Wednesday, July 22, 2020

அம்மாவும் தோட்டமும்.....

அம்மாவும் தோட்டமும்.....
தஞ்சாவூரில் , நான் பிறந்த வீட்டில், கொல்லை பக்கம் தோட்டம் போட இடம் உண்டு. அதில் அம்மா நிறைய வாழை மரம் வளர்த்திருந்தாள் . எவ்வளவு வாழை தார்..! நான் சுமார் 6 வயது வரைதான் அந்த வீட்டில் இருந்தேன். ஆனாலும், வாழைப் பழத்தை பழுக்க வைத்து, அம்மா குடுத்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. திடீரென்று வீட்டுக்காரன் அந்த வீட்டை காலி பண்ண சொல்ல, அப்பாக்கு ரொம்ப கோபம் வந்து, காலி பண்ணும் முன் அந்த மரங்களை எல்லாம் வெட்டிப் போட்டார். !!
அதற்குப் பிறகு, கீழலங்கத்தில் ஒரு தனி வீடு. வீட்டின் சைடில் தோட்டம் போட ஒரு பெரிய இடம். அதில் அம்மா, சில கறிகாய்கள் - வெண்டை, கத்திரிக்காய், பூசணி, பரங்கி, அவரை, புடலை பந்தல்கள் எல்லாம் போட்டிருந்தாள்..அம்மாக்கு தோட்ட இன்டெரெஸ்ட் அதிகம் இருந்தது. புடலை பிஞ்சு வந்ததும், அதன் நுனியில் கல் கட்டி வைப்பாள் - நீண்டு வளர.
பூச் செடிகள் நிறைய. முக்கியமாக கனகாம்பரம், டிசம்பர் பூக்கள் - கலர் கலராக. நிறைய பூக்கும். தினமும் பூக்களை பறித்து, தொடுப்பது அவ்வளவு சுவாரசியம். பூ மிஞ்சிப்போய் அக்கம் பக்கம் முதலில் இலவசமாக, போகப் போக விலைக்கு.... ஓரணாவுக்கு அவ்வளவு பூ கொடுப்பாள்.
அந்த தோட்டத்தின் நடுவில் சென்ட் ரோஜா என்று ஒரு செடி. அடர்த்தியாக இருக்கும். வெள்ளை பூக்கள் கொத்து கொத்தாக பூக்கும். ரொம்ப வாசனை. ஆனால் தலையில் வைத்துக் கொள்ள முடியாது.
அந்த வாசனைக்கு பாம்பு வந்தது.
ஒரு நாள் , நடுக் கூடத்திலிருந்து, சமையல் ரூமிற்கு போகும் இடத்தில் , கதவு நிலைக்கு மேல் ஒரு பெரி ........ ய பாம்பு , ஹாயாக படுத்துக்க கொண்டிருக்க, அதை முதலில் பார்த்தது என் பெரிய அக்கா. அக்கம் பக்கம் எல்லோரும் வந்து, அந்த பாம்பை கிளப்பி, அடித்துக் கொன்றார்கள். ஆனால் எனக்கு பாம்பை பார்த்தாலே ரொம்ப பயம்... யாருக்குத்தான் இருக்காது. பின்னால் தள்ளி நின்று கொண்டிருந்த எனக்கு, அந்த கும்பலில், பாம்பு சரியாக தெரிய வில்லை. எங்கள் வீட்டு பாம்பை நானே சரியாக பார்க்கமுடியவில்லை.
இப்போது போல், அப்போது செல் போன் இருந்திருந்தால் போட்டோவாவது எடுத்திருக்கலாம் !!!
அன்றைக்கே அந்த சென்ட் ரோஸ் செடியை அம்மா வேருடன் வெட்டிப் போட்டாள் .
ஹும்ம்ம் ... அதல்லாம் இனிமையான நினைவுகள்.

Friday, July 17, 2020

அம்மாவின் சாந்து.....

அம்மாவின் சாந்து.....
நெற்றிக்கு இட்டுக் கொள்ள , கருப்பு சாந்து, அம்மாவே ஆத்தில் பண்ணுவாள் .
சாந்து பண்ண, அரிசி மாவு; அதற்கு ஒரு "ஷைன்" கொடுக்க ஜவ்வரிசி மாவு.
ஜவ்வரிசியை ஏந்திரத்தில் மாவாக்கி, அரிசி மாவுடன் கலப்பாள்.
அந்த மாவை வெறும் இரும்பு இலுப்பச் சட்டியில் போட்டு, கிளறிக்கொண்டே இருந்தால், மாவு கறுப்பாகிவிடும் .
நன்றாக கறுப்பானவுடன், அதில் தண்ணீர் சேர்த்து கிளறுவாள்.
பதமாக, சாஃப்டாக வந்துவிடும்
அதை சாந்து கொட்டாங்கச்சியில் எடுத்து வைத்தால் காய்ந்துவிடும் .
நெற்றிக்கு இட்டுக் கொள்ளும்போது, நடுவில் சொட்டு தண்ணீர் விட்டு , சுட்டு விரலால் குழைத்து , இட்டுக் கொள்ள வேண்டும். அதை வட்டமாகவோ, திலகமாகவோ இடுவது ஒரு கலை !!
குழந்தைகளுக்கு இடும்போது, அம்மா வாயில் நாக்கை துருத்தி ஒரு சத்தம் ... குழந்தை கவனத்தை ஈர்க்க. கேட்டிருக்கிறீர்களா அந்த சத்தத்தை ?

