Wednesday, July 17, 2019

வாழ்க்கை ஒரு விளையாட்டு.......

வாழ்க்கை ஒரு விளையாட்டு.
ஒரு பக்கத்தில் நீங்கள். மறுபக்கத்தில் கண்ணுக்குப் புலப்படாத இறைவன்.
ஆட்டத்தின் விதிகள் பிரபஞ்ச விதிகள்.
இந்த வினோத விளையாட்டே நீங்கள் ஜெயிக்கிறீர்களா இல்லையா என்பதை நிர்ணயிக்கத்தான். ஆனால் மறு பக்கத்தில் இருக்கும் இறைவனுக்கு இந்த விளையாட்டில் வெற்றி தோல்வி கிடையாது.
நீங்கள் காய்களை நகர்த்தும் விதத்தை வைத்தே இறைவனும் காய்களை நகர்த்துகிறான்.
இறைவன் உங்களை அவசரப்படுத்துவதில்லை. இப்படி ஆடு, அப்படி ஆடு என்று உங்களை நிர்ப்பந்திப்பதில்லை. எப்படிக் காய்களை நகர்த்துகிறீர்கள் என்பதில் உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு. நீங்கள் காய்களை நகர்த்தும் வரை இறைவன் பொறுமையாகவே காத்திருக்கிறான். ஒரு முறை நகர்த்திய பிறகு வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்வதற்கு இந்த ஆட்டத்தில் இடமில்லை.
அதேசமயம் நீங்கள் காய்களை நகர்த்திய பிறகு அதை வைத்து இறைவன் காயை நகர்த்தும் போது அதை விமரிசித்தால் இறைவன் பொருட்படுத்துவதில்லை. இறைவனைப் பொறுத்த வரை நீங்கள் காய்களை நகர்த்துவதில் தான் உங்கள் சாமர்த்தியத்தைக் காட்டுகிறீர்களே ஒழிய உங்கள் கருத்துகளுக்கு இந்த ஆட்டத்தில் இடமில்லை.
இறைவன் கண்டிப்பாக விதிகளை மீறுவதில்லை. தப்பாட்டம் ஆடுவதில்லை. நீங்களும் அப்படியே ஆட வேண்டும் என்ற அடிப்படை நாணயத்தை உங்களிடம் அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் கண்ணுக்குப் புலப்படாதவன் அசந்திருப்பான், கவனிக்க மாட்டான் என்று நீங்கள் அழுகுணி ஆட்டம் ஆடினால் நீங்கள் தோற்பது உறுதி. விதிகளுக்கு புறம்பாக ஆடத்துவங்கும் போதே உங்கள் தோல்வி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.
இந்த ஆட்டத்தின் சுவாரசியமான அம்சமே இந்த ஆட்டம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை நீங்கள் அறியாதது தான். ஆட்டம் திடீரென்று எந்த நேரமும் இறைவனால் முடித்து வைக்கப்படலாம். இறைவனாக முடிக்கிற வரை எப்படி ஆடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை வைத்து தான் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது.
ஆட்டத்தை உற்சாகமாகவும், நேர்மையாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடிக் கொண்டிருக்க முடிந்தால் ஆட்டத்தில் நீங்கள் வெற்றியடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். எந்திரமாகவோ, வஞ்சகமாகவோ, முட்டாள்தனமாகவோ ஆடி வந்தால் தோல்வியடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
மற்ற விளையாட்டுகளை விட இந்த விளையாட்டு இன்னொரு விதத்தில் நிறையவே வித்தியாசப்படுகிறது. மற்ற ஆட்டங்களில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று என்று உங்களை நிரூபிக்க பல சந்தர்ப்பங்கள் உள்ளன. இதில் அப்படி இன்னொரு சந்தர்ப்பம் உங்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இந்த வாழ்க்கை தான் உங்களுக்கு கிடைக்கும் ஒரே மிகப்பெரிய சந்தர்ப்பம். இது முடியும் போது எல்லாமே முடிந்து போகிறது.
இந்த அரிய சந்தர்ப்பத்தை எப்படி பயன்படுத்தி ஆடிக்கொண்டிருக்கிறீர்கள்?

Thursday, July 11, 2019

மகிழ்ச்சியான இல்லறத்தின் ரகசியம்........

