார்ட் கோளாறு, மனைவிக்கு மூட்டு வலி, குழந்தைகளின் ஜலதோஷம், இருமல் எல்லாத்துக்கும் ஒரே வைத்தியம் இதுதான் என்று ரீல் சுத்த, நாங்கள் அப்படியே வேத வாக்காக நம்பி... அவன் "இங்கே எல்லாம் வாங்காதீங்க; நான் நல்ல கடைக்கு கூட்டிண்டு போகிறேன்" என்று சொல்லி (கமிஷன், கமிஷன்) ஒரு கடையில் கொண்டு விட்டான்.
அங்கே சால்ட்... வித விதமான கலர், வாசனையுடன். "தோல் வியாதி எல்லாம் பறந்து விடும். காலை வெந்நீரில் சால்ட் போட்டு பத்து நிமிஷம் உக்காந்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்" என்று மானாவாரியாக கடைக்காரன் பேச (ஒரு பெரிய கடை முழுதும் 'டெட் ஸீ ப்ராடக்ட்ஸ்' ... இது மாதிரி நூற்றுக்கணக்கான கடைகள். நிஜமாக அதிலிருந்து எடுக்கப் பட்டிருந்தால், ஸீ வற்றி, காய்ந்து, மணல் கூட இல்லாமல், பாறையாக இருந்திருக்கும் !!) . இதை தவிர 'குழ, குழ' கருப்பு மண்.
சிகப்பழகு க்ரீமிலிருந்து , என்னென்னவோ. உடனே எங்களுக்கு, நுரையீரல் பாதிப்பால் ௦௦ அவதிப்படும் ஒன்று விட்ட அண்ணா, தோல் வியாதியால் தவிக்கும் இரண்டு விட்ட அக்கா, மூட்டு வலி ஆரம்பித்துள்ள எங்கள் மகள், ஸ்கின் அலர்ஜி உள்ள பேத்தி .. என்று உறவுகள் மனதில் வரிசை கட்டி நிற்க, எங்களை யோசிக்க விடாமல் கடைக்காரன், "ஒன்று வாங்கினால் ஒன்று ப்ரீ ; மூன்று வாங்கினால், இரண்டு ப்ரீ" என்று மூளை சலவை செய்ய, "சரி, கஞ்சத்தனம் பார்க்காமல் வாங்கிப் போடுவோம்; இனிமே யாரு இவ்வளவு தூரம் வரப்போறா" ன்னு சகட்டுமேனிக்கு வாங்கித்தள்ளி, பொட்டி கனமாகிப்போக- வந்து சேர்ந்தோம். "தினமும் காலை வெந்நீரில் வைக்கணும் - டி.வி. பார்க்கும்போது. joints ல எல்லாம் கருப்பு மண் பூசி குளிக்கணும்" என்று ஏக டிஸ்கஷன்.
திரும்பி வந்து அஞ்சு நாள் ஆச்சு. இரண்டு பெரும் அசடு வழிகிறோம். பெண் விழுந்து விழுந்து சிரிக்கிறாள். அப்படி இருக்க, யாருக்கு குடுப்பது. எங்களுக்கும் பொறுமை இல்லை. இப்போதுதான் ஞானோதயம். "இந்த பாக்கட் தீர்ந்துதுன்னா , அப்புறம் எப்படி வாங்கறது?" ன்னு. ஹும்ம்ம்ம்......
"பட்டா தெரியும் பாப்பானுக்கு" என்று பழ மொழி.
"பட்டாக் கூட தெரியாது இந்த வசந்தா பாப்பாத்திக்கு " என்பது புது மொழி.

No comments:

Post a Comment