Thursday, June 25, 2020

ஜாடிக்கேத்த மூடி ......


வெங்காய சாம்பார் + உருளை ரோஸ்ட்
தேங்காய் துவையல் + பொடலங்காய் ப.பருப்பு கூட்டு.
மைசூர் ரசம் + பொறித்த அப்பளம் + அவியல்
மோர் குழம்பு + பருப்பு உசிலி
வத்தக்குழம்பு + கீரை மசியல் + சுட்ட அப்பளம்
மிளகு சீரக ரசம் + வாழக்காய் கரி
ஜவ்வரிசி கஞ்சி, மோருடன் + நார்த்தங்காய் ஊறுகாய்
தேங்காய் சாதம் + அவியல்
புளியஞ்சாதம் + சிப்ஸ்
எலுமிச்சை சாதம் + உருளை ரோஸ்ட்
தொண்டங்காய் சாதம் + பச்சடி
தயிர் சாதம் + மாவடு (எனக்கு தயிர் சாதத்துடன் மாம்பழம் சாப்பிட ரொம்ப பிடிக்கும் )
அடை + வெண்ணை + வெல்லம்
இட்லி + தேங்காய் சட்னி
வெந்தயம் போட்ட தோசை + சுட்ட கத்திரிக்காய் பச்சை துகையல்
கல் தோசை + மிளகாய் பொடி + வறுத்து அரைத்த கத்திரிக்காய் துவையல்
அரிசி உப்புமா + சுட்ட கத்திரிக்காய் பச்சை புளி கொத்சு அல்லது தேங்காய் துகையல்
ரவா உப்புமா + சர்க்கரை + எலுமிச்சை ஊறுகாய்
வெண் பொங்கல் + கொத்சு
காஞ்சீவரம் இட்லி + கொப்பரை தேங்காய், மிளகாய் பொடி (எண்ணெய் விட்டுக்காமல் தொட்டுக்கணும்)
இன்னும் என்னென்ன ? புது காம்பினேஷன் சொல்லுங்களேன் !!

எனக்குப் பிடித்தவை.....

"யூத்" படத்தில் "சர்க்கரை நிலவே வெண்ணிலவே ......" பாட்டில்
"அட உனக்கும் எனக்கும் எல்லாம் பிடிக்க என்னை ஏன் பிடிக்காதென்றாய்..."
இந்த வரிகள் பாடும்போது, விஜய் face இல் தெரியும் கோபம், எரிச்சல், கடுப்பு, லவ், இயலாமை ... பிடிக்கும்.
கல்யாண பரிஸில் ஜெமினி ஒரு தொட்டி செடிக்கு நீர் ஊற்ற, அது வளர்வதும், சரோஜா தேவி , அக்காவை கல்யாணம் பண்ண சொல்லி கேட்கும்போது, இலைகளை பிய்த்து போட , செடி மொட்டையாக நிற்பதும்... director's touch பிடிக்கும்.
"மலர்களே, மலர்களே, இது என்ன கனவா .." பாட்டில் நக்மா கண்ணில் வழியும் நீர் (பெருகியதே.. விழி வெள்ளம்..) ரொம்ப அழகு... (love birds படம்)
"வெண்ணிலவே வெண்ணிலவே ... " (மின்சார கனவு) பாட்டில்.. இருவரும் சரிவான படியில் ஏறி இறங்கும் டான்ஸ் மூவ்மென்ட் பிடிக்கும்.
ரோஹிணியின் "ஆசை அதிகம் வெச்சு..." டான்ஸ் ரொம்ப பிடிக்கும். ("மறுபடியும் படம்)
"கஜினியில்", சுட்டும் விழி சுடரே பாட்டில், சூர்யாவின் நடை பிடிக்கும்...

Sunday, June 21, 2020

நாடோடிமன்னன்........