பெண்ணை அடிமைப்படுத்த நினைக்கும் ஆணும், ஆணை அடிமைப்படுத்த நினைக்கும் பெண்ணும் இயற்கையின் எதிரிகள்.
வெற்றி பெறுவது மட்டும் கலையல்ல... தோற்றுப் போவதும் ஒரு உன்னதமான கலை.
"வராதே" என்று ராமன் சொல்லியும், "வருவேன்" என்று பிடிவாதம் பிடிக்கும் சீதையிடம், தோற்றுப் போகிறான் ராமன்.... ஆனால் மகிழ்ச்சியாகத் தோற்றுப்போகிறான். இதுதான் மண வாழ்க்கையின் உன்னதம்.
உலகையே வேல்லுபவர் என்றாலும், பெருமளவில் சாதித்திருந்தாலும், மனைவியிடம் கணவன் தோற்றுப் போவதும், கணவனிடம் மனைவி தோற்றுப் போவதும் இல்லற அவசியம்; மகிழ்ச்சியான இல்லறத்தின் ரகசியம்.

வசந்தா வாக என்று அறியப்படுவேன் ??

பிறந்ததிலிருந்து - சுப்பையரின் மகளாக
திருமணத்தில் - ராமச்சந்திரனின் சகோதரியாக
திருமணத்திற்கு பின் - சேஷாத்ரியின் மருமகளாக
கிருஷ்ணா சுவாமியின் மனைவியாக;
ஈஸ்வரின் - அண்ணியாக
வேலை செய்யும் இடத்தில் - V . K . வாக ;
பிறகு-ரமேஷ் இன் அம்மாவாக;
இப்போதோ - ரிஷியின் பாட்டியாக
அறிமுகப்படுத்தப்படுகிறேன்; அறியப்படுகிறேன்;
வசந்தா வாக என்று அறியப்படுவேன் ??

ராமாயணத்தில்.......

 நானும் ராமாயணத்தை - சின்ன வயதில் அப்படியே ஏற்றுக்கொண்டு, நடு வயதில் (அதாவது நாற்பதுகளில் ) இப்படி எல்லாம் வாதம் பண்ணி, இப்போது மறுபடியும் அப்படியே, கேள்வி இல்லாமல் ஏற்றுக் கொண்டேன்.
ராமாயணத்துக்கு நிறைய interpretation இருக்கு. மூல கதையான, வால்மீகி க்கு அப்புறம், பல பேர் பல விதமாக அனுபவித்திருக்கிறார்கள். அதைத்தான் காவியமாக படிக்கிறோம்.
கம்பன் விழாவின் போது, ராஜேஸ்வரி அரங்கத்தில் மூன்று நாள் அசத்துவார்கள் - நிறைய அர்த்தங்கள் சொல்லி.
வாலியை மறைந்திருந்து கொன்றதிலிருந்து , இப்படிப்பட்ட யதார்த்தமான கேள்விகள் அநேகம்.
எவ்வளவோ வருடங்களுக்கு முன் எழுதப் பட்ட காவிய காலம் அப்படி இருந்திருக்கலாம். இப்போதைய சமுதாய கண்ணோட்டத்தில், நமக்கு தவறாக தெரிபவை, அப்போது ஏற்றுக்கொள்ளப் பட்டது.
கண்ணகி கதையும் அப்படித்தான்... இப்போது அந்த "பத்தினி" என்கிற அடை மொழியே தவிர்க்கப் பட வேண்டியதாயிற்று.
வள்ளுவர் சொன்னது கூட நிறைய பொருந்தாது இப்போது... (தெய்வம் தொழாள், கொழுநன் தொழுது எழுவாள்..உதாரணத்துக்கு).
சீதையை ராமர், அந்நியன் தொட விடமாட்டார். அதனால் அக்னி பகவானை அழைத்து, சீதையை பாதுகாக்கவும், அவரே, சீதையாக, தீயாக மாறி ராவணனுடன் செல்லவும் பணித்ததாகவும், அதனால். சீதையை மீட்ட பிறகு , அக்னி சீதையை, அக்னியில் பிரவேசிக்கச் சொல்லி, நிஜ சீதையை வெளிக் கொண்டு வந்த தாகவும் ஒரு interpretation .
பார்க்கப் போனால், சீதையும் லக்ஷ்மணன் மீது சந்தேஹப்படுகிறாள்; அதற்கான தண்டனை இது என்று சொல்பவர்களும்  இருக்கிறார்கள்.
பரதனுக்கு ராமர் மேல் அண்ணா என்ற பாசத்தை விட பக்தி அதிகம். (unquestioning devotion). அதனால் தான் பரதாழ்வார் என்று சொல்லப் படுகிறார். அவருக்கு தொண்டன் சத்ருகனன். ஆழ்வார் மூலமாகவே கடவுளை காண்பவன்.
ராமாயணத்தில் இருக்கும் விஷயங்கள் அநேகம். politics, history, sociology, psychology என்று 

