Friday, August 23, 2019

இப்போ அம்மா கதை.......


இப்போ அம்மா கதைய கொஞ்சம் சொல்றேன்... 
அம்மாவோட ஊர்... மன்னார்குடிக்கு பக்கத்தில "மூர்த்தி அம்பாள் புறம்"  ன்னு ஒரு கிராமம்... 
அங்க 1910 ல அம்மா பொறந்தா... 
அந்த ஊருக்கு அப்போ எல்லாம்  பஸ் கூட கிடையாது... மாட்டு வண்டியில போகணும்... 
வழியிலே ஒரு ஆறு... (ஓடை, வாய்க்கால் மாதிரின்னு வெச்சுக்கோங்கோ... ) ஆழம் கிடையாது... ஆனா எப்போதும் தண்ணி இருக்கும்...
வண்டி ஆத்து கரைக்கு போனோண்ண, வண்டிலேர்ந்து இறங்கி, ஆத்தை குறுக்க கால் நனைய கிராஸ் பண்ணனும்... ஜாலியா இருக்கும்... 
மாடும் (வண்டியோடதான் ).. தண்ணிய கிராஸ் பண்ணும்... அடுத்த கரைக்கு போனோண்ண, திரும்பவும் வண்டியில ஏறிப்போம் .. !! 
அந்த கிராமத்தில தாத்தா பெரிய மிராசுதார்... பெருந்தனக்காரர்... பிரிட்டிஷ் லைசென்சோட துப்பாக்கி எல்லாம் வெச்சிருப்பாராம்... அது ஒரு status symbol !!

தாத்தா, "வடவம் முத்தி வைஷ்ணவம்"... அதாவது... ஒற்றை நாமம் போட்டுப்பா. 
தாத்தாக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன் .. தாத்தாவோட அம்மா வழி பாட்டிக்கு, பையன் இல்லாததால, தன பிள்ளைய ச்வீகாரம குடுத்துட்டா... 

அந்த கிராமமே, இவ ரெண்டு பேருக்கும் சொந்தம் ! 
நல்ல வெளச்சல் ... வயல், தோட்டம், துறவு... பணத்துக்கு பஞ்சமே இல்ல... 
அம்மா சொல்லுவா... தாத்தா வெள்ளி காசெல்லாம் (govt. currency coins.) .. (அப்போ வெள்ளி காசுங்கறது.. நல்ல வெள்ளியோட சரியான மதிப்போட இருக்குமாம்..) குடத்தில போட்டு, சீல் பண்ணி, பரண்ல "உருட்டி" விட்டிருப்பாளாம். 
வயல்ல வேல செய்யற ஆளை எல்லாம் தாத்தா ரொம்ப நான்னா கவனிச்சுப் பாளாம் ... 
பொங்கல் பண்டிகை ன்னா எல்லாருக்கும் துணி மணி, சாப்பாடு ... இப்படி... (நாமெல்லாம் சினிமால தான் பாத்திருக்கோம் !!) 
பெரியம்மா வுக்கு ஏழு வயசுல கல்யாணம் ! பெரியப்பாவும், வேற ஊருல பெரிய மிராசுதார்... ஆனா... இருபது வயசுக்குள்ள, நாலு குழந்தைகள் பிறந்து, பெரியப்பாவும் இறந்து போயிட்டாராம்... 
 அந்த நாளைய வழக்கப்படி, விதவை கோலம்... மொட்டை அடித்து, நார்மடி கட்டி... 
அந்த பெரியம்மா ரொம்ப கெட்டிக்காரி... நல்ல சிகப்பா, உயரமா, தாட்டியா (நான் பாக்கறச்சே) நன்னா இருப்பா... 
(அப்பா கூட அடிக்கடி  அம்மாவ கிண்டல் பண்ணுவா.."நான் பெண் பாக்க வரச்சே... உங்கக்கா தான் முன்னாடி வந்தா... அவளை பார்த்து, நீயும் அப்படித்தான் இருப்பேன்னு நம்பி, உன்ன சரியா கூட பாக்காம, சரின்னு சொல்லிட்டேன் " ன்னு.... ஏன்னா அம்மா கொஞ்சம் உயரம் கம்மி, மாநிறம் . 