அம்மா கூட்டிய கண் மை ....

அம்மா கூட்டிய கண் மை ....

நாங்க எல்லாம் சிறுமிகளாக இருந்த போது , கடையில கண் மை வாங்கியதே இல்லை. ஆத்தில் அம்மாதான் கூட்டுவாள்.
மூன்று செங்கல் வைத்து, அடுப்பு பண்ணி, ஒரு பெரிய மண் அகலில் நிறைய விளக்கெண்ணெய் விடுவாள்.
வேஷ்டி துணி எடுத்து , தோய்த்து போட்டு, அதில் கெட்டியாக , பெரிய திரி சுற்றுவாள்.
அந்த திரியை அகலில் போட்டு, ஏற்றுவாள்.
மார்க்கெட்டிலிருந்து, புது மண் தட்டு வாங்கி வருவாள்.
அந்த தட்டின் அடி பாகத்தில் விளக்கெண்ணெய் ஒரு கோட் பூசி விட்டு, அதை செங்கல் மேல் விளக்கின் சுடர் படும்படி வைத்து , மொத்தத்தையும் ஒரு புது கூடையால் மூடி விடுவாள்.
காலையில் பார்த்தால் , அந்த மண் மண் தட்டின் அடியில் கருப்பாக தூள் படிந்திருக்கும். அதை, ஒரு புது குச்சியால் ஒரு பேப்பரில் தள்ளி மடித்து வைத்து விடுவாள்.
அதில் கொஞ்சம் போடி எடுத்து , விளக்கெண்ணெய் துளித் துளியாக விட்டு, மையாக குழைத்து மை கூட்டில் அடைத்து வைத்து விடுவாள். மை ரொம்ப கருமையாக இருக்கும்.
எங்களுக்கெல்லாம் கல்யாணத்தின் போது கூட வெள்ளியில் இந்த மைக் கூடு சீராக உண்டு.

படம் கிடைக்கவில்லை. 

காலத்தால் மாறிய என் விளையாட்டுக்கள் .......


சிறு வயதில்
பாண்டி, சடு குடு, கண்ணா மூச்சி, கல்லாமண்ணா.....

பிறகு
பல்லாங்குழி, பரம பதம், தாயம், சோழி, புளியங்கொட்டை, ஏழு கல் ... இத்யாதி

குழந்தைகளுடன்
carom , cards, monopoly, scrabble, chess etc.

இப்போது...
தனிமையில்
solitaire in Computer.....


என் வீடு ......



  
என் வீடு ......

பெரிய தோட்டம்
அதன் நடுவில் அழகிய சிறியவீடு
வெளியில் கிராதிக் கதவு
வாசலில் அகன்ற திண்ணை
தென்னை, மா, நிழலுக்குவேப்ப மரம்
மா மரத்தைச்  சுற்றி மட்டும் ஒரு மேடை
செம்பருத்தி, முல்லை, வாசனைக்கு மகிழம் பூ
முல்லை படர மட்டும் ஒரு பந்தல்
ஓடி விளையாட மான் , பார்த்து ரசிக்க மயில்
சென்னெல் பொறுக்க புறா, குருவி,
மாமரத்தில் கிளி, குயில்

இது நிஜமல்ல; கனவு....
 --------------------------------------
அடுக்கு மாடி குடிஇருப்பு
மூன்றாவது மாடியில் வாசம்
இரண்டு அறை கொண்ட வீடு
ஒரு கூடம்... ஒருசமையல் அறை
உட்கார்ந்து படிக்க மெத்தையிட்ட நாற்காலிகள்
வெயில் காணாதவெராண்டா
துளசி கூட வாடும் அந்த நிழலில்
பச்சை பசுமை ஏதுமில்லாத
இரும்புகம்பியிட்ட சிறை
 



முடிவில்லாமகிழ்ச்சி, முடிந்து போன கால கட்டம் ......