ஏன், ராமரை ஒரு ideal மனிதனாக கொண்டால், ஒரு மனிதன் அந்த கால கட்டத்தில் இப்படித்தான் இருந்திருக்கணும் என்று தோணும். அது சரியா, தவறா என்பது, நம் இன்றைய , பெண்கள் படித்த, பலவிதங்களில் தன்னை நிலை நிறுத்தி, தனி identity தேடும் நாளில் இது தவறாக தோன்றலாம் . அப்படிப் பார்த்தால், பார பட்சங்கள் என்று இன்றும் மனிதனிடம் காணும் குணம் தான்.
நான், ஒருவரையும்  wound பண்ணாமல் ஒன்று சொல்ல நினைக்கிறேன். ஆதியில் சமஸ்க்ரிதத்தில் (நமக்கு புரியாத) எழுதப்பட்ட காவியம் .. when we have become analytical ... நம்மை இப்படி விவாதிக்க வைக்கிறது. இப்போதைய கால கட்டத்தில், எவ்வளவோ ஏற்றுக்கொள்ளும் நாம், சிலவற்றிற்கு பொங்கி எழும் நாம் , இப்படி காவியங்களை விமரிசிக்கும் போது அதன் essence , message சிறியவர்களுக்கு கிடைக்காமல் போகிறது. அதனால்தான் அவர்கள் நிறைய argue பண்ணுகிறார்கள். due to continuous changes of social values, we get lots of doubts.
ராமரை கடவுளாக வேண்டாம்; நல்ல மனிதராக எடுத்துக் கொள்ளலாம். என் வரையில் கிருஷ்ணர் கூட கடவுள் அவதாரம் என்றெல்லாம் நம்ப மாட்டேன். ஒரு சூப்பர் powered human being.
பிறகு வந்தவர்கள், இயேசு, நபிகள், புத்தர் மாதிரி  அவரையும் கடவுளாக்கி விட்டார்கள்.
ராமாயணத்தில், எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கு. இப்போது யாரும் ராமரும் இல்லை யாரும் சீதையும் இல்லை. (வள்ளுவரின் படி, மனதால் கணவரை தவிர, வேறு ஆணை நினைக்கிறவள் கூட பத்தினி என்ற அந்தஸ்தை இழக்கிறாள். ஒரே மனைவியுடன் வாழ்கிறவர்கள் எல்லாரும் ராமர் அல்ல. மனத்தால், கண்ணால்... ராமர் தன்மையை இழக்கிறான்.
நாம் எல்லோருமே கற்றது கை மண்ணளவுதான் . ஒரு ஸ்டேஜில் சிலவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு, கேள்வி கேட்காமல், காவியத்தின் இலக்கியத் தன்மையை மட்டும், அனுபவித்தால், நாம் அந்த படித்தலை இன்னும் அனுபவிப்போம். ஒவ்வொரு வார்த்தையும் அனுபவித்து எழுதப் பட்டது ராமாயணம். அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, குழந்தைகளையும் நல்ல கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழக்கினால் தான் நல்லது.
என் பேரன்கள் இருவருக்கும் பூணல் போட பையனும், மாப்பிள்ளையும் சம்மதிக்க வில்லை. அதிகம் படித்தவர்கள், கேள்வி கேட்கிறார்கள். அர்த்தம் கேட்கிறார்கள்.!!!!!
நான் இரண்டு பெண்களை என் ட்ரிப்பில் சந்தித்தேன்...
ஒன்று, பிரான்ஸ் நாட்டுப் பெண் - கணவனும் அதே... அமெரிக்காவில் வாழ்கிறார்கள். (அந்த பெண்ணை அவள் மாமியார் ரொம்ப இன்சல்ட் பண்ணுகிறாளாம்  - அந்தஸ்தை காட்டி..!! எந்த நாடாக இருந்தாலும் மாமியார் மாமியார்தான் போல இருக்கு..) அவர்களை மூன்று முறை பார்த்தேன்... ஒன்றாக சாப்பிட போனபோது... அந்த ரூத் என்கிற Jew தினமும் காயத்ரி மந்திரம் சொல்கிறாள். எங்கள் இருவரையும் பார்த்து, பேசி, ஒரே நாளில் வெஜிடேரியனாக மாறினார்கள் இருவரும்.
மற்றொன்று air hostess - Malaysian .. Buddhist.....அவளுக்கு என்ன தோன்றியதோ... நான் su do cu  போடும்போது, இது, ஞாபகச் சக்தியை வளர்க்கும் என்று சொன்னவள், தான், தன சக்திக்காக, காயத்ரி மந்திரமும் , யஜுர்  வேதத்திலிருந்து நிறைய சுலோகங்களும் சொன்னாள் . சமஸ்க்ரிதம்  தெரியாது.. ஆனால் கஷ்டப்பட்டு, புக்ஸ், நெட் மூலமாக கற்றுக்கொண்டு, உச்சரிப்பிற்காக டேப், இன்டர்நெட் மூலம் கற்றுக் கொண்டு, she said, " the pronunciation & intonation should be correct for proper vibration "... அதனால் தான் சம்ஸ்க்ருதம் படித்து, சுலோகங்களையும் சைனீஸ் இலும், சமஸ்க்ரிதத்திலும்  எழுதி வைத்துக்கொண்டு சொல்வதாக சொன்னாள். இது தானே ஏற்றுக்கொண்ட மோடிவேஷன். இங்கே பசங்கள் தினமும் காயத்ரி சொனனால் மெமரி அதிகரிக்கும் என்று சொனனால், எப்படி என்று கேள்வி கேட்கிறார்கள்.
என்னை பொறுத்த வரை... பழைய காவியங்களை, முடிந்தால் பக்தியாக அல்லது இலக்கியமாக படித்தால் - மனதிற்கு நல்லது. வாழ்க்கை நெறிப்படும். இது மொத்தமும் என் அபிப்பிராயம்.
இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டு தோன்றுகிறது மனதில். ராமாயணத்தை படிக்கும்போது பாசிடிவ் எனெர்ஜி வரவேண்டும்; இப்படி சந்தேகங்களுடன் படித்தால், கொஞ்சம் நெகடிவ் சேர வாய்ப்பிருக்கிறது.
இதை சொல்ல எனக்கு இங்கே உரிமை இருக்கிறது என்று நினைக்கிறேன்... எல்லோருக்கும் என் ஆசிகள். ராமாயணம் , பாகவதம், திருப்பாவை, தேவி மகாத்மியம் , பாரதம் என்று எல்லாவற்றையும் நேரம் கிடைக்கும்போது படியுங்கள். முக்கூராரின் "கோதையின் பாதை" படிக்கப் படிக்க பரவசம்... அவ்வளவு அர்த்தம்.