 நாங்க மெட்ராஸ் ல இருக்கச்சே... எங்கக்காக்கெல்லாம்1960 களில் கல்யாணம்... 
சாதாரணமா அம்மா,பெரியம்மா கூட லெட்டர் கூட அதிகம் போட்டு, போக்கு வரத்து எல்லாம் வெச்சுக்கலை .. குடும்ப பாரம்... 
எங்கியோ கிராமத்துல இருந்த பெரியம்மா... 
கல்யாண தேதி குறிச்சு ஒரு கார்ட் போட்டோண .. ரயில் புடிச்சு நாலஞ்சு நாள் முன்ன டாண்ணு வந்துடுவா... 

அரிசி களைஞ்சு, முறுக்குக்கு மாவு, கடலை பருப்பு ன்னு மெஷினுக்கு போய் அரச்சுண்டு வரதுலேர்ந்து எல்லாம் மங்கு மங்கு ன்னு செய்வா... 
அதிரசத்துக்கு பெரிய அருக்கஞ்சட்டியில வெல்லப்பாகு காச்சினது, பருப்புத் தேங்கா பிடிச்சது... எல்லாம் படம் மாதிரி மனசுல ஓடறது... 
எல்லாம் பண்ணி குடுத்து, கல்யாணத்துக்கு இருந்துட்டு (மடி சமையல் .. ஒரு மோருஞ்சாதம் சாப்டுட்டு...) பொசுக்குன்னு கெளம்பி போயிடுவா... 
எங்கம்மாவ விட, சாமர்த்தியம், வேலை எல்லாம்... ஆனா பெரியம்மாவுக்கு பணமும், பிள்ளைகளும் தெம்பு... 

இப்ப திரும்பவும் தாத்தா கதைக்கு வரேன்... 
அம்மாக்கு அஞ்சு வயசா இருக்கச்சே... பாட்டி வைசூரி கண்டு போயிட்டாளாம்... (என்ன , ஒரு 25 இருந்தா அதிகம்.. தாத்தாக்கு 35 இருக்கலாம்) 
ஆனா தத்தா மறு கல்யாணம் பண்ணிக்க நெனச்சாலும் , பண்ணிக்கல .. எங்கம்மா, தாத்தாவுக்கு பயங்கர செல்லமாம்... அதனால சித்தி  வந்து படுத்தப் போராளேன்னு பண்ணிக்கல... 
எங்கம்மாக்கு 10 வயசுல கல்யாணம் பண்ணிட்டு... (அப்பா ரொம்ப படிச்சிருந்தார்ன்னு ஆசை ஆசையா எங்கப்பாவை பெருமையா மாப்பிள்ள ஆக்கிண்டா) அதுக்கப்புறம் தாத்தா மறு கல்யாணம் பண்ணிண்டா... (அந்த  பாட்டிக்கு எங்க மேலே எல்லாம் கொள்ள ஆசை..).. அந்த கதை அப்புறம்... 

இப்ப மறுபடியும் கிராமத்துக்கு வருவோம்... 
எங்க மாமாக்கும் , தாத்தாவுக்குமே .. ஒரே ஊரிலே நிலத்தகராறு வர... கோர்ட்டு வரை கேஸ் போயி ... "நீயா... நானா" போட்டியிலே, தாத்தா தோக்க, இந்த கேஸ்ல சொத்தெல்லாம் அழிய, நொடிச்சு போயிட்டா... அதுக்குள்ளே , ரெண்டாம் கல்யாணத்துல ஏழு குழந்தைகள் !!(மூன்று ஆண், நாலு பெண் !!)... 

நான் பிறந்த போது (1942 ) தாத்தாக்கு கண்ணு தெரியல்லியாம்... அப்போ எல்லாம் cateract  க்கு surgery     கிடையாது. அதனாலே தாத்தா, என்ன தூக்கி இருக்காளே தவிர, பாத்ததில்ல... 
1944 ல தாத்தா இறந்து போக... பாட்டி, ஏழு குழந்தைகளோட தஞ்சாவூருக்கு, வாடகை வீட்டுக்கு குடி பெயர்ந்து, ஏழ்மையில் சிக்கி, காலம் தள்ளியது... ரொம்ப வருத்தமான விஷயம்... !! அந்த கதைய சொல்லனும்னா அதுக்கு தனி புக் போடணும் !!
அம்மாவின் சொந்த அண்ணா .. ச்வீகாரம் போனாலும், தன தங்கை மேல் நெறைய பாசம் ..
கார்த்திகை சங்கராந்திக்கு வெத்திலை பாக்கு குடுக்க வருவார்.
மாமா ஒரு ஸ்டேஜில கிராமத்தை விட்டு, தஞ்சைக்கு குடியேறினார். - மேல வீதிக்கு.

