Monday, October 3, 2016

VAIDEESWARAN KOVIL......

வைதீஸ்வரன் கோவில்....... 


வைதீஸ்வரன் கோவில் எங்கள் குல தெய்வம்...
நான் முதல் முதல் போனது கல்யாணம் ஆனவுடன்...

(எங்கப்பாவாத்துக்கு  திருப்பதி... ஆனால் போனதே இல்லை.. அப்பா அதெல்லாம் particular இல்லை. ஆண் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கப் போனதோடு சரி. (அப்போ நான் பிறந்திருக்காத காரணத்தால்... நான் போனதில்லை.. சிம்பிள் !!)
புரட்டாசி சனிக்கிழமைஎள் சாதத்துடன்சமாராதனை செய்வதோடு, குல தெய்வ கொண்டாட்டம் முடிந்து விடும். )

புக்காத்திலிருந்து வைதீஸ்வரன் கோவில் பயணம்.
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் விடியற்காலை 4  மணிக்கு அங்கு 2 நிமிடம் நிற்கும்.  அதற்கு பயந்து, தூங்காமல் கழியும் இரவு !!
இறங்கினதும், ஒரு மாட்டு வண்டி வைத்துக்கொண்டு, குருக்கள் ஆத்துக்குப்போனோம்.

family doctor maadhiri family gurukkal ! அவருக்கு கார்டு போட்டாகிவிட்டது எங்கள் வருகை பற்றி.
குருக்கள் ஆத்துக்கு போனதும், பல் தேய்த்து, காபி.
துணி மணிகளை எடுத்துக்கொண்டு... கோவில் குளம்..
அந்த குளத்தில் குளித்தால் வியாதி எல்லாம் தீரும் என்ற நம்பிக்கை...
நான் ரொம்ப பவ்யமாக, மகா த்ரில்லுடுடன், என் மாமியார் அடி ஒற்றி, S.K. பக்கத்தில் வர, மனமெல்லாம் பூரிப்புடன் கோவில் என்ட்ரி !
மாமியாருக்கும், முதல் மாட்டுப்பொண்ணை அழைத்து வரும் பெருமை..முகமெல்லாம்... !!
 அந்த குளத்தில் பாசி நெறைய.... அந்த வயதில் பயமில்லை...
எல்லோரும், தடுக்கி விழுந்து, குளிரில் அலறி, முங்கி எழுந்து (மஞ்சள் இழைத்து கண்டிப்பாக பூசிக்கொள்ள வேண்டும் !!), கரை ஏறி, அங்கேயே டிரஸ் மாத்தி - மடிசார் (அது ஒரு லாவகம்... கற்றுக்கொண்டேன் !!)...



கோவில் குளம் 
வெல்லம் கரைத்து, உப்பு மிளகு போட்டு, அதையே பிரசாதமாக ஒன்றிரண்டு சாப்பிட்டு,முடிந்து வைத்த காசுகள், வேண்டிக்கொண்ட உருவங்கள் எல்லாம் உண்டியலில்  செலுத்தி...

மாமியார் மாவிளக்கு போட்டார்... (கல்யாணத்துக்கு பிறகு முதல் ட்ரிப், முடி இறக்கும்போது - மாவிளக்கு..)



அதற்குள் குருக்கள் ஐந்து அர்ச்சனைக்கு சாமான்கள் கொண்டு வந்தார். அப்போதெல்லாம் ஒரு அர்ச்சனைக்கு 2 அணா. அர்ச்சனை டிக்கட் 1 அணா.

பிள்ளையார், அங்காரகன், சுவாமி (சிவ லிங்கம் , முத்து குமாரசுவாமி(முருகன்), அம்மன்... அர்ச்சனை... முடிந்து பிரசாதம்...

அங்கு வீபுதியுடன் சேர்த்து மருந்து உருண்டைகள் தருவார்கள்... ஆத்தில் எப்போதும் அது இருக்கும்... யாருக்காவது உடம்பு சரி இல்லைன்னா, மாமனார் இந்த்ராக்ஷி ஜபம் சொல்லி, விபூதி இட்டு, மாத்திரை தருவார். இன்றும் தொடருகிறது, இவர் மூலமாக !!

இந்த முதல் ட்ரிப் மறக்க முடியாதது... எனக்குதான் என்ன பெருமை; என்ன சந்தோஷம்...
ஒரே நாளில் மாறிப்போனேன்... வைதீஸ்வரனுக்கு அடிமையாக! "எங்காத்துக்கு வைதீஸ்வரன் கோவில் குல தெய்வம்" என்று சொல்வதில், அன்றிலிருந்து, இன்று வரை பெருமை... அப்படித்தான் நாம் எல்லோரும் புக்காத்தில் ஒன்றி போகிறோம் !! (பெண்கள் பெண்கள் தான் !)

இங்கு மட்டும் நவக்ரகங்கள் ஒரே திசை நோக்கி இருக்கும்.

ஜடாயு மோட்சம் குண்டத்தை பார்த்து, (ஜாடாயுவும், ராமரும், ஜடாயு சொன்ன செய்தியும்.. அப்படியே படமாக மனதில் ஓட).. அதிலிருந்து விபூதி இட்டுக்கொண்டு...