என் வீடு ......

என் வீடு ......
பெரிய தோட்டம்
அதன் நடுவில் அழகிய சிறிய வீடு
வெளியில் கிராதி கதவு
வாசலில் அகன்ற திண்ணை
தென்னை, மா, நிழலுக்கு வேப்ப மரம்
மா மரத்தை சுற்றி மட்டும் ஒரு மேடை
செம்பருத்தி, முல்லை, வாசனைக்கு மகிழம் பூ
முல்லை படர மட்டும் ஒரு பந்தல்
ஓடி விளையாட மான் , பார்த்து ரசிக்க மயில்
செந்நெல் பொறுக்க புறா, குருவி,
மாமரத்தில் கிளி, குயில்
இது நிஜமல்ல; கனவு....
அடுக்கு மாடி குடி இருப்பு
மூன்றாவது மாடியில் வாசம்
இரண்டு அறை கொண்ட வீடு
ஒரு கூடம்... ஒரு சமையல் அறை
உட்கார்ந்து படிக்க மெத்தையிட்ட நாற்காலிகள்
வெயில் காணாத வெராண்டா
துளசி கூட வாடும் அந்த நிழலில்
பச்சை பசுமை ஏதுமில்லாத
இரும்பு கம்பியிட்ட சிறை
இது கனவல்ல; நிஜம்

Thursday, July 4, 2019

எங்கம்மா சொன்ன பேய் கதைகள் ........