தஞ்சையை சுற்றி
நாலு ராஜ வீதி... கிழக்கு, மேற்கு, வடக்கு, தேக்கு என்று... ராஜாக்கள் வீதி உலா போகும் வீதிகள்   
அடுத்து நாலு அலங்கங்கள்.... 
அடுத்து கோட்டை சுவர்கள்
அதை அடுத்து ஆழமான அகழிகள்   
அதைத் தாண்டி நாலு வாசல்கள்..
டவுன் டெவலப் ஆக ஆக, கீழலங்க கோட்டை சுவர் தவிர... பாக்கி எல்லாம் அழிந்து விட்டன... 
அகழியும்... கீழலங்கத்தில் மட்டும் தான்... எல்லாம் தூர்க்கப்பட்டு விட்டது... 

  எங்கம்மா ஒரு பேய் கதை சொல்வா. அதாவது..
"அறுவடை நேரம். தாத்தா ஆள்காரனை எல்லாம் காலம்பர சீக்கிரம் வரச்சொல்லிட்டு தூங்கப் போனா. நாடு ராத்திரி, சில பேர் கதவை தட்டற மாதிரி சத்தம் கேட்க, தாத்தா, ஆளெல்லாம் வந்தாச்சுன்னு நெனச்சு, கிளம்பி வயக்காட்டுக்கு போனா. முன்னாடி ஆளெல்லாம் போறா. வயலுக்கிட்ட போனப்புறம் ஒருத்தரையும் காணோம். சுத்து முத்தி பார்த்து, ஒருத்தரையும் காணாம, பயந்து பொய், தாத்தா வேக வேகமா திரும்பி வீட்டுக்கு வந்து மானிய பாத்தா , நாடு ராத்திரி. தாத்தாவை கூட்டிண்டு போனது 'பேய்கள்' !" 

இந்த மாதிரி அம்மா, நெறைய பேய், மோகினி பிசாசு அறைஞ்சது, அதனாலே ரத்தம் கக்கி சில பேர் செத்துப் போனது, வீட்டு வாசலில , காத்துக் கட்டில் போட்டு தூங்கற ஆண்களை, மோகினி "ஜல் ஜல் " ன்னு வந்து, எழுப்பி கூட்டிண்டு போய் அடிச்சது .... கதையெல்லாம் சொல்லுவா. 
அப்படியே dramatic ஆ சொல்லும்போது, நான் அதெல்லாம் நெஜம்னு நம்பினது என்னவோ வாஸ்தவம்.
எங்கண்ணாவெல்லாம்  அம்மாவை கேலி செய்வது இன்னொரு விஷயத்துக் குக் கூட. 
கிராமத்தில் தாத்தா பொங்கல் கொண்டாடும் விதத்தை விவரிப்பா. 
"எல்லா குடியானவர்க்கும் சாப்பாடு தயாராகும். ஏழு கறிகாய் குழம்புக்கு, முழு பரங்கிக்காய், முழு பூசணிக்காய், முழு வாழைத்தார்.." ன்னு அம்மா விவரிக்கரச்சே, நான் நம்புவேன். அண்ணா எல்லாம் பரிகாசம் பண்ணுவா. ஒரு வேளை நிஜம்மா கூட இருக்கலாம். ஏன்னா, எல்லாம் தோட்டத்தில விளையற காய்கள். நிறைய ஆள் படைகள். அறுவடைக்குப் பிறகு எல்லாருக்கும் நெல், வேஷ்டி, புடவை எல்லாம் கொடுத்து, சாப்பாடும் போடுவாளாம். 

நாம இதை எல்லாம் சினிமாவில்தான் பாத்துருக்கோம் !!  


No comments:

Post a Comment