எங்கம்மாவாத்தில், காலை 5 மணிக்கு, சமையல் ரூமில் , கீழே உட்கார்ந்து கொள்வேன். அம்மா பித்தளை பில்டரில் காப்பி பொடி போட்டு, டிகாக்ஷன் இறக்கி வைத்திருப்பாள். நான் உட்கார்ந்ததும், குமுட்டி அடுப்பில் பால் காய்ச்சி, டபரா , டம்ளரில் கலந்து கொடுப்பாள். அதை ஆற்றி சாப்பிட்ட நினைவு இன்றும். அதுதான் இப்போது எழுத தூண்டியது.
------------------------------------------------------------------------------------------------------
ரொம்ப பழைய நாட்களில் பச்சை காபி கொட்டையை வாங்கி வைத்துக்கொள்வார்கள். சில நாட்களுக்கொருமுறை கொட்டையை வீட்டுப் பெண்கள் பதமாக வறுத்து டின்னில் வைத்துக்கொண்டு, தினமும் காலை பிரெஷ் ஆக அதற்கான மெஷினில் பதமாக அரைத்து பித்தளை பில்டரில் பொடி போட்டு இறக்கி, பித்தளை டபரா, டம்ளரில் காபி சாப்பிடுவார்கள். எங்கம்மா பண்ணி பார்த்திருக்கிறேன்.
பிறகு, நிறைய கொட்டையை வறுத்துவிட்டு, கடையில் , மெஷினில் குடுத்து, கொஞ்ச நாளைக்கு தேவையானதை அரைத்து வைத்துக் கொண்டார்கள்.
அப்புறம், வறுக்க சோம்பல் பட்டு, நல்ல கொட்டையை வாங்கி, மஷின்காரனிடம் கொடுத்து, பதமாக வறுத்து, அரைத்து வாங்கினார்கள்.
அடுத்த ஸ்டேஜ், பௌடராகவே வாங்க ஆரம்பித்தோம். எவர்சில்வர் பில்டரில் பொடி போட்டு , இறக்கி, எவர் சில்வர் டபரா , டம்ளரில் ஆற்றி குடிக்க ஆரம்பித்தோம்.
பிறகு, பில்டர் போய், காபி மேக்கர் வந்தது. தட்ட வேண்டாம்; கொட்ட வேண்டாம்; பொடியை போட்டு , கெட்டி டிகாக்ஷன் இறக்கி . எவர் சில்வர் டபரா டம்ளரில் ஆற்றி சாப்பிட வேண்டியதுதான். நான் அந்த ஸ்டேஜில் இருக்கிறேன்.
அப்புறம் வந்தது, இன்ஸ்டன்ட் காபி. கலக்க வேண்டியதுதான்; குடிக்க வேண்டியதுதான். அதுவும் டபராவாவது, டம்ளராவது. மக்கில் அல்லது கப் சாஸரில் விட்டு, சூடாக சிப் பண்ண வேண்டியது.
இப்போது டிகாக்ஷனே பாக்கெட்டில் கிடைக்கிறது. பால் மட்டும் காய்ச்சினால் போதும்.
அடுத்தது என்னவோ ?
No comments:
Post a Comment