அப்பாவை பற்றி மறக்க முடியாத சம்பவங்கள் அநேகம் இருந்தாலும், அடி வாங்கின சம்பவம் ஒன்று உண்டு (அப்பா அடிக்கவே மாட்டார்.- கோபமாக ஒரு முறைப்பு. ஆனால் அவரே அடித்தார் என்றால்..... !!!!)
ஒரு முறை, என் பள்ளி சினேகிதி ஒருத்தி, தன் அப்பா , அம்மாவுடன் "நாடோடிமன்னன்" சினிமாவுக்கு போவதாகவும், நானும் உடன் வந்தால் ஜாலியாக இருக்கும் என்று அழைத்தாள் (ராகு காலத்தில் அழைத்திருப்பாள் என்று நினைக்கிறேன் ) நான் ஏற்கெனெவே அந்த படம் பார்த்தாச்சு. இருந்தாலும் ஒரு ஆசை. அப்பாவிடம் கேட்டால், முதலில் மறுத்து, நான் பிடிவாதம் பிடிக்க, 4 அணா குடுத்து அனுப்பினார்.
மாட்டினி ஷோவுக்கு போனேன். நேரம் ஆகிவிட்டது; அந்த friend & family காணோம். தியேட்டர் உள்ளே போய் உட்கார்ந்து விட்டேன். ஆனால், படத்தில் மனம் செல்லவே இல்லை. முடிந்ததும் வெளியில் வந்தால், அப்பா waiting - அழைத்துப் போவதற்கு ....
விஷயம் அதுவல்ல - அந்த சிநேகித குடும்பம் மாலை ஷோவுக்கு அங்கே வந்திருக்க, அப்பா பார்த்துவிட்டார். நான் பார்க்கவில்லை...
இரண்டு தவறுகள் -
1. மற்றவருடன் படத்திற்குப் போவது
2. அவர்கள் வராததால் வீட்டிற்கு திரும்பாமல் படம் பார்த்தது
விஷயம் தெரியாமல், கோப முகத்துடன் வரும் அப்பாவை சஸ்பென்சோடு பார்த்துக் கொண்டு, வீட்டிற்கு வந்தால், செம அடி ......
"மறக்க முடியவில்லை.... மறக்க முடியவில்லை...."


Saturday, June 20, 2020

மூக்குத்தியும் நானும் ......

என் முதல் மூக்குத்தி.....
எட்டாம் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எதுக்குத்தான் அந்த விபரீத ஆசை வந்ததோ தெரியல்ல. அம்மாவிடம் போய் , "எனக்கு மூக்கு குத்திக்கணும் " ன்னு கேட்டேன். அம்மாவுக்கு படு சுவாரசியம்.
என்னை வாகாக உக்காத்தி வெச்சு , வலது மூக்கில் பேனாவால் சரியான இடத்தில் ஒரு மார்க் வைத்து, அங்கு சொட்டு நல்லெண்ணெய் வைத்து, ஒரு புது ஊசியில் நூல் கோர்த்து , அந்த புள்ளி மேல் வைத்து , ஒரே அமுக்கு - ஊசி நூலை மறுபக்கம் எடுத்து, அந்த நூலை முடி போட்டு விட்டு விட்டாள் . வலி தாங்க முடியவில்லை.
வலிக்கு மருந்து - கிருஷ்ணா தியேட்டரில் குலேபகாவலி திரைப் படம் - இரண்டாம் முறை . தினமும் நல்லெண்ணெய் வைத்து, புண்ணை ஆற்றி , பிறகு நூலை கழற்றி, ஒரு சின்ன மூக்குத்தி.......
காலேஜ் போகும்போது எனக்கு மூக்குத்தி பிடிக்காததால் (fashion , fashion ) கழற்றிவிட , ஓட்டை துந்து போய் விட்டது.
இரண்டாம் தரம்...
கல்யாணத்திற்கு முன்னாடி எங்காத்தில் மூக்குத்தி அவசியம் என்று சொல்ல, இப்பவும் அம்மாதான்... அதே மார்க் இருந்ததால், கொஞ்சம் ஈஸியாக குத்திவிட்டாள் - அதே method - சினிமாவெல்லாம் கிடையாது. கல்யாணத்திற்குப்பிறகு வைர மூக்குத்தி வேறு !!!
ரொம்ப வருஷத்துக்கப்புறம்..... அதை கழற்றி விட, (fashion , fashion ) மறுபடியும் துந்து போய் விட்டது.
மூன்றாம் தரம்.....
சுமார் பத்து வருடங்கள் முன்பு, இப்போது, மூக்கு, காது குத்தி விடும் ஒரு பையனிடம் , என் பெண் அழைத்துப்போக, (இவரிடம், வைரத்தில் எட்டுக்கல் பேசரிக்கு டீல் போட்டுவிட்டு ) குத்திக் கொண்டேன். அவன் ஒரு சின்ன தங்க மூக்குத்தியை, கன் ஷாட் முறையில் குத்தி விட்டான். இன்றுவரை அதுதான்.
போன நவம்பரில், இடது மூக்கும் குத்திக் கொண்டால் என்ன என்ற விபரீத ஆசை, எனக்கும் என் சினேகிதி கீதாவுக்கு வர, இருவரும் தங்க மாளிகை போய் , அங்கு தட்டான் , ஒத்தை கல் மூக்குத்தியை , சுரையில் ஒரு தங்க கம்பி குடுத்து , பேனாவால் மார்க் பண்ணி, ஒரே அமுக்கு.... கண்ணில் தண்ணீர் கர கர வென்று... தேவையா? 10 நாட்கள் கழித்து , அதே தட்டான் அந்த ஒத்தை கல்லை கழற்றி, தளுக்கு (நான்கு கல் முத்து ) மாட்டி, போட்டு விட்டார்.
ஜென்ம சாபல்யம்.... இன்னும் கழற்ற வில்லை... !!!!!