கம்ப்யூட்டர் திரையை மைதானமாக்கி
எலியை விளையாட்டுத் தோழனாக்கி
கீ போர்டேபந்தாகவும், சிப்ஸ் ஏ தீனியாகவும்
விளையாடும் சிறுவர்களுக்குத்தெரியுமா
 எட்டிப்பறிக்கும் மாங்காயின் ருசி
 
பொறுக்கி எடுத்துச்சேர்க்கும் பவழ மல்லி வாசனை
ஓடை நீரின் சில்லிப்பு
 
சாட் பூட் த்ரீயின் தாள நயம்
 
பச்சைக் குதிரை தாண்டும் லாவகம்
 
துடைத்து தள்ளும்முழங்கால் சிராய்ப்பு
 சண்டையிட்ட பின் சேரும்மகிழ்ச்சி
 வீட்டுக்குள் புத்தகப்  பையை வீசி
 
வெளியே ஓடும் கால்களின்வேகம்
 காக்காய் கடி கடித்துக்கொடுக்கும்
கமர்கட்டின் அழியாருசி
கூட்டாஞ்சோறு ஆக்கும்
குழந்தைகளின் உணர்ச்சி
 கண்ணா மூச்சிஆட்டத்தில் மாட்டும்
நண்பனின் சிணுங்கல் குரல்
 பாண்டி ஆட்டத்தில் கண்மூடி தாண்டும்
சிறுமியின் தவிப்பு .....
முடிவில்லாமகிழ்ச்சி
முடிந்து போன கால கட்டம் !!!



என் காரெக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்களே.............


"என் காரெக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்களே"
ஸ்டேஷன்ல ஒரே ஒரு சூட் கேசை ரோல் பண்ணி தள்ளிண்டு போனா, போர்ட்டர், "பாட்டிம்மா, வயசாவுதுல்ல; அத்த என்னாண்ட குட்த்துட்டு நீ போய்கினே இரு. நான் இஸ்தாறேன். நீ இன்னாத்துக்கு ரோதன படறே ? " ங்கறான். நான் எப்படி அவனுக்கு காமிக்கறது,. எனக்கு இளமை இன்னும் பாக்கி இருக்குன்னு. மனசு "ஹாயா, கை  வீசிண்டு நடக்கலாமே" ன்னு சொன்னாலும், SK கொஞ்சம் shameஆகி , எங்கிட்ட குடு ன்னு கேட்டாலும், (அதுக்கு வேற போர்டர் "ஏ பெரிசு. கம்முன்னு வா. நான் ரெண்டு துட்டு சம்பாரிக்கிறதை இஷ்பாயில் பண்ணாதே" ன்னு கமென்ட் ), நான் வீரமா, சூட் கேசை இழுத்துண்டு , ராஜ நடை போட்டு, புக்ஸ் வாங்கலாம்னு, ஒரு புக் வண்டிகிட்ட நின்னேன். 
நான் புக் வாங்கிட்டு, காசு குடுத்துத்துட்டு, புக்கையும் எடுத்துக்காம, சூட் கேசையும் விட்டுட்டு, நடந்துடுவேன் ன்னு என்னை நன்னா புரிஞ்சிண்டிருக்கிற SK மொதல்ல, சூட் கேசை "லபக்" ன்னு புடிங்கிண்டார். 
அதுதான் போட்டும்னா, புக் கடையில போய்,  "ரிபோர்டர் இருக்கா, குங்குமம் இருக்கா, ஜூனியர் விகடன் இருக்கா (நான் எப்பத்தான் அக்கப்போர் எல்லாம் படிக்கிறது) ன்னு பாத்திண்டிருந்தா, அந்த கடைக் காரன்,
"மாமி, இந்தாங்க "ஷக்தி விகடன், பக்தி மாலை, ஆன்மிகம்" இன்ன பிற புக்ஸா தரான். எனக்கு அதெல்லாம் வேண்டாம்னு, அக்கப்போர் புக் எடுத்தா, என்ன ஒரு மாதிரியா பாத்து, "ஹும்.. கலிகாலம் " ன்னு மனதில அவன் நெனக்கிறது, அவன் மூஞ்சில அப்பட்டமா தெரியறது... 
இப்படியாக என் பயணம் இனிதே துவங்கியது.
ரயிலுக்கேல்லாம் சாப்பாடு கட்டிண்டு போக எனக்கு பிடிக்காது. கெடக்கிறத சாப்டுண்டு போவேன். 
என்னோட வர friends (அவாளோட தான் நான் போறேன் !!), வேற கம்பார்ட் மென்டில இருக்கிறவா,   கோயம்புத்தூரில்,    எனக்கு வந்து, வீட்டிலேர்ந்து கட்டிண்டு வந்த சாப்பாட்டு பொட்டலம் - ச்சே ச்சே .. பாக்ஸ் குடுத்தா. நன்னாதான் இருந்துது, இட்லியும் தயிர் சாதமும்   - ஆனா "யசான காலத்தில ரயில் சாப்பாடெல்லாம் ஒத்துக்காது. ஜில்லுன்னு தயிர் சாதம் சாப்பிடுங்கோ " ங்கற கமென்ட், மத்த பிரயாணிகளுக்கு மத்தில.. அதான் கொஞ்சம் என்னமோ மாதிரி !!