யானையிடம் பயந்து நடுங்கி, ஆசி வாங்கிக்கொண்டு... (அந்த யானை இப்போது இல்லை... மதம் பிடித்ததால் காட்டில் விட்டு விட்டார்களாம்)


அங்காரகன் - (செவ்வாய் ஸ்தலம்)



அவசரமே படாமல், நிதானமாக... எல்லாம் முடித்து, பசியோடு வந்தால், குருக்கள் ஆத்தில் சாப்பாடு. அந்த சிம்பிள் சாப்பாடு அமிர்தமாக இருக்கும் . என்ன.. தண்ணீர் ஜோடு தவலையில் கொஞ்சம் மோர் விட்டு கலக்கி, சாதத்திற்கு மோர் விடுவார்கள் !!

பிரியா விடை பெற்று, அடுத்த ஒரு வருஷத்துக்கு, மாத அர்ச்சனைக்கு மொத்தமாக பணம் கட்டிவிட்டு, 3 மணி ரயில் ஏறி வருவோம்...

இந்த 45 வருடங்களாக, வருஷத்துக்கு ஒரு முறை தொடருகிறது இந்த விசிட்... (சில அசந்தர்ப்பமான வருஷங்கள் தவிர்த்து....)
சில வருஷங்களுக்கு பிறகு, நேராக அங்கே போகாமல், கும்பகோணம் அல்லது சிதம்பரம் என்று தங்கி... சுற்றுவட்டு கோவில்களெல்லாம் விசிட் அடித்து, இந்த கோவிலையும் முடித்து வர ஆரம்பித்தோம்..
டிபன்- அங்கே இருக்கும் தைலாம்பாள் மெஸ்... ரொம்ப சின்னது.. ஆனால், இலை போட்டு (இப்போது  மாதிரி ஒரு plate இல் இரண்டு இட்லி, ஒரு தோசை என்று குடுக்க மாட்டார்கள்...வீடு மாதிரி, அடுக்கில், நிறைய கொண்டு வந்து, பரிமாறுவார்கள்...
சாப்பாடு, மாயவரம் காளியாகுடி மெஸ்...
அப்புறம் காரில் போக ஆரம்பித்தோம்...
இதெல்லாம் சின்ன விஷயம்... நான் சொல்ல வந்தது வேறே...
கோவிலில் குருக்கள் முதல் அர்ச்சனையின் போது பேர்நட்சத்திரம் கேட்பாரா..?
அப்போ ஆரம்பிக்கும் S.K. க்கு வயிற்றில் கடுபடு ! தனக்கும், எனக்கும் சொல்லி விட்டு, என்னை சொல்லச் சொல்லி விடுவார்.
நான் பரீட்சையில் பாடம் ஒப்பிக்கும் மாணவன் போல்... வரிசையாக..
பிள்ளைகளுக்கு அவர்கள் சர்மன் நாமம் சொல்லி, நட்சத்திரம், கோத்ரம் சொல்லி, மாட்டுப் பெண்கள், பேரன் அதே..அதே..
பெண் பேரை முழுமையாக சொல்லி, மாப்பிள்ளை, கோத்திரம், பேரக்குழந்தைகள், நட்சத்திரம்.. எல்லாம் ஒப்பித்து விடுவேன்..
நான் சொல்ல சொல்ல... இவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச self confidence உம் போய் விட்டது...
இப்போதெல்லாம்தன் பெயரை சொல்லிவிட்டு, என் பெயரை சொல்ல கூட உளறுகிறார் !!
(டீச்சர் பக்கத்தில் நின்றால் குழந்தைகளுக்கு பதில் தப்பாக போகும்.. அது ஒரு வித
நாடி - ஓலை

 வைத்தீஸ்வரன் கோவிலை பற்றி சொன்னால், நாடி ஜோசியம் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. 
ஊருக்குள் நுழையும்போதே ஆரம்பித்து விடும் நாடி ஜோசியம் போர்டுகள். ஊர் முழுவதும் பரவிக்கிடக்கும். 
நாடி என்பதெல்லாம் உண்மையா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், நான் இரண்டு தரம், என்னதான் சொகிறார்கள் என்ற ஆவலால் பார்த்தேன். சொல்லப்பட்ட விதம், நம்பிக்கை தருவதாக இல்லை. 
ஒரு தரம், ஒரு இடத்தில் பார்த்து விட்டு, இன்னொரு ட்ரிப் இல் வேறு இடத்தில் பார்த்தேன். 
அவர்கள், நம் பெயரை கேட்டுவிட்டு, "உங்க நாடி ஓலை இங்கே இருக்கான்னு பாத்துட்டு சொல்றேன், இருந்தா, பணம் குடுத்தா போரும்" ன்னு சொல்லிட்டு, அரை மணி தேடிவிட்டு, "இருக்கு" ன்னு பணம் வாங்கிக் கொள்கிறார்கள். 
இரண்டாம் தடவை, வேறு இடத்தில் பார்க்கும்போது, என் ஓலை இருப்பதாக சொல்லி, படித்து முடித்த பின், நான் கேட்டேன் "எப்படி ஒருத்தர் ஓலை ரெண்டு இடத்தில் இருக்க முடியும்?" என்று.. பட்டென்று வந்தது பதில். "நீங்க முதலில் பார்த்தது 'அகத்தியர் நாடி' ; இது 'மகா அகத்தியர் நாடி' .
எனக்கு கல்யாண பரிசு தங்கவேல், ஜெமினி வசனம் தான் ஞாபகம் வந்தது
"அந்த மன்னார் அண்ட் கம்பெனில நான்தானே மனேஜர்?" 
"எங்களது ராஜ மன்னார்" !!!!



No comments:

Post a Comment