விடியற்காலம் தனியாக உட்கார்ந்திருக்கயில் எங்கம்மா பில்ட் அப் கொடுத்து சொன்ன பேய் கதைகளா ஞாபகம் வருது...
அதிலும் எத்தனை வகைகள்... நம் ஜாதி வகைகள் போல
பேய், பிசாசு, காட்டேரி, ரத்தக் காட்டேரி (பைரவி, ஆனந்த பைரவி ங்க ற மாதிரி ), முனி, கொள்ளி வாய் பிசாசு, மோகினி, தலை கீழ் தொங்கும் ஆவி...
எனக்கு நினைவு தெரிஞ்சு எங்கம்மா சொன்ன சாமி கதைகளை விட (சாமி கதை சொல்லி இருக்காளா என்ன ? ஏதோ ரெண்டு.. முருகன் பழத்துக்காக கோச்சுண்டது ... இப்படி, சின்ன சின்னதா ) பேய் கதைகள் அதிகம்.
ஆசைகள் நிறைவேறாமல் செத்துப்போன "கண்ணப்பா" ... பேயாக வந்து தாகம் தீர்த்துக்கொள்வது...
அல்ப ஆயுசில் செத்துப்போன "காஞ்சனா" ஆவியாக உலவி, தன் மனுஷாளை தேடுவது...
இந்த "காட்டேரிக்கும், ரத்தக் காட்டேரிக்கும்" அதிகம் வித்தியாசம் இல்லை (6 வித்தியாசங்கள் இருக்குமோ?) ... அவைகள், விபத்தில் அனாமத்தாக செத்துப் போய் , இப்போ காட்டேரியாக வந்து, கழுத்தை கடித்து, ரத்தத்தை உறிஞ்சுவது (விபத்தில் ரத்த சேதத்தினால், சோகை வந்து (அனீமியா ) இப்போது blood sucking ) ....
முனி... உடலை எரித்த பொது, ஆவி வேகாமல் (சில பெரியவங்க சொல்லுவாங்களே? " நீ வரல்லேன்னா என் ஆவி வேகாது" ன்னு - அது) , இப்போ half boiled ஆ சுத்துவது..
கல்யாணம் ஆகாமல் செத்துப்போன பெண், மோகினி யாக , அழகாக, அலங்காரமெல்லாம் பண்ணிக் கொண்டு, ஜல் ஜல் ன்னு (கொலுசு கண்டிப்பா போட்டுக்கும்) கொலுசு சத்தம் கேட்க வந்து, வாசலில் காத்துக்காக, கயிற்றுக் கட்டில் போட்டு படுத்திருக்கும் ஆண்களை தட்டி எழுப்புவது....
புளிய மரத்தில் தொங்கிக் கொண்டு... (அதற்கு கால் கிடையாது) , மரத்தடியில் நிற்பவரை பேய் பிடித்து, அவர்களை விடாமல், மேலே தொத்திக் கொண்டு படுத்துவது..
வீட்டிற்கு,நடு ராத்திரியில் வந்து, கடிகார முள்ளை தள்ளி வைத்து, ஏமாத்தி, வயலுக்கு கூட்டிப் போய் , அறையும் "விவசாயி " பேய் ;
வாயில் எப்போதும் நெருப்புடன் (பிணம் சரியாக எரிக்கப் படாத நிலையில், வெட்டியானை ஏமாற்றி விட்டு, ஓடி வந்தது ) சுற்றும் கொள்ளி வாய் பிசாசு..
அதுவும், எங்கம்மா இந்த தண்டனைகளை சொல்லும்போது, ஒரு back ground music கோடு தான் சொல்லுவாள் . (பளீர் பளீரென்று, மாடேர் மடேர் என்று ... இப்படியாக)
[ஐயோ, இப்ப மணி 4 தான், எனக்கு பயம்மா இருக்கு. நிறுத்திக்கிறேன் ]

Tuesday, July 2, 2019

குடுகுடுப்பாண்டி......

முன்னெல்லாம், காலங்காத்தால, குடுகுடுப்பாண்டி ன்னு ஒருத்தன் வருவான்...
கை நெறைய பழைய துணி collection தொங்கும்...
"நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...
ஜக்கம்மா சொல்றா... இந்த வீட்டுக்கு ஒரு நல்ல சேதி வரப்போகுது..."
என்று சொல்லிக்கொண்டே போய் விடுவான்...
அப்புறமா வசூலுக்கு வருவான்..
பழைய துணி, அரிசி, காசு....
இப்ப எல்லாம் காணோமே ??
அந்த TRIBE எல்லாம் எங்கே போயிட்டாங்க ??