Tuesday, June 9, 2020

நினைவுகள் - 5



எங்கம்மாவாத்தில், காலை 5 மணிக்கு, சமையல் ரூமில் , கீழே உட்கார்ந்து கொள்வேன். அம்மா பித்தளை பில்டரில் காப்பி பொடி போட்டு, டிகாக்ஷன் இறக்கி வைத்திருப்பாள். நான் உட்கார்ந்ததும், குமுட்டி அடுப்பில் பால் காய்ச்சி, டபரா , டம்ளரில் கலந்து கொடுப்பாள். அதை ஆற்றி சாப்பிட்ட நினைவு இன்றும். அதுதான் இப்போது எழுத தூண்டியது.
------------------------------------------------------------------------------------------------------

ரொம்ப பழைய நாட்களில் பச்சை  காபி கொட்டையை வாங்கி வைத்துக்கொள்வார்கள். சில நாட்களுக்கொருமுறை கொட்டையை வீட்டுப் பெண்கள் பதமாக வறுத்து டின்னில் வைத்துக்கொண்டு, தினமும் காலை பிரெஷ் ஆக அதற்கான மெஷினில் பதமாக அரைத்து பித்தளை பில்டரில் பொடி போட்டு இறக்கி, பித்தளை டபரா, டம்ளரில்  காபி சாப்பிடுவார்கள். எங்கம்மா பண்ணி பார்த்திருக்கிறேன்.

பிறகு, நிறைய கொட்டையை வறுத்துவிட்டு, கடையில் , மெஷினில் குடுத்து, கொஞ்ச நாளைக்கு தேவையானதை அரைத்து வைத்துக் கொண்டார்கள்.

அப்புறம், வறுக்க சோம்பல் பட்டு, நல்ல கொட்டையை வாங்கி, மஷின்காரனிடம் கொடுத்து, பதமாக வறுத்து, அரைத்து வாங்கினார்கள்.

அடுத்த ஸ்டேஜ், பௌடராகவே வாங்க ஆரம்பித்தோம். எவர்சில்வர் பில்டரில் பொடி போட்டு , இறக்கி, எவர் சில்வர் டபரா , டம்ளரில் ஆற்றி குடிக்க ஆரம்பித்தோம்.

பிறகு, பில்டர் போய், காபி மேக்கர் வந்தது. தட்ட வேண்டாம்; கொட்ட வேண்டாம்; பொடியை போட்டு , கெட்டி டிகாக்ஷன் இறக்கி . எவர் சில்வர் டபரா டம்ளரில் ஆற்றி சாப்பிட வேண்டியதுதான். நான் அந்த ஸ்டேஜில் இருக்கிறேன்.

அப்புறம் வந்தது, இன்ஸ்டன்ட் காபி. கலக்க வேண்டியதுதான்; குடிக்க வேண்டியதுதான்.  அதுவும் டபராவாவது, டம்ளராவது. மக்கில் அல்லது கப் சாஸரில் விட்டு, சூடாக சிப் பண்ண வேண்டியது.

இப்போது டிகாக்ஷனே பாக்கெட்டில் கிடைக்கிறது. பால் மட்டும் காய்ச்சினால் போதும்.

அடுத்தது என்னவோ ?


Friday, June 5, 2020

அடுக்கு மாடி குடி இருப்பில், மேல் தளங்களில் கேட்காத சத்தங்கள்........

நகர வாழ்க்கையில், அடுக்கு  மாடி குடி இருப்பில், மேல் தளங்களில் கேட்காத சத்தங்கள்

"நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது...குடு குடு குடு " - குடுகுடுப் பைக் காரன்...
"ஏ... அம்மாளோ, அய்யாளோ, நரிப்பல்லு புலி நகம் வாங்கலையோ ஆயாளோ" குறவன் குறத்தி...
"பூம்...பூம்...பூம்.... " பூம்ப்பூம் மாட்டுக் காரன்....
"ராம ஜோசியம்...ராம ஜோசியம்...ராம ஜோசியம்..." ... சின்ன தம்பூரை மீட்டிப் போகும், காவி உடையணிந்த ஆள்....
"சோசியம் பாக்கலையோ சோசியம்" .... கையில் சிறிய கம்புடன் குறி சொல்லுபவள்...
"கோவிதா கோவிந்தா... அடுக்குப் பானையில அரிசி இருக்கு அள்ளிப் போடுடா கோவிந்தா..." புரட்டாசி சனிக் கிழமை கேக்கும் கோவிந்தன் நாமம்.
"டிங் டிங் டிங்...... " மாலை 5 மணிக்கு வரும் வேர்க்கடலை
வண்டிக்காரன் , இரும்பு சட்டியில் தட்டும் ஓசை.
"கிணிங் கிணிங் கிணிங்...." இரவு எட்டு மணிக்கு பானையிலிருந்து இலையில் குல்பி வைத்துக் கொடுப்பவன்
"டொக்...டொக்...டொக்... " சோன் பப்டி விற்பவன்...
"சோடா கலர் உஷ்.........." பாட்டில் சோடா, கலர் விற்பவன்.
..
"கலாய் பூசலியோ... கலாய்..:" கலாய் பூசுபவன்...
"கிர்ர்ரிங் கிர்ரிங் .... கத்தி தீட்டறது... அரிவாள் மணை  தீட்டறது...." கத்தி தீட்டுபவன்..

பார்க்க முடியாதது...
இவர்களுக்காக வாசலில் காத்திருக்கும் குழந்தைகள்...
அப்பா குடுத்த காசை கையில் வைத்துக் கொண்டு....

அம்மா சொல்படி இவர்களில் யாரையாவது கூப்பிட காத்திருக்கும் சிறுசுகள்



தமிழைத் தவறாக உரைக்காதீர்கள்.........



சோழ நாட்டின் மன்னன் குலோத்துங்க சோழனின் குருவாகவும் அவைக்களப் புலவராகவும் இருந்தவர் கவி ஒட்டக்கூத்தர். இவர் தமிழ்ப்பற்று மிக்கவர், புலமையில் கரைகண்டவர். தானும் தமிழ்ப் புலவர் என்று கூறிக்கொண்டு யாரேனும் தமிழைப் பிழையாக உரைத்தால் அவரைச் சிறையிலடைத்து விடுவார். பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்ட நபர்களுக்குப் பிழைக்க ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுப்பார். அது யாதெனில், ஒட்டக்கூத்தர் கேட்கும் கேள்விக்கு அவர்கள் சரியான பதில் தந்தால் சிறையிலிருந்து விடுவிக்கப் படுவர். சரியான விடை கூறாதவர்கள் இருவரின் தலைமுடிகளையும் ஒன்றாக முடிந்து சிரச்சேதம் செய்துவிடுவார் அதாவது இருவரது தலைகளையும் வெட்டிவிடச் செய்வார். இதனாலேயே தான் ஒரு புலவன் என்று முறையாகத் தமிழ் பயிலாத எவரும் கூறிக்கொள்வதில்லை.
பிள்ளைப் பாண்டியன் என்ற ஒரு பாண்டிய மன்னன் தமிழைப் பிழையாக உரைப்போர் தலையில் குட்டுவானாம். வில்லிபுத்தூராழ்வார் எனும் பிரசித்திபெற்ற புலவர் பிற புலவர்களை வாதிற்கு அழைத்து, வாதில் வர்கள் தோற்றால் அவர்களது காதை அறுத்துவிடுவாராம். மஹாபாரத காவியத்தை வில்லிபாரதம் எனும் கடின நடையிலமைந்த தமிழ்ப் பாடல்களாக எழுதியவர் வில்லிபுத்தூராழ்வார்.
இவர்களெல்லாம் இன்று நம்மிடையே இல்லாததால் யார் வேண்டுமானாலும் தான் ஒரு கவி என்று கூறிக்கொண்டு விளையாட்டுப் போல் தமிழில் கவிதை என்று சொல்லி எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எடுத்துரைக்கிறது (இடித்துரைக்கிறது)
குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங்கில்லை
என்ற செய்யுள்.


குரும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி
எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை
இரண்டொன்றா முடிந்து தலை யிறங்கப்போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை
விளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துறைகளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே